July 15, 2016

கரமாஸவ் சகோதரர்கள் -தஸ்தயேவ்ஸ்கி: மானுட வாழ்வின் சாசனம்

நட்சத்திரத் தகுதி: ✰✰✰✰✰

வெளியீடு: காலச்சுவடு
முதல் பதிப்பு: ஜுன் 2014
விலை ரூபாய்: 950
பக்கங்கள்: 1216
கட்டமைப்பு: கெட்டி அட்டை
வடிவம்: ராயல்


தஸ்தயேவ்ஸ்கியின் கரமாஸவ் சகோதரர்களைப் படிக்க வேண்டும் என்ற என் இருபது வருடக் கனவு, ஆசை இன்று நனவாகியது. நாவலைப் படித்து முடித்ததும் அபரிமிதமான மன நெகிழ்வுக்கும், மன எழுச்சிக்கும் ஆளானேன். என்ன ஒரு அற்புத உலகம் அது! வாசிப்பினூடே நாவல் என்னுள் நிகழ்த்திய பேரனுபவத்தின் பிரமிப்பும், சலனமும், சஞ்சலமும் இன்னும் அடங்கவில்லை. வாழ்வின் பிரம்மாண்டத்தை, பின்னங்களை, உன்னதங்களை, உடைசல்களை ஒருங்கே வெளிப்படுத்தி, நம்மின் அகத்தும் புறத்தும் மாபெரும் மாற்றத்தை நிகழ்த்தும் ஆற்றல் மிக்க படைப்பாளி தஸ்தயேவ்ஸ்கியைத் தவிர வேறு யாருமில்லை! உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை சிலிர்க்க வைக்கும் இதுபோன்ற ஒரு படைப்பை இதுவரை என் வாழ்நாளில் வாசித்ததில்லை! நாவல் ஏற்படுத்திய தாக்கத்தையும், நாவலிலிருந்து கற்றதையும் பெற்றதையும் முடிந்தவரை தெரிவிக்கும் விருப்பத்தால், இந்த நீண்ட கட்டுரையை எழுதியுள்ளேன். இதைப் படிப்பவர்கள் இந்நாவலைப் படிக்கும் தூண்டுதல் பெற்றால் அதுவே எனக்கு மகிழ்ச்சி.

இந்நாவலை வாசிக்க நான் முன்பு பலமுறை எடுத்த முயற்சிகள் தோற்றுவிட்டன! எனவே நாவலின் பாதகமான அம்சங்களாக நாம் எதையெல்லாம் கருதுகிறோமோ அதையெல்லாம் சாதகமான ஒன்றாக, நமது மனம், மாற்றிக்கொள்ளாத வரை நாம் இந்நாவலை வாசிக்க முடியாது. முதலாவதாக, கதாபாத்திரங்களை அடையாளம் காண்பதில் ஏற்படும் சிக்கலைத் தாண்டியதும் நாவலை நோக்கி நாம் சிறு அடி எடுத்து வைத்தவர்களாவோம். அதன் பிறகு, கமாக்களுடன் தொடரும் நீண்ட நெடும் வாக்கியங்களும், நான்கைந்து பக்கங்களுக்கு நீளும் பாராக்களும் முதலில் நமக்குச் சற்றே ஆயாசத்தைத் தருகின்றன என்பது உண்மைதான். ஆனால் படிக்கப் படிக்க அதுவும் நம் பிடிக்குள் வந்துவிடுவதோடு, நாவலின் வசீகரமான ஒர் அம்சமாக அவைகள் ஆகிவிடுகின்றன. இவை இரண்டையும் தாண்டியதும் அந்நிய கலாச்சாரம் பற்றிய புரிதல்கள் வருகிறது. இவையெல்லாம் கடந்ததும் நாம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சிக்கல் தஸ்தயேவ்ஸ்கி நாவலை அணுகும் முறை. தஸ்தயேவ்ஸ்கியின் நோக்கம் வாழ்க்கையைச் சொல்வதல்ல மாறாக வாழ்க்கையின் அடிப்படைகளை ஆராய்வது என்பதைப் புரிந்துகொண்டால் மட்டுமே நாம் அவரை நெருங்க முடியும். வெறும் கதையை மட்டும் சொல்லிச் செல்வதில்லை அவர், மாறாக ஒவ்வொரு மனித மனத்தையும், மானிட வாழ்வையும் ஊடுருவி அவற்றின் அடியாழம் வரை சென்று பகுப்பாய்வு செய்கிறார். எனவே, இவை அனைத்தையும் கடக்கும்போதே நாவல் நம் வசப்படும். நாவலின் ஒவ்வொரு பக்கமும் நுட்பமான, அடர்த்தியான, ஆழமான சித்தரிப்புகளைக் கொண்டிருக்கிறது. எனவே, சூரிய ஒளி புகமுடியாத அடந்த காட்டில், புதர்களை விலக்கியபடி, தட்டுத் தடுமாறி நடப்பதான மனச்சித்திரமே நாவலைப் படிக்கும்போது மனதி்ல் எழுகிறது.

பியோதர் பாவ்லவிச் கரமாஸவ் பாத்திரத்தின் சித்தரிப்பு அபாரமானது. நாம் இதுவரை கண்டும், கேட்டும் இராத ஒரு மனிதனாக அவர் இருக்கிறார். எப்போதும் சிற்றின்பத்தில் மூழ்கித் திளைப்பவர், எந்தப் பெண்ணாவது கையசைத்தால்கூட அவளது அரைப் பாவாடையில் கிறங்கிப் போகிறவர் அவர் என்கிறார் தஸ்தயேவ்ஸகி. முதல் மனவைி இறந்ததும் இரண்டாவதாக திருமணம் செய்துகொள்கிறார் பியோதர் பாவ்லவிச். அவரிடம் துன்பத்தையன்றி இன்பத்தைச் சிறிதும் அனுபவிக்காத இரண்டு மனைவிகளும் தங்கள் குழந்தைகளைத் தவிக்கவிட்டுவிட்டு இறந்துபோகிறார்கள். உறவுகளை துச்சமாக மதித்துப் பணம் ஒன்றையே பிரதானமாகக் கருதும் அவர் உண்மையில் ஒரு முட்டாளா, இல்லை முட்டாளாக நடிக்கும் பைத்தியக்கார புத்திசாலியா என்று யூகிக்க இயலாதபடி நாவலில் வலம் வருகிறார். இப்படி ஒரு கீழான மனிதன் உலகத்தில் இருக்க முடியுமா என்ற கேள்வியை அவரது பாத்திரம் நமக்குள் எழச்செய்கிறது. நுணுகி ஆராய்ந்தால் ஒவ்வொரு மனிதனிடமும் அவ்வப்போது வெளிப்படும் கீழானவற்றின் மொத்த உருவமாகவே அவர் இருப்பதை அறியமுடியும்.


அவருடன் நெருக்கம் கொள்ளும் ஒருவன் முதலில் இந்த உலகை, பிறகு அதில் வாழும் மனிதர்களை, அதன் பிறகு அந்த மனிதர்களின் மனங்களைப் புரிந்துகொள்கிறான். இறுதியாக, எதையும் ஊடுருவிப் பார்க்கும் தெளிவு பெற்றவனாகத் தன்னைத்தானே அறிந்துகொள்கிறான்.


