பாரதியின் பாஞ்சாலி சபதம்

மகாபாரதம் இரண்டு புத்தகங்கள் எழுதி முடித்தவுடன் சோர்வும் வெறுமையும் ஆட்கொண்டன. முடிவின்றி நீளும் அதன் பிரம்மாண்டம் சஞ்சலத்தை ஏற்படுத்தியது. அனைத்தையும் எழுதி முடித்து ஒரே சமயத்தில் வெளியிடுவதே சிறந்தது எனும் யோசனையை நற்றிணை யுகன் வழங்கினார். அதுவும் சரியென்று படவே அதைச் சற்றே நிறுத்திவிட்டு வால்மீகியின் சுந்தர காண்டம் எழுத ஆரம்பித்தேன். அதை பாதி வரை எழுதியிருக்கும் நிலையில் பாரதியின் பாஞ்சாலி சபதத்தை நவீனத் தமிழில் எழுதினால் என்ன என்ற யோசனை ஏற்பட்டது. அதற்கு முன்னோட்டமாகவே பாஞ்சாலி சபதத்தின் கடவுள் வணக்கப் பாடலை எழுதியிருக்கிறேன்.

பிரம்ம ஸ்துதி 

ஓம் எனப் பெரியோர்கள் துதிப்பதும்
வினைகளைத் தீர்ப்பதும்
தீமைகளை அழிப்பதும்
துயர்களைத் துடைப்பதும்
நலமனைத்தும் நல்குவதும்
பெயரும் உருவும் அற்றதும்
மனம் புத்திக்கு எட்டாததும்
ஆம் என்றனைத்துமாக
ஆனந்தத்தையும் அறிவையும்
இயல்புடையதாய்த் திகழும் பரம்பொருள்
என்பர் சான்றோர்.

நன்மை தரும் தவம்
யோகம் ஞானம் பக்தி
அனைத்தும் அடைந்திடவும்
வெற்றியை வழங்கும் சிவசக்தி
என்னை ஆட்கொள்ளவும்
என் அஞ்ஞான இருள் நீங்கிடவும்
எழுதும் இவ்வினிய தமிழ் நூலின் புகழ்
எந்நாளும் நிலைக்கவும்
அந்தப் பரம்பொருளை பிரார்த்திக்கிறேன்.

சரஸ்வதி வணக்கம் 

வெள்ளைத் தாமரையிலே
புகழுடன் வீற்றிருப்பாள்
உள்ளம் கொள்ளை கொள்ளும் இன்னிசை
யாழினை ஏந்தியிருப்பாள்
பாற்கடலின் அமுதெனவே
தமிழ்க் கவியை நான் இயற்ற
பால்யத்திலேயே என்னைப் பேணிய அவள்
எனக்கு அருள் புரிய வந்தவள்.

வேதங்களே விழியாக
அதன் விளக்கமே விழி மையாக
குளிர்ந்த சந்திரனே நெற்றியாக
சிந்தனையே கூந்தலாக
தர்க்கமே செவிகளாக
சித்தாந்தமே குண்டலமாக
ஞானமே நாசியாக
நலம் தரும் சாஸ்திரமே வாயாக
உடையவள் அவள்.

கற்பனை உதிக்கும் தேனிதழாள்
காவியமே கொங்கைகளாக
சிற்பம் முதலிய கலைகளே
மென் கைகளாக
சொல்நயம் இசைநயம் தோய்ந்திட்ட
கவிஞர்தம் நாவையே
இருப்பிடமாகக் கொண்ட
அவளைச் சரணடைந்தேன்
சொல்திறன் வாய்க்கவே
அவள் அருள்வாள் என நம்பிவிட்டேன்.

இல்லறமெனும் பெருந்தவத்தைப் போற்றிய
பூமியுள்ள மட்டும் புகழுள்ள
ஆபரணங்கள் அணிந்த மார்புடைய
ஐவருக்கு மனைவியான
திரௌபதியின் புகழ்க் கதையை
தமிழ்ப் பாட்டால் நான் இயற்றவே
கலைமகள் எனை ஆசிர்வதிக்கட்டும்.

Related Posts Plugin for WordPress, Blogger...