July 3, 2016

புதுமைப்பித்தனின் 'செல்லம்மாள்': ஆகச்சிறந்த காதல் கதை

அன்பு என்பது என்ன? மிகவும் சிக்கலான கேள்வி. “அன்பை உணர்வது எளிது ஆனால் அன்பு என்பதை வரையறுப்பது மிகவும் கடினம். வாழ்வில் அழகானதும் அற்புதமானதுமான பலவற்றை வாழ்ந்து பார்த்தே அறிய முடியும், அவற்றை வெற்று வார்த்தைகளில் விவரிப்பதும் வரையறுப்பதும் மிகவும் கடினம்” என்கிறார் ஓஷோ. ஆயிரக் கணக்கான வருடங்களாக அன்பைப் பற்றிப் பேசிக்கொண்டே இருக்கிறோம். இருந்தும் மனித வாழ்வில் அன்பைப் பார்க்க முடியவில்லை. மனிதர்களிடையே அன்பு என்பது பொய்யான ஒரு வார்த்தையாக மட்டுமே உள்ளது என்கிறார் அவர்.

பிறர் நம்மீது காட்டும் அக்கறை அல்லது நாம் பிறர் மீது காட்டும் அக்கறை இதில் எது அன்பு? எப்போதுமே கொடுப்பது என்பது நம் உள்ளத்தை மலரச் செய்யும் ஆனால் வாங்குவது நம் உள்ளத்தை சுருங்கச் செய்யும். கொடுக்கும்போது இருக்கும் பெருமித உணர்வு வாங்கும்போது இருப்பதில்லை. இது வெறும் ஜடப்பொருட்களுக்கு மட்டும் உரியது அல்ல கட்புலனாகாத அன்பிற்கும், காதலுக்கும் கூடப் பொருந்துவது. ஆனால் நாமோ அன்பைப் பெறும்போது மலர்கிறோம் கொடுக்கும் போது சுருங்கிப் போகிறோம். எனவேதான் உறவுகளில் சிக்கல்கள் பூதாகாரமாக உருவெடுக்கின்றன. இதை சங்க இலக்கியப் பாடல் ஒன்று அற்புதமாக வெளிப்படுத்துகிறது. ஐந்திணை ஐம்பது என்ற பதினெண் கீழ்க்கணக்கு நூலில் மாறன் பொறையனார் என்ற புலவர் எழுதிய அற்புதமான பாடல் இது.

சுனைவாய்ச் சிறுநீரை எய்தாதென் றெண்ணிப்
பிணைமான் இனிதுண்ண வேண்டிக் -கலைமாத்தன்
கள்ளத்தின் ஊச்சும் சுரமென்பர் காதலர்
உள்ளம் படர்ந்த நெறி.

என்று சொல்லும் அவரது பாடல் நமக்கு அன்பு என்பதை ஸ்பஷ்டமாக விளக்குகிறது. அன்பைப் பற்றி இவ்வளவு தெளிவாக, ஆழமாக, எளிமையாக யாரும் சொல்ல முடியாது. அந்தக் காட்சியை கற்பனை செய்து பாருங்கள்! ஆண், பெண் ஜோடி மான்கள் காட்டில் அலைந்து திரிகின்றன. அவற்றின் உள்ளத்தில் குதூகலம் பொங்கிப் பெருக, காதலின் உற்சாகத்தில் ஓடி ஆடி விளையாடுகின்றன. அவற்றிற்குத் தாகம் எடுக்கிறது. சுனையை நாடிச் செல்கின்றன. இரண்டும் தண்ணீர் குடிப்பதற்காக சுனையிலே வாயை வைக்கின்றன. அப்போது அதில் சிறிதளவே நீர் இருப்பதைப் ஆண் மான் பார்க்கிறது. “அடடா தண்ணீர் குறைவாக இருக்கிறதே! என்ன செய்ய? நாம் கூட எப்படியோ சமாளித்துக் கொண்டுவிடலாம். இவளுக்கு நம்மைவிட தாகவிடாய் இருக்கிறது“ என யோசிக்கும் அது, பெண் மானே நீரைக் குடிக்கட்டும் என்று தான் குடிக்காமல் நீரை வெறுமே உறிஞ்சி, குடிப்பதாக நடிக்கிறது. என்ன ஒரு அற்புதமான காட்சி!

