February 8, 2018

மௌனத் திரைப்படங்கள்

ஒரு திரைப்படத்தின் முக்கிய நோக்கம் உணர்வுகளைக் கதாபாத்திரங்களின் வாயிலாக வெளிப்படுத்தி பார்வையாளர்களின் மனதை பாதித்து அவர்களிடையே மாற்றத்தைக் கொண்டு வருவதுதான். இதைச் செய்யாத திரைப்படம் ஒரு நல்ல திரைப்படம் அல்ல அதை நாம் பார்க்கவேண்டிய அவசியமும் இல்லை. நம்முள் மாற்றத்தை விதைக்காத நாவல் எவ்வாறு சிறந்த நாவல் இல்லையோ அவ்வாறே திரைப்படமும். ஒரு திரைப்படம் இக்காரியத்தைத் திறம்பட நிகழ்த்துவதற்கு மொழி அவசியமா? எனும் கேள்விக்கு பதில் காண நாம் அவசியம் ஒரு சில நல்ல மௌன மொழிப்படங்களை பார்ப்பது அவசியம். அப்போதுதான் மொழி என்பது ஒரு திரைப்படத்திற்கு அப்பாற்பட்டது மட்டுமல்ல அவசியமற்றது என்பதையும், திரை என்பது உணர்வுகளைப் பிரதானமாகப் படம் பிடிக்கவேண்டிய சாதனமே அல்லாமல் ஆரவாரமான வெற்று ஒலிகளைப் பிடிப்பதல்ல என்பதும் புரியும்.

ஒரு திரைப்படத்தை பார்க்கும்போது காட்சிகளைவிட மொழிக்கே நாம் அதிக கவனத்தைக் கொடுக்கிறோம் என்பதை அறிவீர்களா? இதனால் ஒருபுறம் இயக்குனர் மெனக்கெட்டு மெருகேற்றிய பல காட்சிகளோடும் அதன் நுட்பங்களோடும் நாம் உறவாடத் தவறிவிடுகிறோம் எனில் மறுபுறம் உழைப்பைக் கொடுத்து நடிக்கும் நடிகர்களின் உன்னத நடிப்பையும் முழுமையாக உள்வாங்காமற் போகிறோம். திரைப்படம் என்பது நாடகமல்ல. நாடகத்தின் அடுத்த வளர்ச்சிதான் திரை. ஒரு நாடகத்தை நாம் கண்களை மூடிக்கொண்டு காதால் கேட்டு ரசிக்கலாம். ஆனால் திரைப்படம் அவ்வாறல்ல. அது நாடகத்தை விடவும் அதிக ஆற்றல் கொண்ட ஒரு சாதனம். காட்சிப் படுத்துதல் என்பதன் மூலமாகவே ஒரு சிறந்த திரைப்படம் உருவாக முடியும்.

பேசாத் திரைப்படங்களின் காலம் 1985 முதல் 1936 வரையாகும். இந்தக் காலங்களைத் திரைப்படங்களின் பொற்காலம் என்ற சொல்லலாம். 1915-ல் வெளியான D.W.கிரிவ்வத் தயாரித்து இயக்கிய “ஒரு தேசத்தின் பிறப்பு” மிக முக்கியமான திரைப்படமாகும். மௌனத் திரைப்படத்தின் எழுச்சி இத்திரைப் படத்திலிருந்தே தொடங்குகிறது எனலாம். புதுமையான யுக்திகளையும், சிறப்பான கதைகூறல் முறையினையும் கையாண்டு திரைப்பட வரலாற்றின் அடையாளமாக ஒரு தேசத்தின் பிறப்பு திரைப்படத்தை நிலைநிறுத்தியுள்ளார் D.W.கிரிவ்வத். இத்திரைப் படத்தின் மகத்தான வெற்றிக்குப் பிறகு அனைவரின் பார்வையும் பேசாத் திரைப்படங்களின் பக்கம் திரும்பியது. திரைப்படத்தை முக்கியமான சாதனமாக மட்டுமின்றி, மௌனத் திரைப்படங்களின் உண்மையான ஆற்றலை அதன் பிறகே பலரும் தீவிரமாக உணரத் தொடங்கினார்கள்.

1927-1929களில் பேசும் படங்கள் வரத்தொடங்கி விட்டன. ஆயினும் அதன் பிறகும் பலவருடங்கள் தொடர்ந்து பேசாத் திரைப்படங்கள் எடுக்கப்பட்டன. 1967 வரை சாப்ளின் தொடர்ந்து பல மௌனத் திரைப்படங்களை எடுத்தார் என்பது கவனிக்கத் தக்கது. அவரது சிட்டி லைட்ஸ், மாடர்ன் டைம்ஸ், தி கிரேட் டிக்டேட்டர் போன்ற பல முக்கியமான திரைப்படங்கள் பேசும் பட யுகத்தில் எடுக்கப்பட்டவையே. இன்றும் மௌனத் திரைப்படத்திற்கு சிறந்த உதாரணமாகத் திகழ்வது சார்லி சாப்ளின் படங்கள். அவரது படங்கள் இன்றும் உலககெங்கும் பலராலும் பார்த்து பரவசப்படுவதற்கு நகைச்சுவை மட்டுமே காரணமல்ல. அதையும் தாண்டி அவைகள் மனித உணர்வுகளைத் தெள்ளத்தெளிவாகக் காட்டும் மௌனத் திரைப்படங்கள் என்பதுதான் மிக முக்கியமான காரணம்.

ஆக, மொழி என்பது ஒரு திரைப்படத்திற்கு இரண்டாம் பட்சமே அன்றி அதுவே பிரதானமல்ல என்ற பின்னனியில் சில முக்கியமான மௌனத் திரைப்படங்களை இங்கு பார்க்கலாம்.

