ஒரு சிறு இசையின் சோக இசை!

ஒரு சிறு இசை தொகுப்பை வாசித்து முடித்ததும், மனம் கனத்துப் போகவில்லை. மனதில் இனம் புரியாத ஓர் உணர்வு எழவில்லை. மெல்லிய மீட்டலாக அதன் இசை காதில் ஒலிக்கவில்லை. கலைக்க முடியாத ஒப்பனைகளுடனோ, சமவெளியுடனோ, தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்களுடனோ, ஒரு சிறு இசையை ஒப்பிட்டுப் பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். இத்தொகுப்புகள் வெளியான காலத்தில் வண்ணதாசனுக்கு வழங்கப்படாத பரிசை, சாகித்திய அகாதமி இப்போது ஒரு சிறு இசை தொகுப்புக்கு வழங்கியிருப்பது வேடிக்கையானது.

ஒரு படைப்பாளி, தன்னுடைய எழுத்தாற்றலின் உச்சத்தில் இருக்கும்போது, அவனை கௌரவப்படுத்தும் போதுதான், அவன் எழுத்தாற்றல் அனைவருக்கும் தெரியவரும். அதைவிடுத்து, அவன் எழுதி எழுதி சோர்ந்துபோன காலத்தில் அவனை கௌரவிக்கும் போது, எந்தப் படைப்புக்காக அந்த விருது வழங்கப்படுகிறதோ, அந்தப் படைப்பின் வழியாக அவனது எழுத்தாற்றலுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பது துர்லபம், பொதுவாகவே தமிழ் எழுத்தாளர்களுக்கு அகாதமி வழங்கும் பரிசு ஓய்வுதியமே தவிர, ஊக்கதிற்கான பரிசாக இருப்பதில்லை. அதற்கு விலக்கில்லாமல் வண்ணதாசனுக்கு இந்த ஆண்டின் விருதை ஒரு சிறு இசை தொகுப்பிற்கு வழங்கியிருப்பது மிகப்பொருத்தமானது.

இத்தொகுப்பின் கதைகள் அனைத்தும் ஒரே சாயலில் அமைந்திருப்பதோடு. அனைத்துக் கதைகளும் ஒரே மாதிரியாக இழப்பின் துயரத்தையே இசைக்கின்றன. கதைகளில், தான் ஆங்காங்கே இருப்பதை வண்ணதாசன் உறுதிப்படுத்துகிறார் எனினும், அவருக்கு வயதாகிவிட்டதாலோ அல்லது வாசிப்போருக்கு வயதானதாலோ, எல்லாம் மங்கலாகவே தெரிகிறது. வண்ணதாசன் கதைகளில் வண்ணங்களின் கலவை அற்புதமாக இயைந்திருக்கும். ஆனால் இத்தொகுப்பில் அவைகளின் சேர்க்கை சரியாக அமையாமல், பழுப்பு நிறம் தூக்கலாக அமைந்து, சோபையிழந்த ஓவியமாகவே, கதைகள் காட்சியளிக்கின்றன.

இப்படிச் சொல்வதால், இத்தொகுப்பின் கதைகள் படிக்க அவசியமற்றவை என்றோ, நேர்த்தியற்றவை என்றோ சொல்வதாக பொருளல்ல. இத்தொகுப்பில் சிறந்த கதைகள் இல்லாமலிருக்கலாம் ஆனால் நல்ல கதைகள் இருக்கின்றன. அவைகளை, நாம் நம்முடைய வண்ணதாசனுக்காகப் படித்து ரசிக்கலாம்.

சந்தியா பதிப்பகத்தின் வெளியீடுகள் தரமானவையல்ல. காகிதமும் அச்சும் ஒரு சிறு இசைக்கு அழகு கூட்டவில்லை. மிகச்சிறிய எழுத்தும், அவைகளின் ஒழுங்கற்ற போக்கும், இத்தொகுப்பை பலர் கைகளுக்கு சென்றுசேரவிடாமல் தடுக்கின்றன எனினும், வண்ணதாசனுக்காக நாம் இதை வாங்குவதில் தவறில்லை.

Related Posts Plugin for WordPress, Blogger...