July 17, 2016

நாஞ்சில் நாடனின் மூன்று கதைகள்

வாசிப்பிற்கு அலாதியானவை நாஞ்சில் நாடன் கதைகள். அவர் கதைகளின் பொதுவான சிறப்பம்சம் கதை நெடுகவே மெல்லியதாக ஓடும் நகைச்சுவை. சில கதைகளில் அது தூக்கலாக இருப்பதும் உண்டு. அப்போது, தான் சொல்லவந்தததை வாசிப்பவர் மனதில் அழுந்தப் பதியச் செய்யவே அவ்வாறு சொல்கிறார் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். இங்கே அவரது மூன்று கதைகளைக் குறித்துச் சொல்லியிருக்கிறேன். மூன்றும் மூன்று விதமான வாசிப்பனுபவத்தைத் தருபவை.

1. விரதம்

1975-ல் வெளியான விரதம் நாஞ்சில் நாடனின் முதல் சிறுகதை. தீபம் இதழில் வெளியாகி இலக்கியச் சிந்தனை பரிசு பெற்றது.

சின்னத்தம்பியா பிள்ளை ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கிறார். பாலத்தின் கீழே ஓடும் அந்த ஆறு அவரது சிறுவயது முதல் பழக்கமான ஒன்று. அந்த ஆற்று நீரில் குளிக்கும் சுகமே அலாதிதான். சின்னத்தம்பியா பிள்ளைக்கு இரண்டு பெண்கள். அந்த கிராமத்திலிருந்து ஆறு பர்லாங் தூரத்தில் இருக்கும் தாழக்குடியில்தான் இரு பெண்களையும் கொடுத்திருக்கிறது.  அவர் மனைவிக்கு உடல்நலமில்லாததால் அன்று சமைக்க முடியவில்லை. அமாவாசை விரத நாளான அன்று, பழையது சாப்பிட விரும்பாமால் தன் பெண் வீட்டில் சாப்பிடலாம் என்று கிளம்புகிறார்.

மூத்த பெண் வீட்டிற்குச் செல்கிறார்.

இந்த பனிரெண்டு மணி வெய்யிலில் இவ்வளவு தூரம் வருவானேன்? சாப்பிட்டா படுத்து உறங்க வேண்டியதுதானே?  வெயில் குறைந்ததும் வரலாமே? என மூத்த மகள் கடிந்துகொள்கிறாள்.

இனிமேல் இவளிடம் எப்படி இன்னும் சாப்பிடவில்லை என்று சொல்வது என்ற தயக்கம் அவரிடம் வந்துவிடுகிறது. வந்ததுக்கு கொஞ்சநேரம் பேரக் குழந்தைகளுடன் கழித்துவிட்டு “தங்கச்சி வீட்டுவரை போயிட்டு வரேன்” என்று கிளம்புகிறார்.

நமக்கோ மெலிதாக புன்னகை அரும்புகிறது.

இளைய மகளின் வீட்டை நெருங்கும்போதே அவருக்கு “திக்”கென்றிருக்கிறது. அங்கே இந்நேரம் எல்லோரும் சாப்பிட்டு முடிந்திருந்தால் என்ற சந்தேகம் வருகிறது. நல்லவேளை மருமகன் அப்போதுதான் சாப்பிட உட்கார்ந்திருக்கிறார். சாப்பாட்டின் மனம் அவர் நாசியைத் தாக்குகிறது.

அங்கே என்ன நிகழப்போகிறதோ என்று நம் புன்னகை அதிகமாகிறது.

எப்ப வந்தாலும் அவ வீட்டுக்கு போய் சாப்பிட்டுட்டு வருவதே பழக்கமாகிவிட்டது என்று சின்ன மகளும் அப்பாவைக் கடிந்துகொள்கிறாள்.