அவரது மூன்று மகன்களும் மூன்றுவிதமான இயல்பைக் கொண்டிருக்கிறார்கள். மூவருமே சிறுவயதில் தாயாரை இழந்துவிடுவதால் தந்தை, தாய் இருவரையும் விட்டு யார்யாரிடமோ வளர்கிறார்கள். அவர்கள் தங்கள் மகன்கள் என்பதையே மறந்தவராக பியோதர் பாவ்லவிச்சின் வாழ்க்கை நடக்கிறது. இதில் மூத்தவன் திமித்ரி முதல் மனைவிக்கும், இவான் மற்றும் அலெக்ஸெய் இருவரும் இரண்டாவது மனைவிக்கும் பிறந்தவர்கள். திமித்ரி முரட்டுத் தனமான உடலின் மூலம் இயங்குபவன். இவான் அறிவின் தளத்தில் சஞ்சரிப்பவன். அலெக்ஸெய் உள்ளத்தின்படி நடப்பவன். இப்படி மூவரையும் உடல், அறிவு, உள்ளம் என மூன்று வெவ்வேறு மனிதர்களாகக் கண்டாலும், இந்த மூன்றும் இணைந்துதான் மனிதன் என்பதையும் நாம் புரிந்துகொள்ளலாம். பியோதர் பாவ்லவிச்சுக்குத் துயரமான ஒரு முடிவு நேர்கிறது. அதைச் சொல்லும் முகமாகவே இந்தக் கதையைத் தஸ்தயேவ்ஸ்கி சொல்லிச் செல்கிறார். ஆனால் அது என்ன என்பதைச் சொல்லாமல் நாவல் நகர்கிறது. திமித்ரி, இவான், மற்றும் அலெக்ஸெய் இந்த மூவரில் அதைச் செய்யப்போவது யார்? யாருக்கு அதைச் செய்ய அதிகமான சாத்தியக்கூறுகள் உள்ளன? எனும் கேள்விகள் நம் மனதில் எழும்படி நாவலை முன்னெடுத்துச் செல்கிறார் தஸ்தயேவ்ஸ்கி. உண்மையில் நாவல் அதற்கான விளக்கம் மட்டுமல்ல. ஒன்றிலிருந்து ஆரம்பித்து கிளைகிளையாகப் பரந்து விரிந்து செல்லும் ஆயிரக்கணக்கான பாதைகளைக் கொண்ட பிரம்மாண்டமான உலகமிது. அவற்றில் சிக்கிக்கொள்ளும் ஒருவன் அதிலிருந்து தப்ப வழிகளைத் தேடி அலையும் தவிப்பைப் போலவே நாவலின் வாசிப்பு இருக்கிறது. 

முதிய துறவியான ஸோசிமா, மற்றும் மடாலயத்தைப் பற்றிய சித்தரிப்புகள் நம்மிடம் பல்வேறு சிந்தனைகளை எழச்செய்பவை. நோயுற்ற தனது இறுதிக் காலத்தில் அவர் தன்னைக் காணவரும் மக்களைச் சந்திக்கும் பகுதி நாவலின் இதயம் என்று சொல்லலாம். ஒரு மனிதன் குற்றமும் பாவமும் ஏன் செய்யவேண்டும்? துன்பங்கள் அவனுக்கு ஏன் ஏற்படவேண்டும்? ஆண், பெண் இருவரின் இன்பத்தில் பிறக்கும் மனிதன் சதா துன்பத்தில் உழல்வது ஏன்? ஒருவருக்குக் கடவுள் நம்பிக்கையும் வேறொருவருக்கு கடவுள் அவநம்பிக்கையும் ஏன் ஏற்படுகிறது? இந்த உலகில் யார் தன்னை சந்தோஷமாக இருக்கும் மனிதன் எனச் சொல்லிக்கொள்ள முடியும்? மனித குலத்தின் மீது அளவற்ற நேசமுடன் இருக்க முடியும் என்று சொல்லிக்கொள்ளும் மனிதன் தனியறையில் வேறோர் மனிதனுடன் சிலமணி நேரங்கூட இருக்க முடியாமல் நிம்மதி இழப்பது ஏன்? போன்றவை நம்மை பாதிக்கும் முக்கியமான கேள்விகள். 

பாவம் செய்த பெண்மணி ஒருத்திக்கும், குழந்தையை பறிகொடுத்த தாய்க்கும், முடக்குவாதத்தால் பாதித்த லீஸ் என்ற இளம் பெண்ணுக்கும் அவர் ஆசிர்வதித்துச் சொல்லும் கருத்துக்கள் இப்பூமி மீது மனித வாழ்க்கை எதற்காக என்பற்கான பதில்களாக இருக்கின்றன. தன் குழந்தையைபப் பறிகொடுத்த தாய்க்கு அவர் சொல்லும் ஆறுதல்கள் புத்தபிரான் யாரும் இறக்காத வீட்டிலிருந்து கடுகு கொண்டுவரச் சொன்னதை நினைவுபடுத்துகிறது. தன் கணவனைப் பிடிக்காமல் அவரையே கொன்றுவிடும் பெண்ணுக்கு அவர் சொல்லும் வார்த்தைகள் நம்மை நெற்றிப் பொட்டில் அறைபவை. பாவம் செய்துவிடும் அவளை பயம் பிடித்து ஆட்டுகிறது. உண்மையில் பாவத்தின் தண்டணை அந்த பயம்தான்.

அவர் சொல்கிறார், “... எதற்குமே நீ பயப்படத் தேவையில்லை. வீணாக நீ வருத்தப்படாதே. நீ செய்த பாவத்திற்காக உண்மையாக வருத்தப்பட்டாலே போதும், கடவுள் உன்னை மன்னிப்பார். ஆம், கடவுளால் மன்னிக்கப்படாத பாவம் ஒன்று இந்தப் பூமியில் இல்லவே இல்லை. கடவுளுடைய எல்லையற்ற அன்பைப் பெறமுடியாத அளவுக்கு மனிதனால் ஒரு பாவத்தையும் செய்துவிட முடியாது...” மேலோட்டமாகப் பார்த்தால் இது பாவம் செய்வதற்கான தூண்டுதலாகத் தெரியும். அப்படி அல்ல. கடவுள் இப்படிப் பட்டவர் என்பதை அறியும்போது நாம் எத்தகைய பாவத்தையும் செய்யும் சக்தி அற்றவர்களாகிறோம் என்பதுதான் உண்மை. அளவுக்கு அதிகமான கட்டுப்பாடு தவறு செய்யத் தூண்டுவதும், சுதந்திரம் அதே தவற்றைச் செய்யவிடாது தடுப்பதும் போன்றதுதான் இது. “இந்த உலகில் எப்போதும் எந்த உயிர்க்கும் அநீதி ஏற்பட கடவுள் விடுவதில்லை” என்று ஓஷோ சொல்வது இதனால்தான்.

ஸோசிமாவைக் காண்பதற்கு பியோதர் பாவ்லவிச் இவானுடன் மடாலயத்துக்கு வருகிறார். திமித்ரி இன்னும் வராததால் அவர்களிடையே இவான் எழுதிய ஒரு கட்டுரை சம்பந்தமாக விவாதம் ஒன்று நடக்கிறது. நீதிமன்றங்கள் கோயில்களின் கட்டுப்பாட்டில் வரவேண்டுமென்றும், குற்றவாளிகள் அப்போதே முழுதுமாக திருந்துவார்கள் என்றும், நீதிமன்றங்கள் தரும் கடுமையான தண்டணைகள் குற்றவாளிகளைத் திருத்திவிடாது என்பதாக மிக நீண்ட விவாதம் நடைபெறுகிறது. சிலர் மறுத்தும் சிலர் ஆதரித்தும் அது பற்றி விவாதம் செய்யும்போது திமித்ரி அங்கு வந்துசேர்கிறான். அவனுக்கும் அவன் தந்தைக்குமிடையே சொத்துக்கள் பற்றிய சண்டை வலுக்கிறது. ஒரு பதட்டமான சூழ்நிலை உருவாகிறது. ஒரு துறவியின் முன் நடக்கும் இத்தகைய கூத்துகள், அந்த மடாலயத்திலேயே வசிக்கும், அலெக்ஸெயை வெட்கப்படவும் அவமானப்படவும் வைக்கிறது. தன் பேச்சின் மூலம் தன் மூடத்தனத்தின் மொத்தத்தையும் வெளிப்படுத்தி கோமாளியாகக் காட்சி தருகிறார் பியோதர் பாவ்லவிச்.


நாவலின் ஊடும் பாவுமாக எண்ணற்ற சிந்தனைகளை, மனித வாழ்வின் பல்வேறு தளங்களில் படரவிட்டு, அதன் மூலம் மனிதனின் குற்றத்திற்கான பின்னனியை, அடிப்படையை, சமூக அமைப்பை, கடவுளின் இருப்பை கேள்விக்குள்ளாக்கி, நம்முன் விஸ்வரூபம் கொண்டு உயர்ந்து நிற்கிறார்.


இந்நிகழ்ச்சிக்குப் பிறகு, அலெக்ஸெய் இருக்கவேண்டியது இந்த மடமல்ல என்றும், அவன் தன் குடும்பத்தாருக்கு உதவ வெளியே இருக்கவேண்டுவது அவசியம் என்றும் அவனிடம் சொல்கிறார் ஸோசிமா. ஏதோ எதிர்பாராத ஒன்று அவன் குடும்பத்தில் நடக்கப்போவதை அவர் அறிந்திருந்தார் என்பதைப் புலப்படுத்துவதாக நமக்கு இதைச் சுட்டுகிறார் தஸ்தயேவ்ஸ்கி. தன் வாழ்க்கையின் இறுதி நாட்களில் இருக்கும் முதியவர் ஸோசிமாவின் மரணம் ஏதோ ஒரு அதிசயத்தை நிகழ்த்தும் என்பதாக அனைவரும் அதற்காகக் காத்திருக்கிறார்கள். 

ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு உணர்ச்சி மனிதனைப் பாடாயப் படுத்துகிறது. அதில் காமம் முக்கியமானது. கீழ்மையில் உழன்று பழகிய மனிதன் தான் விரும்பினாலும் அதிலிருந்து விடுபட்டு மேலான நிலைக்கு வரமுடியாது. மேலும் மேலும் அவன் கீழ்மையில் மூழ்கி அழுகிப்போய் முடைநாற்றமெடுக்கிறான். திமித்ரி தான் கீழான நிலையில் இருப்பதை உணர்ந்தாலும் அதிலிருந்து வெறியேறும் வழியின்றி தவிக்கிறான். திமித்ரி செய்த உதவிக்காக அவனை மணமுடிக்க விரும்பும் கத்தரீனா இவானவ்னாவை புறக்கணித்து விலைமாதுவான குரூஷென்காவை அவன் விரும்புவது இதனால்தான். அவளையே அவன் தந்தையும் விரும்புகிறார் என்பது அதைவிட வெட்கக்கேடானது. அதற்காகத் தந்தையின் மீது வெறுப்பும், கோபமும் கொண்ட திமித்ரி அவரைக் கொல்லவும் துணிவதாக அலெக்ஸெயிடம் மட்டுமல்ல ஊர் முழுவதும் சொல்லித் திரிகிறான். ஆனால் அவன் தந்தையோ கீழான நிலையில் இருப்பதையே பெருமிதமாகக் கருதி வாழ்கிறார். பிச்சைக்காரி லிஸவெத்தாவுடன் உறவுகொள்ளும் அவரது மனோபாவம் இதையே பறைசாற்றுகிறது.

பாவ்லவிச்சின் வேலைக்காரன் கிரிகோரி ஒரு முக்கியமான பாத்திரம். அவன் இல்லாமல் அவரும் அவர் மகன்களும் இருந்திருக்க முடியாது. அந்தக் குடும்பத்தைக் காப்பாற்றியது அவனது விசுவாசம் என்றுதான் சொல்லவேண்டும். லிஸவெத்தா என்ற பிச்சைக்காரி ஒரு ஆண் மகவைப் பெற்று இறந்துவிட அந்தக் குழந்தையைக் கிரிகோரி, ஸ்மெர்தியாக்கவ் எனப் பெயரிட்டு வளர்த்து வருகிறான். அவன் வளர்ந்ததும் பாவ்லவிச்சின் சமையல்காரனாகிறான். அவனைப் பற்றிய முக்கியமான ஒரு செய்தியைத் தக்க சமயத்தில் சொல்வதாகத் தஸ்தயேவ்ஸ்கி சொல்கிறார். 

இவான், கத்தரீனா இவானவ்னாவை விரும்புகிறான். அவளுக்காக தனக்கும் திமித்ரிக்கும் இடையேயுள்ள குரூஷென்கா பிரச்சினையில் அதனாலேயே அவன் திமித்ரிக்கு உதவக்கூடும் என்று அவன் தந்தை நினைக்கிறார். இவான் மூலமாக தனக்கு ஆபத்து வரலாம் என்றும் அலெக்ஸெயிடம் சொல்கிறார். பாத்திரங்களின் உறவின் சிக்கல்கள் மேன்மேலும் சிடுக்காகும்படி நாவலைப் பின்னிச் செல்கிறார் தஸ்தயேவ்ஸ்கி. கத்தரீனா இவானவ்னா தான் உண்மையில் விரும்புவது இவானைத்தான் என்றும் திமித்ரியை அல்ல என்றும் ஒரு கட்டத்தில் சொல்கிறாள். இதுபற்றி இவானுக்கும் அவளுக்குமிடையே நடக்கும் சந்திப்பில் அலெக்ஸெய் கலந்துகொள்கிறான். அவள் ஆரம்பத்திலிருந்தே உண்மையாகவே திமித்ரியைக் காதலிக்கவில்லை எனும் கருத்தை அலெக்ஸெய் சொல்ல, திடீரென இவானின் மனநிலை மாறுகிறது. அவன் தனக்கும் அவளுக்கும் இனி சம்பந்தமில்லை என்றும் தான் மாஸ்கோ செல்வதாகவும் கூறி கிளம்பிச் செல்கிறான். இப்படியாக சட்சட்டென்று மாறும் மனநிலை கொண்டவர்களாக கதாபாத்திரங்கள் வருவது நமக்குப் புதிதான, புதிரான ஓர் அனுபவமாக இருக்கிறது. நாம் நிலையான அச்சில் வார்த்தது போன்ற கதாபாத்திரங்களைப் படித்தே பழக்கப்பட்டவர்கள். எனவே நாவல் மேலும் அடர்த்தியான சிக்கலான இருட் குகைக்குள் நம்மை அழைத்துச் செல்கிறது. அங்கே வெளிப்படப்போவது என்ன? மனித மனங்களின் குரூரமா? அன்பா? பயங்கரமா? விசித்திரமா? எதை நாம் அறியப்போகிறோம்?

இப்படிப் பல்வேறு பாத்திரங்களுக்கிடையேயான பணம், பெண் மற்றும் உறவின் சிக்கல்கள், பிரச்சினைகள், அவற்றின் விவாதங்கள் அனைத்தையும், இந்த பூமியில் ஒரு மனிதன் வாழத் தகுதி இல்லாதவன் என்பதை முடிவு செய்ய வேறு ஒரு மனிதனுக்கு உரிமை இருக்கிறதா என்ன? என்ற கேள்வியை நோக்கி நகர்த்துகிறது நாவல். பின்னால் நிகழவிருக்கும் பியோதர் பாவ்லவிச்சின் துயர முடிவிற்குச் சாதகமாக மனித மனம் இப்படியான சிந்தனைகளைக் காரணங்களாக உருவகித்தபடியே செல்கின்றன என்பதையும், கதாபாத்திரங்கள் அவற்றை அவரவர்க்கு சாதகமாக திரித்துக்கொள்ள முயல்கின்றன என்பதையும், தஸ்தயேவ்ஸ்கி வெளிப்படுத்திச் செல்லும் தருணங்கள் நாவலின் அற்புதம் எனலாம். வேறு யாரையும்விட மனிதனுக்குப் பெரும் துன்பத்தைத் தருபவை அவன் மனம்தான். அவன் மனம் செய்யும் கற்பனைகளே அவனை மீளாத் துயரில் ஆழ்த்துகிறது. பிறரைப் பற்றிய அவனது எண்ணங்கள், அபிப்ராயங்கள் எல்லாமே மனம் ஊகிக்கும் கற்பனைகளே என்பதை நாவலில் உலவும் கதாபாத்திரங்களின் நடவடிக்கைகள், உரையாடல்கள் ஆகியவற்றின் வாயிலாக வெளிப்படுத்தும் தஸ்தயேவ்ஸ்கியின் எழுத்தாற்றல் நம்மைப் பிரமிக்கச் செய்வது.


நாவல் நெடுகவே நடைபெறும் நீண்ட விவாதங்கள் மற்றும் உரையாடல்கள் மூலம் தெய்வத்துக்கும் மனிதனுக்கும் இடையேயான உறவை மனோதத்துவ ரீதியாக அணுகும் முழுமையான ஒரு படைப்பு கரமாஸவ் சகோதரர்கள்.


