July 12, 2016

பனி -ஓரான் பாமுக்: மதம், அரசியல், மானுடம் எனும் முக்கோணம்

நட்சத்திரத் தகுதி: ✰✰
வெளியீடு: காலச்சுவடு
முதல் பதிப்பு: செப்டம்பர் 2013
விலை ரூபாய்: 450
பக்கங்கள்: 576
கட்டமைப்பு: மெல்லிய அட்டை
வடிவம்: ராயல்

ஓரான் பாமுக்கின் பனி நாவலை ஜி.குப்புசாமியின் மொழியாக்கத்தில், மிகச்சரளமான நடையில், அதன் முழு அழகுடனும் வீச்சுடனும் நம்மால் வாசிக்க முடிகிறது. அரசியல், மதம் இரண்டும் மனிதர்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதை துருக்கியின் வரலாற்றுப் பின்னனியில் ஆராய்கிறது இந்நாவல். தன் கற்பனையின் வீச்சாலும், புனைவின் ஆற்றலாலும் பனியை மிகச்சிறந்த நாவலாக ஆக்கியிருக்கிறார் ஓரான் பாமுக். கார்ஸ் நகரத்தைப் பற்றிய துல்லியமான விவரணைகள், பனிப்பொழிவினூடே விரியும் நகரத் தெருக்கள், கடைகள், சூழல்கள் ஆகியன நம் மனதைக் கவரும்படியும் ரசிக்கும்படியும் மிகச் சிறப்பாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அந்நகரத்தின் கடந்தகால, நிகழ்கால மாற்றங்களைச் சித்தரிப்பதன் வாயிலாக மானிட வாழ்வின் எண்ணற்ற கூறுகளை விரித்துச் செல்கிறார் ஆசிரியர். ஆங்கிலத் திரைப்படத்தின் விறுவிறுப்பான காட்சிகளுக்கு நிகரான கதையோட்டம் நம்மை ஈர்த்து வாசிப்பில் பரபரப்பையும் விறுவிறுப்பையும் கூட்டுகிறது.

காவின் நண்பன், பத்திரிக்கையாளனும் கவிஞனுமான காவைப் பற்றிச் சொல்லும் விதமாக ஓரான் பாமுக் நாவலை கட்டமைத்திருக்கிறார். எனவே நாவல் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்ற மூன்று காலங்களுக்குமிடையே ஊடாடியபடி நம்மைச் சஞ்சாரம் கொள்ளச் செய்கிறது. நாவல் முழுதுமே கா பல்வேறு வகைப்பட்ட மனிதர்களைச் சந்திக்கிறான். மதத் தீவிரவாதி, போலீஸ், ராணுவம், மடாதிபதி, கம்யூனிஸ்ட், புரட்சியாளர்கள் என அந்த மனிதர்களின் பட்டியல் நீள்கிறது. அவர்களினூடே பயணிக்கும் காவின் அனுபவங்களும், கல்லூரித் தோழியான இபெக்குடன் அவன் கொள்ளும் காதலும், துருக்கியின் வரலாறும், மனிதர்கள் மதங்கள் இரண்டுக்கும் இடையான உறவுமே இந்த நாவல். குறிப்பாக மதம் என்ற அங்குசம் மானுடம் எனும் யானையை எவ்வாறு ஆட்டிவைக்கிறது என்பதை வசீகரமான உத்திகளோடும் கதை அம்சத்தோடும் தன்னுள் கொண்டு மிளிர்கிறது பனி. 

