June 17, 2016

க.நா.சுவின் இரு நாவல்கள்: எண்ணங்களின் சுழலும் வாழ்க்கை வெளியும்

அசுரகணம் -எண்ணங்களின் சுழல்:

நாவல் என்ற கலை வடிவத்தின் மீது தீராத ஆசை கொண்டவர் க.நா.சு. தமிழின் முக்கியமான நாவல்களை அனைவருக்கும் அடையாளப்படுத்தியவர் இவரே. உலக இலக்கியத்திலிருந்தும் பல்வேறு நாவல்களை தமிழுக்குக் கொண்டுவந்த பெருமை இவருக்கே உரியது. நாவல்களைப் பலவிதங்களில், பல்வேறு வடிவங்களில் எழுதிப் பரீட்சார்த்தமான முயற்சிகளைச் செய்தவர். இவர் நாவல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். அவற்றில் ஒரு நாள், பொய்த்தேவு இரண்டும் தமிழின் முக்கியமான நாவல்கள் எனலாம். அவரின் பல நாவல்களில் இந்த அசுரகணம் குறிப்பிடத்தகுந்த நாவல்.

பி.ஏ. இரண்டாம் வருடம் படிக்கும் ராமன் என்ற 19 வயது இளைஞன் தன் கதையைச் சொல்வதாக நாவல் ஆரம்பிக்கிறது. உடன் படிக்கும் பலர் அவனை ‘கிராக்கு’, ‘பைத்தியம்’ என்று சொல்லும்படியாக அவனது நடவடிக்கைகள் இருக்கின்றன. அவனே அதை மனப்பூர்வமாக ஒப்புக்கொள்ளவும் செய்கிறான். இருந்தும் படிப்பில் முதலிடம் வகிப்பவன் அவன்தான். கதைப்போக்கையும், அதன் வெளி நிகழ்வுகளையும் தவிர்த்து அவன் மனவோட்டத்தின் வெளிப்பாடாகவே நாவல் விரிகிறது. அவன் மனதில் விரியும் சிந்தனைகளின் வழியாகவே அவனது கதையும் சொல்லப்படுகிறது.

எப்போதும் அவன் மூளை எண்ணங்களின் கூட்டத்தில் சிக்கிக்கொண்டு ஸ்தம்பித்து நிற்பதால், நிகழ் கால வாழ்வில் எத்தனை எத்தனையோ விசயங்களை அவன் கவனிக்கத் தவறிவிடுவது நிகழ்கிறது. தான் இவ்வாறு அசாதாரணமானவனாக இருப்பதையும், சிந்தனைகள் இன்றி இருப்பது தனக்குச் சாத்தியமல்ல என்பதையும் அவன் உணர்ந்திருந்தாலும் அதிலிருந்து வெளிவர சக்தியற்றவனாக இருக்கிறான். இருந்தும் தன் எண்ணங்களின் ஓட்டத்தினூடாகவே தனக்கும் பிறருக்குமான உறவின் தன்மைகள் குறித்து ஆராய்கிறான். இந்த எண்ணங்களின் அலைந்து திரியும் போக்கினாலேயே அவன் ஒரு சிறிய செயலைக்கூட செய்வதற்குப் பொறுப்பற்றவனாக இருக்கிறான். அவனை மற்றவர்கள் ‘முட்டாள்’ என்று முத்திரை குத்த இதுவும் ஒரு காரணமாகிறது.

