June 9, 2016

ஜியாங் ரோங்கின் ஓநாய் குலச்சின்னம்: வாழ்க்கைக்கான அருமருந்து!

மங்கோலியாவின் ஓலோன்புலாக் ஒரு சிறந்த மேய்ச்சல் புல்வெளி. பிரசித்தி பெற்ற வேட்டைக்காரர் பில்ஜி, தன் மகன் பட்டு, மருமகள் கஸ்மாய், அவர்களின் ஒன்பது வயதுச் சிறுவன் பாயர் ஆகியோருடன் வசித்துவருகிறார். மாணவனான ஜென்சென் பீஜிங்கிலிருந்து தன் சக மாணவர்களோடு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அங்கே வருகிறான். அவர்கள் குடில் அமைத்து அங்கேயே தங்கியிருக்கிறார்கள். ஆடு மேய்ப்பது, ஓநாய்களைப் பற்றி தெரிந்து கொள்வது, மங்கோலியர்களின் மேய்ச்சல் புல்வெளியின் மகத்துவத்தை அறிவது ஆகியன அவர்களின் நோக்கம். சீனர்கள் இழிவாகக் கருதும் ஓநாய்களை அவர்கள் தெய்வமாகத் தொழுவதும். தங்களின் குலச்சின்னமாகக் கருதுவதும் ஜென்சென்னுக்கு விளங்காமல் இருக்கிறது. ஓலோன்புலாக் மேய்ச்சல் வெளியில் திரியும் ஆயிரக்கணக்கான மான்களை ஓநாய்கள் வேட்டையாடும். இதனால் ஓலோன்புலாக் வாசிகளுக்கு ஏராளமான மான்கள் உணவாகவும், விற்பனைக்கான பொருளாகவும் கிடைக்கிறது. இதனால் அவர்களின் வாழ்வாதாரமான மேய்ச்சல் புல்வெளியும் மான்களிடமிருந்து பாதுகாக்கப்படுகிறது என்பதை பில்ஜி அவனுக்கு விளக்குகிறார்.

பில்ஜியும், ஜென்சென்னும் ஓநாய் கூட்மொன்று மான்களின் கூட்டத்தை வேட்டையாட எத்தனிப்பதைக் கண்காணிக்கிறார்கள். ஓநாய்கள் வேட்டையாடும் நுட்பத்தை பில்ஜி அவனுக்கு விளக்குகிறார். போர்த் தந்திரத்துடன் அவைகள் செயல்படுவதை ஜென் அறிந்து கொள்கிறான். மாவீரன் ஜெங்கிஸ்கான் அவற்றிடமிருந்தே போரின் நுட்பங்களைக் கற்றுக்கொண்டு உலகை தன் பக்கம் திரும்பச்செய்தான் என்பதை ஜென் பில்ஜியின் வாயிலாகவும், ஓநாய்கள் மான்களை வேட்டையாடுவதையும் கண்டு தெரிகிறான். இதுவரை நாம் அறியாத தளம் ஒன்றில் நாம் நாவலினூடே பயணிக்கிறோம். ஜியாங் ரோங்  தேர்ந்த நாவலாசிரியர்,   நாவலின் நுட்பங்களை அறிந்தவர் என்பது ஆரம்ப அத்தியாங்களிலேயே நமக்குப் புரிந்துவிடுகிறது. ஓநாய்கள் மான்களை வேட்டையாடுவதை மிகுந்த நுட்பங்களோடும் அழகோடும் நாவலாசிரியர் விவரித்துச் செல்கிறார். இரண்டு அத்தியாயங்களிலேயே நாவல் பல இடங்களுக்கு முன்னும் பின்னுமாக மாறிமாறி பயணிக்கிறது. ஆசிரியர் கதை சொல்வதில் வல்லவர் என்பது நமக்குத் தெரிந்துவிடும்போது நாவலில் மேற்கொண்டு செல்வது நமக்கு உவப்பானதாக இருக்கிறது.