1. The General (1926)


1861-1865 இடைப்பட்ட ஆண்டுகளில் நடந்த அமெரிக்காவின் உள்நாட்டு யுத்தத்தை மையமாகக் கொண்டு, உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் 1926-ல் எடுக்கப்பட்ட திரைப்படம் The General. இத்திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதி இயக்கியதோடு, தானே அதில் நடித்திருக்கிறார் பஸ்டர் கீட்டன். நகைச்சுவை காதல் இரண்டையும் போரோடு பிணைத்து இப்படத்தை பிரமாதமாகக் கொண்டு சென்றிருக்கிறார். என்ன ஒரு அற்புதமான திரைப்படம் இது. திரையில் காட்சிகள் தோறும் வெளிப்படும் அவரது முகபாவங்கள் அபாரமானவை. அவரது பெரிய கண்கள் உணர்வுகளைத் தெள்ளத் தெளிவாக பார்வையாளர்களிடம் கொண்டு சென்று, மொழி என்பது ஒரு திரைப்படத்திற்கு அவசியமற்றது என்பதை உறுதிபடச் சொல்கிறது.

நாயகன் ஒரு பொறியாளன் என்பதால் யுத்த காலத்தில் போரில் கலந்துகொள்ள அவனுக்கு அனுமதி மறுக்கப்படுகிது. ஆனால் அவன் யுத்தத்திற்கு பயந்துகொண்டு தன் பெயரை பதியாதிருக்கிறான் என்று அவன் காதலி அவன் மீது கோபம் கொள்கிறாள். அப்போது நாயகனுக்கு மிகவும் விருப்பமான, அவன் ஓட்டும் ரயிலை, எதிரிகள் கடத்திச் சென்றுவிடுகிறார்கள். அதை நாயகன் மீட்பதோடு, எதிரிகளின் திட்டத்தை முறியடிக்கவும் உதவுகிறான். அவனுடைய இந்த சாகசத்திற்காக கௌரவிக்கப்படும் அவன் இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப் படுகிறான்.

இந்தக் கதையின் பின்னனியில் காலத்தால் அழியாத திரைக் காவித்தைப் படைத்துள்ளார் பஸ்டர் கீட்டன். தி ஜெனரல் என்ற பெயருடைய நாயகனின் ரயில் இத்திரைப்படத்தின் முக்கியமான ஒரு கதாபாத்திரம். இதை மையமாகக் கொண்டே கதை முழுவதும் நடக்கிறது. மனிதர்களைவிடவும் ரயில்கள் இத்திரைப்படத்தின் முக்கிய அங்கமாக ஆகின்றன என்பதோடு அவற்றை திரையில் கையாண்ட விதத்திலேயே இது இன்றும் போற்றத்தக்க ஒரு திரைக் காவியமாகியுள்ளது. ரயிலும் ரயிலும் ஒன்றை ஒன்று துரத்தும் காட்சிகளின் சித்தரிப்பு இத்திரைப் படத்தின் பிரதான அம்சமாகும். சுமார் 90 வருடங்களுக்கு முன் இருந்த சொற்ப வசதிகளைக் கொண்டு இக்காட்சிகளை எப்படி எடுத்தார்கள் என்பது புரியாத புதிர். நாயகன் ஒரு இடத்திலும் நிலையாக நில்லாது படம் முழுவதுமே அங்குமிங்கும் பரபரவென அலைந்துகொண்டே இருப்பது நம் கண்களைத் திரையிலிருந்து விலக்க முடியாதபடி செய்துவிடுகிறது.

புகழ்பெற்ற நடிகரும் இயக்குனருமான ஆர்சன் வெல்ஸ் இத்திரைப்படத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில், “இது ஒரு அற்புதமான நகைச்சுவைப் படம் மட்டுமல்ல, உள்நாட்டு யுத்தத்தைப் பற்றிய சிறந்த படம் மட்டுமல்ல, அதற்கும் மேலாக படங்களுக்லெல்லாம் உயர்ந்த படம் இது” என்கிறார்.

எதிரிகளின் இருப்பிடத்தில் மேஜைக்கடியே ஒளிந்திருக்கும்போது, சிகரெட் முனை பட்டு மேஜை விரிப்பு ஓட்டையாகிவிட அதன் வழியே நாயகன் கடத்தப்பட்ட நாயகியின் முகத்தைக் காண்பதான காட்சி ரசனைக்குரியது. அதே போல பீரங்கியின் குறி நாயகனின் ரயிலை நோக்கித் திரும்பிவிட அவன் பயந்து ஓடுவதும், ரயில் பாதையின் திருப்பத்தில் திரும்பிவிட பீரங்கி எதிரி ரயிலை நோக்கி சுடுவதாக அமைந்த காட்சியின் சித்தரிப்பு அபாரமான கற்பனை வளத்தைக் காட்டுகிறது. இப்படி திரைப்படம் முழுக்கவே நிறைந்துள்ள நுணுக்கமான ரசிக்கத்தக்க காட்சிகள் இத்திரைப்படத்தை என்றும் மறக்கமுடியாதபடி செய்துவிடுகின்றன.

இறுதிப் பகுதியில் ரயிலும், குதிரைகளும், காவலர்களும் ஓட போர் அதன் உச்சகட்டத்தை அடைகிறது. இன்று இக்காட்சியை கிராபிக்ஸ் கொண்டு நிரப்பி விடலாம். ஆனால் அன்றைய தினத்தில் அதன் சாத்தியம் என்னவென்று யோசிக்கையில், இத்திரைப்படத்தின் முக்கியத்துவம் விளங்கும். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவே சலிக்காத முழுநீள சாகசத் திரைப்படம் இது எனலாம். அந்த சாகசத்தினூடே மெல்லியதாக நகைச்சுவையை படம் முழுவதுமே தூவியிருக்கிறார் இயக்குனர். மௌனத் திரைப்பட வரிசையில் அவசியம் காணவேண்டிய ஒரு திரைப்படம் இது.

