July 13, 2016

நானும் பேரிலக்கியங்களும்!

பேரிலக்கியங்களின் பெயர்கள் எனக்கு அறிமுகமானது 1990-ஆம் ஆண்டுகளில் என நினைக்கிறேன். அதுவும் பேரிலக்கியங்கள் என்றதும் எல்லோருக்கும் நினைவில் வருவது ருஷ்ய இலக்கியங்கள்தான். இன்றும் அந்த இடத்தை ருஷ்ய இலக்கியம் தக்கவைத்திருக்கக் காரணம் தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி என்ற இருபெரும் படைப்பாளிகளே. ஆக இருவரின் மொழிபெயர்ப்பைத் தேடி அலைந்த காலங்கள் அவை. ஆனால் என் கண்களில் முதலாவதாகப் பட்டது 2005-ல் கௌரா ஏஜன்சீஸ் வெளியிட்ட டி.எஸ்.சொக்கலிங்கம் அவர்களின் மொழிபெயர்ப்பில் மறுபதிப்பாக வந்த போரும் அமைதியும் நாவல். மூன்று பாகங்களாக மெல்லிய அட்டையிலும், கெட்டி அட்டையிலுமாக இரு பதிப்புகள் வெளியாகி இருந்தன. அந்த மூன்று புத்தகங்களையும் வாங்கிக் கொண்டு வெற்றிப் பெருமிதத்துடன் புத்தக அரங்கிலிருந்து வீட்டிற்கு வந்தது இன்றும் நினைவிருக்கிறது!

அடுத்ததாக பாரதி புக் ஹவுஸ் வெளியீடாக வந்த தஸ்தயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவலை 2008-ம் ஆண்டில் வாங்கினேன். சுசீலா அவர்களின் சரளமான மொழிபெயர்ப்பில் நாவல் வாசிக்கும்படி இருந்தது. ஒரு மனிதனின் குற்றத்தையும், அந்தக் குற்றத்தின் முன்னும் பின்னுமாக அவன் மனதில் ஏற்படும் ஊசலாட்டத்தை, குற்ற உணர்வை, மனம் படும் பாட்டை மிகவும் அற்புதமாக அந்த நாவலில் தஸ்தயேவ்ஸ்கி விவரித்துச் சென்றிருக்கிறார். படிக்கப் படிக்கப் பிரமிப்பும் மலைப்பும் தட்டியது. உலகம் முழுவதும் தஸ்தயேவ்ஸ்கியைக் கொண்டாடுவதன் காரணம் அப்போதே தெரிந்தது. தல்ஸ்தோயைவிட தஸ்தயேவ்ஸ்கிதான் என்னை மிகவும் கவர்ந்தார். தல்ஸ்தோய் பிரபஞ்சத்திலிருந்து மனிதனை நோக்கி வருகிறார் ஆனால் தஸ்தயேவ்ஸ்கியோ மனிதனிடமிருந்து பிரபஞ்சத்திற்குச் செல்கிறார். எனவே தஸ்தயேவ்ஸ்கி எனக்கு உவப்பானவராக இருந்தார்.

அதே 2008-ம் ஆண்டில் தல்ஸ்தோயின் அன்னா கரீனினா பாரதி புக்ஸ் வெளியீடாக நா.தர்மராஜன் அவர்களின் மொழிபெயர்ப்பில் கிடைத்தது. பாரதி புக் ஹவுஸ் பதிப்பகத்தில் என்ன குறை என்றால் புத்தகம் கிரவுன் வடிவத்தில் இருக்கும். எனவே வரிகளை இடமிருந்து வலமாகப் படித்துத் திரும்புவதில் கண்களுக்கு அயர்ச்சி ஏற்படும். எனவே அன்னா கரீனினாவின் 700 பக்கங்களில் என்னால் 250 பக்கங்களையே வாசிக்க முடிந்தது.