ஓநாய்களின் வேட்டை முடிந்த மறுநாள் பில்ஜி தன் பக்கத்து வீட்டுக்காரர்களுடனும், ஜென்சென் தன் குடிலில் தங்கியிருக்கும் வகுப்புத் தோழன் யாங் உடனும் வண்டிகளோடு ஓநாய்கள் வேட்டையாடி விட்டுச்சென்ற மான்களை எடுக்கச் செல்கிறார்கள். பனிக்கட்டிகள் கெட்டியான தரையாக உறைந்திருக்க அதன் உள்ளே தண்ணீரில் இருக்கும் மான்களை எடுக்கிறார்கள். ஓநாய்கள் தங்களின் மீதமான உணவை அங்கேதான் சேமித்து வைக்கும் என்கிறார் பில்ஜி. அந்தப் பகுதியில் சில மான்கள் உயிருடன் பயத்தால் நடுங்கிக் கொண்டிருப்பதைக் காண்கிறார்கள். பில்ஜி அவற்றை காப்பாற்றி தூரமாக விடச்சொல்கிறார். அந்த மான்களின் பரிதாபகரமான நிலையைக் கண்டு ஜென்சென் ஓநாய்களின் மீது வெறுப்பும் மான்களின் மீது இரக்கமும் கொண்டவனாக பேசுகிறான். அதைக் கேட்டு கோபமடையும் பில்ஜி மான்களைப் போலவே இந்த புல்வெளியும் உயிர் உள்ளது. பெரிய உயிரான புல்வெளியைச் சார்ந்தே சிறிய உயிர்கள் வாழ முடியும். எனவே தேவையான அளவிற்கு மான்கள் கொல்லப்படுவது ஓநாய்கள் நமக்கு செய்யும் நன்மைதான் என்று சொல்கிறார். சீனர்களுக்கு புத்தகங்கள் உள்ளன ஆனால் மங்கோலியர்களுக்கு இல்லை. எனவே அவர்கள் சொல்வது உண்மையாகிவிடுகிறது. என விளக்குகிறார் பில்ஜி. அவர் சொன்னதன் முழுப்பொருளை ஜென்சென் அறிந்துகொள்கிறான். நாகரிகம் என்று கருதி இன்று நாம் செல்லும் பாதை நம் அழிவுக்கான பாதையன்றி வேறில்லை என்பதை நாமும் விளங்கிக் கொள்கிறோம்.

எல்லோரும் நிறைய மான்கள் கிடைத்த சந்தோஷத்தில் மது, தேநீர், மான்கறி என அந்த பனிவெளியில் தங்கள் சந்தோஷத்தைக் கொண்டாடுகிறார்கள். ஓநாய்களுக்கு தேவையான அளவிற்கு மான்களை விட்டுச்செல்லவேண்டும் என பில்ஜி வற்புறுத்துகிறார். ஆனால் அவர்களுக்கு மான்கள் கிடைத்த சேதி அறிந்து பலரும் ஓநாய்களுக்கு ஏதும் விட்டுவைக்காமல் எடுத்துச் செல்கிறார்கள். மேலும் பலர் ஓநாய் தோல்களுக்கு அதிக விலை கிடைப்பதால் ஓநாய் குட்டிகளை அதன் குகைகளிலிருந்து எடுத்து விற்கிறார்கள். இதனால் ஓநாய்கள் பழிவாங்கும் என்று எச்சரிக்கிறார் பில்ஜி. இதற்கிடையே பனிப்புயல் அடிக்கிறது. ஜென்சென் பறக்கும் ஓநாய்கள் பற்றிய கதைகளைக் கேட்கிறான். இறந்தவர்களின் உடல்களை ஓநாய்க்கு உணவாக்கும் புதைவிடங்களைச் சென்று பார்க்கிறான்.