2. Battleship Potemkin (1925)


வரலாற்றின் பக்கங்களை ரத்தமும் சதையுமாகக் காட்டும் திரைப்படம் 1925-ல் வெளியான Battleship Potemkin. செய்நேர்த்தியுடனும் தேர்ந்த தொழில் நுட்பத்துடனும் இத்திரைப்படத்தை ஐன்ஸ்டின் இயக்கியுள்ளார். நாடகத் துறையிலிருந்து திரைத் துறைக்கு வந்த ஐன்ஸ்டின் சினிமா குறித்த சில கருதுகோள்களைக் கொண்டிருந்தார். தான் தொடர்ந்து கருத்தளவில் எழுதிவந்த மான்டேஜ் எனும் படத் தொகுப்பாக்கத்தை இந்தப் படத்திலிலேயே அவர் முதன்முதலாக அறிமுகப்படுத்தினார். அவரது அந்த யுக்தி இந்தப் படத்திற்கு புது மெருகைத் தந்ததோடு படத்தின் புகழையும் உலக அரங்கில் பன்மடங்காக உயர்த்தியது.

ஒரு நாவலைப் போன்றே இத்திரைப் படத்தை ஐந்து பகுதிகளாக பிரித்துள்ளார் இயக்குனர். முதல் பகுதியான “மனிதர்களும் புழுக்களும்” என்ற பகுதி மாலுமிகளுக்கு புழுக்கள் நிறைந்த மாமிசத்தை உணவாகத் தருவதையும் அதனால் அவர்களிடையே எழும் கொந்தளிப்பையும் சித்தரிக்கிறது. இரண்டாவது பகுதியான “தளத்தில் ஒரு நாடகம்” என்ற பகுதி மாலுமிகளின் கலவரத்தையும், அதைத் தலைமையேற்று நடத்திய வாகுலின்சக் சுடப்படுவதையும் காட்டுகிறது. “இறந்த மனிதன் நீதிக்காக வேண்டுதல்” என்ற பகுதி வாகுலின்சக்கின் உடலைக் காண நாடடெங்குமிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் திரள்வதைச் சித்தரிக்கிறது.

“தி ஒடிசா ஸ்டெப்ஸ்” என்னும் நான்காவது பகுதி வாகுலின்சக் உடலைக் காணத் திரண்ட நூற்றுக் கணக்கான மக்களை சிப்பாய்கள் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யும் பகுதி நம் உள்ளத்தை பதறச் செய்யும் விதமாக இயக்குனரால் மிக அற்புதமாக காட்சிப் படுத்தப் படுகிறது. ஐந்தாம் பகுதியான “ஒருவர் அனைவருக்கும் எதிராக” எனும் பகுதி பொடம்கின் கப்பலுக்கு எதிராக பிற கப்பல்கள் ஒன்று திரண்டு வருவதையும் பிறகு அவர்களும் பொடம்கின்னோடு இணைவதையும் காட்சிப்படுத்தி திரைப்படத்தை நிறைவு செய்கிறது.

இத்திரைப் படத்தைப் பற்றி விவரிக்க வார்த்தைகள் போதுமானவையல்ல. முழுக்க முழுக்க கண்களால் மட்டுமே கண்டு ரசிக்க வேண்டிய அற்புதமான திரைக்காவியம் இது. இன்றளவும் உலகத் திரைப்பட வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு திரைப்படமாக இது கருதப்படுகிறது. இத்திரைப் படத்தின் ஒவ்வொரு காட்சியும் அபாரமான சித்தரிப்புகள் கொண்டது. எப்படி இவற்றைத் திரைப்படுத்தினார்கள் என்பது அந்தக் கடவுளுக்கே வெளிச்சம்! கலவரத்தில் இறந்துவிட்ட வாகுலின்சக் உடலைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் திரளும் காட்சி படமாக்கப்பட்ட விதம் நமக்கு வியப்பைத் தருகிறது. குறிப்பாக படிகளில் மக்கள் கூட்டங்கூட்டமாக ஓடும் காட்சி அபாரமானது. படத்தின் உட்சகட்டமான காட்சி இதுவே என்று சொல்வது தகும். சிறுவன் ஒருவன் சுடப்பட்டு மரணடையும் காட்சியும், தொட்டிலில் படுத்திருக்கும் குழந்தை ஒன்று தொட்டிலோடு படிகளில் உருண்டு வரும் காட்சியும் நம்முடைய உள்ளத்தைப் பதறச்செய்பவை.

வாழ்க்கையில் நிகழும் உண்மையான காலத்தை மிகக் குறுகிய காலத்தில் திரைமொழியில் காட்டுவது ஓர் உத்தி. தி ஒடிசா ஸ்டெப்ஸ் எனப்படும் இரண்டு நிமிடங்கள் திரையில் ஓடும் காட்சி இத்திரைப்படத்தில் மிகவும் முக்கியமானது. 142 மீட்டருக்கு நீளும் இந்த ஒடிசா ஸ்டெப்ஸ் 1841-ல் கட்டப்பட்டது. ஒடிசா நகர துறைமுகத்தின் பிரதான நுழைவாயில் இதுதான். மேலே இருந்து பார்க்கும் போது படிகள் தெரியாதபடி தரை தளம் மட்டுமே தெரியும்படி இது வடிவமைக்கப் பட்டுள்ளது. இதை மிகச் சாதுர்யமாக பயன்படுத்திக் கொண்ட ஐன்ஸ்டின், கீழிருந்து பார்க்கையில் பயந்து ஓடும் மக்கள் கூட்டத்தை மட்டுமே காணுமாறும், மேலிருந்து பார்க்கையில் சிப்பாய்கள் நடந்து வருவதையும் காணும்படி காட்சியைத் திரைப்படுத்தினார்.