1990-ல் நான் தேடி அலைந்த புத்தகங்களில் மிக முக்கியமானது தஸ்தயேவ்ஸ்கியின் கரமாஸவ் சகோதரர்களே. ஆனால் அது உடனடியாக கைக்குக் கிடைக்கவில்லை. இந்நிலையில் 1999-ல் ஜெயமோகனின் பின்தொடரும் நிழலின் குரல் வாசித்தேன். அந்த நாவலின் ஓரிடத்தில் தல்ஸ்தோயா தஸ்தயேவ்ஸ்கியா யார் சிறந்தவர் என்பதாக ஜெயமோகன் ஒரு பகுதியை எழுதியிருந்தார். ஜெயமோகன் இருவரையும் கணித்திருக்கும் பாங்கு என்னை சிலிர்க்க வைத்தது. அந்த உத்வேகத்தில் கரமாஸவ் சகோதரர்களை மீண்டும் தீவிரமாகத் தேடி அலைந்தேன்.

“தல்ஸ்தோயா? தஸ்தயேவ்ஸ்கியா?” இந்தக் கேள்வியைத் தேர்ந்த இலக்கிய வாசகர் ஒவ்வொருவரும் தங்களுக்குள் கேட்டுக் கொண்டிருப்பார்கள். எந்தவிதமான ஐயமும் இன்றி இரண்டிலொருவரை தேர்வு செய்து கூறுபவர்களின் இலக்கிய நுண்ணுணர்வை சந்தேகப்படுவேன். அவர்கள் இருவரையுமே அறியவில்லை என்று கூடக் கூறுவேன். ஏனெனில் இந்தக் கேள்வி மிகமிக அடிப்படையானது. மானுட ஆன்மிகத் தேடலின் இரு ஆதார நிலைப்பாடுகளை இருவரும் பிரதிநிதித்துவப் படுத்துகின்றனர். ஆழ்ந்த சுயவிசாரணைக்குப் பிறகு, விரிவான சுயகண்டடைதல் மற்றும் சுயவிளங்களுக்குப் பிறகுதான் ஒருவன் ஒன்றைத் தேர்வுசெய்ய முடியும். முடிவை ஒரு சிறிது சந்தேகத்துடன்தான் முன்வைக்கவும் முடியும். அம்முடிவல்ல, அவ்விளக்கமும் கண்டடைதலுமே முக்கியமானது.
மானுட நன்மையில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர் தல்ஸ்தோய். அங்கிருந்து தொடங்கி மானுடனின் சரிவுகளில் இறங்கிச் சென்று அவனை முழுமையாகக் கண்டடைய முயல்கிறார். மானுடத்தின் அடிப்படை இயல்பு தீமையே என்று உள்ளார்ந்த நம்பிக்கை தஸ்தயேவ்ஸ்கியிடம் உண்டு. ஆனால் அதை ஏற்க அவர் மறுக்கிறார். பல்வேறு சொற்களில் அதைத் தன்னால் ஏற்க முடியாது என்று தனக்குத்தானே கூறிக்கொள்கிறார். அழுக்கும் உதிரமும் படிந்த உடைகளுடன் மானுட மேன்மையின் (கற்பனைப்) படிகளில் ஏறுகிறார். இவ்விருவருடைய பெண் கதாபாத்திரங்களை வைத்து இதை உறுதி செய்வேன். தூய்மையுடனும் மகத்துவங்களுடனும் அறிமுகமாகும் நடாலியா (போரும் அமைதியும்) இச்சைகளின், சபலங்களின் சரிவுனூடாக இறங்கி; பின்பு தாய்மையினூடாக மீண்டு; முழுமை பெறுகிறாள். அன்னாவும் சரிவின் சித்திரத்தையே தருகிறாள் (அன்னா கரீனினா). ஆனால் தஸ்தயேவ்ஸ்கியின் பெண் காதாபாத்திரங்கள் நெல்லி (அவமதிக்கப்பட்டவர்களும் வதைக்கப்பட்டவர்களும்), சோனியா (குற்றமும் தண்டணையும்) சீரழிவின், கீழ்மையின் அழுக்கிலிருந்து தங்கள் ஆன்மாவின் நெருப்பை எரியவைத்து சோதியாக எழுகிறார்கள். தல்ஸ்தோயின் தேவதைகள் பெண்களாகின்றனர். தஸ்தயேவ்ஸ்கியின் பெண்கள் தேவதைகளாகின்றனர்.