பில்ஜி எச்சரித்தது போலவே ஓநாய்கள் எண்பது குதிரைகளுக்கு மேல் கொண்ட மந்தை ஒன்றை தாக்குகிறது. யுத்தம் நடந்துகொண்டிருப்பதால், இராணுவத்திற்காக பட்டுவும், அவன் நண்பன் லாசுருங்கும் பாதுகாத்து வரும் குதிரைகள் அவை. கடுமையான பனிப்புயல் அடிக்கிறது. இரவு நேரம். கும்மிருட்டு. குதிரையில் ஏறி, கையில் ஃபிளாஷ் லைட்டுடனும், தடியுடனும் இருவரும் ஓநாய்களிடமிருந்து குதிரைக் கூட்டத்தைக் காப்பாற்ற போராடுகிறார்கள். ஓநாய்கள் தங்கள் கோபத்தைத் திரட்டி மூர்க்கமாகத் தாக்குகின்றன. தாக்குதலை சமாளிக்க முடியாமல் லாசுருங்கின் குதிரை பயந்து ஓடுகிறது. பட்டு தனி ஒருவனாகப் போராடுகிறான். இப்பக்கங்களில் வரும் ஆசிரியரின் விவரிப்புகள் நம்மை புனைவின் உச்சத்திற்கு அழைத்துச் செல்கின்றன. நாவலாசிரியரின் வர்ணணைகள் நம் கற்பனையை எளிதாக்கி, நாம் இதுவரை அறிந்திராத புனைவு ஒன்றினுள் நம்மை இட்டுச் செல்கிறது.

இராணுவத்திற்கான குதிரைகள் இழக்கப்பட்டதை விசாரிக்க இராணுவப் பிரதிநிதியான பாவோ சுங்காய் மற்றும் மேய்ச்சல் பகுதி இயக்குநரான உல்ஜீ இருவரும் ஓலோன்புலாக்குக்கு வருகிறார்கள். ஆரம்பத்தில் பட்டுவை குறை சொல்லும் அவர்கள் அந்த இடத்தைப் பார்வையிட்டு, அவன் முடிந்தவரை குதிரைகளைக் காப்பாற்ற போராடியிருக்கிறான் என்பதை அறிகிறார்கள். பாவோ ஓநாய்களை முற்றிலுமாக அழிக்கவேண்டும் என்று உறுதி பூணுகிறார். விளைச்சல் நில வாசிகளான அவர்களுக்கு மேய்ச்சல் நில வாசிகளின் நிலை புரியாதது குறித்து பில்ஜி வருத்தப்படுகிறார்.

எல்லோரும் ஓநாய்களை வேட்டையாட ஆயத்தமாகிறார்கள். பில்ஜி ஓநாய்களுக்கு பொறி வைக்கத் தீர்மானிக்கிறார். அதிகப்படியான ஓநாய்களை அழிக்கவே வேண்டும் இல்லையென்றால் நாம் அழிந்துவிடுவோம் என பில்ஜி கூறுகிறார். அதற்காக ஜென்சென்னையும் உடன் அழைத்துச் செல்கிறார். இருவரும் சேர்ந்து ஓநாய்கள் குதிரைகளை வேட்டையாடிய இடத்தில் பொறிகளைப் பதுக்கிவைக்கிறார்கள். ஜென்சென் ஓநாய் குட்டி ஒன்றை எடுத்து வளர்க்க ஆசைப்படுகிறான். அவன் ஓநாய் குகையிலிருந்து ஜாக்கிரதையாக குட்டியை எடுக்கவேண்டும் என பில்ஜி அவனுக்கு அறிவுரைகள் சொல்கிறார். பட்டுவும் சிறுவயதில் குகை ஒன்றில் ஓநாய் குட்டிகளை எடுத்த அனுபவத்தைக் கூறுகிறான்.

