June 24, 2016

இந்திரா பார்த்தசாரதியின் மூன்று கதைகள்

இந்திரா பார்த்தசாரதியின் சிறுகதைகளை நான் அதிகம் வாசித்ததில்லை. கல்லூரியில் படிக்கும்போது அவரது குருதிப்புனல், வேர்ப்பற்று, தந்திர பூமி போன்ற நாவல்களை வாசித்ததாக நினைவு. அவரது கிருஷ்ணா கிருஷ்ணா நாவல் இன்னும் படிக்காமல் புத்தக அலமாரியில் கிடக்கிறது. ஆர்வத்துடன் வாங்கிய அந்தப் புத்தகத்தை ஏன் இன்னும் படிக்கவில்லை என்பது எனக்கே தெரியவில்லை. நான் முன்னர் ஒரு முறை சொன்னது போல, புத்தகங்களே என்னை வாசிக்கத் தேர்கின்றனவே அல்லாமல் நான் புத்தகங்களைத் தேர்வதில்லை! இந்திரா பார்த்தசாரதியின் சிறுகதைகளில் நான் வாசித்தவை மூன்றே மூன்று கதைகள் மட்டுமே! அதைக் குறித்து நான் ஏற்கனவே எழுதிய பதிவுகளை இந்தப் பதிவில் மொத்தமாகக் காணலாம்.

1. ஒரு கப் காபி

ராஜப்பாவின் அம்மா இறந்தபிறகு அவனும் அவன் தம்பியும் தனிக்குடித்தனம் ஆகிறார்கள். ஓரே வீட்டில் இரண்டு குடித்தனம் நடக்கிறது. அவன் தம்பிக்கு எல்.ஐ.சியில் வேலை. படிக்காத அவனால் என்ன செய்யமுடியும்? இத்தனை காலம் சும்மாவே காலம் தள்ளியாயிற்று. ஏதோ கல்யாணம் கருமாதி என்று இப்போது புரோகிதத் தொழில் நடத்தவேண்டிய சூழ்நிலை. இந்நிலையில் அவனுக்கு அன்று காப்பி குடிக்கத் தோன்றுகிறது. அதற்கான சந்தர்ப்பங்களை எதிர்பார்த்து காத்திருக்கிறான். ஆனால் அதற்கான வழிதான் தெரியாதிருக்கிறது. காபி குடித்தே ஆகவேண்டும் என்ற தவிப்பு அவனை அலைக்கழிக்கும் நிலையில், தன் பால்ய சிநேகிதன் அனந்துவை கடைவீதியில் பார்க்கிறான். டெல்லியில் பணியாற்றும் அவன் ராஜப்பாவின் கோலத்தைக்கண்டு வேதவித்து என்று புகழந்து தள்ளுகிறான். அவனுக்கோ இதனால் காப்பி குடிக்கும் வாய்ப்பு நழுவிவிடுமோ என்று பயம் வருகிறது. கடைசியில், அவன் காப்பி குடித்தானா இல்லையா என்பதுதான் கதை!

நம் மனம் எளிதில் பழக்கத்துக்கு அடிமைப்பட்டுவிடும் ஒரு வஸ்து. நம் வாழ்க்கையே பழக்கத்தின் அடிப்படையிலேயே நடக்கிறது. பழக்கம் நாளடைவில் இயல்பாகிறது. ஒன்று நம் இயல்பான பின்னர் அதிலிருந்து நாம் விடுபடுவது முடியாததாகிறது. குடிப்பழக்கம் மனிதனைப் பாடாய் படுத்துவதை நாம் அறிவோம். அதேபோல ஒரு கப் காபி குடிக்கமுடியாமல் ராஜப்பா தவிப்பதிலிருந்து, பழக்கத்தின் பிடியிலிருந்து நாம் தப்பிக்கமுடியாத அவலத்தை, வாழ்க்கையின் வறுமை நிலையோடு இணைத்து அங்கதம் வெளிப்பட அழகான கதையாகத் தருகிறார் இ.பா.

பிறரது வெளித்தோற்றம், அவர்களைப் பற்றிய பல்வேறு கற்பனைகளை நம் மனம் நமக்குத் தருகிறது. இப்படியாக ஒவ்வொருவரும் மற்றவரைப் பற்றிய தவறான பிம்பத்தை நம் மனத்திரையில் பதிந்துவைக்கிறோம். ராஜப்பாவைப் பார்த்ததும் அவன் நண்பன் அனந்துவின் மனதில், ராஜப்பாவைப் பற்றி எழும் சிந்தனைகள் இத்தகையவையே. இப்படி அடுத்தவர்களைப் பற்றிய நம் கற்பனைகள், யாரைப் பார்த்தாலும் நம் மனதில் தானாகவே ஓடத்தொடங்கி, அவர்களோடு நம்முடைய வாழ்க்கையை ஒப்பிட்டுப்பார்த்து விமர்சிக்கத் தொடங்கிவிடுகிறது.

