June 22, 2016

அ.முத்துலிங்கத்தின் 'கடவுச்சொல்': தலைமுறை இடைவெளி

நான் சமீபத்தில் படித்த சிறுகதைகளில் அ.முத்துலிங்கத்தின் கடவுச்சொல் ஒரு நல்ல கதை. மாறிவரும் மனித வாழ்க்கையில் முதியோரின் பங்கு என்ன என்பதை, மிகச் சுருக்கமாக மட்டுமின்றி அழுத்தமாக, தனக்கேயான பாணியில் இந்தக் கதையைப் படைத்திருக்கிறார் முத்துலிங்கம். பொதுவாக அவர் கதைகளில் காணும் சிறப்பம்சம், எத்தனை முறை வாசித்தாலும் அவைகள் ஒருபோதும் சலிப்பதில்லை என்பதுதான். அதற்கு கடவுச்சொல் கதையும் விலக்கல்ல. பலரும் பலவிதமாக இந்தக் கதையை அணுகலாம். ஆனால் முத்துலிங்கம் கதைக்கு சூட்டியிருக்கும் தலைப்பு மிக முக்கியமானது. அதையொட்டி இந்தக் கதையை வாசிக்கும் போதுதான் இந்தக் கதையின் அழகும், வீச்சும் புலப்படும்.

காதல் திருமணம் செய்துகொண்ட தன்னுடைய மகளின் வீட்டில் இருக்கும் சிவபாக்கியம், மகள் தன்மீது அதிருப்தி கொண்டதால், முதியோர் காப்பகத்திற்கு அனுப்பப்படுகிறார். ஐந்து வருடங்களாக மகளும் அங்கே வந்து அவரைப் பார்க்கவில்லை.  அளவுக்கு அதிகமான வசதிகளும், தேவைகளும் கொண்ட அந்தக் காப்பகத்தில் சிவபாக்கியத்துக்கு எந்தக் குறையும் இல்லை. ஆனாலும் அவரால் சந்தோஷமாக இருக்க முடியவில்லை. இந்நிலையில், 9 வயதில் விட்டுவிட்டு வந்த அவர் பேரன் ஆப்பிரஹாம், 14 வயதில் அன்று அவர் எதிரே வந்து நிற்கிறான். இருவரும் சந்தோஷமாக அன்றைய தினத்தைக் கழிக்கிறார்கள். அதன் பிறகு அவன் அங்கிருந்து தன் வீட்டிற்குச் செல்கிறான்.

மகளுக்கு சிவபாக்கியத்தின் மீது ஏன் அதிருப்தி ஏற்பட்டது என்பதை சில சம்பவங்களின் மூலம் விளக்குகிறார் முத்துலிங்கம். உண்மையில் யோசிக்கும்போது அந்த சம்பவங்கள் சிவபாக்கியத்தின் மீது அதிருப்தி கொள்ள போதுமானவை அல்ல என்றே சொல்லலாம். அப்படியிருந்தும் அவரது மகள் உள்ளத்தில் சதா இருந்துகொண்டிருக்கும் பய உணர்வின் காரணமாக, நடக்கும் சம்பவங்களை, தனது தாய் மீதான வெறுப்புக்கு ஆதாரமாக மாற்றிக்கொள்கிறாள். தனது சிறுவயதில் அவளது தாய் பிறரது வீட்டில் வேலைசெய்தது அவள் உள்ளத்தில் பசுமையாக பதிந்துவிடுகிறது. எனவே தாயைக் காரணமாக வைத்து, தனது காதல் திருமணத்தில் விரிசல் வந்துவிடுமோ என அஞ்சுகிறாள். ’அம்மா, நீங்கள் முழங்காலில் உட்கார்ந்து இன்னொருவர் வீட்டு தரையை துடைப்பதுதான் என் சிறுவயது ஞாபகம். அந்த நிலை எனக்கு வந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது.’ என்றும் ‘அம்மா, உனக்கு அறிவு கெட்டுப் போச்சா? எங்கள் வீட்டை நாசமாக்க வந்தாயா?’ என்றும் எல்லோர் முன்னிலையிலும் அவள் கத்துவதும் அவளுள் உறையும் அச்சத்தினால்தான்.