திருமதி ஹஹ்லக்கோவிடமிருந்து அலெக்ஸெக்கு கடிதம் ஒன்று வரவே அவளைச் சந்திக்கச் செல்கிறான் அவன். அவளது மகள் லீஸ் அலெக்ஸெவை விரும்புகிறாள். அவனும் அவளை விரும்புகிறான். சிறுவயது முதலே நண்பர்களாக இருந்த அவர்கள் தாங்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டு நல்ல கணவன் மனைவியாக வாழ முடியும் என்று நம்புகிறார்கள். அங்கேயிருக்கும் கத்தரீனா இவானவ்னா, திமித்ரி செய்த அவமானத்திற்கு பரிகாரமாகப் படைத் தளபதி ஸ்நெகிரேவுக்கு இருநூறு ரூபிள்கள் கொடுக்குமாறு அலெக்ஸெயிடம் கொடுத்து அனுப்புகிறாள். ஒரு சிறு நிகழ்வு தஸ்தயேவ்ஸ்கியால் எவ்வாறு கையாளப்படுகிறது என்பதற்கு, ஓய்வுபெற்ற அந்தப் படைத் தளபதியை அலெக்ஸெய் சந்திக்கும் காட்சி மிகச்சிறந்த எடுத்துகாட்டு எனலாம். (இதன் விரிவை தஸ்தயேவ்ஸ்கி பார்வையின் விஸ்வரூப தரிசனம் என்ற பதிவில் காணலாம்).

இவான், அலெக்ஸெய் இருவருக்கும் சத்திரம் ஒன்றில் நிகழும் சந்திப்பு நம்மை ஆழந்த சிந்தனைக்கும், விவாதத்திற்கும், சுய விமர்சனத்திற்கும் இட்டுச்செல்லக் கூடியது. அன்பு உன்னதமானதுதான் என்றாலும் அண்டை வீட்டாரை நேசிப்பது முடியாததாக இருக்கிறது. ஒருவரை விரும்ப அவரிடமிருந்து விலகியிருக்க வேண்டும். நெருங்கினால் அன்பு மாயமாய் மறைந்துவிடுகிறது. மனிதனுக்குக் கடவுள் தேவை என்ற எண்ணம் அவனிடம் தோன்றியது ஆச்சர்யம்தான். கடவுள் இருக்கிறார் என்பது உண்மைதான் என்றாலும், அவர் இருந்தும் உலகம் ஏன் இப்படி இருக்கிறது? பல நேரங்களில் மிருகத்தைவிடக் கேவலமாக மனிதன் நடந்து கொள்கிறான். குறிப்பாக குழந்தைகளிடம் அவ்வாறு நடந்துகொள்வது தாங்க முடியாததும் மன்னிக்க முடியாததுமாகும். இதில் யார் யாரை மன்னிப்பது? இந்த உலகம் ஏன் இப்படி முரண்பாடுகளால் நிறைந்திருக்கிறது? முரண்பாடுகள் இல்லாவிட்டால் எது நல்லது எது கெட்டது என்ற பாகுபாடு தெரியாமல் போகும் என்பதாலா? அதற்காக இவ்வளவு பெரிய விலை கொடுத்து அதை நான் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்? இந்த உலகம் மடத்தனத்தால் நிரம்பியிருக்கிறது என்பது நன்றாகவே தெரிகிறது. இருந்தபோதிலும் இப்படி இருக்கும் இந்த உலகத்தில் நான் வாழவே விரும்புகிறேன் என்கிறான் இவான். ஆவேசமாக, அனல் பறக்கும்விதமாக அமைந்திருக்கும் அவனுடைய நீண்ட பேச்சு, நம் உள்ளத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது.


தஸ்தயேவ்ஸ்கி காட்டும் உலகம் நம் மனதில் ஏற்படுத்தும் உணர்வுகள், வலிகள், எண்ணங்கள், கொந்தளிப்புகள், நெகிழ்ச்சிகள், எழுச்சிகள் ஆகியவை நம்மில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, என்றென்றும் அதிலிருந்து வெளியேற முடியாமல் நம்மைக் கட்டிப்போட்டு விடுகிறது.


அதைத் தொடர்ந்து இவான் தான் எழுதிய கவிதை ஒன்றைச் சொல்லப்போவதாகச் சொல்லி நீண்டதாக கதைவடிவிலான ஒரு சொற்பொழிவை ஆற்றுகிறான். அடர்த்தியும் சிடுக்கும் கொண்ட அதன் சாராம்சத்தைத் தொகுப்பது சிரமமானது என்பதால் சிலவற்றை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன். ஒரு மனிதனை குற்றவாளி என்று சொல்வதாலோ, அவன் குற்றம் புரிகிறான் என்பதாலோ எந்த அர்த்தமும் இல்லை. மாறாக அவனுக்கு அடிப்படைத் தேவையான உணவை முதலில் கொடுக்கவேண்டும். அதன் பிறகே அவனிடமிருந்து நல்லதை எதிர்பார்க்க வேண்டும். சுதந்திரம் உணவைத் தராதபோது உணவைத் தருபவனிடம் அவன் அடிமையாக இருக்கச் சம்மதிக்கிறான். எனவேதான் செல்வம் உள்ளவன் கடவுள் பெயரைச் சொல்லி அவனுக்கு உணவளிக்கவும், அடிமைப்படுத்தவும் முயல்கிறான். வழிபடவும், வணங்கவும், பின்பற்றவும் ஏதோ ஒன்று அல்லது யாரோ ஒருவர் எப்போதும் மனிதனுக்குத் தேவைப்படுவது அதனால்தான். இவ்வாறாகத் பேசிய பிறகு தான் இனி இங்கிருக்கப் போவதில்லை என்று அலெக்ஸெயிடம் விடைபெற்றுச் செல்கிறான். யேசு கிறுஸ்துவை விசாரணைக்கு உட்படுத்தும் நாவலின் இந்தப் பகுதி உலகம் முழுதும் மகத்தானதாக சிலாகிக்கப்படுதோடு, இதற்கு நிகரான பகுதி படைப்புலகில் எங்குமே இல்லை என்பதாகப் போற்றப்படுகிறது.

அலெக்ஸெயிடம் விடைபெற்றுச் செல்லும் இவான் தன் தந்தையைப் பார்க்கச் செல்கிறான். அப்போது இனம் புரியாத ஒரு துயரம் அவன் மனதில் படர்கிறது. அதற்கான காரணம் என்னவென்று அவன் ஆராயும்போது, ஸ்மெர்தியாக்கவ் அதன் காரணமாக இருப்பதை அறிகிறான். இவ்வாறு ஒரு மனிதன் வேறோர் மனிதனுக்குத் தூரத்திலிருந்தபடியே துன்பத்தையும் துயரத்தையும் கொடுக்க முடியும் என்பதை மிக அற்புதமாக, நேர்த்தியாக, இலாவகமாக விவரித்திருக்கிறார் தஸ்தயேவ்ஸ்கி. இருவரின் சந்திப்பில் நிகழும் உரையாடல்கள் நம்மை ரசிக்கவும் வியக்கவும் வைப்பவை. படிக்கும்போது ‘DOSTOEVSKY IS GREAT!’ என்று கூக்குரலிட்டுச் சொல்லும் வகையில், ‘ச்சே! எப்படிப்பட்ட எழுத்து!’ என்று சிலாகிக்கும் வகையில், நாவலின் இந்தப் பகுதி இருக்கிறது. படிக்கும் போது நமக்குச் சாதாரணமாகத் தெரியும் இப்பகுதி பின்னால் நிகழப்போகும் முக்கிய சம்பவத்திற்குக் காரணமாக அமைந்திருக்கிறது! (இதன் விரிவை தஸ்தயேவ்ஸ்கி காட்டும் அற்புதத் தருணங்கள் என்ற பதிவில் காணலாம்).

அலெக்ஸெய் தன்னுடைய பதிவேட்டில் எழுதி வைத்திருந்த, துறவி ஸோசிமாவின் இளமைக் காலம் குறித்தும், அவரது உரைகளையும் விவரிக்கும் நாவலின் நீண்ட பகுதி சகோதரத்துவம், அன்பு, கருணை, கீழ்படிதல், குற்றம் மற்றும் பாவம் ஆகியவற்றை ஆராய்கிறது. அனைத்து சிக்கல்களுக்கும் ஆதாரமாக இருப்பது மனிதனின் அகங்காரம்தான். ஆக, அகங்காரத்தை விட்டுவிடும் போது எல்லாமே சுமுகமாகிவிடும் என்பதையே தஸ்தயேவ்ஸ்கி வலியுறுத்துகிறார். காந்தி தனது சுயசரிதையின் முன்னுரையில், “உலகம் தூசியைக் காலின் கீழ் வைத்து நசுக்குகிறது. ஆனால் சத்தியத்தை நாடுகிறவரோ, அத்தூசியும் தம்மை நசுக்கும் அளவுக்குத் தம்மைப் பணிவுள்ளவராக்கிக் கொள்ளவேண்டும். அப்பொழுதுதான் - அதற்குமுன் அல்ல - ஒளியைக் கணப்பொழுதாவது காணமுடியும்.” என்று கூறுவது அதனால்தான். அவரது வார்த்தைகள் நாவலின் இந்தப் பகுதியை மிகச்சரியாகப் பிரதிபலிக்கிறது.