பழக்கம் நிர்பந்திக்கும் போது மனிதன் சுயக்கட்டுப்பாட்டை இழக்கிறான். தன் மான அவமான உணர்வுகளை அதன் பொருட்டு உதாசீனப்படுத்தவும் அவன் தயராகிறான். அவன் இயலாமை தான் விரும்பியதை அடைந்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தை அவனுக்கு ஏற்படுத்துகிறது. தன்னைப் பற்றிய அனந்துவின் உயர்வான அபிப்ராயத்தைத் தக்கவைத்துக் கொள்வதைவிட காப்பி சாப்பிடுவதுதான் ராஜப்பாவிற்கு முக்கியமாகப் படுகிறது. அவனது அபிப்ராயத்தின் படியே தான் இருப்பதாகக் காட்டிக்கொண்டு, காப்பி குடிக்காமல் திரும்பினான் ராஜப்பா என்றும் இந்தக் கதையை எழுதலாம். அது வேறுவகையான உணர்வுகளுக்கு நம்மை இட்டுச்சென்றிருக்கும். ஆனால் பழக்கம் நம்மை ஆக்ரமித்திருக்கும் அவலத்தைக் காட்டாது போயிருக்கும். இ.பாவின் நோக்கம் மனித வாழக்கையில் பழக்கத்தின் தாக்கத்தைப் பற்றி சொல்வதேயாகும்.

பழக்கம் நம்மை முடவனாக்கிவிடுகிறது. நாமெல்லோருமே பழக்கத்தின் முடவர்கள். அதை குறிப்பாக உணர்த்துவதற்காகத்தான் கதையின் ஆரம்பத்தில் அப்படியொரு கனவுக் காட்சியை வைத்திருக்கிறார் இ.பா. நாம் ஒன்றை சார்ந்திருக்கும் தன்மை முடத்தன்மை என்றுதான் சொல்லவேண்டும். ஊன்றுகோலைச் சார்ந்திருப்பவன் எவ்வாறு முடவனாகிறானோ அவ்வாறே ஒன்றின் பழக்கத்தைச் சார்ந்து நிற்பவனும் முடவனாகிறான்.

நாம் நம் பழக்கத்தைப் பற்றியும், அது எவ்வளவு தூரம் நம்மை ஆட்டிப் படைக்கிறது என்பதைக் குறித்தும் இந்தக் கதை நம்மை யோசிக்கவைக்கிறது.

2. தொலைவு

டில்லியில் உத்யோக் பவனில் வேலை செய்கிறான் வாசு. தன் பெண் கமலியுடன் லோதி காலனியில் உள்ள தன் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறான். பேருந்தில் ஏகப்பட்ட கூட்டம். டாக்ஸியில் போகுமளவிற்கு அவனுக்கு வசதியில்லை. எனவே ஆட்டோவை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ஆட்டோவும் சுலபத்தில் கிடைக்கவில்லை. அப்போது அவனுடன் ஒன்றாகப் படித்த மூர்த்தி காரில் வருகிறான். அவனுடன் செல்ல மறுத்து, டாக்ஸி கிடைக்காமல், பேருந்திலும் செல்ல முடியாமல் கடைசியில் தன் குழந்தையுடன் நடந்து போகிறான். கதையின் கடைசி வாக்கியத்தை இப்படி எழுதி,

வாசுவும் கமலியும் இன்னும் வெகுதூரம் போகவேண்டும்.

என்று கதையை முடிக்கிறார் இந்திரா பார்த்தசாரதி. வாசு இன்னும் வெகுதூரம் போகவேண்டும் என்பது அவன் வீட்டின் தூரத்தை மட்டும் குறிக்கவில்லை. மாறாக அவன் வாழ்க்கையிலும் இன்னும் வெகுதூரம் போகவேண்டும் என்பதையும் அவன் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் நிறைய இருக்கின்றன என்பதையும் உணர்த்துகிறது. அந்த வாக்கியம் நமக்கு அவ்வாறு பொருள் தரவேண்டிய அவசியம் என்ன என்று யோசிப்போமானால், கதையின் ஆரம்பத்திலிருந்தே வாசு எப்படிப்பட்டவன் என்பதை நாம் உணர்ந்துகொள்ள பலவற்றை கதையினுடான போக்கில் சொல்லிச் செல்கிறார் இ.பா.