இக்காட்சிகளில் கேமராக் கோணம் முன்னும் பின்னுமாக அண்மை சேய்மைக் காட்சிகளைக் காட்டுகிறது. ஒரு புறம் துப்பாக்கியால் சுட்டபடி படியில் சிப்பாய்கள் இறங்கும் காட்சியும் மறுபுறம் சுடப்பட்டு இறந்த மகன் உடலைச் சுமந்தபடி தாய் படியில் ஏறிவரும் காட்சியும் மாறிமாறிக் காட்டப்படுகிறது. இக்காட்சிகளை நாம் உடைந்த இரு வேறுபட்ட காட்சியாகக் காண்கிறோமா அல்லது ஒட்டுமொத்தமாக நிகழும் நிகழ்வாகக் காண்கிறோமா? மனிதனின் கண்கள் ஒரு கூட்டத்திடையே பலரையும் தனித்தனியே காண்பது சாத்தியமில்லை. ஆனால் கேமரா அப்படி அல்ல. பல காட்சிகளை வெட்டி இணைப்பதன் மூலம் இதை சாத்தியமாக்க முடியும். திரையில் காலத்தைக் கையாளும் இந்த உத்தியை மிகத்திறம்பட இத்திரைப்படத்தில் செய்து காட்டினார் ஐன்ஸ்டின். அதனால்தான் வேறு எவரையும்விடக் கேமராவைத் தெளிவாகவும் முழுமையாகவும் கையாள்வதில் அவர் ஜாம்பவான் என்று போற்றப்படுகிறார்.

போர்க்கப்பலைக் காண்பதற்காக படகுகள் பல பாய் விரித்து அன்னப் பட்சியென கடலில் பயணிக்கும் காட்சியை என்னவென்று சொல்ல? வாகுலின்சக்கின் உடலைக் கொண்டுவந்து கரையில் வைக்கும் காட்சிக்கு முன்னர் இயக்குனர் காட்டும் சில காட்சிகள் திரை மொழியின் உச்சத்தை வெளிப்படுத்துகிறது. ஒரு மௌனத் திரைப்படத்தின் மௌனமான இக்காட்சிகள் இயக்குனரின் படைப் பாற்றலைப் பறைசாற்றுகிறது. மொழியையும் தாண்டி உணர்வுகளை இன்னும் அதிக ஆற்றல் மிக்கதாக நம்மிடம் கொண்டு சேர்க்கிறது இத்திரைப்படம். மொத்தத்தில் நாம் காணவேண்டிய முக்கியமான திரைப்படங்கிளில் இதுவும் ஒன்று.

3. City Lights (1931)


பேசும் படம் வரத்தொடங்கிய காலகட்டத்தில் சாப்ளின் கடைசியாக எடுத்த மௌனத் திரைப்படம் இதுவே. சிலை திறப்பு விழா ஒன்றின் ஆரம்பக் காட்சியோடு தொடங்கும் இத்திரைப் படத்தில் விழா மேடையில் பேசுபவர்களின் குரலுக்கு சாப்ளின் விநோதமான ஒலியை பயன்படுத்தியிருப்பார். மனிதர்கள் பேசும் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் தரும் பேசும் படங்களைக் கேலி செய்யும் விதமாகவே அந்த ஒலியைச் சேர்த்திருக்கிறார். ஒரு திரைப்படத்தின் காட்சிகள்தான் பேசவேண்டுமே அல்லாது கதாபாத்திரங்கள் பேசவேண்டிய அவசியமில்லை என்ற அவரின் உறுதியான நிலைப்பாட்டின் காரணமாகவே அவர் இத்திரைப் படத்தை மௌனத் திரைப்படமாக எடுத்தார். இல்லையேல் வசதிகள் வந்த பின்னும் அவர் மெனக்கெட்டு இவ்வாறு எடுத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

கடை ஒன்றின் முன்னே வைத்திருக்கும் பெண்ணின் நிர்வாணச் சிலையைக் காணும் காட்சியிலிருந்து அதன் பிறகான பல காட்சிகளுக்கு நம்மை வாய்விட்டுச் சிரிக்க வைக்கிறார் சாப்ளின். பெண்ணின் சிலையை அவர் ஓரக்கண்ணால் பார்த்தபடி முன்னும் பின்னும் நகர்வதும், நடைபாதையில் கீழே வேலை செய்பவர் அதை உள்ளேயிருந்தபடி மூடித் திறக்கையில் சாப்ளின் கீழே விழும் நுனி வரைச் சென்றுவிட்டுத் திரும்புவது நம்மை வெடித்துச் சிரிக்க வைக்கும் அபாரமான காட்சி. கடைசியில் அதனுள்ளேயிருந்து வெளியாகும் ஆளைக்கண்டு, அவன் அவரைவிடக் குள்ளமாக இருப்பதால், அவனைத் திட்டும் விதமாகப் பேசுவதும், அவன் முழுவதும் மேலேறி ஆஜானுபாகுவாக நிற்கையில் அவர் மௌனமாகிச் செல்வதும் நகைச்சுவையின் உச்சம்.

பூ விற்கும் பார்வையற்ற நாயகி தன்னை காரில் வந்த செல்வந்தனாக நினைத்துவிட, அவர் வேறு வழியின்றி அவளிடம் பூவை வாங்கிக்கொள்வதும், கார் கிளம்பிச் சென்றுவிட, அவர் பம்மியபடி தான் சென்றுவிட்டதாக பாசாங்கு காட்டுவதும் நகைச்சுவை காட்சியாக இல்லாதிருக்கலாம் ஆனால் மனித உணர்வுகளை நுட்பமாக வெளிப்படுத்தும் இக்காட்சிகளுக்கு நாம் ஒரு சபாஷ் போடலாம். அப்போது சட்சட்டென மாறும் அவரது முகபாவங்களை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். என்ன ஒரு நேர்த்தி!

திரையில் தன்னை அழகாக காட்டிக்கொள்ளவே பலரும் விரும்புகையில், அழுக்கடைந்த கிழிந்த ஆடைகளுடன் தன்னைக் காட்டிக்கொள்ள சாப்ளின் தயங்கியதே இல்லை. அவரது அந்த ஆடையே அவருக்கான அடையாளம். அந்த ஆடையையும் சாப்ளினையும் நாம் பிரித்துவிட முடியாது. திரைப்படத்தில் அந்த ஆடையும் அவருடன் சேர்ந்து நடிக்கும்!

