வாசிப்பின் பேரின்பம்!


புத்தக வாசிப்பிற்கு ஈடான இன்பம் உலகில் ஏதுமில்லை! புத்தகங்களில் மூழ்கித் திளைத்திருப்பதை அதனால்தான் இலக்கிய இன்பம் என்கிறார்கள். உலகில் நாம் அனுபவிக்கும் மற்றைய இன்பங்கள் அவை அனுபவிக்கும் காலத்திலேதான் இன்பத்தைத் தரும் ஆனால் இலக்கியம் வாசிக்கும் காலத்தில் மட்டுமில்லாது வாசித்ததை நினைக்கும் எக்காலத்திலும் இன்பத்தை கொடுப்பது. எனவே அது சிற்றின்பம் அல்ல மாறாக பேரின்பமாக உள்ளத்தில் என்றென்றும் நிலைத்து நிற்பது. அந்த இன்பத்தை அனுபவிக்கும் பொருட்டு நாம் சில இன்னல்களைப் பொருத்துக்கொண்டுதான் ஆகவேண்டும். இதை ஏன் சொல்கிறேனென்றால் புத்தகங்களை வாங்குவது மட்டும் போதுமானது அல்ல அதைத் தக்கவாறு பாதுகாப்பதும், செல்லும் இடங்கள்தோறும் கொண்டு செல்வதும் அவ்வளவு எளிதானதல்ல. அதற்கு அளவற்ற பொறுமையும், சகிப்புத்தன்மையும் வேண்டும்.

நான் சமீபத்தில் வீடு மாற்றியபோது, “ஏன் இவ்வளவு புத்தகங்களை வாங்கினேன்?” என்று சோர்ந்துபோகும் அளவிற்கு நொந்துபோனேன். அனைத்தையும் அட்டைப் பெட்டிகளில் கட்டி, அவற்றை சேதமின்றி கொண்டுசேர்ப்பதற்குள்  தாவு தீர்ந்துவிட்டது. இதைவிடவும் ஓர் அருமையான சந்தர்ப்பம் மனைவிக்கு கிடைக்கவா போகிறது? “சொன்னா கேட்டாத்தானே?” என்று ஆரம்பித்து சொல்ல நினைத்த அனைத்தையும் கொட்டித் தீர்த்துவிட, என்னுடைய உடல்வலியும் சோர்வும் பலமடங்கு அதிகரித்தது. நான் இதற்காக விவாதங்களில் ஈடுபடுபவனல்ல. நான் சொல்வது ஒரே ஒரு வாக்கியம்தான். அது அவளுக்கே தெரியும். எனவே, “கேட்டா, நாம இதுவரை சாப்பிட்ட அரிசி மூட்டையை அடுக்கினால் இந்த அறை நிறைந்துவிடும்” என்பீர்கள் என்று அவளே பதிலையும் முணுமுணுத்தாள். ஆனால் இந்த மனைவிகள் தங்களது சமையலறை பாத்திரங்களும், உடைகளும் பன்மடங்கு பெருகியிருப்பதை ஒரு பொருட்டாகவே கருத மாட்டார்கள்!

தி இந்து தமிழ் நாளிதழில் “புத்தகம் ஏன் சக்களத்தர் ஆகிவிடுகிறது?” எனும் தலைப்பில் சமஸ் எழுதியிருந்த கட்டுரையில், “ஒரு விஷயம் தெளிவு, பத்திரிகைகள், புத்தகங்கள் படிப்பது அனாவசிய செலவீனம் என்று நம் பொதுப் புத்தியில் எங்கோ ஆழமாகப் பதிந்திருக்கிறது. எத்தனையோ முறை ரயில்களில் படித்துவிட்டு, வீட்டுக்குப் பயந்து அப்படியே புத்தகங்களை விட்டுச்செல்லும் ஆண், பெண்களைப் பார்த்திருக்கிறேன். தொலைக்காட்சியைத் திறந்தால் விதியழிந்தும் ஆபாசமாகவும் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் குப்பை கொட்டுகிறது. வீடுகளில் எந்தக் கணவன் மனைவிக்கும் இருவரும் சேர்ந்தோ, இருவரில் ஒருவர் தனித்தோ தொலைக்காட்சி பார்ப்பதில் யாருக்கும் எந்தச் சிக்கலும் இல்லை. அதே வீடுகளில் கணவனோ, மனைவியோ ஒரு மணி நேரம் புத்தகம் வாசிப்பது பல குடும்பங்களில் இன்றைக்கு சிலாக்கியமான காரியம் இல்லை. புத்தகம் சக்களத்தர் ஆகிவிடும்!” என்று குறிப்பிட்டிருந்தார்.


சமஸ் சொன்னது எவ்வளவு உண்மை என்பதை புத்தகத்தை நேசிக்கும் பலரும் அறிந்திருப்பார்கள். ஆக, நாம் ஒவ்வொரு முறையும் கையில் வாங்கிய புத்தகத்தோடு போர்க்களம் புகும் வீரனைப்போல, வசைகளை மார்பில் தாங்கிய விழுப்புண்ணாகக் கருதி, செவிடன் காதில் ஊதிய சங்காக எதையும் பொருட்படுத்தாமல், மேலும் மேலும் முயற்சியோடு புத்தகங்களை சலியாது வாங்க சங்கல்பம் செய்துகொள்ள வேண்டும். ஒரு போதும் மனம் தளரக்கூடாது! புத்தகங்களைப் பல பெட்டிகளாக் கட்டி, சில பெட்டிகளை ஊருக்கு அனுப்பிவைத்தேன். மேலும் ஒரு பெட்டி புத்தகங்களை என் நெருங்கிய நண்பருக்கு லாரியில் அனுப்பிவைத்தேன்! நண்பர் என்ன பாடுபடப் போகிறார் என்பதைக் கற்பனையில் கண்டு ரசித்தேன்!

தற்போது இருக்குமிடத்திலும் சரி, ஊரிலும் சரி, அவற்றை ஒழுங்குபடுத்தி அடுக்குவது மனக்கிளர்ச்சி தருவதாக இருந்தது. சுற்றிலும் புத்தகங்கள் அதன் நடுவே நான். மங்கையர் சூழ அமர்ந்திருந்த கிருஷ்ணனின் மனநிலையில் இருந்தேன்!  அவற்றை வாஞ்சையுடன் தடவிக்கொடுத்து, மேலே படிந்திருந்த தூசுகளைத் துடைத்து அவற்றுக்கு உரிய இடத்தில் அவற்றை சேர்த்தபோது மனதில் ஓர் அபரிமிதமான நிறைவு ஏற்பட்டது. எந்தப் புத்தகத்தை எந்த இடத்தில் வைப்பது என்பதைத் தீர்மானித்து அவற்றை அடுக்கும்போது, அவற்றைப் படித்த நினைவும், அவை ஏற்படுத்திய தாக்கமும் மனதில் எழ, “புத்தகங்களை வாங்காமல் இருப்பதைப்போன்ற குற்றம் வேறொன்றுமில்லை” என்று தோன்றியது. அப்படித் தோன்றிய அந்தத் தருணம் புத்தகங்களை வாசிப்பதிலுள்ள பேரின்பத்தை முழுதுமாக உணரச்செய்தது.

Related Posts Plugin for WordPress, Blogger...