ஒரு மனிதனுக்கு வாழும்போது எதிரிகள் இருப்பது போலவே அவன் இறந்த பிறகும் அவனுக்கு எதிரிகள் இருப்பது வாழ்க்கையின் புரியாத புதிர்களில் ஒன்று. சாதாரண மனிதனிலிருந்து துறவிகள் என்று சொல்லப்படுபவர்கள் வரை யாருமே இதற்கு விதிவிலக்கல்ல. துறவியான ஸோசிமா இறந்த பிறகு ஏதோ அற்புதம் நிகழும் என்று காத்திருந்தவர்கள், அற்புதத்திற்குப் பதிலாக அருவருப்பான ஒரு நிகழ்ச்சியே நடந்தது கண்டு, அவரை விரும்பியவர்கள் அதிர்ச்சியடை, அவரது எதிரிகள் மகிழ்கிறார்கள். இறந்த ஸோசிமாவின் உடம்பிலிருந்து நறுமணம் கமழும் என நினைத்தவர்கள் அதற்கு மாறாகத் துர்நாற்றம் கிளம்பியதைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் நடந்தேறுகிறது!

நடந்து முடிந்துவிட்ட இந்தத் துரதிருஷ்டமான நிகழ்ச்சி அலெக்ஸெயின் மனதைப் பெரிதும் துயரத்தில் ஆழ்த்துகிறது. இந்நிகழ்ச்சி அவன் மனதில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்திவிடுகிறது என்று சொல்லும் தஸ்தயேவ்ஸ்கி, நாவலின் இந்தப் பகுதியில் பல்வேறு கேள்விகளை நம் மனத்தில் எழச்செய்திருக்கிறார். ஒரு மனிதன் வாழ்ந்து முடித்த பிறகு அவனது வாழ்வைப் பற்றிக் கருத்துச் சொல்ல பிறருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? அந்தக் கருத்துகள் நல்ல முறையில் வாழ்ந்த ஒரு மனிதன் மீதான அவதூறாகக் கூறப்படுமென்றால், அவன் அப்படி நல்லவனாக வாழ்ந்ததில் என்ன அர்த்தமிருக்கிறது? அதற்காக அவன் பட்ட சிரமங்கள் இப்படி விழலுக்கு இறைத்த நீராக ஏன் ஆகவேண்டும்? இதில் கடவுளின் பங்கு என்ன? அவருடைய விருப்பத்தின் பேரில் இவ்வாறு நடக்கிறதா? அப்படி இல்லையெனில் பிறர் அவ்வாறு பழிப்பதை அவர் தடுக்கச் சக்தியற்றவராக இருக்கிறாரா? அப்படி அவர் அதைத் தடுக்காத போது இறந்தவரைப் போலத் தன் வாழ்வை அமைத்துக்கொள்ள விரும்பும் ஒருவன் அவ்வாறு வாழ்வதற்கான நம்பிக்கையை எங்கிருந்து பெற முடியும்? போன்ற கேள்விகள் மிக முக்கியமானவை. மனித வாழ்வின் இந்தச் சிக்கலை, முரண்பாட்டை தன் கதையின் நாயகன் அலெக்ஸெவிடம் ஏற்பட்டுவிட்ட மனமாற்றத்துடன் ஒட்டியும் வெட்டியும் நாவலின் இந்தப் பகுதியைத் தஸ்தயேவ்ஸ்கி அணுகியிருக்கும் விதம் அலாதியானது. (இதன் விரிவை இறந்த உடலில் இருந்து வரும் துர்நாற்றம் என்ற பதிவில் காணலாம்).

நாவலின் பல நூறு பக்கங்களுக்குப் பிறகு திமித்ரி மீண்டும் வருகிறான். இதுவரை விவாதங்கள் மற்றும் விசாரணைகள் மூலம் வாழ்வின் பல்வேறு பரிமாணங்களை உணரச்செய்த தஸ்தயேவ்ஸ்கி, கதையை விரைந்து சொல்வதாகச் சொல்லி, கதையில் தன் கவனத்தைச் செலுத்துகிறார். இதுவரை நாம் காணாத முற்றிலும் புதிய தஸ்தயேவ்ஸ்கி இப்பகுதியில் வெளிப்படுகிறார். அவரின் அற்புதமான புனைவின் திறத்தால் இப்பகுதியின் சித்தரிப்புகள் ரசனையோடு ரசிக்கத்தக்க வகையில் இருப்பதோடு, பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் அமைந்திருக்கிறது. திமித்ரியின் இயலாமை, பரிதவிப்பு, ஆவேசம் மற்றும் கோபம் அனைத்தையும் ஒரு தேர்ந்த திரைப்பட இயக்குனரின் திறமையுடன் இலாவகத்தோடு நம் மனத் திரையில் விரியச் செய்திருக்கிறார் தஸ்தயேவ்ஸ்கி. குரூஷென்காவுடன் சேர்ந்து வாழவேண்டும், அதற்குப் பணம் வேண்டும் என்று திமித்ரி தவிக்கிறான். அவளோ தன் முன்னால் கணவனுடன் வாழ முடிவுசெய்து மோக்ரய நகரத்திற்குச் சென்றுவிடுகிறாள். எங்கும் பணம் கிடைக்காத நிலையில், குரூஷென்கா எங்கே இருக்கிறாள் என்றும் தெரியாத நிலையில், தன் தந்தையிடம் அவள் இருப்பாளென்று அங்கே செல்கிறான் திமித்ரி. குரூஷென்கா அங்கேயும் இல்லாததால் அங்கிருந்து திரும்பியவன், வழியில் தன்னைப் பிடிக்க முயலும் கிரிகோரியைத் தாக்கிக் காயப்படுத்திவிட்டு மோக்ரய நகரத்திற்குச் செல்கிறான். அப்போது அவனிடம் நிறைய பணம் இருக்கிறது! அங்கே ஏற்படும் பிரச்சினையில் குரூஷென்கா அவள் முன்னால் கணவனை விரட்டிவிட்டு திமித்ரியுடன் வாழ்வதாகச் சொல்கிறாள். அதன் பிறகு குடியும் கும்மாளமுமாக அவர்கள் இருக்கும்போது அங்கே வரும் போலீஸ், தந்தையைக் கொன்றதற்காகத் திமித்ரியைக் கைது செய்கிறது.


மனிதர்கள் தனிமைப்பட்டுக் கொண்டே வருகிறார்கள். இது மனிதனைத் தவறான பாதையில் செல்லுமாறு வற்புறுத்தி, அன்பதைத் திரித்து குற்றம், கோபம், வன்மம், துரோகம், பொறாமை, வெறுப்பு, வஞ்சம் மற்றும் சூழ்ச்சி என்பதாக உருமாற்றம் செய்துவிடுகிறது.


தான் தாக்கிய கிரிகோரி சாகவில்லை என்று அறிந்து மகிழும் திமித்ரி, தன் தந்தையைக் கொன்றதற்காக தான் கைது செய்யப்படுவதாக அறிந்து அதிர்ச்சி அடைகிறான். விசாரணை ஆரம்பிக்கிறது. தன் எழுத்தின் திறத்தால் விசாரணை நடப்பதை அற்புதமாக தஸ்தயேவ்ஸ்கி விவரித்திருக்கிறார். விசாரணையில் தெரியவரும் ஒவ்வொரு விசயமும், ஆரம்பத்திலிருந்து திட்டமிட்டு நாவலைக் கட்டமைத்திருக்கும் அவரின் எழுத்தாற்றலை புலப்படுத்துவதால் நாம் பெரும் வியப்பு அடைகிறோம். தான் தன் தந்தையைக் கொல்லவில்லை என்றும் அவரிடமிருந்து பணத்தையும் திருடவில்லை என்றும் வாதிடுகிறான் திமித்ரி. தான் கொல்லாவிடில் தன் தந்தையை யார் கொன்றது? பணத்தை யார் திருடியது? என்பது புரியாத புதிராகவும் ஆச்சர்யமாகவும் இருக்கிறது அவனுக்கு. ஆனால் விசாரணையின் போக்கு அவனுக்குப் பாதகமாக செல்வதை நினைத்து, வருத்தமும், கோபமும், எரிச்சலும் அடைகிறான்.