நாவலைப் படிக்கப் படிக்க தீவிர மதச்சார்புக்கும், மதச்சார்பின்மைக்கும் இடையே நடக்கும் மோதல்தான் நாவல் என்பதை நாம் புரிந்துகொள்கிறோம். கலாச்சாரத்தைக் கட்டிக் காப்பதாகக் கூறிக்கொள்ளும் இத்தகையவர்கள், அதை மீறுபவர்களைக் கொலை செய்யக் கூடத் தயங்குவதில்லை. விலை மதிப்பற்ற மனித உயிர்களை விடவும் அவர்கள் தங்கள் மூட நம்பிக்கையின் மொத்த உருவான கலாச்சாரத்தைப் பேணுவதிலும் பாதுகாப்பதிலுமே சிரத்தையும், அக்கறையும் கொண்டிருப்பது மிகவும் விசித்திரமானது. இத்தகைய மதச்சார்பாளர்களுக்கும், சார்பற்றவர்களுக்கும் இடையே நிகழும் மோதலை, போராட்டத்தை அரசியல் பின்னனியில் சித்தரிக்கிறது நாவல். இந்நாவல் ஒரு குறிப்பிட்ட கலாச்சாரப் பின்புலத்தில் பின்னப்பட்டிருந்தாலும், அது எல்லா மனிதர்களுக்கும், எல்லா பிரிவினருக்கும், எக்காலத்துக்குமான நாவலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஏனெனில் பனி நாவலின் சமகாலத் தன்மையும், பொதுத்தன்மையும் சமீபத்தில் வெளியான தி இந்து பத்திரிக்கைச் செய்திகளில் உறுதிப்படுகிறது.ஜி.குப்புசாமியின் மொழியாக்கத்தில் வார்த்தைகள் அற்புதமாக, கச்சிதமாக வந்து விழுகின்றன. எனவே வேற்று மொழி நாவலை வாசிக்கிறோம் என்ற உணர்வே நமக்குள் எழுவதில்லை. நாவலினூடே பல்வேறு வடிவ உத்திகளாக கவிதைகள், பத்திரிக்கைச் செய்திகள் ஆகியன இடம் பெறுவதோடு, கதாபாத்திரங்கள் சொல்லும் கதைகளும் இடம் பெறுகின்றன. கல்வியியல் பயிற்சி இயக்குனர் சுடப்படும்போது அவருக்கும், சுட்டவனுக்கும் இடையே நடக்கும் உரையாடல்களை, இயக்குனரின் சட்டைப் பையில் இருந்த கருவியால் பதிவுசெய்த, ஒலிநாடாவிலிருந்து நாம் அறிந்துகொள்வதாக வரும் அத்தியாயத்தின் உத்தியை அவற்றில் உச்சமாக சொல்ல முடியும். நாவல் பல்வேறு வகைகளிலும் நம்மைக் கவர்ந்து ஈர்க்கிறது. வாசிப்பில் வித்தியாசத்தையும் புதுமையையும் எதிர்பார்ப்பவர்கள் நிச்சயமாக ஓரானின் வசீகரமான பனியில் நனைவதை மிகவும் விரும்புவார்கள். பனியை வாசித்து முடித்ததும் அது நமக்குப் புதுமையான ஓர் அனுபவமாக இருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

பனியின் வெவ்வேறு அம்சங்களான பனித்திவலை, பனிச்சிதறல், பனிப்பொழிவு, பனிச்சீவல்கள் போன்ற வார்த்தைகள் நாவலின் பெரும்பான்மைப் பக்கங்களில் நிறைந்து, பனியை நாவலின் ஒரு கதாபாத்திரமாகவே வாசிப்பில் தொடர்ந்து வரும்படி செய்திருக்கிறார் ஓரான் பாமுக். எனவே அது மறைமுகமாக நாவலின் பின்னின்று, இப்பிரபஞ்ச இருப்பின் வெளிப்பாடாக, அனைத்தையும் அவதானிக்கும் மௌன சாட்சியாக, குறியீடாக இயங்குகிறது. இபெக்கின் தங்கை கடிஃபே காவைச் சந்திக்கும் போது, “பனிப்பொழிவைப் பார்க்கும் போது வாழ்க்கை எவ்வளவு அழகானது, எவ்வளவு குறுகியது என்பதையும், எவ்வளவுதான் பகைமை இருந்தாலும் மக்களிடையே பல விஷயங்கள் ஒன்றாக, பொதுவாக இருக்கின்றன என்பதையும் உணரமுடியும். படைப்பியக்கத்தின் அழிவற்ற தன்மையையும் மகத்துவத்தையும் பார்க்கும் போது அவர்கள் வாழ்ந்த உலகம் குறுகலானது. அதனால்தான் பனி மக்களை ஒன்றுகூட்டியது. மனிதனின் வெறுப்புகள், பொறாமை, கோபம் எல்லாவற்றின் மீதும் பனி ஒரு போர்வையை இழுத்து மூடி அனைவரையும் நெருக்கமாக உணரச் செய்கிறது” என்று சொல்லும் போது பனியைப் பற்றி மட்டுமல்லாது, இயற்கையின் அனைத்து வியாபகங்களையும் அவ்வாறே உணர முடிகிறது.

