July 1, 2016

தி.ஜானகிராமனின் 'கங்கா ஸ்நானம்'

தி.ஜானகிராமனின் கங்கா ஸ்நானம் ஓர் அற்புதமான சிறுகதை. இந்தக் கதையை அவ்வப்போது பலமுறை வாசித்திருக்கிறேன். அதைப் பற்றி இப்படி இப்படி, இன்ன இன்ன எழுதவேண்டும் என்றுகூட யோசித்து வைத்திருந்தேன். ஆனால் இதுவரை எப்படி எழுதாமல் விட்டேன் என்றுதான் தெரியவில்லை! இன்றுகூட எதேச்சையாகத்தான் கங்கா ஸ்நானம் என்ற சொல் உள்ளத்தில் திரும்பத் திரும்ப ஓடியது. அந்தச் சொல்லைத் தொடர்ந்து தி.ஜா. நினைவுக்கு வர, எழுத ஆரம்பித்துவிட்டேன்.


இந்தக் கதையை தற்போது வாசித்தபோது உடனடியாக மனதில் எழுந்த எண்ணம், “He was such a wonderful craftsman" என்பதுதான். இந்தக் கதையை முன்னர் வாசித்தபோதும் மனதில் இதே எண்ணம்தான் எழுந்தது. அவர் கதைகளை திரும்ப வாசிக்கையில், முந்தைய வாசிப்பின் வியப்பும், கதையின் மீதான விமர்சனமும், அடுத்தடுத்த வாசிப்புகளில் மேலும் மேலும் மேம்படுகின்றனவே அல்லாமல் ஒருபோதும் குறைவு படுவதில்லை. ஆக, அவருடைய கதைகள் என்றென்றும் எப்போதைக்கும் பூரணத்துவத்துடன் மிளிர்பவை. சிற்பியின் இலாவகத்துடன் கதையைச் செதுக்கும் அவரின் எழுத்தாற்றால் எப்போதும் வியந்து போற்றுதற்குரியது; நாளும் நினைந்து ரசிப்பதற்குரியது.

இந்த இரண்டாவது பத்தியை எழுதி முடித்த வேளையில் ஜெயமோகனின் நதி சிறுகதை நினைவில் எழ, அதை எடுத்து வாசித்தேன். இரண்டு கதைகளுக்கும் உள்ள ஒற்றுமை என்னை வியப்பில் ஆழ்த்தியது. கதையின் அமைப்பும், கதையின் சில வாக்கியங்கள் வெளிப்பட்டிருக்கும் தன்மையும் மிகவும் ஒத்துப்போக, மனவெழுச்சி ஏற்பட்டது. அதைவிட முக்கியமானது இரண்டு கதைகளையும் ஒருசேர வாசித்து முடித்ததும் நம் அகத்தே எழுகின்ற உணர்வுகள் ஒரே மாதிரியாக இருப்பது. கங்கா ஸ்நானம் தி.ஜாவின் எத்தனையாவது கதை என்று தெரியவில்லை ஆனால் நதி ஜெயமோகனின் முதல் கதை! இந்த ஒற்றுமைகளை சுட்டிக் காட்டுவது, நான் பருகிய இலக்கிய இன்பத்தை மற்றவர்களும் சுவைக்கவேண்டும் என்பதற்காகத்தான்.

இரண்டு கதைகளுமே நதியில் ஆரம்பித்து நதியில் முடிகிறது. அதற்கிடையே கதை சொல்லப்படுகிறது. “கங்கா நதி சுழித்து ஓடுவதைப் பார்த்துக்கொண்டு நின்றார் சின்னசாமி” என்று தி.ஜா கதையைத் தொடங்க, “ஆறு, பனியில் நனைந்துபோய்க் கிடந்தது” என கதையை ஆரம்பிக்கிறார் ஜெயமோகன். “நீருக்கும் ஊருக்குமாக அலைந்தது நினைவு. காசி, கங்கை என்ற பிரக்ஞை இல்லை அவருக்கு” என சின்னசாமியின் நினைவுகளின் மூலமாக அவரது பிரச்சினையை சொல்ல முற்படுகிறார் தி.ஜா. “மனமும் உடலும் அறிவும் குளிரில் உறைந்து செயலற்றுப் போயிருந்ததுபோலத் தோன்றியது” என்பதாக கதையை முன்னெடுக்கிறார் ஜெயமோகன். அகவுலகிலிருந்து திரும்பி புறவுலகைக் காட்சிப்படுத்தும் போது, “ஆற்றின் நீர்ப்பரப்பில் ஒரு வாழை மட்டை மிதந்துபோனது” என்பதாக ஜெயமோகன் காட்சிப்படுத்த, “லடக் லடக்கென்று ஒரு படகு ஓசையிட்டுக் கொண்டே கடந்து போயிற்று” என்கிறார் தி.ஜா.

