October 25, 2017

ஆழமற்ற நதி -ஜெயமோகன்

இந்தக் கதையை வாசிக்கும் போது சுஜாதாவின் டாக்டர் நரேந்திரனின் விநோத வழக்கு நாடகம் நினைவில் வந்தது. “கோமா பத்தி எங்களுக்கு எவ்வளவு தெரியும்? ஒருவேளை அவர் ஒருவிதமான மேம்போக்கான ஸ்டுப்பர்ங்கிற நிலையிலே இருந்து எல்லாத்தையும் கேட்டுகிட்டு இருக்கார்னா என்ன ஒரு பரிதாப நிலை அது” என்று நினைக்கும் டாக்டர் நரேந்திரன் கோமாவில் இருக்கும் நோயாளியின் ஆக்சிஜன் குழாய்களைப் பிடுங்கி விடுதலை தருவார். கருணையின் பாற்பட்டு நரேந்திரன் இதைச் செய்கிறார்.

இருந்தும் இப்படியான நிகழ்வுகள் என்னதான் “கருணைக் கொலை” எனினும், அந்த சொல்லாட்சியில் “கொலை”யும் இருக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது. காசிநாதன் இதையே தேவையின் பாற்பட்டு செய்கிறார். செயல் ஒன்றுதான் ஆனால் அதன் பின்னுள்ள நோக்கம் வேறுபடுகிறது. ஒரு செயலின் பின்னுள்ள நோக்கமே ஒரு செயலின் தரத்தை நிர்ணயிக்கிறது. எனவே, அந்த குற்றவுணர்வின் உந்துதலினாலே காசிநாதன் பாவத்திற்கான பிரயாச்சித்தத்தைச் செய்ய முனைகிறார்.

“பாவத்தைக் கரைப்பதற்கான எந்த ரசாயனமும் கங்கையில் இல்லை. ஆனால் இந்த சமூகத்தின் 'கங்கையின் மூழ்கினால் பாவம் நீங்கும்' எனும் கூட்டு மனம், பாவத்தை நீக்கும் நம்பிக்கையைத் தருகிறது” என்று ஓஷோ ஓர் அற்புதமான கருத்தைச் சொல்கிறார். உண்மையில் பாவம் அல்லது புண்ணியம் என்பதைத் தீர்மானிப்பது யார்? இந்த உலகத்தில் பிறந்தவர்கள் அனைவரும் பாவமும் புண்ணியமும் செய்தே ஆகவேண்டும். பாவத்திற்குப் பலனும் புண்ணியத்திற்குத் தண்டணையும் தனித்தனியே கிடைக்கும் என்று வியாசர் மகாபாரதத்தில் சொல்கிறார். ஆக மனித மனம் தான் பாவம் என நினைக்கும் ஒன்றிலிருந்து விடுபட அதற்கான பிராயச்சித்தத்தை நோக்கி நகர்கிறது எனினும், காசிநாதன் போன்றவர்கள் அதிலும் ஒரு பொய்த்தோற்றத்தையே சிருஷ்டிக்கிறார்கள் என்பதை இந்தக் கதையில் அருமையாகப் படம் பிடிக்கிறார் ஜெயமோகன்.

எய்தவன்-அம்பு இரண்டில் யார் குற்றவாளி என்று கேட்டால், ஒரு செயலுக்கு ஜடப்பொருளை யாரும் குற்றம் சுமத்த முடியாது. அதை எய்தவனே எப்போதும் செயலுக்கு ஆதாரமாக இருப்பவன். கதிரை ஒரு ஜடப்பொருளாகக் கருதியே காசிநாதன் குடும்பத்தார் அவன் மூலமாக தாங்கள் விரும்பியதைச் செய்துகொள்கிறார்கள். அப்போது கதிரின் சம்மதத்தை யார் கேட்டார்கள்? கதிரை ஒரு பொருட்டாக மதிக்காத அவர்கள் பிராயச்சித்தத்தை மட்டும் அவனைக் கொண்டு செய்விப்பது எந்த விதத்தில் நியாயம்? பாவத்தைச் செய்தவர்கள் ஒருவராக இருக்க அதற்கான பிராயச்சித்தத்தைச் செய்வது மற்றொருவர் என்பது எந்தவிதத்தில் ஏற்புடையது? இதுதான் கதிரின் அழுகைக்குக் காரணமா?