கொலை செய்தது ஸ்மெர்த்தியாக்கவ்தான் என்று திமித்ரியும், அலெக்ஸெயும் சந்தேகிக்கிறார்கள். ஆனால் இவான் திமித்ரிதான் கொலைகாரன் என நினைக்கிறான். இருந்தும் அவன் மனதில் ஏதோ ஒரு சந்தேகம் அலைக்கழித்து அவனை நிம்மதி இழக்கச் செய்கிறது. எனவே அதற்கு விளக்கம் காணும் பொருட்டு மூன்று முறை ஸ்மெர்த்தியாக்கவை சந்திக்கிறான். கடைசி சந்திப்பில் ஸ்மெர்த்தியாக்கவ், நான்தான் கொலை செய்து பணத்தைத் திருடினேன் என்றும், இவானின் “எல்லாமே அனுமதிக்கப்பட்டவை” என்ற மறைமுகத் தூண்டுதலே தான் கொலை செய்யக் காரணம் என்றும் சொல்கிறான். ஆகவே உண்மையில் இவான்தான் கொலைகாரன், தான் வெறும் கருவிதான் என்கிறான். இதனால் இவான் பெரும் மன உலைவுக்கும் துயரத்திற்கும் ஆளாகிறான். இந்நிலையில் ஸ்மெர்த்தியாக்கவ் தற்கொலை செய்துகொண்ட செய்தியை அலெக்ஸெய் மூலம் இவான் தெரிந்து கொள்கிறான்.

வழக்கு விசாரணை மீண்டும் தொடங்குகிறது. சாட்சிகளின் வாக்குமூலம் மற்றும் வக்கீல்களின் வாதம் பிரதிவாதம் இவையிரண்டும் சாதகமாகவும் பாதகமாகவும் மாறிமாறி வெளிப்பட்டு வாழ்வுக்கும் சாவுக்குமிடையே திமித்ரியை பெண்டுலமாக ஊசலாட்டுகிறது. தனது அற்புதமான எழுத்து வன்மையால் விசாரணையை நம் கண்முன் தத்ரூபமாக நிகழ்த்திக் காட்டுகிறார் தஸ்தயேவ்ஸ்கி. மனித மனங்களின் விசித்திரத்தை, அதன் மூலை முடுக்கெல்லாம் புகுந்து புறப்பட்டு, அலசி ஆராய்ந்து, சாராகப் பிழிந்து நம்முன் வைக்கிறார். அதைக் கண்டு நாம் அதிர்ச்சியும், ஆச்சர்யமும் அடைகிறோம். மனிதனிடம் வெளிப்படும் அன்பு, ஆசை, வெறுப்பு, துயரம், பகை, பொறாமை, அச்சம், இயலாமை, இரக்கம் அனைத்தும் கணப்பொழுதில் ஒன்றிலிருந்து மற்றொன்றாக உருமாற்றம் கொள்ளும் விந்தையை, அதிசயத்தைக் கண்டு நாம் வாயடைத்துப் போகிறோம்! ஸ்மெர்த்தியாக்கவ் பியோதர் பாவ்லவிச்சின் சொந்த மகனே என்ற நம் சந்தேகம், அரசு தரப்பு வக்கீலின் உரையில் உறுதியாகிறது. விசாரணை முடிந்து, திமித்ரி குற்றவாளிதான் என்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. நிரபராதியான திமித்ரி தண்டணை பெறுகிறான். ஒரு மனிதன் தான் செய்யும் குற்றத்திலிருந்து தப்பித்துவிடும் போது, அவன் செய்யாத குற்றத்திற்காக தண்டணை பெறவே நேர்கிறது! கடவுள் ஏதாவது ஒரு வழியில் அவனை தண்டிக்கவே செய்கிறார். இந்த உலகில் கடவுளின் தண்டணையிலிருந்து யாருமே தப்ப முடியாது என்பதன் கருத்து இதுவே!

தனது இரு சகோதரர்களுக்கும் நேர்ந்த முடிவு அலெக்ஸெயை துயரப்படுத்த, நோயுற்று படுத்த படுக்கையாக இருந்த, படைத் தளபதியின் மகன் இல்யூஷா இறந்துபோவது அவனது துயரத்தை அதிகப்படுத்துகிறது. அவனது இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளும் அவனுக்கு, இல்யூஷா அவனது தந்தையிடம், “என் அருமை அப்பாவே, எப்படி அவன் உங்களைக் கேவலப்படுத்திவிட்டான்!” என்று சொன்னது நினைவுக்கு வந்து, ஏதோ ஒன்று அவனது உள்ளத்தை உலுக்குகிறது.

இந்த உலகில் யாருமே மனசாட்சியைக் கொன்றுவிட்டு தவறோ, குற்றமோ செய்ய முடியாது. இது இயற்கையின் நியதி. ஒரு மனிதன் தன் மனதின் குறுக்கீடு இல்லாமல் ஏன் குற்றம் செய்ய முடியவதில்லை? இதற்கான பதில் எளிதானது. மனிதன் இயல்பிலேயே மிகமிக நல்லவன் என்பதுதான். எனவே தனக்குள் இருக்கும் இந்த அடிப்படை இயல்பையும், விதியையும் மீறி அவன் குற்றம் செய்யும்போது, அவன் மனம் விழித்துக்கொண்டு எச்சரிக்கிறது. ஆனால் அதற்கும் அவன் செவிசாய்க்காத போது, செய்த குற்றத்தை அவன் மனம் குத்திக் காயப்படுத்தி வதைப்பதிலிருந்து அவனால் எக்காலத்துக்கும் தப்பித்துப்போக முடியாது. கரமாஸவ் சகோதரர்களின் கதை நமக்கு நேரடியாகத் தெரிவிக்கும் செய்தி இதுதான். இந்த எளிய அம்புலிமாமா விளக்கத்தை தருவதற்குத் தஸ்தயேவ்ஸ்கி என்ற படைப்பாளி தேவையில்லை. உண்மையில் தஸ்தயேவ்ஸ்கி, நாவலின் ஊடும் பாவுமாக எண்ணற்ற சிந்தனைகளை, மனித வாழ்வின் பல்வேறு தளங்களில் படரவிட்டு, அதன் மூலம் மனிதனின் குற்றத்திற்கான பின்னனியை, அடிப்படையை, சமூக அமைப்பை, கடவுளின் இருப்பை கேள்விக்குள்ளாக்கி, நம்முன் விஸ்வரூபம் கொண்டு உயர்ந்து நிற்கிறார்.

தன் தந்தை கொல்லப்பட்ட பிறகு, கரமாஸவ் சகோதரர்கள் மூவரும் மூன்று வெவ்வேறு விதமான உணர்வுகளுக்கு ஆட்படுகிறார்கள். அது அவர்கள் மனதை மட்டுமல்ல வாழ்வையும் முற்றிலுமாக மாற்றிவிடுகிறது. மூவருக்கும் தனித்தனியே நிகழும் அந்த மூன்று அனுபவங்களின் தருணங்கள் மிகவும் முக்கியமானது. அவை அவர்களைப் புதிய மனிதர்களாக உருமாற்றம் செய்துவிடுகிறது. மடாலயத்திற்கு திரும்பவரும் அலெக்ஸெய், தீடீரென இனம்புரியாத ஓர் உணர்வுக்கு ஆட்பட்டு, பரவசமடைந்து, மனம் நெகிழ்ந்து, நிலத்தில் படுத்து அதை அனைத்து முத்தமிடும் கணத்தில் உள்ளொளி பெறுகிறான். அந்தத் தருணத்தில், இந்த உலகத்தில் இருக்கும் எல்லோரையும் அவர்களின் எல்லாத் தவறுகளுக்காக மன்னிக்கவும், தானும் எல்லோரிடம் மன்னிப்புக் கேட்கவும் விரும்புகிறான். திமித்ரி தன் மீதான விசாரணயின்போது கனவு ஒன்றில் வறுமையில் வாடும் குழந்தைகளைக் கண்டு மனம் பதைக்கிறான். திடுக்கிட்டு விழித்த அந்த நிமிடத்தில் அவன் ஆத்ம சுத்தி அடைகிறான். தந்தையைக் கொல்லாவிடினும், தனது பிற செயல்களுக்காக தனக்கு இந்த தண்டணை தேவைதான் என்பதாக அவன் மனம் பக்குவப்படுகிறது. கொலை செய்வதற்குத் தூண்டுதலாக இருந்தது இவான்தான் என்று ஸ்மெர்த்தியாக்கவ் சொல்வது இவானை அதிர்ச்சியடையச் செய்தாலும் அவனது உள்ளுணர்வின் குற்ற உணர்வால் ஒருவகையில் அது உண்மைதான் என்பதை உணர்ந்து, மனதளவில் பாதிப்புக்குள்ளாகி, புத்தி பேதலித்து, பைத்தியமாகிறான். இங்ஙனம் உடல் இன்பத்தையே பிரதானமாகக் கருதிய திமித்ரி இறுதியில் உடல் வருத்த சுரங்கத்தில் வேலை செய்யும் தண்டணை பெறுகிறான். அறிவினால் இயங்கிய இவான் அந்த அறிவினாலேயே பைத்தியமாகிறான். உள்ளத்தால் இயங்கிய அலெக்ஸெய் ஞான ஒளி பெறுகிறான். (இதன் வரிவை கரமாஸவ் சகோதரர்கள் நாவலின் மையம் –ஒரு பார்வை என்ற பதிவில் காணலாம்).