சுனையிலிருக்கும் சிறிதளவு நீர் போதாது என்றெண்ணி
பெண் மான் நன்றாகக் குடிக்கும் பொருட்டு ஆண் மான்
கள்ளத்தனமாக உறிஞ்சிக் குடிப்பதாக நடிப்பது
காதலர் உள்ளத்தின் மாண்பு.

இங்கே அந்த ஆண் மான் விட்டுக் கொடுத்தாலும், விட்டுக் கொடுத்ததாக பெண் மானுக்குக் காட்டவில்லை என்பது கவனிக்கத் தக்கது. அது தானும் குடிப்பதாக பாவனை செய்கிறது, ஆனால் உண்மையில் குடிக்காமல் விட்டுக் கொடுக்கிறது. அன்பு வெளிப்படும் மிகச் சிறந்த தருணம் இதுவே. ஏதோ தியாகம் செய்வதாக விட்டுக் கொடுப்பது பெறுபவரின் மனதில் குற்ற உணர்வைத்தான் ஏற்படுத்தும். விட்டுக் கொடுக்கவும் வேண்டும் ஆனால் அது வெளிப்படையாகத் தெரியவும்கூடாது. அதில்தான் உறவுகளுக்கிடையே உள்ள நெருக்கத்தின், இணக்கத்தின் சூட்சுமம் அடங்கி இருக்கிறது. இத்தகைய அன்பை வெளிப்படுத்தும் விதமாக நவீன இலக்கியத்தில் இருக்கும் ஆகச்சிறந்த கதை புதுமைப்பித்தனின் செல்லம்மாள். நாம் மேலே கண்ட ஆண் மான், பெண் மான் இரண்டின் காதலைப் போன்றே கணவன் மனைவியிடையே வெளிப்படும் காதலின் உச்சத்தை, அன்பின் வலிமையைக் காட்டும் கதை இது.

இந்தக் கதையில் பிரமநாயகத்தின் வறுமையின் சூழலை மிக விஸ்தாரமாக விரித்துச் செல்கிறார் புதுமைப்பித்தன். அதற்கு அவசியம் என்னவென்று நினைக்கலாம். பிடுங்கல்கள் இல்லாத இடத்தில் அன்பு வெளிப்படுவதைவிட சதா பிடுங்கல்கள் உள்ள இடத்தில் அன்பு வெளிப்படுவது விதிவிலக்கானது. அத்தகைய இடத்தில் அன்பு மடைமாற்றம் செய்யப்பட்டு கோபமாக, வெறுப்பாக உருமாற்றம் கொள்ளும் சாத்தியம் நிரம்ப இருக்கிறது. ஆனால் அதையும் தாண்டி, பழுதுபடாமல், பரிசுத்தமானதாக பிரமநாயகத்திற்கும் அவர் மனைவிக்கும் இடையே அன்பின் ஊற்று பெருக்கெடுத்து பிரவகிக்கிறது என்பதை உணர்த்தவே புதுமைப்பித்தன் வறுமையைக் காட்டுகிறார்.

தனிமையின் பரிதவிப்பும் கொடுமையும் வேறெந்த கதையையும் விட செல்லம்மாள் கதையில் விஸ்வரூபம் கொண்டு கதை முழுதும் பிரம்மாண்டமாய் நின்று நம்மை அச்சுறுத்துகிறது. அந்தத் தனிமைத் துயரைப் போக்கும் விதமாக அவர்களிடையே நடக்கும் ஊர் பற்றிய பேச்சுகள் இருக்கின்றன. “செல்லம்மாள், வறண்ட உதடுகளில் சில சமயம் உற்சாக மிகுதியால் களுக்கென்று சிரித்து உதடுகளில் வெடிப்பு உண்டு பண்ணிக் கொள்வாள். ஊர்ப்பேச்சு, தற்சமயம் பிரச்சினைகளை மறப்பதற்கு சௌகரியமாக, போதை தரும் கஞ்சா மருந்தாகவே அந்தத் தம்பதிகளுக்கு உபயோகப்பட்டு வந்தது” என புதுமைப்பித்தன் அவற்றை வெளிப்படுத்தும் விதத்தில் தனிமைத் துயரே மேலோங்கி நிற்கிறது. 

