November 13, 2017

அயினிப்புளிக்கறி -ஜெயமோகன்

ஜெயமோகனின் இந்தக் கதையை ஒரு மரத்தைப் பற்றிய கதை என்பதாகவே நாம் படித்துச் செல்கிறோம். எனவே கதையின் இடையே ஆசான் குடும்ப வாழ்க்கை பற்றிய ஒன்றிரண்டு வரிகள் வரும்போது, அசிரத்தையாக வாசிக்கிறோம். ஆனால் கதையில் இறுதியில் அதே போல ஒன்றிரண்டு வரிகளில் அவற்றை தொடர்பு படுத்திவிடுவதோடு, அயினி மரத்திற்குமான தொடர்பையும் அனாயசமாக ஜெயமோகன் சொல்லிச் சென்றுவிடுகிறார். மிக நுட்பமான இந்த எழுத்தாற்றல் படைப்பில் தோய்ந்த அனுபவத்தினால் மட்டுமே வரக்கூடியது. பார்ப்பதற்கு மிக எளிமையாகத் தோன்றினாலும் இது அவ்வளவு சுலபமல்ல. 

ஜி.நாகராஜனின் யாரோ முட்டாள் சொன்ன கதையைப் பற்றி குறிப்பிடும் சுந்தர ராமசாமி, “யாரோ முட்டாள் சொன்ன கதையை அவர் நிகழ்த்திக்கொண்டு போகும் முறை ரசிக்கும்படியாக இருக்கிறது. நிகழ்காலத்தில் இரண்டு கீற்று, நிகழ்ந்து முடிந்தவை இரண்டு கீற்று, இப்படி முடைகிறார் ஆசிரியர். மேற்பரப்பில் இது சாதாரணமாகத் தெரியலாம். எளிது என்று கூடப் படலாம். கை வந்த வித்தைகளில்-பானை வனைவதிலிருந்து பல்லாங் குழி ஆடுவது வரையிலும்-அவற்றின் நேர்த்தி அவற்றைச் சாதாரணம் போல் காட்டுகிறது” என்கிறார். அது இந்தக் கதைக்கும் பொருந்தும்.

மரத்தை வெட்டுவது பற்றி மகனுக்கும் தந்தைக்குமுள்ள கருத்து வேறுபாட்டில் இந்தக் கதை ஆரம்பிக்கிறது. ஒன்றின் பயன்பாடு குறித்த வேற்றுமையே இன்றைய தலைமுறையின் இடைவெளியாக இருக்கிறது. யாருக்கும் எதற்கும் பிரயோஜனமில்லாத அயினி மரம் எதற்கு என்கிறான் மகன். இந்தத் தலைமுறையின் அப்பட்டமான சுயநலத்தின் வெளிப்பாடாக அவன் இருக்கிறான். ஆனால் தந்தையோ, “இந்த சுத்துவட்டத்திலே உள்ள அத்தன கிளியும் குருவியும் மைனாவும் இங்கதான் இருக்கும். மனுசன் தின்னாட்டி என்னலே?” என்கிறார். நம்மைச் சுற்றியுள்ளவை வளமாக இருந்தால்தான் நாம் வளமாக இருக்க முடியும். அவை வேறு நாம் வேறு அல்ல. எல்லாமே இப்பிரபஞ்சத்தின் உறுப்புகள். இதில் ஒன்றில் ஏற்படும் பாதிப்பு அனைத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே மகனோடு மேற்கொண்டு இருக்கப் பிரியப்படாத ஆசான் தனியே சென்று வசிக்க முடிவு செய்கிறார். அதை அறியும் குணமணி ருசி கண்ட நாக்கு இனி தனியே சென்று சமைத்திருக்க முடியுமா என்று கேட்கிறான். அப்போது, “அயினிப்புளிசேரி வச்சு சோறுதின்னு வருசம் நாப்பதாகுது” என்று சொல்லும் ஆசான் தன் முதல் மனைவியை நினைவு கொள்கிறார். அவள் வைப்பது போல அயினிப்புளிச்சேரி வைக்கமுடியாது என்றும் அவளும் தானும் சேர்ந்து வாழ்ந்த ஒன்பது மாதத்திலேயே கருத்து வேறுபாட்டால் பிரிய நேர்ந்துவிட்டதைச் சொல்கிறார்.

மறுநாள் காலையில் அங்கிருந்து கிளம்பும் அவர் கால்களே இட்டு வந்தது போல தன் முதல் மனைவி இருந்த இடத்தை அடைகிறார். நேற்றைய இரவில் அவர் மண்டையில் அறைந்த புளிப்பே அவரை இங்கே கொண்டுவந்து சேர்த்திருக்கிறது! “வாறியாடீ?” என்று அவளைப் பார்த்துக் கேட்க அவள், “வாறேன்” என்கிறாள். மிக எளிமையாகக் கதை முடிந்து விடுகிறது.

இந்தச் சிறுகதையை வாசிக்க ஆரம்பித்த போதும் வாசித்து முடித்தபின்னும் மனத்தின் பின்புலமாக,

காயிலே புளிப்பதென்ன கண்ண பெருமானே - நீ
கனியிலே இனிப்பதென்ன கண்ண பெருமானே

என்ற பாரதியின் வரிகளே தொடர்ந்து கேட்டவண்ணமிருந்தன. காய் எனில் புளிப்பதும் கனி எனில் இனிப்பதும் இயல்புதானே? ஆனால் அந்தக் காய்தான் குறிப்பிட்ட இடைவெளியில் கனியாகக் கனிந்து இனிப்பை ஊட்டுகிறது. இதை மையமாகக் கொண்டு இந்த அற்புதமான காதல் கதையை பின்னியிருக்கிறார் ஜெயமோகன். இது ஒரு காதல் கதை என்றோ அல்லது எதைப்பற்றிய கதை என்றோ கதையை கடைசி வரை வாசித்து முடிக்காதவரை நாம் ஊகிக்க முடியாது.

கதையின் இறுதியல் ஆசான் மனைவியிடம், “நேற்று அயினிப்புளிக்கறி வச்சேன்.. செரியா வரேல்ல கேட்டியா” என்கிறார். அவர் அயினிப்புளிக்கறி மட்டுமா சரியாக வரவில்லை என்கிறார். தான் இதுவரை வாழ்ந்த வாழ்கை முழுவதுமே சரியாக வரவில்லை என்பதாகவே அவர் சொல்கிறார். இரண்டாவது திருமணம் செய்துகொண்டது, மகனும் மருமகளும் தன் பேச்சைக் கேட்காதது இப்படி அனைத்துமே சரியாக அமையவில்லை என்றே அவர் சொல்கிறார்.

எந்த இரு உறவும் இணையும் போது அது காயாகவே இருக்கும். அது கனியாகும்வரை காத்திருக்கும் பொறுமை வேண்டும். அயினி மரத்தின் காய் புளிப்பாகத்தான் இருக்கும். ஆனால் அதன் இனிப்பை சுவைக்க அது பழமாகும்வரை காத்திருக்கத்தான் வேண்டும். காயாக இருக்கும்பொதே வெட்டிவிட்டால் அதன் இனிப்பை சுவைக்க முடியுமா?


Related Posts Plugin for WordPress, Blogger...