மகள் கமலி சிக்னலை மதிக்காமல் போக எத்தனிக்கும்போது, எல்லோரும் அப்படித்தான் செல்கிறார்கள் என்று அவள் சொல்லும்போது, ”ஒருவர் தவறு செய்தால் அனைவரும் செய்ய வேண்டுமா?” என்கிறான். பிறகு அவன் பிடிக்க நினைக்கும் ஆட்டோவை வேறு ஒரு பெண் பிடிக்க, விட்டுக்கொடுக்கிறான். ஆட்டோக்காரர்கள் எப்படியெல்லாம் மீட்டரில் ஏமாற்றுகிறார்கள் என நினைத்து, ஒருவன் முழுநேரமும் ஏமாறாமல் இருக்கவேண்டும் என்ற ஜாக்கிரதை உணர்வுடனே வாழ்வது எப்படி என்று அவனுள் எழும் கேள்வி ஆகிய எல்லாமே அவன் எப்படிப்பட்டவன் என்பதை நமக்கு உணர்த்திவிடுகிறது. மேலும் கதை முழுதுமே அவனுள் இப்படியாக எழும் எண்ணற்ற கேள்விகள் இப்பங்கை சிறப்பாக ஆற்றுகின்றன. கதையைப் படித்து வருகையில் எதர்க்காக இப்படியான கேள்விகள் என்ற யோசனையும், அவைகள் கதையில் துருத்திக் கொண்டிருப்பதான ஒரு உணர்வையுமே ஆரம்பத்தில் நமக்குத் தருகிறது. ஆனால் முழுக்கதையையும் படித்தபின்னரே அவற்றி்ன் பொருந்திப்போகும் தன்மை விளங்குகிறது.

அனைத்துக்கும் மேலாக, அந்த இக்கட்டான நிலையிலும் தன்னோடு கல்லூரியில் படித்த மூர்த்தி காரில் வரவும், அவன் கூப்பிட்டும், செல்ல மறுத்துவிடுகிறான். தான் வேலை பார்க்கும் இடத்தில் அவன் தன்னைக் கருவியாய் பயன்படுத்திக் கொண்டுவிடுவான் என்பதால் அவனை தவிர்க்கிறான்.  இறுதியில் நடந்து போவது என்று தீர்மானித்து நடக்கவும் தொடங்கும் போது அவன் மன உறுதியையும் அவனையும் நாம் புரிந்துகொள்கிறோம்.

இ.பா.வின் தொலைவு என்ற இக்கதை ஒரு அற்புதமான கதை. முதல்வாசிப்பில் இக்கதையை நாம் புறக்கணித்து விடக்கூடும். ஆனால் மறுவாசிப்பில் இக்கதையின் அழகையும் நுட்பத்தையும் நாம் உணர முடியும்.

3. தி.ஜாவின் துணையும் இ.பாவின் வழித்துணையும்

தி.ஜாவின் துணை கதை சொல்வது:

பென்சன் வாங்கும் லேடிக் கிழவரின் குடும்பம் ஐந்து தலைமுறையை தாண்டி வாழ்ந்து வருகிறது. இந்த வயதிலும் அவர் வலுவுடனும், ஆரோக்கியமாகவும் இருக்கிறார். ஆனால் அவரின் பேரனுக்கு பேரன் உடல் வலிமை இவர்களைவிட மோசமாகவே இருக்கிறது. ஒரு நாள், பக்கத்து வீட்டிலிருக்கும் வாலிபன் ஒருவன், மஸ்டர் நாளான அன்று லேடிக் கிழவரையும் அவர் மகனையும் பென்சன் அலுவலகத்திற்கு அழைத்துப்போகிறான். ஆனால் வரும் வழியில் வண்டி குடைசாய்ந்துவிட வாலிபன் அடிபடுகிறான். அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கட்டு போட்டு அழைத்துவருகிறார்கள் கிழவர்கள் இருவரும். துணையாய் சென்றவன் இவர்கள் துணையோடு வீடு திரும்புகிறான் என்பதுதான் கதை.