ஆக கணவனுக்கும் சரி, மனைவியிக்கும் சரி, திருமணத்திற்குப் பின் தங்களது தாய்-தந்தையரால் தங்கள் வாழ்க்கைக்கு குந்தகம் வந்துவிடுமோ என்ற அச்சம் இன்றைய காலகட்டத்தில் மிக அதிகமாக குடும்பங்களில் நிலவுகிறது. அதன் அடிப்படைக் காரணம் தலைமுறை இடைவெளி என்ற சிக்கல் இன்று பூதாகராமாக வளர்ந்திருப்பதும், அந்த இடைவளியை இயல்பானது என்று எடுத்துக்கொள்ளத் தவறுவதும்தான். அந்த இடைவெளியை பெற்றோர்களின் மூடத்தனம் என்பதாக எடுத்துக்கொண்டு, அதனால் தாங்கள் பாதிக்கப்பட்டுவிடுவோம் என்று கணவன் மனைவிகள் அஞ்சுகிறார்கள். எனவே முதியோர்கள் புறக்கணிக்கப்பட்டு, காப்பகங்களில் சேர்க்கப்படுவது அதிகரித்து வருகிறது. கலாச்சாரங்கள் வேறுபடும்போது இந்தச் சிக்கல் மேலும் அதிகரிக்கிறது. அதுவே இங்கு சிவபாக்கியத்திற்கு நிகழ்கிறது.

சிவபாக்கியத்தின் மகள், கடந்த ஐந்து வருடங்களாக அவரை நேரில் வந்து பார்க்கவில்லை என்பதும், ஆனால் அவரது பேரன் அவரைப் பார்க்க வருகிறான் என்பதும் நுட்பமாக கவனிக்க வேண்டியவை. ஏனெனில் மகனுக்கும் தாய்-தந்தைக்குமிடையே ஏற்படும் இடைவெளியை பேரன் அவனது தாத்தா-பாட்டியிடம் நிறைவு செய்து கொள்கிறான். கணவன்-மனைவி இருவரும் தங்கள் தாய்-தந்தையரிடையே ஏற்படும் இடைவெளியை நிரப்ப திராணியற்றவர்களாகும் போது, தங்கள் குழந்தைகளுக்கிடையேயும் அந்த இடைவெளியைக் காண்கிறார்கள். ஆனால் அந்த இடைவெளியை மிகச் சுலபமாக சரிசெய்ய அந்தக் குழந்தைகளின் தாத்தா-பாட்டியால் முடிகிறது. இதுவே ஆப்பிரஹாமை அவனது பாட்டியிடம் கொண்டு சேர்க்கிறது.

ஆப்பிரஹாம் தனது பாட்டியை அன்பின் காரணமாக பார்க்க வந்தானா அல்லது தேவையின் பொருட்டு வந்தானா என்ற கேள்வியை நாம் கேட்டுக்கொள்ளும் போது இந்தக் கதை நம்முள் நிகழ்த்தும் பாய்ச்சல் அபாரமானது. ஏதேதோ சம்பவங்கள் சிவபாக்கியத்தை காப்பகத்தில் கொண்டு சேர்த்திருந்தாலும், உச்சமாக நடந்தது, சிவபாக்கியம் ஆப்பிரஹாமுக்கு இறால் உணவைக் கொடுத்தாள் என்பதுதான். யூதர்களுக்கு இறால் தள்ளிவைக்கப்பட்ட உணவு என்பதால், ’எங்கள் குடும்பத்தை பிரிப்பதற்குத்தான் நீ வந்திருக்கிறாய். உன்னைப்போல என்னையும் வெகு சீக்கிரத்தில் வீடு கூட்ட வைத்துவிடுவாய்’ என்று கத்துகிறாள் மகள். இப்போது தனது பாட்டியைத் தேடி வரும் ஆப்பிரஹாம், இறால் செய்து தரும்படி கேட்டு விரும்பிச் சாப்பிடுகிறான்! தனது தாய்-தந்தையருக்குத் தெரியாமல் பாட்டியைப் பார்க்க வந்திருக்கிறான்!