தனது கதையின் முடிவில், “திரும்பிப் பார்க்கவேண்டாம். திரும்பிப் பார்த்தவன் வாழ்ந்ததில்லை!” என்று சொல்லி, “எதுவும் நடக்காததுபோல நதி ஓடிக்கொண்டிருந்தது, மௌனமாக” என கதையை முடிக்கிறார் ஜெயமோகன். தி.ஜாவோ, சின்னசாமியின் மனைவி, “அவரைப் பார்த்து பழசெல்லாம் கிளற வாண்டாம். இத்தனை நாழி வந்திருந்தார்னா 'உன் பாவத்துக்கும் முழுக்குப் போட்டுட்டேண்டா'ன்னு நினைச்சுண்டு சாதாரணமாப் பேசுங்கள்” என்று சொல்வதாக கதையை முடிக்கிறார். இரண்டு கதைகளும் முடியும்போது, ஜெயமோகன் கதையில் மனிதன் இறந்துபோக, தி.ஜா. கதையில் மனிதம் இறந்துபோகிறது. இருவரும் கதையைக் கட்டமைத்திருக்கும் விதத்தில் இருக்கும் மிகப்பெரிய வேறுபாடு எதிர்பார்ப்பு. கதை தொடங்குவதிலிருந்து முடியும் வரையிலும் நம்முள் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி அதை கடைசிவரையிலும் தக்கவைக்கிறார் தி.ஜா. அவர் காலகட்டத்தில் அனைத்து எழுத்தாளர்களுமே சிறுகதைகளில் பெரும்பாலும் இத்தகைய போக்கையே கையாண்டார்கள் என்பதைக் காணலாம்.

“சிறுகதை எழுதுவது எப்படி?” என்ற தன்னுடைய கட்டுரையில் தி.ஜா, “சிறுகதையில் வரும் கதையோ நிகழ்ச்சியோ ஒரு ஷணத்திலோ, நிமிஷத்திலோ, ஒரு நாளிலோ, பல வருடங்களிலோ நடக்கக்கூடியதாக இருக்கலாம். காலையில் தொடங்கி இரவிலோ, மறுநாள் கலையிலோ அல்லது அந்த மாதிரி ஒரு குறுகிய காலத்திலோ முடித்துவிட வேண்டும் என்று அவசியமில்லை. சொல்லப்பட வேண்டிய பொருளின் ஒருமைதான் முக்கியமானது. எட்டு நாளில் நடந்த சங்கதியை முதல் நாளிலிருந்து வரிசையாகச் சொல்லிக்கொண்டு போகலாம். இரண்டாவது, மூன்றாவது, நாலாவது நாளிலிருந்தோ அல்லது கடைசிக் கணத்திலிருந்தோ ஆரம்பித்து, பின் பார்வையாகப் பார்த்துச் சொல்லிக்கொண்டு போகலாம். நடந்தது, நடக்கப்போவது இரண்டுக்கும் இடையே ஒரு வசதியான காலகட்டத்தில் நின்றுகொண்டு நிகழ்ச்சியைச் சித்தரித்துக்கொண்டு போகலாம். எப்படிச் சொன்னாலும், ஒரு பிரச்சினை, ஒரு பொருள், ஓர் உணர்வு, ஒரு கருத்துதான் ‘ஓங்கியிருக்கிறது’ என்ற நிலைதான் சிறுகதைக்கு உயிர்” என்கிறார். இது முற்றுமாக இந்த இரு கதைகளுக்கும் பொருந்திப் போகிறது.