இந்நாவல் வெளியான மூன்று மாதங்களுக்குப் பிறகு 1881 ஜனவரி 21ம் நாள் இரவு எட்டரை மணிக்கு தஸ்தயேவ்ஸ்கி இறந்து போகிறார். இப்படி ஒரு மகத்தான படைப்பாளியைத் தன்னோடு இருத்தி வைத்துக்கொள்ள வேண்டும் என்ற காலத்தின் ஆசை, அவரது இரண்டாவது நாவலைப் படிக்கும் நம் ஆசையை நிராசையாக்கி விட்டது.


அடர்த்தியும், சிடுக்கும் உளவியல் தன்மையும் மிகுந்த தஸ்தயேவ்ஸ்கியின் இப்படைப்பு ஒரு மனிதன் ஏன் குற்றம் செய்கிறான் என்பதை விரிவான ஆய்வுக்கு உட்படுத்துகிறது. மனிதன் செய்யும் குற்றங்களுக்கு அவன் மட்டுமே காரணமா? சக மனிதர்கள் காரணமா? இல்லை சமூக அமைப்பு காரணமா? எனும் கேள்விகளுக்கு இடையே நாம் மேற்கொள்ளும் பயணமே இந்நாவல். நாவல் நெடுகவே நடைபெறும் நீண்ட விவாதங்கள் மற்றும் உரையாடல்கள் மூலம் தெய்வத்துக்கும் மனிதனுக்கும் இடையேயான உறவை மனோதத்துவ ரீதியாக அணுகும் முழுமையான ஒரு படைப்பு கரமாஸவ் சகோதரர்கள். எனவேதான் உளவியலாளர் சிக்மண்ட் ஃபிராய்ட், எப்போதும் எக்காலத்துக்கும் நாவல் கலையின் மிகப்பெரிய சாதனை கரமாஸவ் சகோதரர்கள்தான் என்கிறார். தஸ்தயேவ்ஸ்கி இந்நாவலை எழுதிக்கொண்டிருந்த போது தன் நண்பருக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “என் வாழ்நாள் முழுவதும் என்னை நனவு நிலையிலும், நனவிலி நிலையிலும் வதைத்துக் கொண்டிருக்கும் அடிப்படைப் பிரச்சினையை இப்புத்தகத்தின் எல்லாப் பகுதிகளிலும் அணுக இருக்கிறேன். கடவுளின் இருப்பு குறித்ததே அது.” எனவே இறைவன் குறித்தும் அவன் மீதான நம்பிக்கைகள் குறித்தும் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்துகிறது நாவல். ஆனால் அவற்றோடு கதாபாத்திரங்களின் வாழ்வை ஒப்பிட்டு நோக்கும்போது இறுதியில் நாம் சென்று சேர்வது ஒருவிதமான நாத்திகத்தையே எனலாம்.

தஸ்தயேவ்ஸ்கியின் நிஜ வாழ்க்கைக்கும் நாவலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அவரது சொந்த வாழ்வின் அனுபவங்களின் பிரதிபலிப்பும், பாதிப்புமே இந்த நாவல் எனலாம். அவற்றைத் தன் அசாத்தியமான எழுத்தாற்றல் மற்றும் கற்பனை திறத்தால் உலகம் போற்றும் மாபெரும் படைப்பாக நமக்குத் தந்திருக்கிறார். 1846 பிப்ரவரி முதல் தேதியில் தஸ்தயேவ்ஸ்கி தன் சகோதரருக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “வேறு யாரிடமும் இல்லாத ஒரு பிரத்யேகமான எழுத்தாற்றல் என்னிடம் இருப்பதாகச் சொல்லுகிறார்கள். நான் பகுப்பாய்வு செய்கிறேன்; தொகுப்பாய்வு அல்ல. அதாவது சிறு சிறு அணுக்களாகப் பிரித்து ஆழத்தை நோக்கிச் சென்று அங்கு வாழ்க்கை முழுமையைக் காணுகிறேன்.” தன் எழுத்தைக் குறித்து அவரே இவ்வாறு சொல்வதிலிருந்து அவரது நாவல் எவ்வளவு அடர்த்தியும் ஆழமும் கொண்டது என்பதை நாம் அறிய முடியும். எனவே நாவலைப் படிக்கும்போது ஆயாசம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. நிதானத்தையும் பொறுமையையும் கடைபிடித்து நாவலைப் படித்து முடித்தால் இதுவரை நாம் எங்குமே கண்டிராத ஒரு புது உலகம், புது வாழ்க்கை நமக்காகக் காத்திருக்கிறது. தஸ்தயேவ்ஸ்கி காட்டும் உலகம் நம் மனதில் ஏற்படுத்தும் உணர்வுகள், வலிகள், எண்ணங்கள், கொந்தளிப்புகள், நெகிழ்ச்சிகள், எழுச்சிகள் ஆகியவை நம்மில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, என்றென்றும் அதிலிருந்து வெளியேற முடியாமல் நம்மைக் கட்டிப்போட்டு விடுகிறது. நம்மை ஏதோ கனவுலகில் சஞ்சரிக்க வைக்கும் படைப்பல்ல இது. மாறாக நம் மனத்தையும், இதயத்தையும் குத்திக் கிழித்து அவற்றின் வேதனைகளையும், இரத்தத்தையும் வெளிக்கொணரும் படைப்பு. கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த மனிதனிடம் வெளிப்படும் நிஜ வாழ்வின் குரூரங்களின் படைப்பு.

கரமாஸவ் சகோதரர்களின் எந்தவொரு பக்கமும் மேம்போக்கானதல்ல, மாறாக சிற்பி ஒருவனின் நுணுக்கத்தோடு தஸ்தயேவ்ஸ்கி நாவலின் பக்கங்களைச் செதுக்கி இருக்கிறார். அதனால்தான் அவர் ஒரு படைப்பாளி என்ற நிலையையும் தாண்டி, நாவல் கலையின் சிகரத்தில் ஒரு கலைஞனாக உயர்ந்து நிற்கிறார். எனவே தன் படைப்போடு உறவு கொள்ளும் யாரையும் அவர் பெருமளவில் பாதிப்பது தவிர்க்க முடியாதது. அவருடன் நெருக்கம் கொள்ளும் ஒருவன் முதலில் இந்த உலகை, பிறகு அதில் வாழும் மனிதர்களை, அதன் பிறகு அந்த மனிதர்களின் மனங்களைப் புரிந்துகொள்கிறான். இறுதியாக, எதையும் ஊடுருவிப் பார்க்கும் தெளிவு பெற்றவனாகத் தன்னைத்தானே அறிந்துகொள்கிறான். ஆகவே, வாழ்வைக் குறித்தும், மனிதனைக் குறித்தும் விரிவான, முழுமையான பார்வையை – தரிசனத்தை - தரும் நாவல் கரமாஸவ் சகோதரர்கள். கரமாஸவ் சகோதரர்கள் நமது மானுட வாழ்வின் சாசனம் என்றால் அது மிகையல்ல; உண்மை. எனவே உலகில் இதுவரை தோன்றிய படைப்பாளிகள் அனைவரிலும் என்றென்றும் முதன்மையானவர் தஸ்தயேவ்ஸ்கி என்ற கலைஞன்தான். (இதன் விரிவை தஸ்தயேவ்ஸ்கி என்ற கலைஞனும் அவன் படைப்புகளும் எனும் பதிவில் காணலாம்).