பாவமன்னிப்பு கோரி தனது அப்பாவும் அம்மாவும் கோயிலுக்குப் போயிருக்கும் நேரத்தில் ஆப்பிரஹாம் தனது பாட்டியைப் பார்க்க வருகிறான். அவன் உள்ளத்தில் பாட்டியைத் தனியாக விட்டுவிட்டோம் என்ற குற்ற உணர்வு எழுந்ததால் பாட்டியைப் பார்க்க வந்திருக்கிறான் எனக்கொண்டால், நம்முள் முந்திய மனப்பாய்ச்சலுக்கும் முற்றிலும் மாறான வேறோர் பாய்ச்சல் நிகழ்கிறது! முதியோர்களை காப்பகத்தில் தவிக்கவிட்டுவிட்டு, பாவத்தை நீக்க கோயிலுக்குச் சென்றால், எந்த தெய்வமாவது மன்னிப்பு வழங்குமா என்ன? ஆனால் மனிதர்கள் தாங்கள் செய்வது அனைத்தையும் செய்துகொண்டுதான் இருப்பார்கள் ஆனால் தெய்வம் மட்டும் அவர்களைக் காப்பாற்ற வேண்டும்!. எத்தகைய மனிதர்கள் நாம்! செய்யக்கூடாததை செய்யாமல் விட்டாலே தெய்வம் அவர்களைக் கடைத்தேற்றி விடாதா என்ன?

சிவபாக்கியத்துக்கு எந்தக் குறையையும் அவளது மகள் வைக்கவில்லை என்பது உண்மைதான் என்றாலும், கிளியைக் கூண்டில் அடைத்து பாலும் பழமும் கொடுத்து என்ன புண்ணியம்? கூண்டில் அடைக்கப்பட்ட கிளியாக மட்டுமின்றி, புறக்கணிக்கப்பட்டவளாகவும் தன்னை சிவபாக்கியம் உணர்வதே அவளை அதிகமும் வேதனையில் ஆழ்த்துகிறது. கடவுச்சொல்லை நாம் பாதுகாப்பாக, பத்திரமாக வைத்திருப்போம் ஆனால் அதை யாரிடமும் பகிர்ந்துகொள்ள மாட்டோம். தேவைப்படும் போது மட்டுமே அதைப் பயன்படுத்துவோம். அதே போன்ற ஒரு நிலையில்தான் சிவபாக்கியம் இருக்கிறாள். மனிதர்கள், குறிப்பாக முதியோர்கள் கடவுச்சொல்லாக மட்டுமே பயன்படுத்தப்படும் அவலத்தை முத்துலிங்கம் இந்தக் கதையில் மிகச்சிறப்பாக படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்.

முத்துலிங்கத்தின் இந்தக் கதைக்கான பதிவை எழுதும் இத் தருணத்தில் நான் முன்னர் எழுதிய “எஞ்சியிருக்கும் இடைவெளி” எனும் கவிதை நினைவில் எழுகிறது.

என்
ஒவ்வொரு அசைவிலும்
செயலிலும் வார்த்தையிலும்
குற்றம் சொல்வதே
இப்போதெல்லாம்
உனது முழுநேர வேலை.

எனக்கு
உன்மீதும் உனக்கு
என்மீதும் நேசம்
இருந்ததற்கும் இல்லாமற்போனதற்கும்
இடையே
இப்போது எஞ்சியிருப்பது
இடைவெளி மட்டுமே.

உனக்கும் எனக்குமிடையே
நேசம் தொலைந்த பிறகும்
தொடரும் இந்த பந்தம் எதற்காக
வேறு யாரைவிடவும்
நான் என்னையும்
பிறரையும்
புரிந்துகொள்ள உதவியது
நீதான் என்பதாலா.

ஒன்று சொல்கிறேன்:
நம் இருவருக்குமிடையே
உள்ள இடைவெளியை
நாளும் விஸ்தரிப்பவர்கள்
ஒருபோதும்
நீயோ அல்லது நானோ அல்ல
அடுத்தவர்தான்
என்பதை மறந்துவிடாதே.

எந்த இரு உறவிலும் இடைவெளி ஏற்படுவதற்குப் பெரிதும் காரணமாக இருப்பது மற்றவர்கள்தான் என்பதை இந்தக் கதையும் ஒருவகையில் நமக்குப் புரியவைக்கிறது.

Related Posts Plugin for WordPress, Blogger...