சின்னசாமியின் அக்கா, அவள் இறக்கும் தறுவாயில் அவரிடம் நான்காயிரம் ரூபாய் கொடுத்து, தனது கணவன் துரையப்பாவிடம் வாங்கிய மூவாயிரம் கடனை அடைத்துவிட்டு, மீதி ஆயிரத்தில் சின்னசாமியும் அவன் மனைவியும் காசிக்கு சென்றுவர வேண்டும் என்று கேட்டுக்கொண்டு உயிரை விடுகிறாள். சின்னசாமியும் அந்தப் பணத்தை வட்டியும் முதலுமாக துரையப்பாவிடம் கொடுக்கிறார். அப்போது இருவருக்கும் பின்வரும் சம்பாஷணை நடக்கிறது:
“எங்கே இப்படி இவ்வளவு தூரம்?”
“கணக்கு தீர்க்கலாம்னு வந்தேன், மாமா.”
“ஆமாம், பிரமாதக் கணக்கு.”
“முத நாளைக்குக் கூப்பிட்டு கணக்கெல்லாம் பார்க்கச் சொன்னா அக்கா. கடனோட போறமேன்னு அவளுக்குக் குறைதான்.”
“த்ஸ… கடன்! பிரமாதம்..! பிரமாதக் கடன் பாரு!”
“மூவாயிரத்து நாற்பத்தேழு ஆயிருந்தது அப்ப…”
“ம்.”
“அப்புறம் ஒரு மாசம் ஆயிருக்கே.”
“ஆமாண்டா, ஒரு மாச வட்டியிலே இன்னொரு கிராமம் வாங்கப் போறேன். அசடு!”
“பார்க்கலாமா இப்ப. தயாராத்தான் வந்திருக்கேன்.”
“பணம் கொண்டு வந்திருக்கியா என்ன?”
“ஜாடா கொண்டு வந்திருக்கேன் மாமா.”
“இப்ப என்னடா? சிரமமாயிருக்கு. களத்திலே காலமே புடிச்சி நின்னிருக்கேன். பசிக்கிறது. தூக்கம் தூக்கமா வேற வரது. காலமே வரவு வச்சிண்டாப் போறது…”
“சரி.”
“இதுக்காகவா வந்தே இவ்வளவு தூரம்? ரயில்லியும் பஸ்லியும், வெயில்லியும்!”
“வரத்தானே வேணும்?”
“போடா, அசடு! ஒரு லெட்டர் போட்டா நான் வந்து வாங்கிண்டு போகமாட்டேனா… நன்னா அலைஞ்சே போ!”
“அழகாயிருக்கே. நான் வந்து கொடுக்கிறது மரியாதையா?”
“சரிடா சரி, காலமே வரவு வச்சிக்கலாம். போ.”
“அப்ப பணத்தை வாங்கி வெச்சுக்குங்கோ. காலமே வரவு வச்சுக்கலாம். நானே இங்கேதான் படுத்துக்கப் போறேன். காத்து கொட்றது இங்கே.”
“இப்ப என்னைக் கிளப்பணும் உனக்கு.. ம்.. சரி… கொடு.”
துரையப்பா அந்த ஊரில் பெரிய மனிதர். அவரைப் பற்றி “யார் எப்போது போனாலும் துரையப்பா வீட்டில் சாப்பாடு கிடைக்கும். ‘அன்னதாதா அன்னதாதா’ என்று அவர் பெயர் ஜில்லா முழுவதும், சுற்றம் முழுவதும் முழங்கிக் கொண்டிருந்தது” என்று குறிப்பிடுகிறார் தி.ஜா. மேற்கண்ட உரையாடலை படிக்கும் நமக்கும் துரையப்பாவைப் பற்றி பெரியமனிதர் என்ற எண்ணம் ஏற்படுகிறது. அடுத்த நாள், இருவருக்குமிடையே சம்பாஷணை இப்படி நிகழ்கிறது:
“வரவு வச்சுப்பிடலாமா?”
“ம்.” என்றார் சின்னசாமி.
“பணத்தை எடு.”
“நீங்கதானே வச்சிருக்கேள்?” என்று அவர் எங்கோ நினைத்துக்கொண்டு பேசுகிறதைப் பார்த்துப் புன்னகை புரிந்தார் சின்னசாமி.
“நான் வச்சிருக்கேனா?”
“ஆமாம், மாமா. ராத்திரி வாங்கி வச்சேளே?”
“என்ன வாங்கி வச்சேன்?”
“என்ன மாமா இது? மூவாயிரத்து நாற்பத்தேழு கொடுத்தேனே. சேப்புக் கடுதாசியிலே, கன கடுதாசியிலே பொட்டணமா கட்டிருந்துதே?”
“என்னடா சின்னசாமி விளையாடறே, பச்சைக் குழந்தை மாதிரி!”
“விளையாடறேனா? என்ன மாமா இது?“
“மாமாவாவது மருமானாவது? எடுடா, நாழியாச்சு! நான் களத்துக்குப் போகணும்.”
“பீரோவைத் திறந்து பாருங்கோ, மாமா.”
“என்னடா இது, பணம் கொண்டு வரலையா நீ?”
சின்னசாமிக்கு வயிற்றைக் கலக்கிற்று. மாமா சும்மாவாவது விளையாடுகிறார் என்ற நினைவு போகவில்லை.
“எடுத்திண்டு வாங்கோ, மாமா.”
“என்னடா, எடுத்திண்டு வாங்கோ, எடுத்திண்டு வாங்கோங்கிறியே. விளையாட்டு வேடிக்கைக்கா இது நேரம்?”
“மாமா, நிஜமாவா சொல்லறேள்?”
“சரி. நான் எழுந்து போகட்டுமா? எனக்கு வேலை இருக்கு.”
“மாமா… மாமா!”
“நல்ல மாமா, போ!”
“சேப்புப் பொட்டணம், மாமா…”
சின்னசாமிக்கு பகீர் என்றது. வயிறு கல் விழுந்தாற்போல் கனத்தது.
“சரிடா, ரயில்லே வந்தியோ, பஸ்ஸிலே வந்தியோ?”
“பஸ்ஸிலே!”
“எங்க வச்சுண்டிருந்தே?”
“பையிலே… ஜாக்ரதையா வச்சுண்டு உங்ககிட்டே கொடுத்தேனே. காலமே வரவு வச்சுக்கலாம்னு சொல்லி நீங்க கூட ‘என்னைக் கிளப்பனும் உனக்கு’ன்னு சொல்லிண்டே வாங்கி உள்ளே கொண்டு பூட்டிவச்சேளே?”
“அடப்பாவி! நெஜம் மாதிரி சொல்றயே!” என்றார் துரையப்பா. பேயறைந்தாற் போலிருந்தது அவர் முகம். “இங்க வந்து பார்டா பாரு… உடம்பெல்லாம் கூசறதே எனக்கு…” என்று உள்ளே போய் பீரோவைத் திறந்து போட்டார். இரும்புப் பெட்டியைத் திறந்து போட்டார். பெட்டிகளைத் திறந்து போட்டார். “பார்றா, பாரு… உன் கண்ணாலெ பாரு.”
கதையைப் படித்துவரும்போது, பெரிய மனிதத் தோரணையாகத் தெரியும் துரையப்பாவின் உரையாடல், இந்த கட்டத்தில், ஏமாற்றுக்காரனின் பசப்பு வார்த்தைகள், வாய் சாதூர்யம் என்பதாகத் தோற்றம்கொண்டு விடுகிறது. முந்தைய உரையாடல் அவ்வாறெனில், இந்த உரையாடலில் துரையப்பா சொல்லும் வார்த்தைகள் சின்னசாமி சொல்லவேண்டியவை. ஏமாந்தவன் சொல்லும் வார்த்தைகளை ஏமாற்றியவன் சொல்கிறான். இது தி.ஜா. எழுத்தின் சாகசம். கதைகளிலும், நாவல்களிலும் அவர் உரையாடல்களைக் கட்டமைக்கும் விதம் அபாரமானது. அது இந்தக் கதையில் உச்சமாக வெளிப்படுகிறது.