அதன்பிறகு வருகின்ற தற்கொலைக்கு முயலும் குடிகாரனை காப்பாற்றுவதும், இருவரும் சேர்ந்து உணவகத்தில் அடிக்கும் லூட்டியும், நம்மை வயிறு குலுங்க சிரிக்கவைக்கும் காட்சிகள். பார்வையற்ற பெண்ணுக்கு பார்வை தருவதற்காக வேலை செய்வதும், குத்துச் சண்டையில் கலந்துகொள்வதுமான காட்சிகள் ஒரு மனிதன் தனக்கென ஏதும் வேண்டாதிருப்பினும், தான் விரும்பும் பெண்ணிற்காக எதையும் செய்யத் தயாராய் இருக்கிறான் என்பதைச் சித்தரிக்கிறது.

ஒரு நடிகனுக்கு வாய்மொழி இல்லாதிருக்கலாம் ஆனால் உடல்மொழி மிகமிக அவசியம். சாப்ளினுக்கு அது அபரிமிதமாக இருப்பதோடு, அவற்றை மிக அனாயசமாகக் கையாளவும் செய்கிறார். குத்துச் சண்டைக் காட்சியில் வெளிப்படும் அவரது உடல்மொழி அபாரமானது. சண்டைக்குத் தயாராவதிலிருந்து, அவர் வெற்று விடுவார் என்று நாம் நினைக்கும் வரையான காட்சிகள் நகைச்சுவையின் உச்சம். அவர் தோற்றுவிடுகையில் நாமும் அவரோடு இணைந்து தோற்றுவிட்ட உணர்வை அடைகிறோம். இனி எப்படி அந்தப் பெண்ணுக்கு உதவப்போகிறார்? எனும் கேள்வி எழ அடுத்த காட்சிக்குத் தயாராகிறோம்.

குடிகார நண்பனிடமிருந்து பணத்தைப் பெற்று அதைத் தன் காதலியிடம் கொடுக்கும் போது, சாப்ளின் ஒரு நோட்டை தனக்கென எடுத்துக்கொண்டு மீதி அனைத்தையும் அவளிடம் கொடுப்பார். அவள் கலங்கிய கண்களுடன் அவர் கைகளைப் பற்றி நன்றி சொல்வாள். அப்போது சாப்ளின் தான் எடுத்த ஒரு நோட்டையும் அவளிடமே கொடுத்துவிடுவார். பிறருக்கு உதவி செய்யும் குணமுள்ளவர்கள் நன்றி என்ற வார்த்தையைக் கேட்கும்போது மீண்டும் மீண்டும் உதவிசெய்யும் உத்வேகத்தைப் பெறுகிறார்கள் என்பதையும், தான் விரும்பம் பெண்ணுக்காக அனைத்தையும் இழப்பது ஒரு ஆணுக்குத் தகும் என்பதையும் இக்காட்சிகள் அற்பதமாக படம் பிடிக்கின்றன.

திருட்டு குற்றத்திற்காகப் பிடிபட்டு சிறைசென்று திரும்பும் சாப்ளின், தன் காதலியைச் சந்திக்கிறார். அவர் உள்ளம் முழுவதும் மகிழ்ச்சியால் நிரம்பியிருக்கிறது. அவளையே பிரமையுடன் பார்த்தபடி இருக்கிறார். அவரது கிழந்த ஆடையும் தோற்றமும் அவரை ஒரு பிச்சைக்காரனாகக் காட்டவே, அவள் அவனிடம் பூவையும் காசையும் தருகிறாள். அப்போது அவர் சிரித்தபடி ஒன்றும் சொல்லாது அங்கிருந்து நகர்கிறார். இந்த இடைப்பட்ட காட்சிகளின் நடுவே அவர் மனதில் ஒடும் பல எண்ணங்களை காட்டாது விடுகிறார். ஆனால் பார்வையாளர்கிய நமக்கு அவைகள் புரிந்துவிடுகின்றன. என்ன ஒரு காட்சி!

ஒரு மனிதன் பிறருக்கு உதவுவது பெரிதல்ல ஆனால் அதை நான்தான் செய்தேன் என்பதைச் சுட்டிக்காட்டுவதைப் போல அற்பமான செயல் உலகத்தில் வேறேதுவும் இல்லை. இருந்தும் அவள் அவரைக் கண்டு கொள்கிறாள். அதுவும் அவர் காசு வேண்டாம் பூ போதும் என்று அவர் சொல்லும் தருணத்தில் அவள் கண்டுகொள்கிறாள். அதன் பிறகான உரையாடல் இப்படி நடக்கிறது.

“நீங்களா”

சாப்ளின் வெறுமே தலையசைக்கிறார். பிறகு அவளிடம் கேட்கிறார்.

“நீ இப்போது பார்க்கிறாயா?”

“ஆம். இப்போது நான் பார்கிறேன்.”

திரைப்படம் முடிந்துவிடுகிறது. இந்த பார்த்தல் என்ற சொல்லின் பின்னே எண்ணற்ற அர்த்தங்கள் பொதிந்தள்ளன. அதை அவரவர்களின் மனோபாவத்திற்கு ஏற்றவாறு விரித்துக் கொள்ளலாம்.

