பிரத்யேக பேட்டியும் ஜனநாயக நாடும்!

 1. பிரத்யேக பேட்டி

காத்திருந்த
அந்த இடம்
பிரகாசமாகவும்
புகைமூட்டத்துடனும் இருந்தது

கனத்த சரீரத்துடன் வந்த அவர்
கன்னக் கதுப்புகள் இழுபட
புரிந்த புன்னகையில் நிறைவில்லை
நானேதும் கேட்குமுன் அவரே பேசினார்

தனிமைத் துயரில்
தத்தளித்தபோது தாவிப்பிடித்த கொடி
எனைப் பற்றிப் படர்ந்து சூழ்ந்துவிட்டது
தப்பிக்க வழியில்லை வகையுமில்லை
வேண்டும் என்று செய்யவில்லை
வேறுவழியில்லாமல் செய்துவிட்டேன்
தீர்புக்குத் தலை வணங்குகிறேன்

நான் அவரை ஏறிட்டேன்
நான் இங்கு வந்த
காரணம் அறியத் துடிக்கிறீர்
காலம் அதை வெளிப்படுத்தும்
நானாக அதைச் சொல்ல முடியாது

நான் கேட்க விரும்புவது
ஒன்றே ஒன்றுதான்
மன்னிப்பு
என்று திரும்பி நின்றவரின்
பெருத்த சரீரம் குலுங்கியது

ஆயிரம் பேர்
ஆயிரம் கற்பனை செய்தாலும்
சொல்பவர் சொல்லும்வரை
நிஜம் என்னவென்று
எவருக்கும் தெரியாது
அதுவரை
உண்மையின் மீது காளான்களாய்
பொய்கள் முளைக்கும்

கூர்தீட்டி வைத்திருந்த
கேள்விகள் பலவும் கூர்மழுங்க
வேறெதுவும்
கேட்க முடியாதவனாகி
கனத்த இதயத்தோடு
அங்கிருந்து நடந்தேன்

(தோன்றியது: 15.02.17 இரவு 9.20
எழுத ஆரம்பித்தது: 16.02.17 காலை 9.20
இறுதிவடிவம் எட்டியது: 16.02.17 மதியம் 1.20)

2. ஜனநாயக நாடு

இது ஜனநாயக நாடு
அண்டைவீட்டுக்காரன் முதல்
ஆண்டிவரை யாரும் எவரும்
மன்னராகலாம்

அவர்தான் வரணும்
அல்லது
இவர்தான் வரணும்
இல்லை
வேறொருவர்தான் வரணுமென
எவரும் ஆசைப்படலாம்

இந்தத் தகுதி வேண்டும்
அல்லது
அந்தத் தகுதி வேண்டும்
இல்லை
என்ன தகுதி இருக்கிறது
என்று கேட்கலாம்

ஆனால் சட்டத்திற்குட்பட்டு
அவரும் வரலாம்
அல்லது
இவரும் வரலாம்
இல்லை
வேறு எவரும் வரலாம்

அப்படி வந்தவர்
அதுவும் செய்யலாம்
அல்லது
இதுவும் செய்யலாம்
இல்லை
வேறெதுவும் செய்யலாம்
மேலும்
எதுவும் செய்யாமல்
எதிர்த்துக் கேட்பவர்களை
இல்லாமலாக்கலாம்

நாமிருப்பது
ஜனநாயக நாடு
என்பதை மட்டும்
ஒருபோதும்
மறந்துவிடக்கூடாது

(தோன்றியது: 16.02.17 மதியம் 1.30
எழுத ஆரம்பித்தது: 16.02.17 மதியம் 1.50
இறுதிவடிவம் எட்டியது: 16.02.17 மதியம் 5.15)

Related Posts Plugin for WordPress, Blogger...