எது மெய்மையின் அருகே நிற்கிறது? தஸ்தயேவ்ஸ்கி நெருப்பு போல. உக்கிரம் மட்டுமே அவர் இயல்பு. தல்ஸ்தோய் நீர்போல. பனித்துளி முதல் அலைகடல் வரை ஆயிரம் முகங்கள் அவருக்கு. ஆத்மாவின் தவிப்பையும் தேடலையும், தனிமையையும் கண்டிப்பாக தல்ஸ்தோயைவிட தஸ்தயேவ்ஸ்கி தீவிரமாகச் சொல்லியிருக்கிறார். ஆனால் அவர் மானுட மனத்தின் மீது – ஏன் ஆன்மா மீது கூட – புறச்சூழலுக்கு உள்ள பிடிமானத்தைக் கண்டு கொள்ளவில்லை. அதனால்தான் அவரது கதையுலகில் புற உலகமே இல்லை. திரும்பத் திரும்ப இடுங்கிய அறைகள், பனித்தெருக்கள், மதுக்கடைகள். அவையும் அவர் காதபாத்திரங்களின் மன உணர்வின் தூல அடையாளங்கள் மட்டுமே. சூழலாலோ, வேறு எந்தப் புறச் சக்தியாலோ பாதிப்படையாத, தனித்துவம் மிக்க சுயம் கொண்ட ஆளுமைகளாகவே தஸ்தயேவ்ஸ்கி மனிதர்களைக் காண்கிறார். அவரது கதாபாத்திரங்கள் எரியம்பு போலத் தங்களை எரித்துச் சுடர்ந்தபடி கரிய பெருவெளியை ஊடுருவிச் செல்கின்றன. தல்ஸ்தோயைப் பொறுத்தவரை பிரபஞ்சத்தின், இயற்கையின் ஒரு பகுதியாகவே மனிதன் இருக்கிறான். பெருங்கானகத்தில் ஊடுருவிச் செல்லும் ராணுவத்தின் ஒவ்வொரு வீரனும் ஒருவகையில் கானகத்தின் தனி உறுப்பாகவே இருக்கிறான். முற்றிலும் தனித்துவம் கொண்ட ஆளுமை ஏதும் அவர் தரிசனத்தில் இல்லை. ஆளுமை என்பது ஒரு எதிர்வினை மட்டுமே என்று அறிந்ததே தல்ஸ்தோயின் மெய்ஞானம். இன்று அல்லது நாளை, மேற்கின் உளவிஞ்ஞானமும் அதை வந்தடையும். அப்போது தல்ஸ்தோய் இன்னும் பேருருவம் கொள்வார். தஸ்தயேவ்ஸ்கியின் கதாபாத்திரங்கள் உக்கிரமாகத் தங்களை தங்கள் சொந்த எரிசக்தியினால் நிகழ்த்திக் கொள்கின்றன. அந்த எரிதலின் ஒளியில்தான் அவர்கள் புறச்சூழலே நமக்குத் தெரிய வருகிறது. தல்ஸ்தோயின் கதாபாத்திரங்கள் பிரக்ஞை பூர்வமாகவோ, அல்லாமலோ தங்கள் சூழலுக்கும் சகமனிதர்களுக்கும் வாழ்க்கைச் சந்தர்ப்பங்களுக்கும் எதிர்வினையாற்றுவதை மட்டுமே செய்கின்றன. சிலசமயம் சகஜமாக உடன்படுகின்றன. சிலசமயம் தன்னகங்காரத்துடன் முரண்படுகின்றன. அவ்வகையில் ஃபியருக்கும் போர்க்களத்து நாய்க்கும் தல்ஸ்தோய் வித்தியாசம் காண்பதில்லை. எதிர்வினைகளினூடாக மிகமிக மெதுவாக ஒரு தனியாளுமை – இது ஒருவகையில் ஒரு தோற்றம் மட்டுமே – உருவாகி வருவத்தைப் பார்க்கும் பேரனுபவமே தல்ஸ்தோயின் இலக்கியப் பங்களிப்பாகும். வாழ்வின் மிகமிக நிதானமான, பிரித்துக்கூடப் பார்க்க முடியாத, எதுவுமே சகஜமாகத் தோன்றக்கூடிய, பரிணாம மாற்றத்தை உலகின் வேறு எந்தப் படைப்பிலக்கியவாதியும் சித்தரித்துக் காட்டியதில்லை. நாடகத்தன்மை படைப்பாளிக்கு வாழ்வைக் குவிமையம் கொள்ளச் செய்து உக்கிரப்படுத்தி சாராம்சத்தை நோக்கி மேலெழுப்ப வசதியான ஒன்றுதான். தஸ்தயேவ்ஸ்கி