அவருக்கு என்ன செய்வதென்று தெரியாமல் விழிக்கிறார். இன்னும் சாப்பிடவில்லை என்று எப்படிச் சொல்வது? உள்ளேயிருந்து தேங்காய் எண்ணெயில் அப்பளம் பொறிக்கும் ஓசை அவர் பசியைச் சோதிக்கிறது. அப்போதுதான் அவருக்குத் தான் திருநீறு இட்டுக்கொண்டிருப்பது தெரிகிறது. குளித்துவிட்டுத் திருநீறிட்டுதான் சாப்பிடுவது அவர் பழக்கம். இந்த திருநீறுதான் தான் சாப்பிட்டாயிற்று என்பதை பறைசாற்றியிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்கிறார்.  மகளிடம் வெறும் தண்ணீரை வாங்கிக் குடித்துவிட்டு, தான் ஒருவரைப் பார்க்க வந்ததாகச் சொல்லி அங்கிருந்து வீட்டுக்கு விரைகிறார்.

நம் புன்னகை சிரிப்பாகிறது.

பசி மயக்கம். வெயிலையும் பொருட்படுத்தாது வீட்டிற்கு வருகிறார். அடுக்களை புகுந்து பானையிலிருந்த பழையதை எடுத்து வைத்துக்கொண்டு தொட்டுக்கொள்ள ஊறுகாயைத் தேடுகிறார். உடல் நலமில்லாமல் படுத்திருக்கும் அவர் மனைவி தன் கணவருக்கு என்ன ஆயிற்று என்று விசித்திரமாகப் பார்க்கிறாள்.

நாம் அடக்க முடியாமல் சிரிக்கிறோம்.

சரி வெறும் சிரிப்புக்காகவா இந்தக் கதை?

கதைகள் இரண்டு வகை. ஒன்று, கதை வட்டத்துக்குள் சிலவற்றை நமக்கு உணர்த்தும் கதைகள். இரண்டாவது, கதைக்கு வெளியே நம் சிந்தனையை விரியச்செய்யும் கதைகள். நாஞ்சில் நாடனின் விரதம் இரண்டாவது வகையை சார்ந்தது. அதனாலேயே இந்தக் கதை நம் மனதுக்குப் பிடிக்கிறது. மனிதன் எத்தனையோ விசயங்களில் உண்மையும் சொல்கிறான் பொய்யும் சொல்கிறான். ஆனால் சாப்பாட்டு விசயத்தில் உண்மை சொல்வதில் அவனுக்கு ஏன் தயக்கம் ஏற்படுகிறது? இவ்விசயத்தில் பொய்சொல்வதன் வாயிலாகவே  அவன் தனது சுயத்தைத் தக்கவைத்துக்கொள்கிறான். என்று அவன் இவ்விசயத்தில் உண்மை சொல்கிறானோ அன்று அவன் தன் சுயத்தைக் கைவிட்டு, எத்தகைய கீழான செயலையும் செய்யத் தயாராகிவிடுவான் என்பது நாம் கதைக்கு வெளியே பெறும் அனுபவமாகும்.

நாம் அனுபவப்பட்ட நிகழ்வுதான் என்றாலும்  நாஞ்சில் நாடனின் எழுத்து அதை உயிர்ப்புடனும் நகைச்சுவையுடனும் சேர்த்து நம்மை வேறோர் சிந்தனைக்கு இட்டுச் சென்றுவிடுகிறது.
Viratham by Kesavamani Tp on Scribd


