தற்போது வாங்கிய எட்டு புத்தகங்கள் பற்றி சில குறிப்புகள்


தற்போது நான் வாங்கிய எட்டு புத்தகங்களைப் பற்றிய சில குறிப்புகள் இவை. டால்ஸ்டாயின் அன்னா கரீனினா ஏற்கனவே இரண்டு மொழிபெயர்ப்புகள் இருக்கின்றன! இது Richard Pevear and Larissa Volokhonsky இருவரின் மொழிபெயர்ப்பில் Penguin பதிப்பகம் வெளியிட்டது. ஒவ்வொரு மொழிபெயர்ப்பும் ஒவ்வொரு வகையில் தனித்துவமும் சிறப்பும் மிக்கவை. டால்ஸ்டாயின் ஆகச்சிறந்த நாவல்களில் அன்னா கரீனினா முதன்மையானது. சிலர் போரும் அமைதியை அவரின் மிகச்சிறந்த நாவலாகச் சொல்வதுண்டு. ஆனால் பெரும்பான்மையினர் அன்னா கரீனினாவையே பெரிதும் விரும்புகிறார்கள். பத்து அல்லது பதினைந்து வருடங்களுக்கு முன்னர் போரும் அமைதியும் வாசித்திருக்கிறேன். அன்னா கரீனினாவைத்தான் இன்னும் வாசிக்கவில்லை. எப்படியும் இந்த வருடத்தில் படிப்பது என்று திட்டமிட்டிருக்கிறேன்!

அலெக்ஸாண்டர் டூமாஸின் “தி கவுண்ட் ஆஃப் மான்டோ கிரிஸ்டோ”. பிரஞ்சு மொழியில் எழுதப்பட்ட டூமாஸின் புகழ் பெற்ற சாகச நாவல் இது. இந்நாவலை படிக்கவேண்டும் என்று வெகு நாட்களாக ஆசை. திரைப்படமாகப் பார்த்திருக்கிறேன். இந்நவாலுக்கு பல்வேறு மொழிபெயர்ப்புகள் இருக்கின்றன. நான் வாங்கியுள்ளது பென்குவின் பதிப்பகத்தின் Robin Buss மொழிபெயர்ப்பு.  நல்லதொரு பதிப்பிற்காகவும், விலைக்காவும் காத்திருந்தேன். தற்போதுதான் வாங்க முடிந்தது. 1844ல் வெளியான இந்நாவலுக்கு வயது 170!

ஹெர்மன் ஹெஸேவின் “சித்தார்த்தா” ஜெர்மன் மொழியில் எழுதப்பட்ட புத்தரின் ஆன்மிகத் தேடலைப் பற்றிய புத்தகம். நான் மிகவும் கனவு கண்ட ஒரு புத்தகம். இருபத்து ஐந்து வருடங்களுக்கு முன்னர் வாங்கிய அதன் தமிழாக்கம் ஒன்று இன்னமும் வீட்டிலிருக்கிறது. ஆனால் அதை வாசிக்கவே முடியவில்லை. ஆகவே ஆங்கிலத்தில் வாங்கியிருக்கிறேன். இப்புத்தகத்தை மாடர்ன் லைப்ரரி பதிப்பகம் கெட்டி அட்டையில் மிக அற்புதமாக வெளியிட்டுள்ளது. ஒவ்வொருவரின் புத்தக அலமாரிக்கும் அழகையும் பெருமையையும் சேர்க்கும் ஒரு புத்தகம் ஹெஸேவின் சித்தார்த்தா. 1922ல் வெளியான இந்தப் புத்தகம் 1960களில் மிக முக்கியமான புத்தகமாகப் புகழ் பெற்றது. 1972ல் சசிகபூர் நடிப்பில் திரைப்படமாக வந்துள்ளது.

செர்வான்டிஸின் “டான் குயிக்ஸாட்” ஸ்பானிஷ் மொழியில் எழுதப்பட்ட புகழ் பெற்ற புத்தகம். முதல் நவீன நாவல் என்ற பெருமை இந்நாவலுக்கு உண்டு. இதற்குப் பல மொழியாக்கங்கள் உள்ளன. தமிழில் சந்தியா பதிப்பகம் இந்நாவலை இரண்டு பகுதிகளாக வெளியிட்டுள்ளது. தமிழ் மொழிபெயர்ப்பை வாங்குவதில் என்னவோ ஒரு தயக்கம் இருந்தது. படிப்பதற்கு மிகச் சவாலான நாவல் இது. அதுவும் ஆங்கிலத்தில் வாசிப்பது பற்றிச் சொல்லவே தேவையில்லை. இருந்தும் துணிந்து வாங்கியிருக்கிறேன். Edith Grossman அவர்களால் மொழியாக்கம் பெற்ற இது படிப்பதற்கு மிகச் சரளமானது என்று எல்லோராலும் சொல்லப்படுகிது. 1605ல் இதன் முதல் பகுதியும் 1615ல் இரண்டாம் பகுதியும் வெளியானது. ஆக இந்நாவல் எழுதப்பட்டு 400 ஆண்டுகள் ஆகின்றன! இருந்தும் உலகம் முழுதும் கொண்டாடத்தக்க நாவலாக இது இன்றும் போற்றப்படுகிறது!