நாடக ஆசிரியர், நாடகம் எழுதாவிடினும். உணர்ச்சிகரமான படைப்பாளிக்கு நாடகமே பிரியமான வடிவம். அங்குதான் மோதல்களினூடாகவே மொத்தப் படைப்பும் நிகழ முடியும். (நானும் நாடகங்களையே மிகவும் ஈடுபட்டு எழுதியுள்ளேன். என் சிறுகதைகளும் நாடகங்களே). ஆனால் நாடகத்தன்மையை நம்பியுள்ள படைப்பாளி ஒருபடி குறைவானவன். வாழ்வை அதன் இயல்பான மந்தகதியில் வைத்துத் தீவிரப்படுத்தவும் சாராம்சப்படுத்தவும் வல்லமை கொண்டவனே பெரும் கலைஞன். தல்ஸ்தோய் அதைச் சாதித்தார். எனவே அவர் ஷேக்ஸ்பியரை நிராகரித்தது நியாயமே. தஸ்தயேவ்ஸ்கியை அவர் ஏற்றது ஒரு நாகரிகம் கருதி மட்டுமே.
ஒருங்கிணைவுள்ள தனியாளுமைகளின் உடைவின் அவலத்தைச் சித்தரிக்கும் தஸ்தயேவ்ஸ்கியின் உள்ளம் இன்று மேற்குக்கு உவப்பாக இருக்கிறது. ஏனெனில் அங்கு நிகழ்வது அது. மனிதக் கீழ்மைகளும் மேன்மைகளும் பீறிடும் அதிதீவிர உளநாடகம் அவர்களைக் கவர்கிறது. ஆனால் பிறிதொரு நாள் அவர்கள் உணர்வார்கள் தல்ஸ்தோயின் மலைகளைப்போல உறைந்த நிதானம் தஸ்தயேவ்ஸ்கியின் கடல் அலைகளைவிடவும் மகத்தானது என்று. இன்னும் சற்று வாழ்ந்திருந்தால், இன்னும் சற்று அறிந்திருந்தால், தஸ்தயேவ்ஸ்கி தன் தீவிர உளநாடகத் தன்மையுடன் ஒரு மெல்லிய புன்னகையையும் சேர்த்துக் கொண்டிருப்பாரோ? அப்போது இந்தக் கொந்தளிப்புகள் அடங்கி அவரும் தல்ஸ்தோய் ஆகியிருப்பாரோ? எல்லாமே உண்டு, ஆனால் எதுவுமே இல்லை என்பதே தல்ஸ்தோய் அறிந்த மெய்ஞானம் போலும். ஆகவே அவருக்கு எல்லாமே முக்கியம். கல்லும் புல்லும் வானும் மண்ணும். அவரது விரிவான சூழல் சித்தரிப்புகள் மகத்தான இத்தரிசனத்தின் விளைவுகள் மட்டுமே.
மீண்டும் கேள்வி: யார் மேலானவர்? ஞானத்தின் அமைதிக்கும், தேடலின் கொந்தளிப்புக்கும் இடையே அனுதினம் என் மனம் இதை வினவிக்கொள்கிறது. இறுதி விடையல்ல இது நண்பரே – இப்போதைக்கு தல்ஸ்தோய்தான். ஆனால் அவர் என் தஸ்தயேவ்ஸ்கியைத் தின்று செரித்துவிட வேண்டுமென்றும் விரும்புகிறேன்.”
அப்போது கரமாஸவ் சகோதரர்களின் தமிழ் பதிப்பு வந்திருக்கவில்லை. எனவே ஆங்கிலத்திலாவது அதை வாசித்து விடவேண்டும் என்று வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன். அகராதியுடன் போராடிப் படித்ததில் இருநூறு பக்கங்களுக்கு மேல் தாண்ட முடியவில்லை. எனவே படிக்கும் முயற்சியைக் கைவிட்டேன். பல நாட்களுக்குப் பின் உந்துதல் ஏற்பட மீண்டும் வாசிக்க ஆரம்பித்தேன். ஆனால் சொல்லிவைத்தது போல அதே பக்கத்திற்கு மேல் நாவலைத் தொடரமுடியவில்லை. இப்படியாக 2011 வரை பல்வேறு முயற்சிகள் செய்தும் நாவலை வாசிக்க முடியவில்லை. இருந்தும் அதன் தமிழ் பதிப்புக்கான தேடலைத் தொடர்ந்துகொண்டிருந்தேன். 

