சுந்தர மோகன் பக்கங்கள்


அண்மையில் எனது நெருங்கிய நண்பர் ஒருவரைப் பார்த்தேன். அவரைப் பார்த்து பல வருடங்கள் இருக்கும். என்னிடம் நெருக்கமாக இருந்த அவர் ஒரு கட்டத்தில் எங்கோ பிரிந்து செல்ல நேரிட்டது. எனவே அவரைப் பார்த்ததும் மிகவும் சந்தோஷப்பட்டேன். பலவற்றையும் பேசினோம். நான் வலை தளம் ஒன்று நடத்துவதாகச் சொன்னேன். அப்போது அவர் நானும் எழுதுகிறேன் என்றார். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஒரே ஆள் எத்தனை நாள்தான் எழுதுவது.

“சரி. தாரளமாக எழுதுங்கள். ஆனால் எதைப் பற்றி எழுதப் போகிறீர்கள்?” என்று கேட்டேன்.

“இந்த வானுக்கும், மண்ணுக்கும் இடைப்பட்ட எதைவேண்டுமானாலும் எழுதலாம்தானே?” என்றார்.

“குறிப்பாக எதைப் பற்றி என்று தெரிந்தால் நன்றாக இருக்கும். ஏனெனில் என் தளத்தின் பெயர் புத்தக அலமாரி. அதற்குள் அடங்குபவற்றை எழுதினால் நல்லது.”

“பல புத்தகங்களின் தலைப்பிற்கும் உள்ளடக்கத்திற்கும் சம்பந்தமில்லாத போது, தலைப்பில் என்ன இருக்கிறது? மேலும் புத்தகங்களும் இந்த மண்ணில்தானே இருக்கிறது? எனவேதான் வானுக்கும் மண்ணுக்கும் இடைப்பட்ட எதையும் எழுதுகிறேன்.”

“சரிதான்.”

“அரசியல், சினிமா, ஆன்மீகம், இலக்கியம் என்று பலவற்றையும் எழுதப்போகிறேன்.”

“எல்லாவற்றையுமா? என் தளம் தாங்குமா?”

“தாங்காமல் என்ன? அதுவும் வானுக்கும் மண்ணுக்கும்.... ” என்று அவர் மீண்டும் ஆரம்பிக்கவே, என்னடா இப்படி ஒரு இக்கட்டில் மாட்டிக்கொண்டோமே என்று தோன்றியது.

“என்ன யோசிக்கிறீர்கள்? நான் எழுதுவது பிடிக்கவில்லையென்றால் விட்டுவிடுங்கள். நான் என் போக்கில் எப்பவும் போல் இருந்துவிட்டுப் போகிறேன்” அவர் சற்றே விரக்தியாகச் சொன்னார்.

“நீண்ட வருடங்களுக்குப் பிறகு உங்களைக் கண்டுபிடித்திருக்கிறேன். தங்களை விட்டுவிட மனமில்லை.”

“சந்தோஷம். ஆனால் நான் புனைப்பெயரில் எழுதப்போகிறேன்.”

“என்ன பெயரில் எழுதப் போகிறீர்கள்?”

அவர் சற்றும் யோசிக்காமல் சொன்னார், “சுந்தர மோகன்.”

“எதனால் அந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்தீர்கள்?”

“அது ரகசியம்” என்று அவர் புன்னகைத்தார். சற்று யோசித்தவராக, “தங்கள் தளத்தை எத்தனை பேர் படிக்கிறார்கள்?” என்று கேட்டார்.

என்னடா இது வம்பாய் போயிற்றே. உண்மையைச் சொல்லலாமா என்று ஒரு கணம் யோசித்தேன். பிறகு சமாளித்தவனாக, “ஏதோ நான் எழுதுவதையும் படிக்கச் சிலர் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள்” என்றேன்.

“இனி கவலையை விடுங்கள். நான் எழுத ஆரம்பித்ததும் உங்கள் தளத்தைப் படிப்பவர்களின் எண்ணிக்கை பல மடங்காக உயர்ந்து விடும்.”

“எதை வைத்து அப்படிச் சொல்கிறீர்கள். நானும் எப்படியெல்லாமோ எழுதிப் பார்க்கிறேன். கூட்டமே சேரமாட்டேன் என்கிறது. ஏதோ ஜெயமோகன் தயவால் சில பதிவுகள் பல நூறு எண்ணிக்கையைத் தாண்டியிருக்கிறது. ரொம்பக் கஷ்டம்.” என் குரல் என்னையும் மீறி என் வருத்தத்தை வெளிக்காட்டியது.

“கவலையை விடுங்கள். இனிதான் நான் வந்துவிட்டேனே!”