2. இந்நாட்டு மன்னர்

அந்த ஊரில் ஊராட்சி தலைவர் தேர்தல். பூசணிக்காய் சின்னமும், ரோடு உருளை சின்னமும் மோதுகின்றன. எல்லோரும் வாக்களிக்கும் போது அந்த ஊர் வைத்தியருக்கு மட்டும் ஓட்டு இல்லாமலிருக்கிறது. காரணம் அவன் பெயரையே அவனும் ஊராரும் மறந்துவிட்டதுதான். இருந்தபோதும், நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் கள்ள ஓட்டாவது போட்டிருக்கிறான். இது உள்ளூர் தேர்தல் என்பதால் அதற்கும் வழியில்லாதது அவனை வருத்தமடைய வைக்கிறது. இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் யாரென்று தெரியாத இரண்டு பெயர்கள் இருப்பதை பூசணிக்காய் ஆதரவான மாணிக்கம் கண்டுபிடிக்கிறான். அது யாராக இருக்கும் என்று யோசித்து வைத்தியனின் பெயர்தான் அணஞ்ச பெருமாளாக இருக்கும் என்று முடிவுசெய்கிறான். தன் கட்சிக்கு ஒரு ஓட்டு கண்டுபிடித்த உற்சாகம் அவனுக்கு. அன்று நடு ஜாமத்தில் வைத்தியனை எழுப்புகிறான். வைத்தியன் ஒன்றும் புரியாமல் விழிக்க, அவனுக்கு ஓட்டு இருப்பதாகவும் யாரிடமும் சொல்லக்கூடாது என்றும் சொல்லி அவனை மறுநாள் அழைத்துப் போகிறான். போட்டியிடும் இருவரும் மைத்துனர்கள். எனவே போட்டி சரிசமமாக இருக்கிறது. வெற்றி பெறுபவர் எப்படியும் பத்து ஓட்டு வித்தியாசத்தில்தான் வெல்ல முடியும் என்பதாக கணிப்பு நிலவுகிறது. எனவே வைத்தியரின் ஓட்டு முக்கியமானதாகிறது. அவனுக்குப் புது வேட்டியும் சட்டையும், சாப்பாடுமாக ராஜபோகத்தில் திளைக்கிறான். இதனால் புளகாங்கிதம் அடையும் வைத்தியன் ஒவ்வொரு மாதமும் தேர்தல் வந்தால் நன்றாக இருக்கும் என்று யோசிக்கிறான்.

மறுநாள் வாக்கெடுப்பு. மாணிக்கம் வைத்தியனை ஓட்டுச்சாவடிக்கு அழைத்துப் போகிறான். உருளை சின்னத்துக்கு அதிர்ச்சி. வழக்கமாகக் கள்ள ஓட்டு போடும் வைத்தியன் என்ன தைரியமிருந்தால் உள்ளாட்சி தோ்தலிலும் கள்ள ஓட்டு போட துணிந்து வருவான் என்று கர்ஜிக்கிறார்கள். மாணிக்கம் வைத்தியருக்கு ஓட்டு இருக்குது என்கிறான். பட்டியலைப் பார்த்து உருளைக்காரர்கள், “அணஞ்ச பெருமாள் பொம்பளையினு இருக்கு. நீ பொம்பளையா? அதும் அவ செத்து வருஷம் பத்தாச்சு.” என்கிறார்கள்.

வைத்தியர் திருதிருவென விழித்து மாணிக்கத்தைப் பார்க்கிறார்.

நமக்கோ அடக்க முடியாமல் சிரிப்பு வருகிறது.

நாஞ்சில் நாடன் அவர்களின் இந்தக் கதை நம் ஜனநாயகத்தின் கேலிக்கூத்தை கிண்டலும் கேலியுமாகச் சொல்கிறது. சரளமான நடையில் நாம் வாய்விட்டு சிரிக்கும்படி எழுதியுள்ளார் நாஞ்சில் நாடன். கதையின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை அந்த பகடியான நடை கதையில் அற்புதமாகக் கூடி வந்திருக்கிறது.

எல்லோருக்கும் சாப்பாட்டிற்காக பூசணி சின்னத்தார் பூசணியைச் சமைக்கிறார்கள். வென்றதும் வீட்டுக்கொரு பூசணிக்காய் தருவதாகவும் இருக்கிறார்கள். இந்நிலையில் நகைச்சுவையின் உச்சமாக நாஞசில் நாடன் பின்வருமாறு சொல்கிறார்:
பூச்ணிக்காய் தோற்றுப்போகும் என்று கருதி, தோற்ற பிறகு தெருவில் போட்டு உடைப்பதற்காக உருளையுமிரண்டு மூட்டைகள் வாங்கிப் பத்திரப்படுத்தியிருந்ததாகக் கேள்வி. ஆகக் கனக மூலம் சந்தையில் பூசணிக்காய்க்கு ஏகக் கிராக்கி. அடுத்த முறை ஊராட்சித் தேர்தலைக் கணக்காக்கி, அதற்குத் தோதாக மேலாய்ச்சி கோணம் முழுவதும் பூசணிக்கொடு போடப்போவதாக அவ்வூர் பண்ணையார் ஒருவர் தீர்மாணித்திருப்பதாகத் தகவல்.