ஏமாற்றப்பட்டதையும், தான் சொல்வதை யாரும் நம்புவதாக இல்லை என்பதையும் அறிகிறார் சின்னசாமி. அதன் பிறகு துரையப்பா கோர்ட்டுக்கு இழுக்க, மீண்டும் வட்டியோடு கடனை அடைக்கிறார் சின்னசாமி. சாகும் தறுவாயில் கடனை அடைக்கவேண்டும் என்று நினைத்த சின்னசாமியின் அக்கா எங்கே? கொடுத்த பணத்தை ஏமாற்றி மீண்டும் பணத்தை பிடுங்கிக்கொண்ட துரையப்பா எங்கே? அப்படிப்பட்ட துரையப்பாதான் காசிக்கு வந்திருப்பதாக அறிகிறார் சின்னசாமி. “இவன் முகத்திலா விழிக்கவேண்டும்?… இது யார் விஷமம்…?” என்று கலங்குகிறார் சின்னசாமி.

மனித வாழ்க்கையில் பிறப்பு-இறப்பு, சந்தோஷம்-துக்கம் என்று எல்லாமே இருக்கத்தான் செய்யும். சந்தோஷத்தில் குதிக்காமலும், துக்கத்தில் சோராமலும் வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். எல்லாமே தன்னிடத்தில் கலந்தபோதும் நதி ஓடிக்கொண்டேதான் இருக்கிறது; இருக்கும். வாழ்க்கையில் நாமும் நதிபோல் போய்க்கொண்டே இருக்கத்தான் வேண்டும்; தேங்கி குட்டையாக நின்றுவிடக்கூடாது. எல்லாம் சரிதான், ஏமாற்றியவன்தான் காசிக்கு வரவேண்டும், ஏமாற்றப்பட்டவனும் வரவேண்டிய அவசியம் என்ன? சின்னசாமி காசிக்கு வருவது புண்ணியத்தை ஈட்ட. துரையப்பா வருவது பாவத்தைத் தொலைக்க. இரண்டுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் இருக்கிறது. இருந்தும் இருவரும் முங்குவது ஒரே கங்கை நதியில்தான்!

Nathi
Related Posts Plugin for WordPress, Blogger...