Life is Beautiful (1997): போர்க்களத்தில் ஒரு கீதை!

நான் உலகத் திரைப்படங்களைப் பார்க்கத் தொடங்குகையில் பார்த்த முதல் வரிசைத் திரைப்படங்களில் ஒன்று Life is Beautiful. இரண்டாவது உலகப்போர் பின்னனியில் எண்ணற்ற திரைப்படங்கள் வந்துள்ளன. ஆனால் இத்திரைப்படம் முற்றும் மாறான ஒரு தொனியில் போரின் அவலத்தை, ஹிட்லரின் அராஜகத்தை சித்தரிக்கிறது. வாழ்க்கையை எதிர்கொள்வதில் இரண்டு வழிமுறைகள் உள்ளன. ஒன்று உடன்பாட்டு முறை எனில் மற்றது எதிர்மறை முறை. எதனுடனும் எதிர்த்துப் போராடுவது ஒரு வழி என்றால் எல்லாவற்றுடனும் இயைந்து பயணிப்பது மற்றொரு வழி. தன் வாழ்கையின் இணக்கமான சூழ்நிலையோடு மட்டுமின்றி, இணக்கமற்ற சூழ்நிலையிலும் எவ்வாறு நாயகன் இயைந்து வாழ்கிறான் என்பதை மிக அற்புதமாகப் பேசுகிறது Life is Beautiful.

போர் ஒரு அசாதாரணமான சூழ்நிலை. அங்கே வாழ்க்கையை வாழ்வதைவிட உயிரைத் தக்கவைத்துக் கொள்வதே ஒரு பெரும் போராட்டம். அந்த சூழலில் வாழ்க்கை ஒருபோதும் அழகானதாக இருக்க முடியாது மாறாக பயங்கரமானதாகவே இருக்கும். ஆனால் தன்னுடைய இயல்பான குணத்தால் அந்த வாழ்க்கையை அழகானதாகச் செய்துகொள்வதோடு, தன்னைச் சுற்றி உள்ளவர்களையும் அவ்வாறே எதிர்கொள்ள பயிற்றுவிக்கிறான் நாயகன். திரைப்படம் பார்க்கும்போதும், பார்த்து முடித்த பிறகும் அவனது அந்த மனோபாவம் நம்மையும் தொற்றிக் கொள்கிறது. என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்ற துணிச்சல் வந்துவிடுகிறது. அதுவே இத்திரைப்படம் நமக்குத் தரும் அற்புதமான அனுபவம். போர்க்களத்தின் மத்தியில் கிருஷ்ணன் நிகழ்த்தும் கீதா உபதேசத்திற்கு நிகரானது இது! கீதையை முழுமையாக உள்வாங்க இத்திரைப்படத்தைவிடச் சிறந்து வழி வேறெதுவுமில்லை!

திரைப்படம் ஆரம்பிக்கும் விதமே அலாதியானது. நாயகன் பயணிக்கும் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்து நேர்கிறது. அங்கே அவன் தான் சந்திக்கும் பெண்ணிடத்தில் தன்னை ஓர் இளவரசன் என்று அறிமுகப்படுத்திக் கொள்வதோடு அவளை இளவரசி என்றும் அழைக்கிறான். அவன் ஏதோ விளையாடுகிறான் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தையும் அவன் அந்த விளையாட்டுத் தனத்துடனே எதிர்கொள்கிறான். இறுதியில் அவன் சாவையும் அவ்வாறே சந்திக்கிறான் என்பதை அறியும்போது நம் மனம் நெகிழ்ந்து விடுகிறது. அந்த கடைசி தருணத்தை அத்தனை இயப்பாக சித்தரித்த இயக்குனரின் மேதமைக்கு ஒரு சபாஷ் போடலாம். வாழ்வது மட்டுமல்ல சாவதும் இயல்புதான் என்பதை உணர்த்தும் கீதையின் சாரமாகவே அதை நான் காண்கிறேன்.

கடைகளில் “யூதர்களுக்கும் நாய்களுக்கும் அனுமதியில்லை” என்ற வாசகத்தை தன் பையனுக்கு விளக்கும்போதும், குதிரையின் மீது “யூதக் குதிரை” என்று எழுதியுள்ளதைக் காட்டி தன் மாமா வருத்தப்படும்போது, அவருக்கு ஆறுதல் சொல்லும் விதமாக, “யூத சர்வர்“ என்று தன் மீது எழுதவில்லையே என்று நாயகன் சொல்வதும் இத்திரைப்படத்தின் ஆதார இயல்பான Life is Beautiful என்பதற்கு வலு சேர்க்கிறது. திரைப்படம் முழுதுமே இத்தகைய நுட்பமான காட்சிகளின் தொகுப்பு என்றே சொல்லவேண்டும். நாயகி யூதப் பெண்ணாக இல்லாவிடினும் ஜெர்மானிய வீரர்கள் அவள் கணவனையும், குழந்தையையும் கூட்டிச்செல்ல, அவளும் அவர்களோடு, எல்லாத் துன்பங்களையும் பகிர்ந்துகொள்ள இணைகிறாள். இருவரும் சந்திக்க முடியாத அந்த சூழலில் அவளுக்குப் பிடித்தமான பாடல் ஒன்றை இசைத்தட்டில் நாயகன் இசைக்க, அதைச் செவிமடுப்பதன் வாயிலாகவே அவள் அவனோடு நெருங்குகிறாள் என்பதை இயக்குனர் உணர்த்துவது கவிதை என்று சொல்லத்தக்க ஒரு காட்சி!

அந்த சூழ்நிலையில் இருக்கப் பிடிக்காமல் பையன் வீட்டுக்குப் போகலாம் எனும்போது, அங்கே நடப்பவை அனைத்தும் ஒரு விளையாட்டு என்றும், வென்றவர்களுக்கு பீரங்கி பரிசு என்றும் சொல்லி, நாயகன் அந்தச் சூழ்நிலையை முற்றாக ஒரு விளையாட்டாக சித்தரித்துவிடுவது கதையின் முக்கியமான பகுதி. வாழ்க்கையை விளையாட்டாக வாழச்சொல்லி, அப்படி வாழும் போதே வாழ்க்கை அழகானதாக இருக்கும் என்றும் சொல்லும் இத்திரைப்படம் ஒர் அற்புதமான அனுபவத்தைக் கொடுக்கிறது. உலகப்போர் நடந்ததும் அதில் ஆயிரக்கணக்கான யூதர்கள் கொல்லப்பட்டதும் யதார்த்தமான உண்மை. ஆனால் அந்த யதார்த்தத்தை யதார்த்தமாக மட்டுமே காட்டுவது ஒரு வகையான படைப்பாற்றல் எனில் அந்த யதார்த்தத்திலிருந்து முற்றும் மாறான ஒன்றை வெளிப்படுவத்தவது அபரிமிதமான படைப்பாற்றல். அதை Roberto Benigni ஒரு இயக்குனராகவும் நடிகராகவும் வெற்றிகரமாகச் சாதித்திருக்கிறார்.

Related Posts Plugin for WordPress, Blogger...