ஒருநாள் தான் ஏன் இப்படி இருக்கிறோம் என்ற சிந்தனையில் அவன் ஆழ்ந்திருக்கும்போது அவனது அப்பா ஒருவரைப் பார்த்து வரும்படி அவனிடம் சொல்கிறார். அங்கு செல்லும் அவன் அந்த வீட்டில் அழகான பெண்ணொருத்தி இருப்பதைக் காண்கிறான். அவள், “நீங்களா?” என்று ஆச்சர்யத்துடன் கேட்கிறாள். அவனுக்கு அவள் யாரென்றே தெரியாத போது, தன்னை அவள் எப்படித் தெரிந்திருக்க முடியும் என்று அவன் குழம்புகிறான். பிறகு ஒருவாறாக அவள் பெயர் ஹேமா என்பதும் கல்லூரியில் தன்னுடன் படிப்பவள் என்றும் அறிகிறான். இத்தனை நாள் தன் வகுப்பில் படிக்கும் அவளைத் தான் அறியாமல் இருப்பது குறித்து அவன் வியக்கிறான். இருவருக்குமான உரையாடல்கள் சொற்பமான அளவிலேயே நடக்கிறது. ஆனால் அவன் சிந்தனைகளோ கிளைவிட்டுப் படர்ந்து, விரிந்து, எங்கெங்கோ சென்று சேர்கிறது. 

அவனுக்கு ஹேமாவின் மீது காதல் ஏற்படுகிறது. அது உண்மையில் காதல்தானா என்ற சந்தேகமும் அவனுக்குள் இருக்கிறது. அவளைப் பார்க்கவென்றே அவள் வீட்டிற்கு மறுமுறை செல்கிறான். அப்போது அவளது அம்மா அவனிடம், “காதல் என்றால் என்ன?” என்று கேட்கிறாள். அவனோ பதில் சொல்லாதவனாக சிந்தனைகளின் போக்கில் சென்று முட்டி மோதுகிறான். அவளது அம்மா சூர்ப்பணகை என்பதான ஒரு மனச்சித்திரமே அவனுள் எழுகிறது. அவளைத் தன் கரங்களால் கொன்றுவிடவேண்டும் என்ற ஆத்திரமும் அவனுக்கு ஏற்படுகிறது. அப்படியே அவளைக் கொன்றுவிட்டதான ஒரு பிரமையில் காவல் நிலையம் சென்று புகாரும் செய்கிறான். பிறகுதான் அது அவனது மனப்பிரமை என்பதை அறிகிறான்.

இறுதியில் ஹேமாவும் அவனை விரும்புவதாகத் தெரிகிறது. எனவே இருவருக்கும் கல்யாணம் நடக்கிறது. அதற்குப் பிறகு அவளது அம்மா அவனுக்குச் சூர்ப்பணகையாகத் தெரிவது நின்றுபோகிறது. தான் ராமன் என்றால் தன் இருப்பை நியாயப்படுத்த அசுரன் வேண்டுமல்லவா? எனவே அசுரகணங்கள் இந்த உலகத்தில் நாளும் வளர்வதாகவே அவன் நினைக்கிறான்.

இந்நாவலின் வீச்சை நாம் புரிந்துகொள்ள அப்போதைய காலகட்டத்தில் வெளியான நாவல்களின் போக்கை நாம் அறிந்துகொள்வது அவசியம். கதையிலும், விவரணைகளிலுமே அப்போதைய நாவல்கள் கவனம் செலுத்தின. இதுவோ முழுக்க முழுக்க மனதின் ஓட்டங்களைப் பிரதிபலிக்கும் நாவல். புராணப் பாத்திரமான ராமன், இராவணன் தொடங்கி ஃபிராய்ட் முதல் நாயகனின் சிந்தனையில் வந்து நாவலை வளர்த்துச் செல்கிறார்கள். அவனது சிந்தனையின் பின்னல்களில் தொடர்ந்துவரும் எண்ணங்களின் முடிவற்ற போக்குதான் நாவல். நாவல் முழுதும் சிந்தனைகள் தொடர்ச்சியாக சாரை எறும்புகளைப் போல நீண்டுகொண்டே இருக்கிறது. அந்தச் சிந்தனைகளின் சுழலில் சிக்கி நாமும் சுழன்றபடி பயணிப்பதுதான் இந்த நாவல் காட்டும் வாசிப்பின் அனுபவம். அந்தக் காலகட்டத்தில் இந்த நாவல் புதுமையானதாக இருந்திருக்கலாம். ஆனால் இன்று அப்படி நினைக்கக் காரணமில்லை. ஆனால் க.நா.சுவின் இந்த முயற்சி அதற்குப் பிந்தைய நாவல்களின் போக்கில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும்.