கா இஸ்தான்புல் நகரத்திலிருந்து துருக்கியின் எல்லைப்புற நகரமான கார்ஸ் நகரத்திற்கு, நகராட்சித் தேர்தல்கள் பற்றியும் தற்கொலை செய்துகொள்ளும் பெண்களைப் பற்றியும் எழுதுவதற்காக வருகிறான். அங்கே இபெக்கைச் சந்திக்கிறான். அவளுக்கும் அவள் கணவனுக்கும் விவாகரத்தாகிவிட்ட நிலையில், தன் மனதில் அவள் மீது காதல் அரும்புவதை உணர்கிறான். இருவரும் உணவு விடுதி ஒன்றில் சந்திக்கும்போது கல்வியியல் பயிற்சி இயக்குனரை ஒருவன் துப்பாக்கியால் சுடுகிறான். முக்காடிட்ட பெண்களை கல்லூரி வகுப்பறைக்குள் அனுமதிக்காததே அதற்குக் காரணம் என்கிறாள் இபெக். அதன் பிறகு கா இபெக்கின் முன்னால் கணவன் முக்தாரைச் சந்திக்கிறான். அவன் தன் பழைய கதையைச் சொல்வதோடு, தேர்தலில் தான் மேயர் பதவிக்கு போட்டியிடுவதாகச் சொல்கிறான். நடந்த கொலை முயற்சியை விசாரிக்க அங்கே வரும் போலீஸ் இருவரையும் கூட்டிச் செல்கிறது. காவை விசாரித்து அனுப்பிவிட, முக்தாரை சிறையில் அடைக்கிறார்கள். அங்கிருந்து திரும்பும் கா தலைமறைவாக இருக்கும் இஸ்லாமிய பழமைவாதியான நீலம் என்ற தீவிரவாதியைச் சந்திக்கிறான். தற்கொலை செய்துகொள்ளும் பெண்களைப் பற்றிய செய்திகளைப் பத்திரிக்கையில் எழுதக்கூடாது என்று அவன் காவிடம் சொல்கிறான்.

நீலத்தைச் சந்தித்துத் திரும்பும் வேளையில் காவின் மனதில் கவிதை உதயமாகிறது. அதை எழுதும் உத்வேகத்தோடு அவன் தன் அறைக்கு விரைகிறான். அவன் மனம் பெறும் அகத்தூண்டுதலை ஓரான் பாமுக் அற்புதமான வரிகளில் எழுதியிருக்கிறார். “நான்கு வருடங்கள் கழித்து, முதல்முறையாக அவனை நோக்கி கவிதை ஒன்று வந்துகொண்டிருந்தது. அதன் வார்த்தைகள் அவன் செவியில் இன்னும் விழவில்லையென்றாலும் அது ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டது என்பது அவனுக்குத் தெரிந்திருந்தது. அது ஏதோ ஒரு ரகசிய இடத்தில் ஒளிந்திருந்தாலும் அதன் சக்தியும் அதன் விதியின் அழகும் பிரகாசித்துக் கொண்டிருந்தது. காவின் இதயம் துள்ளியது” என்பதை வாசிக்கும் போது, நாம் எழுத நினைத்த பலவற்றின் வார்த்தைகளும் வரிகளும் நம் மனதில் உருவாகும் விந்தைக் கணத்தை நினைவு கொள்கிறோம்.