2011-ல் நியூ சென்சுரி வெளியீடாக, கவிஞர் புவியரசின் மொழிபெயர்ப்பில் அந்நாவலை நான் ஏதேச்சையாகப் பார்த்தபோது அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. பெரும் புதையலைக் கண்டதுபோல் மனம் பரவசமானது. அதைப் படிக்க ஆரம்பித்தேன். ஆனால் என்ன சாபமோ தெரியவில்லை நாவலை மேற்கொண்டு தொடரமுடியாமல் அதே பக்கங்களில் நின்றுவிட்டேன். மொழிபெயர்ப்பு சரளமாக இருந்தும் ஏனோ ஏதோ ஒன்று குறைவதாகப் பட்டது. இருந்தும் எப்படியும் வாசித்துவிட முடியும் என்று நம்பிக்கை கொண்டிருந்தேன். ஆனால் அதைத் தொடர முடியவில்லை என்பதுதான் சோகம்.

இந்நிலையில் காலச்சுவடு வெளியீடாக, ரஷ்ய மொழியிலிருந்து நேரடி மொழியாக்கத்தில் அரும்பு சுப்ரமணியன் அவர்களால் தமிழில் வருவதாக அறிந்தேன். அதற்கான முன்வெளியீட்டுத் திட்டத்தில் பதிவுசெய்தேன். புத்தகம் நேர்த்தியான அச்சாக்கத்தில் தரமான தாளில் என் மனதை மயக்கிற்று. படிக்க முடியுமா என்ற அச்சத்தோடு படிக்கத் தொடங்கினேன். ஆனால் அயர்ச்சியோ, சலிப்போ இல்லாமல் வாசிக்க முடிந்தது. அதைக் குறித்துப் பல பதிவுகளை எழுதவும் முடிந்தது.

அன்று புத்தகங்களைத் தேடிக் கண்டடைவது சிரமமாயிருந்தது. இன்று அப்படியல்ல, இருந்த இடத்திலிருந்தபடியே புத்தகங்களை வரவழைக்க முடிகிறது. Anna Karenina, Resurrection, Les Miserables, Demons போன்ற பேரிலக்கியங்களை விரைவில் வாசிக்க வேண்டும் என்ற ஆவல் மிகுந்திருக்கிறது; புத்தகங்களும் இருக்கின்றன (ஆங்கிலத்தில்தான்! தமிழில் இவைகள் கிடைக்க இன்னும் எத்தனை வருடங்கள் ஆகுமோ?). அவற்றை வாசிப்பதற்கான தருணத்தையே எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். என்னைப் பொருத்தவரை நான் புத்தகங்களைப் படிக்கத் தேர்வதில்லை மாறாக அவைகள்தான் என்னைத் தேர்ந்தெடுக்கின்றன. அது எப்போது, எப்படி நிகழ்கிறது என்ற சூட்சுமம் இன்றுவரை எனக்குப் பிடிபடவில்லை.

Related Posts Plugin for WordPress, Blogger...