ஜென்சென் தன் நண்பர்களின் உதவியுடன் ஏழு ஓநாய்க் குட்டிகளை எடுத்து வருகிறான். அவற்றில் ஐந்தைக கொன்றுவிட்டு இரண்டில் ஒன்றை ஜென்சென்னும் மற்றதை டோர்ஜியும் எடுத்துக் கொள்கிறார்கள். ஒரு ஓநாய் குட்டியை வளர்க்கவேண்டும் என்ற ஜென்சென்னின் வெகுநாளைய ஆசை நிறைவேறுகிறது. அடுத்து பில்ஜியின் தலைமையில் ஓநாய்களை வேட்டையாடுவது நடக்கிறது. ஓநாய்களுடனான பெரும் யுத்தத்திற்கு பிறகு ஏராளமான ஓநாய்களைக் கொன்று அவற்றின் தோல்களைக் கைப்பற்றுகிறார்கள். நாவலாசிரியரின் சொந்த அனுபவங்கள் நாவலின் இப்பகுதியின் புனைவுக்கு மெருகூட்டுகின்றன. விரிவான நுட்பமான விவரிப்புகள் கொண்ட இவைகள் நம்மை நாவலுடன் நெருக்கம் கொள்ளச்செய்கின்றன.

போர்க் குதிரைகளின் படுகொலை குறித்த வழக்கில், உல்ஜி, பட்டு, லாசுருங் அனைவருக்கும் பணியிலிருந்து தகுதியிழப்பு அறிவிக்கப்படுகிறது. பாவோ குழுவின் தலைமைப் பொறுப்புடன் உற்பத்தியின் பொறுப்பையும் கூடுதலாகப் பெறுகிறார். பாவோவின் ஓநாய் எதிர்ப்பு நடவடிக்கை உல்ஜிக்கும் பில்ஜிக்கும் அதிருப்தி தருவதாக இருக்கிறது. கால்நடைகளுக்கான புல் போதுமானதாக இல்லாததால் புதிய மேய்ச்சல் வெளியைத் தேர்ந்தெடுத்து அங்கே இடம் பெயர்கிறார்கள். பச்சைப்பசும் புல்வெளியும், அன்னப் பறவைகள் திரியும் ஏரியும், அடர்ந்த வெள்ளை மலர்களும்  நிரம்பிய அந்த இடம் ரம்மியமாக, மனதைக் கொள்ளை கொள்வதாக, கனவுலகில் சஞ்சரிப்பதான உணர்வைத் தருவதாக அமைந்திருக்கிறது. பாவோவின் நடவடிக்கையால் அந்த இடம் அழிந்துவிடும் என்பதை அறிந்து அனைவரும் வருந்துகிறார்கள். ஓநாய்களை வெறுக்கும் பாவோ தான் ஓநாய் வளர்ப்பதை ஆதரிக்கமாட்டார் எனக் கருதுகிறான் ஜென்சென். ஆனால் அவரோ நம் பகைவர்களை அழிக்க அவர்களைப் பற்றி தெரிந்துகொள்வது அவசியமானதுதான் என்கிறார். பல்வேறு சிரமங்களுக்கிடையே ஒநாயை வளர்க்கிறான் அவன். அதில் உள்ள ஆபத்துகளைப் பற்றி பில்ஜியும் அவனுக்கு எச்சரிக்கிறார்.