கவிதைகளை எழுதி முடித்த கையோடு இபெக், கடிஃபே இருவரின் தந்தை துர்குத் பேயைச் சந்திக்கிறான் கா. கவிதைகளை எப்படி எழுதுகிறீர்கள்? என்ற தலைப்பில் அமைந்த இந்த அத்தியாயத்தின் சூழலும் உரையாடல்களும் அற்புதமாக அமைந்து மனவெழுச்சியைத் தருகிறது. அதைத் தொடர்ந்து கா தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பில் கவிதை வாசிப்பதும், அதன் பிறகு அரங்ககேறும் நாடகமும், நாடகத்தின் இறுதியில் நடக்கும் கூச்சலும், குழப்பமும், கலகமும் விறுவிறுப்பாக அமைந்துள்ளது. “என் தந்தையர் தேசம் அல்லது எனது கருப்பு முக்காடு” என்ற அந்த நாடகம் ஒருவகையில் இந்நாவலின் மையத்தை புலப்படுத்துவதோடு, துருக்கியின் வரலாற்றுப் பக்கங்களைத் திறந்து காட்டுவதாகவும் அமைந்திருக்கிறது. நாடகத்தின் ஐந்து காட்சிகளின் சுருக்கம் ஓரான் பாமுக்கின் வரிகளில்:

  • கன்னங்கரேலென்ற முக்காடு அணிந்த பெண் ஒருத்தி தெருவில் நடந்து செல்கிறாள். தனக்குள்ளே பேசியபடி சிந்தனை வயப்பட்டு இருக்கிறாள். அவளை எதுவோ தொந்தரவு செய்துகொண்டிருக்கிறது.
  • அந்தப் பெண் அணிந்திருக்கும் முக்காட்டை கழற்றிவிட்டு தனது விடுதலையை அறிவிக்கிறாள். இப்போது அவள் முக்காடு இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்கிறாள்.
  • அந்தப் பெண்ணின் குடும்பமும் அவளுடைய வருங்காலக் கணவனும் அவள் சொந்தங்களும் தாடி வைத்த முஸ்லிம்கள் பலரும் அவள் முக்காட்டை கழற்றி எடுத்ததை, அவளது சுதந்திரத்தை எதிர்க்கிறார்கள். அவள் மீண்டும் முக்காடு அணிய வேண்டுமென்று வற்புறுத்துகிறார்கள். ஒரு நியாயமான கோபத்தில் அவள் தனது முக்காட்டை தீயிட்டு கொளுத்துகிறாள்.
  • நேர்த்தியாக தாடி வளர்த்திருக்கும், தொழுகை மணிச்சரத்தை வைத்திருக்கும் மதவெறியர்கள் இந்தச் சுதந்திர நடவடிக்கையால் வெறிகொண்டு அவளைக் கொல்வதற்காக அவள் தலைமுடியைப் பிடித்து இழுத்துச் செல்கின்றனர்...
  • குடியரசின் வீரம் செறிந்த இளம் ராணுவ வீரர்கள் காட்சியில் பிரவேசித்து அவளைக் காப்பாற்றுகின்றனர்.

