July 12, 2016

கி.ராஜநாராயணனின் கதவு: எக்காலத்துக்குமான கதை!

கி.ரா. ராஜநாராயணின் முதல் கதை கதவு. சில எழுத்தாளர்களின் முதல் கதையே முக்கிய கதையாக அமைந்து விடுவதுண்டு. கி.ராவின் இந்தக் கதையும் அவ்வகையைச் சார்ந்ததே. மிகச் சாதாரணமாகத் தெரியும் இந்தக் கதை எப்படி முக்கியமான கதையாக ஆகிறது என்று சந்தேகிக்கலாம். குழந்தைகளின் மகிழ்ச்சிக்குரிய ஒரு விளையாட்டுப் பொருளாக இருந்த கதவை, தலையாரி தீர்வை பாக்கிக்காக எடுத்துக் கொள்கிறார். இதனால் தங்களது விளையாட்டு சாதனத்தை இழந்த குழந்தைகள் மிகவும் வருந்துகிறார்கள். இந்நிலையில் கிராமச்சாவடியில் ஒரு வீட்டின் பின்புறம் அதே கதவு பொருத்தப்பட்டுள்ளதைக் கண்டு தொலைந்து போன தங்களின் நண்பனைக் கண்ட மகிழ்வில் குழந்தைகள் குதூகலம் அடைகிறார்கள்.

கதை என்று பார்த்தால் இவ்வளவுதான்.

நாம் ஒருபோதும் கடவுளைக் கண்ணால் காண்பதில்லை. ஆனால் அவரின் இருப்பே இந்த பூமிக்கு ஆதாரமாக இருக்கிறது! ஆக, மணிமுத்தாறு சென்று கடந்த ஆறுமாதங்களாக வீட்டுக்குத் திரும்பாத அந்த முகம் தெரியாத மனிதரே இந்தக் குடும்பத்துக்கு ஆணி வேர். அவர் இல்லாததல், குடும்பம் வறுமையில் வாடுகிறது. தீர்வை பாக்கிக்காக வீட்டின் கதவையும் இழக்க நேர்வதால், வீட்டின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகிறது. காய்ச்சல் கண்ட கைக்குழந்தை, கதவு இல்லாதததால் கார்த்திகை மாதத்து வாடைக் காற்றில் உடல் நலம் மேலும் கெட்டு, அந்த பரிதாபத்திற்குரிய ஜீவன் இந்த உலகத்தை விட்டுப் போய்ச்சேர்கிறது. சத்யஜித்ரேயின் பதேர் பாஞ்சாலியில் இதே போல் இறந்து போகும் ஒரு சிறுமியின் மறக்க முடியாத மரணம் நினைவில் வர, நமது சோகம் இன்னும் அதிகரிக்கிறது.

ஒரு வீட்டுக்கு கதவு எத்தனை பாதுகாப்போ அத்தனை பாதுகாப்பு அதன் தலைவன். எனவே, இந்தக் கதையின் தலைப்பான கதவு என்பது வெறும் ஜடப்பொருளான மரத்தைக் குறிப்பதல்ல மாறாக அந்தக் குழந்தைகளின் தகப்பன் என்று அறியும் போதே இந்தக் கதையின் வீச்சும் முக்கியத்துவமும் பிடிபடும்! கதவு இல்லாததால் குழந்தைகள் தங்களின் மகிழ்ச்சியை, ஆரோக்கியத்தை இழப்பதோடு, இறுதியில் உயிரையும் பறிகொடுக்க வேண்டிய அவலம் ஏற்படுகிறது.

தங்களை விட்டுச் சென்ற அப்பாவைவிட, குழந்தைகள் அந்தக் கதவை நேசிக்கிறார்கள் என்று கி.ரா காட்டுவதிலிருந்து அவருக்கும் இந்தக் குடும்பத்துக்கும் அதிக நெருக்கம் இல்லை என்பதை உணர்த்துகிறார். ஒரு வேளை அப்பாவை எதிர்பார்த்து எதிர்பார்த்து அந்தக் கதவையே பார்த்திருந்த குழந்தைகளுக்கு அப்பாவைவிட கதவு நெருக்கமானதாக ஆகிவிட்டதோ?  இல்லை, அந்தக் கதவே அவர்களுக்கு அப்பாவாக ஆகிவிட்டதோ? அந்த குடும்பத் தலைவன் என்ன ஆனான் என்று கி.ரா. காட்டாதிருப்பதிலும் ஒரு நுட்பம் இருக்கிறது. குழந்தைகள் தங்கள் வீட்டின் கதவை மற்றொரு வீட்டில் பார்க்கிறார்கள் என்ற குறிப்பால், அந்தக் குடும்பத்து தலைவன் அந்தக் குடும்பத்தை தவிக்கவிட்டுவிட்டு வேறெங்கோ வாழ்கிறான் என்பதாக நாம் எடுத்துக்கொள்ளும் போது, இந்தக் கதையின் மற்றொரு பரிமாணம் நமக்குத் தெரியவருகிறது.

இத்தோடு முடிந்துவிட்டதா என்றால் இல்லை! இந்தக் கதையில் மேலும் கவனிக்க மற்றொன்றும் இருக்கிறது! அந்தக் கதவில் ஏற்கனவே படம் ஒன்றை ஒட்டியதற்கான ஓர் அடையாளம் இருக்கிறது. அதை, “அந்தப் படம் ஒட்டி எத்தனையோ நாட்கள் ஆகி விட்டதால் அழுக்கும் புகையும் பட்டு மங்கிப் போயிருந்தது. ஒருவேளை அது லட்சுமியின் தகப்பனார் குழந்தையாக இருக்கும்போது ஒட்டியதாக இருக்கலாம்” என்று குறிப்பிடுகிறார் கி.ரா. ஆக, இந்தக் கதை இப்படியே காலங்காலமாக தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது என்பதை காட்டி, இந்தக் கதையை எக்காலத்துக்குமான கதையைாகச் செய்கிறார் கி.ரா. இறுதியில் கதவைக் கண்டதும் அதை இறுகப் பற்றிக் கொண்டு கண்ணீர் விடும் குழந்தைகள், அவர்களின் அப்பாவைக் கண்டாலும் அதைத்தானே செய்யும்!

நாற்காலி என்ற ஜடப்பொருளை மையமாக வைத்து அவர் எழுதிய கதை எவ்வாறு மனித மனத்தின் இருட்குகையில் மறைந்துள்ள ஓர் அம்சத்தை வெளிக்கொணர்ந்ததோ அதே போல், ஆனால் அதற்கும் மேலே, கதவு எனும் ஜடப்பொருளைக் கொண்டு மனித வாழ்க்கையையே முற்றாக வெளிக்கொணர்கிறார் கி.ரா.

Kathavu


கி.ராவின் இக்கதை மதரா என்பவரால் குறும்படமாக எடுக்கப்பட்டிருப்பதை யூடிப்பில் பார்த்தேன். குறும்படம் நன்றாக வந்திருக்கிறது. கதவு சத்தத்தில் குழந்தை உறங்குவது, கால மாற்றத்தை வெளிப்படுத்துவது, கதவு இல்லாமல் நாய் கஞ்சிக் கலையத்தை உருட்டிவிட பானை கவிழ்ந்து கிடப்பது, போன்ற காட்சிகள் அற்புதமாக அமைந்து வாசிப்பிற்கு இணையான அனுபவத்தைப் படம் தருகிறது. அதை இந்தப் பதிவோடு பகிர்ந்து கொள்கிறேன்.


Related Posts Plugin for WordPress, Blogger...