4. The Passion of Joan of Arc (1928)


எத்தனையோ மௌனமொழித் திரைப்படங்கள் வந்திருக்கலாம். அவை அனைத்திலும் ஒப்பற்ற ஒரு திரைப்படம் உண்டெனில் அது 1928-களில் வெளியான The Passion of Joan of Arc என்று துணிந்து கூறலாம். இன்று நாம் காணும் இத்திரைப்படம் நம்மை வந்தடைந்த வரலாறு அதிசயமானது. தொலைந்துபோன பொக்கிஷம் திரும்பக் கிடைத்தால் எப்படியான உணர்வு நமக்குக் கிட்டுமோ, அத்தகைய உணர்வே இத்திரைப்படம் நமக்குக் கிடைத்த வரலாற்றை அறிகையில் ஏற்படுகிறது. கார்ல்.தி.டிரையர் என்பவரால் 1927 வருடம் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் 1928-ல் வெளியானது. இத்திரைப்படம் வெளியாவதற்கு முன்னே, இதன் அசல் பிரதி தீக்கிரையாகிவிட்டது. துரதிருஷ்டவசமாக இதன் இரண்டாவது பிரதியும் அதே தீயில் எரிந்துபோனது! எனவே இத்திரைப்படம் வெளியான 50 வருடங்களாக இதன் ஒழுங்கற்ற பிரதிகளையே பலரும் பார்க்கும்படி நேர்ந்தது. ஆயினும் 1981-ல் அதிசயிக்கத்தக்க விதமாக இதன் அசல் பிரதி ஒன்று மனநலக் காப்பகம் ஒன்றில் கிடைத்தது! தற்போது அனைவரும் காண்பது, அதன் ஒழுங்குபடுத்தி தெளிவுபடுத்தப்பட்ட (Resorted) பிரதியேயாகும்.

இத்திரைப்படத்தைப் பார்க்கும் அனைவரும், அதைப் பார்த்து முடித்ததும் நிலைகுலைந்து போவார்கள் என்பது நிச்சயம். நான் முதன் முதலாக இத்திரைப்படத்தைப் பார்த்த போது உறைந்து போனேன்! வன்முறையின் உச்சத்தை மௌன மொழியில் பேசும் ஓர் அற்புதம் இத்திரைப்படம். இன்று இதைவிடவும் அற்புதமாக திரைப்படம் எடுக்க எத்தனையோ சாதனங்கள் உள்ளன. ஆனால் 90 ஆண்டுகளுக்கு முன்னர் அதன் சாத்தியம் என்ன என்று யோசித்தால் மலைப்பு தட்டுகிறது! அதுவும் எப்போதும் இல்லாத அளவிற்கு நகரத்தின் ஒரு பகுதியை செட் போட்டு நிர்மானித்திருப்பது வியக்கவைக்கிறது. ஒரு மௌன மொழி திரைப்படத்திற்கு இத்தனை மெனக்கெடல் என்பது மொழி திரைப்படத்திற்கு அத்தனை முக்கியமல்ல என்பதையே காட்டுகிறது.

ஜோனாக நடித்த ரீனி ஃபால்கானிட்டியின் முகபாவங்கள் வெளிப்படும் தருணங்கள் அற்புதமானவை. 'மனித முகங்கள் அவனது ஆன்மாவை வெளிப்படுத்தும் ஜன்னல்கள்' என்று டிரையர் குறிப்பிடுவது எத்தனை சத்தியமான உண்மை என்பதை இத்திரைப்படத்தை காண்கையில் புரிந்துகொள்ள முடியும். திரைப்படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் முகபாவங்கள் மூலமாகவே காட்சிகளின் தீவிரத்தை கண் முன்னே தத்ரூபமாக நிகழ்த்திக் காட்டுகிறார் இயக்குனர். மொழியைவிட மௌனம் எத்தனை சக்தி வாய்ந்த ஆயுதம் என்பதை நாம் உணரும் தருணங்கள்தாம் இத்திரைப்படம். படத்தைப் பார்த்து முடித்ததும் ஒலியற்ற பேரமைதி ஒன்று உள்ளத்தில் சதா ஒலித்துக் கொண்டே இருக்கிறது!

ஜோனுக்கும் நீதிபதிகளுக்கும் நடைபெற்ற உரையாடல்கள் வரலாற்றின் பக்கங்களில் துல்லியமாக பதியப்பட்டுள்ளன. அவற்றை இத்திரைப்படத்தின் வாயிலாக அறிகையில் நம் உள்ளம் கொதிக்கிறது; இரத்தம் சூடாகிறது. நிர்க்கதியாக நிற்கும் 19 வயதுப் பெண்ணின் முன்னே கிழட்டுப் பூனைகள் தங்கள் சமார்த்தியத்தையும், விகாரத்தையும் காட்டுவது நம்மை அதிர்ச்சியில் உறைய வைக்கிறது. பார்வை, சொல், செயல் என்ற மூன்றினாலும் ஜோனை அவர்கள் ஏளனப்படுத்துவதைக் காண்கையில், கௌரவர்கள் அவையில் பாஞ்சாலிக்கு ஏற்பட்ட நிலையே நினைவில் எழுகிறது. பாஞ்சாலியைக் காப்பற்ற கண்ணன் வந்தான் ஆனால் ஜோனைக் காப்பாற்ற யாரும் முன்வரவில்லை என்பது நம்மை தாங்கவொண்ணா துயரத்தில் ஆழ்த்துகிறது.

“கடவுள் உன்னை அனுப்பியதாக நீ உரிமை கோருகிறாயா?”

“பிரான்ஸ் நாட்டைக் காப்பற்றவே நான் பிறந்திருக்கிறேன்.”

“கடவுள் ஆங்கிலத்தை வெறுப்பதாக நீ கருதுகிறாயா?”

“கடவுள் ஆங்கிலத்தை விரும்புகிறாரா அல்லது விரும்பவில்லையா என்பது எனக்குத் தெரியாது.”