சிறந்த படைப்பாளியான ஹென்றி மில்லர் கரமாஸவ் சகோதரர்கள் நாவல் தன்னுள் ஏற்படுத்திய பாதிப்பை, “….. தஸ்தயேவ்ஸ்கியை முதன்முதலாகப் படிக்க அமர்ந்த அந்த இரவு என் வாழ்வில் மிக முக்கியமானதொரு நிகழ்வு….. அவனிடம் ஆழமாக மூழ்கிய இந்தத் தருணத்திலிருந்து நான் நிச்சயம் ஒரு வித்தியாசமானவனாக ஆனேன். அசைக்க முடியாதபடியும், மனநிறைவோடும் இந்நிகழ்வு அமைந்தது. விழிப்பதும், அன்றாட காரியங்களுமான தினசரி உலகம் என்னைப் பொருத்தவரை மடிந்துவிட்டது….. நான் நெருப்பினுள் வாழ்பவன் ஆனேன். என்னைப் பொருத்தவரை, மனிதனின் சாதாரண துயரங்கள், போட்டி பொறாமைகள், ஆசாபாசங்கள், அனைத்தும் உதவாக்கரை விஷயங்கள், குப்பைக் கூளங்கள் என்றாகின…” என்று குறிப்பிடுகிறார். நாவலைப் படிக்கும் அனைவரும் அதற்குச் சற்றும் குறையாத பாதிப்பையே அடைவார்கள்.

கரமாஸவ் சகோதரர்களின் எந்தவொரு பக்கமும் மேம்போக்கானதல்ல, மாறாக சிற்பி ஒருவனின் நுணுக்கத்தோடு தஸ்தயேவ்ஸ்கி நாவலின் பக்கங்களைச் செதுக்கி இருக்கிறார். அதனால்தான் அவர் ஒரு படைப்பாளி என்ற நிலையையும் தாண்டி, நாவல் கலையின் சிகரத்தில் ஒரு கலைஞனாக உயர்ந்து நிற்கிறார்.


“நாம் படிக்கும் புத்தகம், முஷ்டியால் மண்டையோட்டை இடித்து நம்மை விழிக்கச் செய்யாத பட்சத்தில், நாம் அதை ஏன் வாசிக்க வேண்டும்? அது நம்மை மகிழ்விக்கிறது என்பதாலா? அட கடவுளே, நாம் புத்தகங்கள் இல்லாமல்கூட சந்தோஷமாக இருக்கமுடியும். நம்மை மகிழ்விக்கும் அப்படியான புத்தகங்களை, தேவைப்பட்டால், நாமேகூட எழுதிக் கொள்ளலாம். ஆனால், ஒரு துரதிர்ஷ்டத்தைப் போல நம்மை வந்தடைகிற, நம்மை விடவும் நாம் அதிகம் நேசிக்கிற ஒருவரின் மரணத்தைப் போலவோ, தற்கொலையைப் போலவோ ஆழ்ந்த துயரம் விளைவிக்கக்கூடிய புத்தகங்களே நமக்குத் தேவை. நமக்குள் படிந்திருக்கும் உறைபனிப் பாறையைப் பனிக் கோடாரியால் பிளப்பதாக ஒரு புத்தகம் இருக்க வேண்டும்.” என்ற ஃபிரன்ஸ் காஃப்காவின் கூற்று கரமாஸவ் சகோதரர்களுக்கு முழுமையாகப் பொருந்துகிறது.

“நான்கு பெரிய பகுதிகளும், பன்னிரெண்டு உப பகுதிகளும் கொண்ட இந்த நாவலின் கதையைச் சுருங்கக் கூறுவது இமயமலையின் சிகரத்தை தபால்தலையில் பார்ப்பது போல இருக்கும். மேலும் நாவல்கள் கதை அல்ல. இந்த விதிகளை மீறி, முரட்டுத்தனமாக இந்த நாவலைச் சுருக்கிப் பார்த்தால், அது ஒரு கொலைக் கதை.” என்கிறார் சுந்தர ராமசாமி. அதைப் போலத்தான் இந்நாவல் தரும் தரிசனத்தைச் சுருங்கப் பார்ப்பதும். மனிதன் உட்பட இந்த உலகில் எதுவுமே பரிபூர்ணமானது அல்ல. எல்லாமே இருமைகளைத் தன்னகத்தே கொண்டதுதான். அன்பு என்ற ஊற்று எல்லா மனிதனிடத்தும் பீறிட்டுக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அது சரியான பாதையில் மடைதிறப்பு செய்யப்படுவதில்லை. தன்முனைப்பு, சுயமுன்னேற்றம் இவற்றை வலியுறுத்துவதாக மட்டுமே இச்சமூக அமைப்பு இருக்கிறது. எனவே சமூத்திடமிருந்தும் சக மனிதனிடமிருந்தும் மனிதர்கள் தனிமைப்பட்டுக் கொண்டே வருகிறார்கள். இது மனிதனைத் தவறான பாதையில் செல்லுமாறு வற்புறுத்தி, அன்பதைத் திரித்து குற்றம், கோபம், வன்மம், துரோகம், பொறாமை, வெறுப்பு, வஞ்சம் மற்றும் சூழ்ச்சி என்பதாக உருமாற்றம் செய்துவிடுகிறது. எனவே கடவுள்கூட மனிதனைப் பரிபூரணத்துவனாகப் படைக்கும் முயற்சியில் தோற்றுப் போகிறார். ஒருவகையில் தஸ்தயேவ்ஸ்கியின் இம்மாபெரும் படைப்பு நமக்கு வலியுறுத்திச் சொல்வது இதுவே எனலாம்.

காலச்சுவடின் தரமான, நேர்த்தியான அச்சாக்கத்தில் நாவல் நம் கண்களையும் கருத்தையும் கவர்வதாக இருக்கிறது. அரும்பு சுப்ரமணியத்தின் சரளமான, வாசிப்பனுபவத்தை மிகுத்தும் சிறப்பான மொழிபெயர்ப்பு பாராட்டத் தக்கது. அவரிடமிருந்து தஸ்தயேவ்ஸ்கியின் அனைத்துப் படைப்புகளும் நமக்கு வரவேண்டும் என்று மனம் விரும்புகிறது. இப்படைப்பை வாசிக்கவேண்டும் என்ற எனது பலவருடக் கனவு, ஆசை, ஏக்கம் இவர்களால் சாத்தியமானது மகிழ்வளிக்கிறது. நாம் இந்த மாபெரும் படைப்பை, தமிழுக்குக் கிடைத்த பொக்கிஷமாகக் கருதி, வரவேற்றுக் கொண்டாட வேண்டும்.

1880ல் வெளியான இந்நாவலுக்குத் தற்போதைய வயது 134 ஆண்டுகள் என்பதும், இன்னும் உலக இலக்கியத்தில் முதன்மையான நாவலாகவே அது இருந்து வருவதும் நம்மை வியப்பில் ஆழ்த்தும் செய்தி. தன் நாயகன் அலெக்ஸெயைப் பற்றித் தான் இரண்டு நாவல்கள் எழுதப் போவதாகவும், முதல் நாவலான கரமாஸவ் சகோதரர்களைவிட இரண்டாவது நாவல் முக்கியமானது என்றும் முகவுரையில் சொல்கிறார் தஸ்தயேவ்ஸ்கி. ஆனால் இந்நாவல் வெளியான மூன்று மாதங்களுக்குப் பிறகு 1881 ஜனவரி 21ம் நாள் இரவு எட்டரை மணிக்கு தஸ்தயேவ்ஸ்கி இறந்து போகிறார். இப்படி ஒரு மகத்தான படைப்பாளியைத் தன்னோடு இருத்தி வைத்துக்கொள்ள வேண்டும் என்ற காலத்தின் ஆசை, அவரது இரண்டாவது நாவலைப் படிக்கும் நம் ஆசையை நிராசையாக்கி விட்டது. ராமாயணம், மகாபாரதம் எனும் இதிகாசங்களைப் போலவே காலத்தால் அழிக்கப்பட முடியாத, என்றென்றும் நிலைத்து நிற்கும், படைப்பு இது.

(மறுபிரசுரம். முதற்பிரசுரம் ஆகஸ்ட் 1, 2014)

Related Posts Plugin for WordPress, Blogger...