நாளை வாக்குச் சாவடிக்குச் செல்வதற்காக ஏழெட்டு வில் வண்டிகளும் இரண்டு வாடகைக் கார்களும் தயார். இதே ஏற்பாடுகளை உருளையும் செய்திருப்பார் என்று சொல்லத் தேவையில்லை. ஒரேயொரு அசௌகரியம்தான். அவர்கள் பூசணிக்காய் சாம்பார் வைப்பதைப் போல, இவர்களால் ரோடு உருளையைச் சாம்பார் வைக்க முடியாது. அதில் ஒரு புத்திசாலி, உருளை என்றால் உருளைக் கிழங்கையும் குறிக்கும் என்பதால், அதையே சாம்பார் வைக்கலாம் என்று சொன்னதன் பேரில் அவ்வாறே தீர்மானமாயிற்று.
வெறும் கேலிக்காகவோ, சிரிப்பதற்காகவோ நாஞ்சில் நாடன் இவற்றை சொல்லவில்லை என்பது நிச்சயம். மாறாக, வேதனையே இங்கு கேலியாக பதியப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் ஜனநாயகத்தின் கேலிக்கூத்துகள் என்பதற்காக சொல்லப்படவில்லை. மாறாக, நம் ஜனநாயகம் சிறக்க இவையெல்லாம் களையப்படவேண்டும் என்றுதான் சொல்கிறார். அதற்கு மக்களாகிய நாம்தான், வாக்களிக்கும் இந்நாட்டு மன்னர்களாகிய நாம்தான் நம்மை சீர்படுத்திக்கொள்ள வேண்டும். நாம் வசதிகளையும் வாய்ப்புகளையும் அனுபவித்துவிட்டு, அவர்கள் அரியணையில் ஏறியபின்னர் அவர்கள் மீது குற்றம் சுமத்த நமக்கு எந்தத் தகுதியும்  கிடையாது என்பதை அழுத்தமாக நாம் உணரச் செய்வதே நாஞசில் நாடனின் இந்நாட்டு மன்னர்.


3. சாலப்பரிந்து

சாலப்பரிந்து நம் நெற்றிப்பொட்டில் ஓங்கி அறையும் கதை. இக்கதையைப் படிக்கும்போது புதுமைப்பித்தனின் செல்லம்மாள் கதை நினைவுக்கு வருகிறது. இரண்டு கதைகளுக்கும் இடையேயான கால இடைவெளி 57 ஆண்டுகள். இந்த ஆண்டுகள் மனித மனங்களையும் வாழ்க்கையையும் எவ்வளவு மாற்றிவிட்டது? வாழ்க்கையில் அன்று  பீறிட்டுக் கிளம்பிய அன்பின் ஊற்று இன்று அடைபட்டு தூர் வாறவேண்டிய அவல நிலையில் இருக்கிறது. அந்தக் காலம் எங்கே? இந்தக் காலம் எங்கே? இந்தக் காலத்தில்தான் நாம் வாழ்கிறோம் என்பதே வெட்கக்கேடு!

தன் கணவன் தன்னைவிட்டு ஓடிவிட, இட்லி  வியாபாரம் செய்து, தன் பிழைப்பை ஓட்டுகிறாள் காளியம்மை. தன் மகன் மாலையப்பனையும் படிக்கவைக்கிறாள். அவள் வாழ்க்கையை, ”தேய்ந்துபோனதோர் பழந்தாலியும் நெற்றிக் குங்குமமும் தவிர வேறு பொருளற்றுப் போனதோர் இல்வாழ்க்கை” என்று வர்ணிக்கிறார் நாஞ்சில் நாடன்.