பாவோவின் நடவடிக்கையால் மேய்ச்சல் நிலம் விவசாய நிலமாக மாறிவருகிறது. செங்கலால் கட்டப்பட்ட வீடுகள் முளைக்கின்றன. அப்பகுதிக்கு புதிதாகக் குடியேறுபவர்கள் மேய்ச்சல் நில கட்டுப்பாடுகளையும் எச்சரிக்கைகளையும் பின்பற்றாமல் தன்னிச்சையாகச் செயல்படுகிறார்கள். ஓநாய்கள் குதிரைக் கூட்டத்தை தொடர்ந்து வேட்டையாடி வருகின்றன. ஜென்சென் ஓநாய் குட்டி வளரவளர அதன் சிக்கல்களை அறிகிறான். ஓநாய் குட்டியின் வளர்ச்சியை மிக நுட்பமாகவும், சுவாரஸ்யமாகவும் நாவலாசிரியர் விவரித்து, நம்மை வியக்க வைக்கிறார். மேலும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய இயற்கையின் ரகசியங்களை நம்முன் எடுத்துவைத்து நம் அறியாமையைச் சுட்டிக்காட்டுகிறார். தன்னைத் தக்கவைத்துக் கொள்ள மனிதன் நடத்தும் போராட்டம் இயற்கையோடு இயந்ததாக இருக்கவேண்டுமே அன்றி இயற்கைக்குப் புறம்பாக இருக்கலாகாது என்பதை நாம் ஆழுத்தமாகவும் தெளிவாகவும் உணரும்படி செய்துள்ளார் ஜியாங் ரோங். பாவோவின் ஓநாய் அழித்தொழிக்கும் நடவடிக்கை தீவிரமாகிறது. எஞ்சிய சில ஒநாய்கள் மங்கோலியாவின் வெளிப்பகுதிக்கு சென்றுவிடுகிறது. ஜென் சென் ஒநாயை வைத்துக்கொண்டு பல சிரமங்கள் படுகிறான். அது நோய்வாய்ப்படுகிறது. ஆற்றொண்ணா துயரத்தோடு தன் கையாலேயே அதைக் கொல்கிறான். நாடோடி மேய்ப்பர்களின் கடைசி வாரிசான பில்ஜி நடக்கும் காட்சிகளைக் கண்டு மனமுடைந்து மாண்டுபோகிறார். ஜென்சென் தன் படிப்புக்காக பீஜிங் செல்கிறான். இருபது வருடங்கள் கழித்து மீண்டும் ஓலோன்புல்லுக்கு வருகிறான். அதன் சீரழிவைக் கண்டு மனம் வாடுகிறான்.

நாவலை வாசித்து முடித்ததும் நம் மனதில் நிறையும் வெறுமை அசாதாரணமானது. மாயத்தோற்றம் ஒன்றின் அற்புத வெளியில் நாம் அலைந்து திரிந்ததான உணர்வை நாவல் நமக்குத் தருகிறது. ஓநாய்களும், குதிரைகளும், வேட்டை நாய்களும், ஆடுகளும், அணில்களும், அன்னப் பறவைகளும், எலிகளும், மர்மோட்டுகளும் நம் மனதில் கனவின் பனிப்படலம் போல் படர்ந்திருப்பதை நாம் அறிகிறோம். இவை அனைத்துக்கும் மேலாக நம் நெஞ்சில் நீங்காமல் சிம்மாசனமிட்டு அமர்ந்துவிடுகிறது ஓலோன்புலாக் புல்வெளி. அதன் பச்சைப்பசுமை நம் உள்ளத்துக்கு இதத்தையும் குளுமையையும்  தந்தபடியே இருக்கிறது. அது அழிந்துவிட்டது என்பதை ஏனோ நம் மனம் ஏற்க விரும்பவில்லை.

இந்நாவல் தரும் வாசிப்பின் அனுபவம் நமக்கு அந்நியமானது என்றாலும் நாவலாசிரியர் தன் எழுத்தாற்றலால் அந்நியத் தன்மையை நாம் அறியாதவாறு செய்துவிடுகிறார். அந்த அவரது புனைவின் திறனே நாவலை உலகளாவிய வாசிப்புக்கு உகந்ததாக ஆக்கியிருக்கிறது.  மங்கோலிய மேய்ச்சல் நில வாசிகளின் வாழ்க்கையை அற்புதமான அவதானி்ப்புகளுடன் நாவலில் பதிவு செய்திருக்கிறார் ஜியாங் ரோங்.

இந்த உலகத்தில் நாம் எடுக்கும் ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு. அதன் விளைவுகள் அப்போது உடனடியாக நமக்குத் தெரியாவிட்டாலும் ஒரு நாள் அது நம்மை பாதிக்கவே செய்யும். இயற்கை தனக்கேயான ஆழந்த புரிதல்களும், இயல்புகளும், ஒத்திசைவும் கொண்ட பேருயிர். அது தனதான தாளகதியில் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதன் ரகசியங்களைப் புரியாமல் நாம் எடுக்கும் மேம்போக்கான புரிதல்களின் முடிவுகளால் அதன் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படுகிறது. அப்படி அதை நாம் சீர் குலைக்கும்போது பூமி மீதான நம் வாழ்க்கை கேள்விக் குறியாகிவிடும் என்பது நாவலினூடான பயணத்தில் நாம் அடையும் தரிசனங்களாகும்.