இந்தக் கதையில் கதிரின் அழுகைக்கான காரணங்களை கண்டடைவதன் மூலமே வாசிப்பில் இக்கதையை நாம் விரித்தெடுக்க முடியும். இந்தச் செயலைச் செய்யும்போது கதிர் ஏன் சிறு எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை? என்ற கேள்வியின் உள்ளே நுழைகையில் நமக்கு கதிரின் அழுகைக்கான வேறு காரணங்கள் புலப்படுகின்றன. வாழ்க்கையில் தான் இத்தனை நாளும் பட்ட அவஸ்தைகளைத் தன்னுடைய தந்தையும் படக்கூடாது என்றுதான் கதிர் அச்செயலுக்கு எதிர்ப்பு காட்டவில்லை என்று கொண்டால், இப்போது கதிர் அழுவது ஏன்? ஒரு செயலைச் செய்து முடிக்கும் வரை உள்ள உணர்வும், அதைச் செய்து முடித்தபின் எழுகின்ற உணர்வும் எப்போதுமே வேறானவை. தான் இந்த நிலையில் இருந்தபோதும் தன் தந்தை தன்னைக் கைவிட முனையவில்லை. ஆனால் நானோ தந்தையைக் கைவிட்டு விட்டேன் என்ற குற்ற உணர்வினால் கதிர் அழுதிருக்கலாம். அப்படி விட நேர்ந்துவிட்ட கையறு நிலையில் தான் இருந்துவிட்டதை எண்ணி அவன் அழுதிருக்கவும் கூடும்.

கடைசியில் கதிரின் அழுகையைக் கேட்டு காசிநாதனும் அவர் குடும்பத்தாரும் ஏன் கலவரமுற்று அச்சப்பட வேண்டும்? தாங்கள் இது நாளும் செய்து வந்தவை வெட்ட வெளிச்சமாயிற்றே என்றா? தன் செயல்கள் அனைத்தையும் கடவுள் கவனிக்கிறார் என்று மனிதன் நம்புவதால்தான் சிலவற்றைச் செய்வதற்கு அவன் தயக்கம் காட்டுகிறான். சிலர் அந்த தயக்கத்தை விட்டு வெளியேறி விடுவதும் உண்டு. அப்படி வெளியேறியவர்கள் ஏனைய மனிதர்களோடு சகஜமாக இருக்க முடியாது என்பதும் வெளிப்படை. தாங்கள் அத்தகைய ஒரு நிலையை அடைந்து விட்டோமோ என்றுதான் அவர்கள் அச்சப்படுகிறார்கள். மனிதர்கள் தாங்கள் நல்லவர்கள் என்பதைவிடவும், தாங்கள் நல்லவர்கள் என்பது பொய்யாகி விடக்கூடாது என்றுதான் அதிகமும் அச்சம் கொள்கிறார்கள்.

உயிருள்ள அனைத்துமே உணர்வுகள் உள்ளவைதான் என்பதைச் சொல்லும் ஜெயமோகனின் ஆழமற்ற நதி ஓர் ஆழமான சிறுகதை. சாதாரண மனிதர்களிடையே கதிரைப் போன்றவர்களை இறைவன் ஏன் படைக்கிறான் என்பது புரியாத புதிர். அந்தச் சாதாரண மனிதர்கள் இத்தகைய அசாதாரணமான மனிதர்களை எவ்வாறு கையாள்கிறார்கள் என்பதை இந்தக் கதை சொல்கிறது. கதிரைப் போன்ற துரதிருஷ்டசாலிகள் ஒரு சாதாரணமான குடும்பத்தில் பிறந்தாலே அவர்களின் நிலை பரிதாபத்திற்குரியது எனில் காசிநாதன் போன்று செல்வச் செழிப்பில் திளைக்கும் ஒரு குடும்பத்தில் பிறந்தால் என்னவாகும்?

என்னதான் நதி ஆழமற்றிருந்தாலும் அதன் இயல்பு மாறுவதில்லை என்பதைப் போலவே உயிருள்ள அனைத்தின் இயல்பும் ஒன்றுதான் என்பதை நாம் ஏனோ மறந்துவிடுகிறோம். அதை நினைவில் நிறுத்தும்போதுதான் நாம் முழுமையான மனிதர்களாவோம்.

இந்தக் கதை கச்சிதமான வார்த்தைகளால் கட்டமைக்கப் பட்டுள்ளது. அவற்றில் கவனம் செலுத்தும்போதே இந்தக் கதை செல்லும் திசையை நாம் அறிய முடியும். ஆங்காங்கே அவ்வாறு வெளிப்படும் வார்த்தைகளும் சரி இக்கதையின் தலைப்பும் சரி நமக்குக் காட்டுவது ஒன்றெனில், இறுதியில் வெளிப்படும் கதிரின் அழுகை அதன் எதிர்த்திசையைக் காட்டுகிறது. அதன் மூலமாகவே இக்கதையின் தரிசனம் வெளிப்படுகிறது.

சமீபமாக நான் வாசித்த கதைகளில் ஆழமற்ற நதி முக்கியமான, என்னை பாதித்த, ஒரு கதை.
Related Posts Plugin for WordPress, Blogger...