வளர்ந்ததே தெரியாமால் வளரும் மாலையப்பன் தொழிற்கல்வி பயின்று நிரந்தரமாக வேலையும் பெறுகிறான்.  மகன் தன்னுடன் வருமாறு அழைத்தும் போக மறுக்கிறாள் காளியம்மை. தன் மகனுக்கு மணமுடித்ததும், எல்லோரும் சொல்லவே, அவர்களுடன் சென்று தங்குகிறாள். ஆனால் பின்நாளில் ஏன் அங்கே சென்றோம் என்று வருந்துகிறாள். பேரன் பேத்திகளுக்கும் அவள் மீது ஒட்டுதல் இல்லை. வேலைக்காரியாய் காலம் கழித்து வருகையில், சுடு சொல்லாய் மருமகளின் அவமான வசைகள் உள்ளத்தை ரணப்படுத்துகின்றன.

தன்கொரு சாவு வரவில்லையே என்று வருந்தி அழும்போது, ஆட்டோ ரிக்க்ஷா ஒன்று அவள் மீது மோதி படுத்த படுக்கையாகிறாள். அவர்கள் யாரும் அவள் இருக்கும் பக்கமே எட்டிப் பார்க்கவில்லை. அவளை கவனித்துக் கொள்ள ஒரு வேலைக்காரி. ஒரு நாள் வேலைக்காரி அவளிடம் எந்த உணர்வும் இல்லை என்கிறாள். மகனும் மருமகளும் எல்லோருக்கும் சேதியைத் தெரிவிக்கிறார்கள். அன்று இரவு மாலையப்பனுக்கு உறக்கம் பிடிக்கவில்லை. என்ன இருந்தாலும் அம்மா ஆயிற்றே! அவள் கிடக்கும் அறைக்குச் செல்கிறான். அங்கே அவளிடம் இன்னும் உயிர் தங்கியிருப்பதை அறிகிறான். தன் மனைவியிடம் விசயத்தைச் சொல்கிறான். இருவருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. உறவினர்கள் காலையில் வந்துவிடுவார்கள். என்ன செய்வது?

மருமகள் அருமையான யோசனை சொல்கிறாள். அவள் வார்த்தையைத் தட்டாத மாலையப்பனும் அதற்கு இசைகிறான். காளியம்மையை குளியலறையில் சாய்வாய் உட்காரவைத்து ஆறு வாளி, மூன்று குடம், இரண்டு பானை தண்ணீரை தொடர்ச்சியாய் கொட்டி உயிரை எடுக்கிறார்கள். மகன் திருநீறு பூச, மருமகள் குங்குமமிட காளியம்மை சுமங்கலியாய்ச் சென்று சேர்கிறாள்.

சபாஷ்! இப்படி ஒரு மகனையும் மருமகளையும் பெற காளியம்மை கொடுத்துதான் வைத்திருக்கவேண்டும்!

கடவுள், மாலையப்பனுக்கு ஒரு மகனைக் கொடுத்திருக்கிறான். நாளை அவன் இவற்றையெல்லாம் அவனுக்கும் அவன் மனைவிக்கும் கட்டாயம் திருப்பிச் செய்வான்தானே? வாழ்க்கையின் நியதிகளில் ஒன்றான, “நாம் இன்று என்ன கொடுக்கிறோமோ அதையேதான் நாளை திரும்பப் பெறப்போகிறோம்” என்பது பொய்த்தா போய்விடும்?

மனித மனங்களின் மாற்றத்தின் மூலம் கால மாற்றத்தின் கொடுமையை ஆழமாக நம் மனதில் தைக்கும்படி செய்திருக்கிறார் நாஞ்சில் நாடன். அவரின் மிகச்சிறந்த கதைகளில் ஒன்று சாலப்பரிந்து. அது நம் மனதில் கட்டாயம் மாற்றத்தைக் கொண்டுவரும் என்பதில் சந்தேகமில்லை.
Related Posts Plugin for WordPress, Blogger...