“எப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்கிறீர்கள்?” நான் வியப்போடு கேட்டேன்.

“சும்மா வெறும் புத்தகங்களையே எழுதிக் கொண்டிருந்தால் யார் படிப்பார்கள்? இந்த வானுக்கும் மண்ணுக்கும் இடையே எத்தனையோ.....” அவர் முடிப்பதற்குள் நான் இடையில் குறுக்கிட்டு, “இதனால் ஒன்றும் பாதகம் வந்துவிடாது இல்லையா?” என்று கலக்கமாகக் கேட்டேன்.

“நீங்கள் வேண்டுமானால் பாருங்கள். புத்தக அலமாரி ஓஹோ என்று எல்லோராலும் பேசப்படுவதாக இருக்கப் போகிறது. சரி, ஒரு பதிவை அதிகபட்சமாக எத்தனை பேர் படித்திருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியுமா?”

“ம்... ஜெயமோகனின் முதற்கனல் பற்றிய பதிவை 999 பேர் படித்திருக்கிறார்கள்.”

“இனி ஒவ்வொரு பதிவையும் ஆயிரமாயிரம் பேர் படிக்கப் போகிறார்கள்” என்று உறுதியாகச் சொன்னார். என்னவெல்லாம் செய்தால் கூட்டம் கூட்ட முடியும் என்று விவரித்தார்.

நான் கற்பனையில் மிதந்தேன். தினமும் ஒரு ஆயிரம் பேராவது படிக்கும்படி செய்துவிட்டால் போதும். அப்புறம் இலட்சமும் கோடியும் பக்கத்தில்தானே இருக்கின்றன?

“சரி. எப்போது ஆரம்பிக்கப் போகிறீர்கள்?”

“ஏன் இப்போதே கூட ஆரம்பிக்கலாம். அதில் என்ன கஷ்டமிருக்கிறது?”

“இல்லை. ஏதாவது படிக்க...” என்று இழுத்தேன்.

“படிக்க என்ன இருக்கிறது. இந்த வானுக்....”

“அதற்குச் சொல்லவில்லை. நான் பல ஆயிரம் பக்கம் உள்ள புத்தகங்களைப் படித்து, குறிப்புகளை எடுத்து, மண்டையைக் குடைந்து, யோசித்து யோசித்து எழுதுகிறேன். அதைப் படிக்கவே ஆட்கள் இல்லை....”

அவர் குறுக்கிட்டுச் சொன்னார், “அது உங்களோட ஸ்டைல். இந்த சுந்தர மோகன் ஸ்டைல் வேறு. எனக்குத் தோன்றுவது எதைப் பற்றியும் நான் எழுதப் போகிறேன். எனவே இதில் மண்டையைக் குடைந்து யோசிக்க என்ன இருக்கிறது?” சாதாரணமாகச் சொன்னார் அவர்.

எனக்குத் தலை சுற்றியது. என் புத்தக அலமாரி என்னைவிட்டுப் போவதாகத் தோன்றி ஒரு கணம் திடுக்கிட்டேன்.

“கவலைப்படாதீர்கள். அப்படி ஒன்றும் ஆகாது.” என்று அவர் என் மனதில் உள்ளதைப் படித்தது போல் சொன்னார். எப்படி அவரால் நான் நினைத்ததைச் சொல்ல முடிந்தது என்று வியந்தேன்.

“இதில் வியப்பதற்கு என்ன இருக்கிறது? நான் யாருடைய மனதில் இருப்பதற்கும் ஏற்ப, அவர்களைக் கவரும் விதமாக எழுதப்போகிறேன். எனவே உங்கள் தளத்திற்குக் கண்டிப்பாக ஒரு பெரும் கூட்டம் வந்து சேரும். அது தானாகச் சேர்ந்த கூட்டமாக இருக்காது மாறாக நானாகச் சேர்த்த கூட்டமாக இருக்கும்.” என்று சொல்லி என்னைப் பார்த்துப் பெருமிதமாகச் சிரித்தார். நானும் அவரைப் பார்த்து ஒரு மாதிரியாகச் சிரித்து வைத்தேன். இருந்தும் உள்ளுர பயம் இருக்கத்தான் செய்தது.

“சரி. நான் எழுதப் போவதற்கு ஏதாவது தலைப்பு வேண்டுமல்லவா? என்ன வைக்கலாம்?” என்று என்னிடம் கேட்டார்.

“அதையும் நீங்களே சொல்லிவிடுங்கள்” என்றேன் நான்.

“சுந்தர மோகன் பக்கங்கள்” என்றார் அவர்.

(மறுபிரசுரம். முதற்பிரசுரம் ஆகஸ்ட் 26, 2014)

Related Posts Plugin for WordPress, Blogger...