சி.மோகன் அவர்களின் மொழிபெயர்ப்பை பற்றி இங்கே சொல்லியாக வேண்டும். அந்நிய மொழி நாவலை வாசிக்கிறோம் என்ற உணர்வே எழாதபடி மொழிபெயர்ப்பு கச்சிதமாகவும் நேர்த்தியாகவும் அமைந்திருக்கிறது. வார்த்தைகள் எங்கேயும் இடராதபடி சரளமாக அமைந்து, வாக்கியங்களுக்கு  தெளிவான அர்த்தத்தைக் கொடுக்கிறது. மொழியின் லாவகம் நம் வாசிப்பனுபவத்திற்கு இருமடங்கு பரவசத்தையும் மகிழ்வையும் தருகிறது. இலக்கியத்தில் மூழ்கித் திளைத்தவர்களுக்கே அந்த லாவகம், நேர்த்தி சாத்தியமாகும். மோகனுக்கு அது சாத்தியமாயிருக்கிறது. அர்ப்பணிப்பு உணர்வுடன் நாவலை மொழியாக்கம் செய்திருக்கிறார். அதற்காக அவரைப் பாராட்டுவது நம் கடமையாகும்.

தமிழில் இதுவரை வெளியான மொழியாக்க நாவல்களில் ஓநாய் குலச்சின்னம் முதன்மையான இடத்தை வகிக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

ஜியாங் ரோங் சில குறிப்புகள்:

1946-ஆம் ஆண்டு ஜியாங்சூ-வில் ஜியாங் ரோங் பிறந்தார். அவருடைய தந்தையின் வேலை நிமித்தமாக, அவர்களுடைய குடும்பம் 1957-ல் பீஜிங்கிற்குக் குடிபெயர்ந்தது. 1966-ல் சென்ட்ரல் அகாதமி ஆஃப் பைன் ஆர்ட்டில் ஜியாங் கல்வி மேற்கொண்டார். கலாசாரப் புரட்சியைத் தொடர்ந்து, சீனாவில் ஏற்பட்ட நிகழ்வுகளின் விளைவாக, அவருடைய படிப்பு இடையிலேயே தடைபட்டது. அவருடைய 21-வது வயதில், 1957-ல், உள் மங்கோலியாவின் ஒரு பகுதியில் அங்குள்ள நாடோடி மக்களோடு சேர்ந்து வாழ்ந்து உழைப்பதற்கு அனுப்பப்பட்டார். அங்கு அவர் 11 ஆண்டுகள் வாழ்ந்தார். அப்போது மங்கோலிய வரலாறு, கலாசாரம், மரபு ஆகியவற்றை அறிந்துகொண்டார். குறிப்பாக, மேய்ச்சல்நில ஓநாய்கள் பற்றிய புராணீகங்களை அறிவதில் தீவிர நாட்டமும் வேட்கையும் கொண்டிருந்தார். மேய்ச்சல் நில மக்களின் ஆசானும் குலச்சின்னமுமான ஓநாய்கள் குறித்து நேரடி அனுபவமும் ஞானமும் பெறுவதற்காக ஒரு ஓநாய்க் குட்டியை எடுத்து வளர்க்கவும் செய்தார். 1978-ல் பீஜிங் திரும்பி தன் கல்வியை தொடர்ந்தார். பின்னர் தன் வாழ்வைக் கல்வித் துறையாளராக அமைத்துக் கொண்டார். 2006-ல் ஓய்வு பெற்றார். 1999-ல் இந்நாவலை எழுதத் தொடங்கி 2003-ல் எழுதி முடித்தார்.

(மறுபிரசுரம். முதற்பிரசுரம் பிப்ரவரி 25, 2013)

Related Posts Plugin for WordPress, Blogger...