இந்நாவலைப் பற்றி சொல்லும் சி.மோகன், “க.நா.சு.நாவல்களில் எனக்கு மிகவும் பிடித்தது அசுரகணம். அசுரகணங்களின் மீது மனித மனம் கொண்டிருக்கும் அலாதியான கவர்ச்சியை அற்புதமாக வசப்படுத்தியிருக்கும் நாவல். இப்படைப்பில் புறநிகழ்வுகள் வெகு சொற்பம். மன நிகழ்வுகளால் கட்டமைக்கப் பட்டிருக்கும் நாவல். அசாதாரணமானவன், விசித்திரமானவன், சிந்தனையாளன் என்றெல்லாம் தன்னைக் கருதிக்கொள்ளும் ஒரு இளைஞனிடம் சுழித்துச் சுழன்றோடும் சுபாவமான எண்ண ஓட்டங்களில் இப்படைப்பு உருப்பெற்றிருக்கிறது. ஒரு நிகழ்வின் அடியாக ஓர் எண்ணம் எழுந்து, அது அதன் எல்லாப் பக்கங்களிலும் விரிந்து, பரவி வியாபிக்கிறது. மனித மனத்தில் எவ்வித பிரயாசைகளுமின்றி ஓயாது அலையடித்துக்கொண்டிருக்கும் எண்ணங்களின் பிரவாகத்தை அகப்படுத்தும் ஆற்றல் கொண்ட ஒரே கலை வடிவம் நாவல். ஒரு சாதனத்தின் தனித்துவமிக்க சிறப்பம்சத்தில் உயிர் கொள்ளும் படைப்புதான் அச்சாதனத்தின் உச்சங்களைத் தொடுகிறது. இவ்வகையில் தமிழின் மிகவும் குறிப்பிடத்தகுந்த நாவல்களில் ஒன்று அசுரகணம்” என்கிறார்.

வாழ்ந்தவர் கெட்டால் -நிலையாமை:

க.நா.சுவின் வாழ்ந்தவர் கெட்டால் நாவல், கதைத் தலைப்பைப் போலவே வாழந்துகெட்ட ஒரு குடும்பத்தின் கதையைச் சொல்லும் நாவல். இதை நாவல் என்பதைவிடக் குறுநாவல் என்பதே பொருந்தும். க.நா.சு. தன் ஆரம்பகால நாவல் முயற்சிகளில் பலவிதமாக நாவல்களை எழுதிப் பார்த்திருக்கிறார். அதில் ஒருவகையான நாவல்தான் இது. இதில் கதைசொல்லியாக க.நா.சுவே வருகிறார் என்றுதான் சொல்லவேண்டும். தன் பால்யகால நண்பன் ரகுவைப்பார்க்க தன் சொந்த ஊரான தஞ்சாவூருக்குச் செல்கிறார் கதையாசிரியர். தான் சிறுவயதில் வளர்ந்து சுற்றித்திரிந்த ஊரைப் பார்க்கவேண்டும் என்று பல நாட்கள் அவருக்கிருந்த ஆவல் இதன் மூலம் நிறைவேறுகிறது. அங்கே சென்றதும், வாழந்துகெட்ட மம்மேலியார் குடும்பத்தைச் சோ்ந்த அண்ணன் தம்பிகள் இருவர் மீதும் ரகு வெறுப்பும் கோபமும் கொண்டிருப்பதை அறிகிறார். அதற்கான காரணத்தை அறியும் ஆவல் கதாசிரியரை தூண்டுகிறது. அதை அறிய நேரும் போது தற்கொலை ஒன்றும் நடந்துவிடுகிறது. கதாசிரியர் ரகுவிற்கும் அவர்களுக்குமான உறவை அறிந்தாரா இல்லையா என்பதுதான் கதை.