“செயின்ட மைக்கேல் உன் முன் தோன்றியதாகக் கூறுகிறாய்… எந்த வடிவத்தில்? அவருக்கு சிறகுகள் இருந்தனவா? அவர் கிரீடம் சூடியிருந்தாரா? அவர் எவ்வாறு உடை உடுத்தியிருந்தார்?” என்பதாகச் செல்லும் அறிவற்ற, முட்டாள் கூட்டத்தின் கேள்விகள் ஏளனத்தின் உச்சமாக, “அது ஆணா அல்லது பெண்ணா என்பது உனக்கு எப்படித் தெரியும்? அவர் உடையேதும் இல்லாதிருந்தாரா?” என்று கேட்கிறது! அவர்கள் அனைவரின் கேள்விக்கும் ஜோன், "கடவுள் தனக்குத் தானே உடை அணியும் ஆற்றல் அற்றவரென்று நினைக்கிறீர்களா?” என்று திருப்பி பதிலடி கொடுக்கிறாள். இருந்தும் இத்தகைய அர்த்தமற்ற கேள்விகளையே அந்தக் கூட்டம் தொடர்ந்து வினவுகிறது. நிர்க்கதியான நிலையிலும் சரணாகதி அடையாத ஜோனின் துணிச்சல் அபாரமானது.

“நீ ஏன் ஆண்களின் உடைகளைத் தரித்திருக்கிறாய்?”

“கடவுளால் எனக்குக் கொடுக்கப்பட்ட செயல் முடிந்ததும்… நான் மீண்டும் பெண்களைப் போல உடை அணிவேன்.”

“அப்படியானால் கடவுள் உன்னை ஆண்கள் உடை தரிக்கும்படி கட்டளை இட்டாரா? கடவுளிடமிருந்து நீ என்ன சகாயத்தை எதிர்பார்க்கிறாய்?”

“என் ஆன்மாவின் விடுதலையை...”

இந்த கட்டத்தில் ஒரு பாவி, “இது தெய்வ நிந்தனை” என்று சொல்லி ஜோனின் முகத்தில் காறி உமிழ்கிறான். படம் பார்க்கையில் இந்த இடத்தில் நான் ஸ்தம்பித்துவிட்டேன். மேற்கொண்டு படத்தைப் பார்க்க முடியவில்லை. கண்கள் கலங்கிவிட்டன. “என்ன மனிதர்கள்!” என்ற சொற்றொடர் திரும்பத் திரும்ப காதில் ஒலித்தபடியே இருந்தது. மனம் சற்றே மட்டுப்பட்ட பிறகே படத்தைத் தொடர்ந்து பார்த்தேன். கௌரவர்கள் அவையிலும் சில நல்லவர்கள் இருந்ததைப் போலவே இங்கேயும் ஒருவர், “இது அவமானகரமானது. என்னைப் பொறுத்தவரை இவர் ஒரு ஞானி” என்று சொல்லி ஜோனின் பாதத்தில் விழுந்து வணங்குகிறார். எல்லோரும் அவரை நிந்தித்து அவையிலிருந்து வெளியேற்றுகிறார்கள். மீண்டும் பாரதத்தின் அவைக்காட்சி நினைவில் வந்துபோகிறது!

“கடவுள் உன்னிடம் ஏதாவது வாக்கு கொடுத்திருக்கிறாரா?”

“அது இந்த விசாரணைக்குச் சம்பந்தமில்லாதது.”

“ஆக நீ நிச்சயமாக காப்பற்றப்படுவாய் என்று நம்புகிறாயா? உனக்கு கிருத்துவ சபை தேவையில்லையா? நீ இரக்கத்திற்கு உரியவளாக இருக்கிறாயா?”

”நான் அதற்கு உரியவள் எனில் கடவுள் என்னை இங்கே வைத்திருப்பார். நான் அதற்கு உரியவள் அல்ல எனில் கடவுள் அதை எனக்கு வழங்குவார்.”

ஜோன் எளிதில் எதையும் ஒப்புக்கொள்ள மறுப்பது கேள்வி தொடுப்பவர்களை அமைதியிழக்கச் செய்கிறது. எனவே அவளை கேள்விகளில் சிக்கவைக்க முயற்சிக்கிறார்கள்! தான் மக்கள் கூட்டத்தைச் சந்திக்க வேண்டும் என்று அவள் கோரும்போது, அவள் ஆண் உடை தரிப்பதை விட்டுவிடவேண்டும் என்கிறார்கள். அவள் அதற்கு மறுக்கிறாள். ஜோனின் ஆடை பற்றிய கேள்விகள் பலமுறை கேட்கப்படுகிறது. ஏன் அந்த உடை அவர்களை அவ்வளவு தூரம் இம்சிக்க வேண்டும்? அது ஆணின் உறுதியையும், துணிச்சலையும் அவளுக்குத் தருகிறது என்பதாலா? பெண்ணாகவோ அல்லது ஆணாகவோ இருப்பதை எதிர் கொள்வதைவிட, ஆண் உடையில் இருக்கும் பெண்ணாக அவள், அவர்களை நேர்கொள்வது அவர்களை அலைக்கழிப்பது விசித்திரமாக இருக்கிறது! கூர்ந்து நோக்கினால் அதன் பின்னே நுட்பமாக மறைந்துள்ள மனோ ரீதியான காரணங்கள் பலவும் புலப்படும்.

ஜோன் தொடர்ந்து பிடிவாதம் பிடித்தால் கிறுத்துவ சபை அவளை புறக்கணிக்கும் என்றும், அவள் தனித்துவிடப்பட நேரும் என்றும் அவர்கள் எச்சரிக்கிறார்கள். அப்போது ஜோன், “அப்போது நான் கடவுளுடன் தனிமையில் இருப்பேன்!” என்று பதிலளிக்கிறாள். அது அவர்களை மேலும் கோபப்பட வைக்கிறது. அவளை சித்ரவதை கூடத்துக்கு அழைத்துச் சென்று சித்ரவதை செய்கிறார்கள். மனிதர்கள் சக மனிதர்களை இம்சிக்க எத்தனைவிதமான கருவிகளைக் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள் என்பதை அறியும்போது நாம் வாயடைத்துப் போகிறோம். அப்போதும் மனம் தளராமல், “நீங்கள் எனது உயிரை உடலிலிருந்து பிரித்த போதும் நான் எதையும் ஒப்புக்கொள்ளப் போவதில்லை” என்று சொல்லும் ஜோன், ஒருவேளை சித்ரவதை தாங்காமல் தான் ஒப்புக்கொண்டுவிட்டால் என்னசெய்வது என்பதால், “நான் ஒருவேளை அப்படி ஒப்புக்கொண்டாலும் அது என்னிடமிருந்து வலுக்கட்டாயமாக பெற்றது என்றே சொல்வேன்” என்றும் சொல்கிறாள்!

