மாதொருபாகன் திருத்தப் பதிப்பு!

சமீபத்தில் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள ஒரு புத்தகம் பெருமாள் முருகனுடையது. இந்தப் புத்தகத்தில் அர்த்தனாரி, ஆலவாயன், மாதொருபாகன் என மூன்று நாவல்கள் உள்ளன. மாதொருபாகனில் சில திருத்தங்களைச் செய்ததாகக் கூறும் பெருமாள் முருகன் பின்வருமாறு சொல்கிறார்:

"மாதொருபாகன் நாவலும் அதன் முடிவை இருவிதமாக வைத்துச் செய்த கற்பனையின் விளைவாகிய அர்த்தனாரி, ஆலவாயன் ஆகிய இந்த மூன்று நாவல்களையும் மிகுந்த ஆசையோடு எழுதினேன். எழுதிய காலத்து இன்பநிலை முடிந்து இவற்றால் பெருந்துயர் பீடித்தபோது இவற்றை இனிமேல் தனித்தனியாகக்கூட வெளியிடக் கூடாது என்றுதான் முடிவெடுத்திருந்தேன். இப்போதோ மூன்றையும் ஒரே நூலாக வெளியிடும் நிலை. எண்ணங்களைத் தீர்மானிப்பதில் அகநிலைக்கு மட்டுமல்ல, புறநிலைக்கும் பெரும் பங்கிருக்கிறது என்பதுதான் என் நம்பிக்கை. அதை இன்று நிதர்சனமாக உணர்கிறேன். இவை அச்சாகியே தீர வேண்டும் என்பது என் அவா அல்ல. ஆனால் அச்சிடாமல் நிறுத்துவது பொதுநிலையில் அறமாகாது. ஆகவேதான் இப்போதைய திருத்தப் பதிப்பு."

இதைப் படிக்க நேர்கையில், ஒரு படைப்பாளி புறச்சக்திகளின் நிர்பந்தத்திற்கேற்ப தன் படைப்பை திருத்துவதென்பது சரிதானா என்ற கேள்வி எழுகிறது. ஒரு படைப்பை தன்னுடைய உள்ளுணர்வின் துணைகொண்டு எழுதிச் செல்லும் படைப்பாளி, வெளிச்சூழலுக்கு செவிகொடுப்பது துயரம் தருவதாகும். ஆனால் நம் இலக்கியச் சூழலில் இத்தகைய அவலங்கள் நடப்பது நல்ல இலக்கியச் சூழலுக்குப் பெரும் கேட்டையே விளைவிக்கும் என்பதுதான் உண்மை.

                            ​​

ஒரு படைப்பு எழுத்தாளனால் சுயமாக எழுதப்படுவதற்கும், பிறர் முதுகில் பயணித்து எழுதுவதற்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது. முன்னதால் ஒரு படைப்பு சிறக்கும் எனில் பின்னதால் ஒரு படைப்பு தன் முழுமையை இழந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை.

மேலும் அவர் முன்னுரையில், “இது திருத்தப் பதிப்பு, திருத்தாமல் வெளியிட ஏதும் தடையில்லை. என் மனம்தான் தடை. “உன் சொல்லுக்கு விபரீதார்த்தம் ஏற்படும் சூழலில் ஏன் அதே சொல்லோடுதான் நிற்பேன் என்று பிடிவாதம்?” எனக் கேட்கிறது மனம். மனதிற்கு மதிப்பளித்து இந்தத் திருத்தப் பதிப்பு” என்கிறார். அவர் சொல்லில், அவர் மனமுவந்து மாற்றம் செய்ததாக அல்லாமல், ஆதங்கமே மேலோங்கி நிற்பதாகத் தெரிகிறது.

படைப்பாளிகள் தங்கள் குழு மனப்பான்மையை உதறிவிட்டு, ஒன்றுபட்டு நின்றாலொழிய, வரும் காலத்தில் இத்தகைய சிக்கல்களை தனியொரு படைப்பாளியால் கடந்துசெல்ல முடியும் என்று தோன்றவில்லை.

Related Posts Plugin for WordPress, Blogger...