ரகுவிற்கும் மம்மேலியாருக்கும் இடையேயான பிரச்சினை என்ன என்ற ஒற்றை இழையைப் பிடித்துக்கொண்டு நாவல் சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் நகர்கிறது. வாழ்க்கை பற்றிய தத்துவ விசாரம் ஆரமப்பப் பக்கங்களில் ரகுவிற்கும் கதையாசிரியருக்கும் நடக்கிறது. அதன் தொடர்ச்சியாக மேன்மையான நிலையில் இருந்த குடும்பம் எவ்வாறு சிதைந்து சீரழிகிறது என்பதைக் கதையாசிரியர் ஓட்டலில் பணிபுரியும் பையன் ஒருவன் மூலம் அறிகிறார். அவர்களால் நன்றாக வாழ்ந்தபோது இருந்த பழக்கங்களைவிட முடியாமல் தவிப்பதையும், அந்தக் கவலையிலேயே மேலும் குடித்து ஒன்றுக்கும் உதவாமல் போவதையும் க.நா.சு யதார்த்தமாக சித்தரித்திருக்கிறார். ஒவ்வொரு ஊரிலும் இப்படியான குடும்பங்கள் இருப்பதை நாமும் நிதர்சனமாக வாழ்வில் பார்க்கலாம். காலம் மனித வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுவிடும் அவலத்தைக் காட்டுவதன் மூலம் இவ்வுலக வாழ்க்கையின் நிலையாமையை உணரச்செய்கிறார் க.நா.சு.

“அவருடைய நாவல்களில் மிகுந்த சுவாரஸ்யமும், விறுவிறுப்பும் கூடியது ‘வாழ்ந்தவர் கெட்டால்.’ நாவலின் பரப்பு சிறியது. பாத்திரங்களும் நிகழ்வுகளும் விரல் எண்ணிக்கையில் அடங்கிவிடுபவை. ஆனால் இந்த நாவலை வாசிக்கும் போது நாம் பெறும் சுபாவமான அனுபவப் பெருவெளி பிரமிப்பூட்டக் கூடியது. மனித மனங்களின் புதிர்ப் பாதைகளில் நம்மைச் சுழற்றி எறிந்து திகைக்க வைக்கிறது இப்படைப்பு” என்பதாக சி.மோகன் இந்நாவலைச் சொல்கிறார். இந்நாவலின் வாசிப்பு உண்மையில் நமக்குப் புதுமையான ஓர் அனுபவத்தைத் தருகிறது. வாழ்க்கையின் நிலையாமையும், அந்த நிலையாமையால் வருகின்ற இயலாமையும், அந்த இயலாமையால் ஏற்படும் மனிதனின் நிர்க்கதியான நிலையையும் இந்நாவலில் க.நா.சு. அற்புதமாகச் சித்தரித்திருக்கிறார்.

தஞ்சாவூர் அரண்மனை, காப்பி ஹோட்டலகள், புத்தகக் கடைகள், ரயில் நிலையம் போன்றவற்றின் மூலம் அந்தக்கால தஞ்சாவூர் பற்றிய பிம்பத்தை நம் மனதில் துலக்கமாக வரைந்திருக்கிறார் க.நா.சு. தஞ்சாவூர் அரண்மனையின் சிதிலடைந்த தோற்றத்தின் மூலம், மனிதர்களில் மட்டுமல்ல நாடு நகரங்களில் கூட வாழ்ந்து கெட்டவை இருக்கின்றன என்பதை இந்த வாழந்தவர் கெட்டால் எடுத்துரைக்கிறது.

க.நா.சுவின் இவ்விரு நாவல்களும் வாசிப்பில் நமக்கு ஓர் அலாதியான உணர்வைத் தருகின்றன. கருப்பு-வெள்ளை திரைப்படத்தைப் பார்த்தால் நமக்குள் எழுகின்ற உணர்வுக்கு ஒப்பானவை அவை. நம்முடைய வாழ்க்கைக்கு மிக நெருக்கமானதொரு அனுபவத்தை இந்நாவல்கள் தருகின்றன என்பதே அதன் அடிப்படைக் காரணம்.

(திருத்திய மறுபிரசுரம்)

Related Posts Plugin for WordPress, Blogger...