சித்ரவதையால் மயங்கி விழுந்த அவளை எடுத்துச்சென்று, கை நரம்பை கத்தியால் கீறி, இரத்தத்தை வெளியேறச் செய்கிறார்கள். நம் இரத்தத்தை உறைய வைக்கும் காட்சி! மனிதத் தன்மை முற்றாக உலர்ந்துவிட்ட காட்சி! பழமைவாதிகளின் மூடத்தனத்தின் மொத்த உருவம் முற்றாக வெளிப்படும் காட்சி! காலங்காலமாக பழமைவாதிகள் இப்படித்தான் செயல்பட்டு வந்திருக்கிறார்கள். இதை என்னவென்று சொல்வது? எப்படித்தான் எதிர்கொள்வது? கடவுளே! ஜோன் அப்போதும் மசியாதபோது வார்த்தைகளால் வசை பாடுகிறார்கள்! அவள் சாத்தானின் குழந்தை என்கிறார்கள். அப்போதும் ஜோன், “சாத்தான் என்னை அனுப்பியதாக நீங்கள் சொல்வது உண்மையல்ல. மாறாக என்னை இம்சிக்கும் பொருட்டு சாத்தான்தான் உங்களை அனுப்பியுள்ளது” என்று பதிலடி கொடுக்கிறாள்,

இனிமேல் பயனில்லை என்று அவளை உயிரோடு எரிக்க முடிவு செய்கிறார்கள். தான் இறப்பது நிச்சயம் என்றறிருந்தும் அவள் துணிவுடன் இருப்பது, அங்கேயிருக்கும் பணியாளை வியப்பில் தள்ளுகிறது. அப்போது அவன், “கடவுள்தான் உன்னை அனுப்பினார் என்பதை இன்னும் நீ எப்படி நம்புகிறாய்?” என்று மிக முக்கியமான கேள்வியைக் கேட்கிறான். அதற்கு ஜோன் சொல்லும் பதில் அதைவிட முக்கியமானது! பாவிகள் தெய்வத்தின் பெயரால் அவளை உயிரோடு எரிக்கிறார்கள். அவளும் தெய்வத்தின் பெயரால் எரிந்து சாம்பலாகிறாள். ஆனால் தெய்வம் இதையெல்லாம் ஏன் வேடிக்கை பார்க்கிறது? அதற்கு அந்த பணியாளின் கேள்விக்கு ஜோன் அளித்த பதிலே பதிலாகிறது!

“அவரது வழி நம்முடைய வழியைப் போன்றதல்ல” எத்தனை மகத்துவமிக்க பதில் இது!

கருப்பு-வெள்ளை மௌனத் திரைப்பட வரிசையில் இத்திரைப்படம் சிகரமாக நின்று, காவியம் என்று சொல்லத்தக்க வகையில் ஜொலிக்கிறது. ஒவ்வொருவரும் இத்திரைக் காவியத்தை அவசியம் கண்டு ஜோனின் ஒப்பற்ற தியாகத்தைப் போற்றவேண்டும்.

“தற்போது எடுக்கப்படும் பல திரைப்படங்களில் சினிமாவின் அம்சம் மிகக் குறைவாகவே இருக்கிறது. மனிதர்களின் பேசும் புகைப்படங்களையே அவர்கள் படம் என்ற பெயரில் தருகிறார்கள். சினிமாவின் வாயிலாக கதையைச் சொல்லும்போது உரையாடல்கள் தவிர்க்க முடியாதவை எனும் பட்சத்தில் அன்றி வேறுவகையில் அவற்றை இடம்பெறச் செய்வது கூடாது. நான் எப்போதும் கதையை சினிமா மொழியிலேயே, காட்சிகளின் சித்தரிப்பின் மூலமே காட்ட முயற்சிக்கிறேன்” என்று திரை மேதையான ஆல்பிரட் ஹிட்சாக் சொல்கிறார். எனவே திரைப்படத்தை ஒரு நாடகமாகவே இன்றும் பயன்படுத்துபவர்கள் திரைப்படம் எனும் சாதனத்திற்கு துரோகம் செய்கிறார்கள்.

ஆக, ஒரு சிறந்த திரைப்படம் என்பது காட்சிகளின் சித்தரிப்பில் கவனம் செலுத்த வேண்டுமே தவிர ஒலியில் அல்ல. அது புறக்காட்சிகளின் ஒலியாக இருப்பினும் கதாபாத்திரங்களின் உரையாடலின் ஒலியாக இருப்பினும் தேவைக்கு அதிகமாக அணுவளவும் இருக்கக் கூடாது. ஒலியால் நிரம்பிய உலகிலிருந்து விடுவித்து ஒலியற்ற உலகில் நம்மை சஞ்சரிக்க வைப்பவை பேசாத் திரைப்படங்களே. இத்தகைய திரைப்படங்களின் வாயிலாகவே நாம் மனிதர்களையும் அவர்களின் உறவுகளையும் இன்னும் நெருக்கமாக அறியமுடியும். அந்த நெருக்கம் நாம் வாழும் உலகத்து மனிதரிடையே உறவையும் அன்பையும் வளர்க்கும். 

(நம் நற்றிணை காலாண்டிதழ் இரண்டாம் இதழில் சுருக்கமாக வெளியான கட்டுரையின் நீள் வடிவம்) 

Related Posts Plugin for WordPress, Blogger...