ஜேன் ஆஸ்டின் “பிரைட் அன்ட் பிரிஜுடிஸ்” மிகப் பிரபலமான ஆங்கில நாவல். படிப்பதற்கு கடினமான நாவலாக இருப்பதால் பலமுறை முயன்றும் 50 பக்கங்களுக்கு மேல் வாசிக்க முடியவில்லை. பொறுமையும் நிதானமும் இருந்தால் வாசித்து விடலாம். நாவலில் வரும் கதாபாத்திரங்களை அடையாளம் காண்பதே இந்நாவலில் உள்ள சவால் என்று கருதுகிறேன். அதை சாதித்தாலே நாவல் பிடிபட்டுவிடும். (கிண்டில் புத்தகத்தில் வாசிக்க முயற்சித்து விட்டுவிட்டேன். என்னால் கிண்டிலில் புத்தகத்தை வாசிக்கவே முடிவதில்லை. புத்தகங்களைத் தொட்டுணரும் வாசிப்பின் திருப்தி கிண்டிலில் கிடைப்பதில்லை). தற்போது புத்தகமாக வாங்கியிருக்கிறேன். இதுவும் பென்குவின் பதிப்பகம் வெளியிட்டுள்ள கெட்டி அட்டை பதிப்பு. 1813ல் வெளியான இந்நாவல் ஆங்கில மொழி இலக்கியத்தில் மிக முக்கியமான நாவலாக எல்லோராலும் பரவலாகக் கொண்டாடப்படுகிறது.

பௌலோ கொய்லோவின் “தி ஆல்கெமிஸ்ட்” 1988ல் வெளியான போர்ச்சுக்கீசிய மொழி நாவல். உலகமெங்கும் பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் பெற்ற நாவல். தமிழில் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அதைப் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். இருந்தும் அதை ஆங்கிலத்தில் வாசிக்க ஆவல் ஏற்பட்டது. Harpercollins பதிப்பகம் நாவலின் 25 வருட நினைவை ஒட்டி 2003ல் வெளியிட்டுள்ள இந்தப் பதிப்பு அமேசானில் 180 ரூபாயில் கிடைக்கிறது. கெட்டி அட்டையில் தரமான பதிப்பு இவ்வளவு குறைந்த விலையில் கிடைப்பது அபூர்வம். அதற்காகவே வாங்கினேன் எனலாம்.

விக்டோரியன் காலத்து ஆங்கில எழுத்தாளர்களில் முக்கியமானவர் அந்தோணி ட்ரொலப். ஜெயமோகனைப் போன்று தொடர் நாவல்களை எழுதியவர். தற்போதுதான் இவரைப் பற்றி அறிந்தேன். அவர் எழுத்துகள் சிலவற்றை மாதிரிக்கு வாசித்துப் பார்த்தேன். நடையும் மொழியும் படிப்பதற்குச் சிரமம் தராததாக இருப்பதாகத் தோன்றியதால் அவர் நாவல்களை வாசிக்க விருப்பம் ஏற்பட்டது. 1857ல் வெளியான “பார்செஸ்டர் டவர்ஸ்” என்ற நாவலையும் 1875ல் வெளியான “தி வே வி லிவ் நவ்” என்ற இரண்டு நாவல்களை வாங்கியுள்ளேன். முன்னது பென்குவின் வெளியீடு. பின்னது வின்டேஜ் கிளாசிக்.

இந்த எட்டு நாவல்களில் மூன்று நாவல்களைத் தவிர அனைத்துமே 800 பக்கங்களுக்கு மேலானவை! படிப்பதற்கு எத்தனை காலம் தேவைப்படும் என நினைக்கையில் மலைப்பு தட்டுகிறது! ஒவ்வொரு புத்தகத்தையும் வாசித்துவிட வேண்டும் என்றுதான் வாங்குகிறேன். ஆனால் அதற்கான காலமும் நேரமும் வாய்க்காது போனால் என்ன செய்ய முடியும்? படிக்காத புத்தகங்கள் பெருகிக்கொண்டே போகின்றன எனினும் புதிதாக வாங்குவதை நிறுத்தவும் முடியவில்லை! வாங்கும் வேகத்திற்கு வாசிக்கவும் முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! வாழ்க்கையே எதிர்பார்ப்பில் இருக்கும்போது வாசிப்பு எதிர்பார்ப்பில் இருப்பதில் தவறு ஏதுமில்லையே?

Related Posts Plugin for WordPress, Blogger...