மனிதன் என்னதான் பாடுபட்டாலும் பணம் சேர்த்தாலும் கடைசியில் எல்லாமே சாப்பிடுவது, தூங்குவது என்பதில்தான் முடிந்து போகிறது. சாப்பிடவும் தூங்கவும் முடியாமல் போவதே வாழ்க்கையின் மிகப் பெரிய துரதிருஷ்டம். “வருகிற பொங்கலுக்கு வீட்டு அரிசி சாப்பிட வேணும். ஊருக்கு ஒருக்க போய்ப்போட்டு வரலாம். வரும்போது நெல்லிக்காய் அடையும், ஒரு படி முருக்க வத்தலும் எடுத்துக்கிட்டு வரணும்” என்று மனைவி சொல்வதைக் கேட்டதும் பிரமநாயகத்தின் எண்ணங்களாக புதுமைப்பித்தன் கிண்டல் தொனிக்கும் விதமாக இவ்வாறு சொல்கிறார்: “பேச்சிலே வார்த்தைகள் மேன்மையாகத்தான் இருந்தன. அதைவிட அவள் புலிப்பால் கொண்டுவரும்படி கேட்டிருக்கலாம். பிரம்ப வித்தை கற்று வரும்படி சொல்லியிருக்கலாம். அவை அவருக்கு எட்டாக் கனவாகப் பட்டிரா.” அவரது எண்ணங்களில் கேலி போன்று தெரியும் இவற்றின் பின்னால் இயலாமை தோய்ந்து வெளிப்படும் துயரத்தின் அளவு மிகப் பெரிது.

இதற்குப் பிறகு அவர் மனைவிக்கு செய்யும் சிருஷைகள் கணவன் மனைவிக்கு இடையே உள்ள அன்பின் உன்னதத்தையும் மேன்மையையும் பறைசாற்றுபவை. அவளும் அவருக்கு முடிந்த அளவிற்கு சாப்பாடு முதலியன செய்து வைப்பதும், சும்மா வைத்தியச் செலவு என்று காசை செலவழிக்காதீர்கள் என்று சொல்வதும், புடவைகளைப் புரட்டிப் பார்த்து பச்சை நிறத்தை அவள் தேர்வதும் நம் மனதைப் பாறாங்கல்லாய் கனக்க வைக்கிறது. காரணம், அவள் எந்த நிமிடமும் அவரை விட்டுச் சென்றுவிடப் போகிறாள் என்று ஒரு குரல் கதை நெடுக, திரைப்படத்தின் துயரக் காட்சிக்குப் பின்னனி இசை போல, நம் மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. இறந்த பிறகு அவளைத் தூக்கும் அவர், “செல்லம்மாள் இவ்வளவு கனமில்லையே, என்னமாக் கனக்கிறது!” என்று எண்ணமிடும் வரிகள் நமக்குச் சொல்லாமல் சொல்லும் கதைகள் பல! அவள் உயிருரோடு இருந்தவரை அவரது பாரத்தை முழுவதுமாக தாங்கிக் கொண்டு, அவருக்கு ஏற்றவளாக, சிரமம் தராதவளாக, பாரமில்லாதவளாக இருந்தாள். அப்படியானவள் இன்று போய்விட்டாள், இனி வாழ்வின் ஒவ்வொரு கணமும் அவருக்குப் பிணம் போல் பாரமாய் கனக்கப்போகிறது என்பது அந்த வரிகளில் வெளிப்பட்டு அவர்கள் இருவருக்குமான அன்பின் சிறப்பைக் காட்டுகிறது.