தி.ஜாவின் இந்தக் கதை, அந்தக்கால மனிதர்களின் உடல் வலிமையோடு ஒப்பிடும்போது தற்கால தலைமுறையினரின் உடல் பலவீனமாக இருக்கிறது என்பதைப் பற்றி மட்டும் பேசவில்லை. இப்படியே போனால், அடுத்தடுத்த தலைமுறை எப்படி இருக்கும் என்ற கேள்வியை நம் மனதில் எழச்செய்து, மொத்த மானிடமும் எதிர்கொள்ளும் பெரும்பிரச்சினையாக இது வருங்காலத்தில் இருக்கும் என்பதைப் பற்றிய தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார். இது வெறும் உடல் வலுவை மட்டும் சார்ந்ததல்ல. நம் இயற்கை வளங்களும், அவற்றை நாம் பாதுகாக்கத் தவறிவருவதும், செயற்கையான ரசாயனத்தின் மூலம் நம் தொன்மையான விவசாயத்தை பாழடித்து வருவதுமான பல விசயங்கள் இதில் சம்பந்தப்பட்டிருக்கின்றன.  நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய ஐம்பூதங்களுக்கும் நம் உடலின் ஐம்புலன்களுக்கும் தொடர்பு உண்டு. எனவே நாம் இந்த ஐம்பூதங்களில் ஏற்படுத்திவரும் அழிவு பூமியை அழிப்பதோடு, நம் உடலில் இருக்கும் ஐந்து புலன்களையும் சிதைத்து, நம்மை வலுவற்றவர்களாக ஆக்கிவருகிறது. மனிதனின் உடல் மட்டுமல்ல இந்த பூமியின் மீதுள்ள எல்லாமும் சீரழிந்துவருகிறது என்பதை இதன் மூலமாக நம்மை உணரச் செய்துள்ளார் தி.ஜா.

இ.பாவின் வழித்துணை கதைக்கு வருவோம்.

சரபசாஸ்திரிகளின் மகன் ஹரிஹரன் ஐ.ஏ.எஸ். முடித்து உயர் பதவியில் இருக்கிறான். அவன் அலுவலகத்தில் நடராஜன் ஆபீஸ் குமஸ்தாவாக பணிபுரிகிறான். ஊரிலிருந்து நடராஜனை பார்க்கவரும் அவன் அப்பா இறந்துபோகிறார். அதற்காக சரபசாஸ்திரிகள் இறுதிக் காரியங்களைச் செய்துவைக்கிறார். இது  தெரிந்து ஹரிஹரன் தன் அப்பாவின் செயலால் தனக்கு அவமானம் என்று நினைக்கிறான். அவரிடம் சண்டைபிடிக்கிறான். நடராஜனின் அப்பாவின் தயவால்தான் தான் இவ்வளவு தூரம் முன்னேறியிருக்கிறோம் என்பதை தன் மகன் மறந்துவிட்டான் என்றும், தான் நடராஜனின் அப்பாவுக்கு செய்த வைதிகக் காரியங்களை தன் மகன் அவமானமாக நினைக்கிறான் என்றும் சரபசாஸ்திரிகளுக்கு வருத்தம் ஏற்படுகிறது. மன வருத்தத்துடன் வெளியே நடக்கிறார். அப்போது வழியில் எதிர்படும் தன் ஊரைச்சேர்ந்த இரத்தினவேலுவை பார்க்கிறார். தான் செய்துவந்த நாவிதர் தொழிலைத் தன் மகன் கௌரவக்குறைச்சலாக நினைப்பதாகவும் அதனால் தனக்கு இங்கே இருக்க பிடிக்கவில்லை என்றும் ஊருக்கே போவதாகவும் சொல்கிறான் அவன். அதைக்கேட்ட சாஸ்திரிகள் தனக்கும் சேர்த்து ஒரு டிக்கட் எடுக்கும்படியும், தன் பயணத்துணைக்கு வழித்துணையாயிற்று என்றும் சொல்கிறார்.

சரபசாஸ்திரிகள் இரத்தினவேலு இருவரின் மகன்களும் தன் தந்தை செய்யும் தொழிலை அகௌரவமாக நினைக்கக் காரணம் என்ன? இருவருமே மனதளவில் தங்கள் தந்தையின் தொழில் இது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாத கோழைகளாக இருக்கிறார்கள். பிறர் என்ன சொல்வார்களோ என்று, மற்றவர்களின் அபிப்ராயத்திற்கு அவர்கள் மனம் பயப்படுகிறது. இது அவர்கள் மனதின் வலுவில்லாமையையே காண்பிக்கிறது.

ஆக, தற்கால தலைமுறையின் இரண்டு பலவீனங்களைப் பற்றி இவ்விரண்டு கதைகளும் சித்தரிக்கின்றன. தி.ஜா. உடல் பலவீனத்தையும், இ.பா. மனதின் பலவீனத்தையும் காட்டுகிறார். இந்த இரண்டு பலவீனங்களும் இன்றைய மனித வாழ்க்கையைப் பெரிதும் கலங்கடித்து வருகிறது என்பது நிதர்சனமான உண்மை.  மனிதன் முழுமையடையவும், எதிர்காலம் சிறப்பாக அமையவும் இந்த இரு பலவீனங்களும் களையப்படவேண்டும்.

(திருத்திய மறுபிரசுரம்)

Vazhithunai by Kesavamani TP

Related Posts Plugin for WordPress, Blogger...