July 14, 2016

கி.ராஜநாராயணனின் 'பூவை': கடைசி வரியின் மாயாஜாலம்!

கி.ராவின் இந்தச் சிறுகதை அபாரமானது. மிகமிக எளிமையான கதையில் மனிதர் எத்தனை பெரிய விஷயத்தைச் சொல்கிறார்! அதுவும் கதையின் அந்த கடைசி வரி 'பொலேரென' பின் மண்டையில் அடித்தது போல நம்மை தூக்கிவாரிப் போடச்செய்கிறது. கதையின் கடைசி வரியில் கதையின் மொத்த போக்கையும் தீர்மானிக்கும் விதமாக திருப்பி அடிப்பதில் கி.ரா. கைதேர்ந்தவர். அது இந்தக் கதையைப் பொருத்தவரை அபாரமாக அமைந்திருக்கிறது. கதையின் இறுதி வரியைப் போலவே கதையின் தலைப்பும் 'நச்' சென்று அமைந்து பல்வேறு சிந்தனைகளை மனதில் கிளரச்செய்கிறது. 

கதை என்ன பெரிய கதை? கதைசொல்லியின் சித்தப்பாவின் வீட்டிற்கு சின்னவயதில் வேலைக்குச் சேர்ந்த பேரக்கா அங்கேயே வளர்ந்து பெரியவளாக, அதே வீட்டில் புதிதாக வேலைக்குச் சேர்ந்த குமரய்யாவை அவளுக்குத் திருமணம் செய்ய முடிவுசெய்கிறார்கள். இருவருக்குமான திருமண நாளான அன்று தீடீரென பேரக்கா மயக்கம்போட்டு விழுகிறாள். நம் சிந்தனை எப்படியெல்லாமோ ஓடுகிறது. ஆனால் அதற்கான காரணம் அறிந்தபோது எல்லோரும் சிரிக்கிறார்கள். இதுதான் கதை!

இந்தக் கதையிலிருந்து நாம் என்ன அனுபவத்தைப் பெற்றுவிட முடியும்? அல்லது இந்தக் கதை நம்மை எந்தவிதத்தில் பாதிக்க முடியும்? யோசித்துப் பார்த்தால் ஒன்றுமே இல்லைதான். ஆனால் கி.ராவின் மந்திரக்கோல் பேனா கடைசி வரியை இப்படி எழுதுகிறது:

எனக்குச் சிரிப்பு வரவில்லை.

இந்த மூன்று வார்த்தை கதையை முற்றாகத் திருப்பி விட்டதையும், மலையின் மீது கவியும் மேகமென, நம் உள்ளத்தை மிகப்பெரிய சோகம் வியாபிப்பதையும் உணர முடிகிறது. என்ன மாயம் இது? அந்த மூன்று வார்த்தை மனித மனத்தின் சுழிப்பை, அதன் சுயநலப்போக்கை, அறியாமை என வேஷம் போடும் கயமையை நச்சென்று நம் பின்னந்தலையில் சம்மட்டி கொண்டு தாக்கியதுபோல உணரச்செய்துவிட்டதே? அதுதான் கி.ரா. எப்போதும் கதையின் கடைசி வரியில் அவர் நிகழ்த்தும் மாயாஜாலம் வாசிப்பவரை திடுக்கிட்டு விழிக்கச் செய்வதோடு வியக்கவும் வைப்பது. அது இந்தக் கதையைப் பொருத்தவரை சற்றே அதிகம்!

இரவு பதினோரு மணிவரையிலும் ஓயாமல் வேலை செய்துவிட்டு, அதிகாலை சேவல் கூவுகையில் எழுந்திருந்து மீண்டும் வேலை செய்ய ஓடுகிறாள் பேரக்கா.  அந்த ஊரிலேயே முதலில் கூவும் சேவல் என்று தன் வீட்டு சேவல் மீது பாட்டிக்குப் பெருமை வேறு! ஊரில் எல்லோர் வீட்டிலும் 'அடி பம்ப்' போட்டபோது, தனது உடல் வலிமையால் ஊர்க் கிணற்றிலிருந்து அந்த வீட்டுக்குத் தண்ணீர் இறைத்துக் கொட்டுகிறாள் பேரக்கா.

அப்படிப்பட்ட பேரக்காவின் தலையில் ஒரு முழம் பூவைச்சூட வேண்டும் என்று அந்த வீட்டில் யாருக்கும் தோன்றவில்லையே?  இதை அறியாமை, மறதி என்று சொல்லி தப்பிக்கமுடியுமா? இந்த உலகில் பூவைத் தலையில் சூட விரும்பாத எந்தப் பெண்ணாவது உண்டா? இல்லை அந்த வீட்டில் வேறு எந்தப் பெண்ணுமே பூச்சூடவே இல்லையா? வேலைக்காரிதானே என்ற புறக்கணிப்பைத் தவிர இதற்கு வேறு என்ன காரணம் இருக்கிறது?

கதையின் தலைப்பைக் கவனியுங்கள்.

வாய் திறந்து அதிகம் பேசாத பேரக்கா ஒரு பூவை என்றறிருந்தும் அவளை 'பூ வை' என்று யாருமே சொல்லவில்லையே?


Related Posts Plugin for WordPress, Blogger...