“அதிகாலையில், மனசில் வருத்தமில்லாமல், பிலாக்கணம் தொடுக்கும் ஒரு பெண்ணின் அழுகையில் வெளிப்பட்ட வேஷத்தை மறைப்பதற்கு வெளியில் இரட்டைச் சங்கு பிலாக்கணம் தொடுத்தது” என்ற வரிகளோடு முடியும் கதை, செல்லம்மாள் சென்றதால் வேறு யாருக்கும் வருத்தமோ, துயரமோ இல்லை என்பதையும், எல்லாமே இதோ கையில் விசிறியோடு அவள் மீது உட்காரும் ஈயை விரட்டிக் கொண்டிருக்கிறாரே அவருக்குத்தான் என்பதையும், நாம் உணரும் போது நம்முடைய கண்கள் கண்ணீரால் நிரம்பிவிடுகின்றன. அந்தக் கண்ணீரில் வெளிப்படும் உவர்ப்பின் சுவை அவர்கள் இருவருக்கும் இடையே வாழ்வில் இருந்த காதல், அன்பு, அந்நியோந்யம் ஆகியவற்றின் ஆழத்தையும் உயரத்தையும் உணரச் செய்கிறது.

பிரபஞ்சன் இந்தக் கதையைப் பற்றிச் சொல்லும் போது, “மனைவி இறப்பைக் கண்டு பிள்ளை அழுது கதறித் துடிக்கவில்லை. புதுமைப்பித்தன் வடிவமைக்க விரும்புவது, பிரிவுச் சோகத்தை அல்ல. மாறாக, பிரமநாயகப் பிள்ளை செல்லம்மாளின் காதலை. அவர்கள் தங்கள் காதலைப் பரஸ்பரம் கொண்டாடிக்கொண்ட விசேஷம் பற்றி. பிள்ளையும் சரி, செல்லம்மாளும் சரி காதலைப் படித்ததில்லை, காதலைப் பற்றிப் பேசிக்கொள்வதும் இல்லை“ என்று குறிப்பிடுகிறார். 

சங்கப் பாடலில் குறிப்பிட்ட அந்த மான்கள் எங்கே படித்தன? அவைகள் தங்கள் காதலைப் பற்றிப் பேசிக்கொண்டனவா என்ன? உறவுகளின் ஆத்மார்த்த பிணைப்பு அது. ஒவ்வொரு உயிருக்குள்ளும் இந்த உணர்வு இயல்பாகவே இருக்கிறது. மனிதர்களாகிய நாம்தான் பல்வேறு காரணங்களால் அதைச் சீர்குலைத்து வைத்துள்ளோம். அதை மீண்டும் சீர்படுத்த வேண்டிய அவல நிலையிலேதான் இன்று நாம் இருக்கிறோம். நிறைவான, முழுமையான அன்போடு வாழந்தவர்களிடையே ஒரு புரிதல் இருக்கிறது. அந்தப் புரிதல் கண்ணுக்குப் புலப்படாத மெல்லிய சரடாக அவர்களை எப்போதும் பிணைத்திருக்கிறது. எனவேதான் அவர்கள் பிரிவால் நிலைகுலைந்து போவதில்லை. எனவேதான் அதைப் பற்றிப் பேசவேண்டிய அவசியம் அவர்களுக்கு இருக்கவில்லை. 

புதுமைப்பித்தனின் பல கதைகளில், ஆரம்பிக்கும் போது இருக்கும் நிதானம் முடிவை நெருங்கும் போது இருப்பதில்லை, அவசரமாக கதையை முடிப்பதில் வேகம் காட்டுபவர் அவர் என்று சொல்லும் சுந்தர ராமசாமி, செல்லம்மாள் கதையில் அவரது பேனா மிக அழுத்தமாகவும் நிதானமாகவும் நகர்வதைப் பார்க்க முடிகிறது என்று குறிப்பிடுகிறார். காதலை, அன்பை புரிந்துகொள்ள நேற்று இன்று நாளை என்ற முக்காலக் காதலர்களும், கணவன் மனைவிகளும் அவசியம் படிக்க வேண்டிய கதை செல்லம்மாள் ஏனெனில் எக்காலத்துக்குமான ஆகச் சிறந்த காதல் கதை இதுவே.

(மறுபிரசுரம். முதற்பிரசுரம் செப்டம்பர் 27, 2014)


Related Posts Plugin for WordPress, Blogger...