நாடகம் பதற்றமான சூழலை சிருஷ்டிக்க, சுடப்பட்ட கல்வியியல் பயிற்சி இயக்குனர் இறந்துவிட்டதாகச் செய்தி வருகிறது; கலவரம் வெடிக்கிறது. ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்த, அந்த மாலைப் பொழுது இரத்தத்தில் நனைகிறது. நாவலின் இந்தப் பகுதிகள் திரைக்காட்சிக்கு நிகரான சித்தரிப்புடன் உயிர்த்துடிப்போடு தத்ரூபமாக நம் மனக்கண்ணில் விரிகிறது. இந்நிகழ்வு புரட்சியின் தொடக்கமாக அமைகிறது. கார்ஸ் நகரம் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வருகிறது. நகரமெங்கும் துப்பாக்கிச் சூடும், கைது நடவடிக்கைகளும் நடக்கின்றன. ஊரடங்கு உத்தரவால் மக்களனைவரும் வீடுகளில் முடங்கிக் கிடக்கிறார்கள். இயக்குனரைச் சுட்டவனை அடையாளம் காண்பதற்காக ராணுவத்தினர் காவை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்கின்றனர். 

நாடகத்தில் நடித்த, ராணுவத்தில் பணியாற்றும், புரட்சியாளன் என்ற படிமம் கொண்ட, சுனய் ஸயிம் என்பவனைச் சந்திக்கிறான் கா. அவன் தன் வாழ்க்கையைச் சொல்லும் பக்கங்களிலும், அவனது உரையாடல்களிலிருந்தும், புரட்சி, அதிகாரம், கடவுள், மதம், அரசியல், சமூகம் என்ற புறச்சக்திகள் மனித வாழ்க்கையை எங்ஙனம் கட்டுப்படுத்துகிறது என்பதை அறியும் போது, வாழ்க்கையில் நாம் மேற்கொள்ளும் பிரயத்தனங்களுக்கு என்ன அர்த்தம் என்ற கேள்வி எழுகிறது. உரையாடலில் அவன் சொல்லும், “இறையறிவு என்பது வாழ்க்கையை எப்படி வாழ்கிறீர்களென்று தெரிந்துகொள்வதுதான் மெய்யறிவாலோ தருக்கத்தாலோ புரிந்துகொள்ளப்படுவதல்ல” எனும் கருத்து முக்கியமானதும் இன்றியமையாததுமாகும்.

அத்தியாயம் 29, 339-ம் பக்கத்தில் கா சுடப்பட்டு இறந்துவிட்டதை நாம் அறிகிறோம். அவன் இறப்பதற்கு முன்பு தன் நண்பனுக்கு எழுதிய கடிதம் ஒன்றில் தன்னுடைய கவிதைகளை ஒரு தொகுப்பாக ‘பனி’ என்ற பெயரில் வெளியிடப்போவதாக எழுதுகிறான். எனவே அவனது நண்பன், கா கார்ஸில் இருந்தபோது அவ்வப்போது கவிதைகள் எழுதிவந்த பச்சைநிறக் குறிப்பேட்டைத் தேடி, காவின் ஃபிராங்ஃபர்ட் குடியிருப்புக்கு வருகிறான். அவன் சுடப்பட்ட இடத்தையும், அவன் கடைசி எட்டு வருடங்கள் தங்கியிருந்த குடியிருப்பையும் பார்வையிடும் நண்பன் கண்கள் கண்ணீரால் பனிக்கின்றன. அங்கிருந்த காவின் உடைமைகள் அனைத்தையும் தன் இருப்பிடத்திற்கு எடுத்துவந்த போதும், எங்கேயும் அந்தக் குறிப்பேடு கிடைக்காமல் அவன் ஏமாற்றமடைகிறான். நாவலின் இந்தப் பகுதிகள், குறிப்பாக காவின் அறையில் குறிப்பேட்டைப் தேடும்போது கா பயன்படுத்திய பொருட்கள், புத்தகங்களை அவனது நண்பனோடு சேர்ந்து நாமும் பார்ப்பதான, தேடுவதான ஒரு விசித்திர உணர்வு நமக்குள் எழுவதைத் தவிர்க்க முடியாதவாறு நாவலின் இப்பகுதியின் சித்தரிப்புகள் அற்புதமாக அமைந்திருக்கின்றன.

சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட முக்தார் காவிடம் ‘பார்டர் சிட்டி கெஜட்’டின் பத்திரிக்கைச் செய்தி ஒன்றைக் காட்டுகிறான். அதில் அவன் தொலைகாட்சியில் கவிதை வாசித்தது பற்றிய விமர்சனமும், அவன் ஒரு கடவுள் மறுப்பாளன் என்றும் சித்தரிக்கபட்டிருக்கிறது. ஃபிராங்ஃபர்ட்டில் தான் இபெக்குடன் சந்தோஷமாக வாழப்போகும் தறுவாயில் சுடப்பட்டு இறந்துபோகக்கூடுமோ என்ற எண்ணம் அவனை பயமுறுத்துகிறது. எல்லாம் சுமுகமாக முடிய ராணுவம், இஸ்லாமிஸ்டுகள், காவல்துறை, பத்திரிக்கை இவற்றிடையே தூதனாக அல்லாடுகிறான். காவைப் பற்றி மேலதிக விபரங்கள் தெரிந்துகொள்ளவும் அவனது பச்சைநிறக் குறிப்பேட்டைத் தேடியும் கார்ஸ் நகரத்திற்கு வரும் நண்பன் கா சந்தித்த, பார்த்த இடங்களையும் மனிதர்களையும் பார்க்கிறான். நாவலின் இந்த இறுதிப் பகுதிகள் ஒரு திரைப்படத்தின் காட்சிக்கு நிகரான பரபரப்பையும் விறுவிறுப்பையும் தமக்குள் பொதிந்திருக்கின்றன. 

மதம், அரசியல், மானுடம் இவை மூன்றும் முக்கோணத்தின் மூன்று கோணங்களாக அமைந்து ஒரு சமூகத்தை எவ்வாறு நிர்மாணிக்கிறது என்பது பற்றிய புரிதலே ஓரான் பாமுக்கின் பனி. மதம், அரசியல், இரண்டிலுமே வெவ்வேறு கருத்துக்களும், புரிதல்களும் கொண்டவர்கள் இருப்பது இயல்புதான். ஆனால் அவைகள் வெறும் கருத்துக்களாக இருக்கும்பட்சத்தில் யாருக்கும் எந்தச் சிக்கல்களும் இல்லை. அதுவே பிறரது கருத்தில், செயலில் தலையீடாக அமையும்போது பிரச்சினை ஆரம்பிக்கிறது. அவைகளே அவர்களைக் குழுக்களாக ஒருங்கிணைக்கவும், மற்றவர்க்கு எதிராகப் போராடவும் வைக்கின்றன. மனிதர்கள் அனைவரும், மனிதர்களின் நன்மைக்காகவே தங்களுக்குள் போராட்டத்தை, கலகத்தை, புரட்சியை நிகழ்த்துகிறார்கள் என்பது முரண்நகை. ஆகவேதான், அவர்களில் யாரையும் எவரையும் குற்றம் குறை சொல்லாது, எல்லாத் தரப்புக்கும் பொதுவான ஒரு பார்வையை தன் படைப்புக்குத் தந்திருக்கிறார் ஆசிரியர். அவர் எந்தப் பக்கத்தையும், நியாயத்தையும் சரி அல்லது தவறு என்று தீர்ப்பு சொல்லவில்லை. மாறாக மனிதர்கள் தங்களைத் தாங்களே உணர்ந்து புரிந்துகொள்ளுமாறு செய்திருக்கிறார். ‘பனி’ யாருக்கும் எவருக்கும் பாரபட்சம் காட்டாதது; எல்லோருக்கும் பொதுவானது.

(மறுபிரசுரம். முதற்பிரசுரம் நவம்பர் 10, 2014)

Related Posts Plugin for WordPress, Blogger...