June 14, 2016

சா.கந்தசாமியின் சாயாவனம்: இயற்கையோடு தோழமை

சாயாவனம் அடர்த்தியான மரங்களும் செடிகளும் மூங்கில்களும் நிறைந்த பிரம்மாண்டமான தோப்பு. சூரியனின் ஒளி கூட நிலம் பார்க்க முடியாமல் அவ்வளவு அடர்ந்த தோப்பு. தோப்பை நிர்மூலமாக்கிவிட்டு அங்கே கரும்பு ஆலை வைக்க உத்தேசிக்கிறான் சிதம்பரம். அது தனக்கு உபயோகப்படாத தோப்பு என ஐயர் அவனுக்கு விற்றுவிடுகிறார். ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவிக்கும் சிவனாண்டித் தேவர், சிதம்பரம் கொழும்புவுக்கு போன தன் தூரத்து தங்கை காவேரியின் மகன் என்று அறிந்து அவன் மீது நேசம் கொள்கிறார். அவனோடு சேர்ந்து தோப்பை அழிக்கும் முயற்சியில் உதவுகிறார். அழிக்க முடியாத பெரும் பலத்தோடு இருக்கும் அந்த தோப்பை மனிதர்கள் போராடி அழிக்கும் கதை இது. அதை அழிக்க அவர்கள் போர் தந்திரத்தின் நுட்பத்துடன் செயல்படுவதாகக் காட்டும் கந்தசாமி, அது இயற்கைக்கு எதிராக மனிதர்கள் நடத்தும் போர் என்பதற்காகவே அவ்வாறு காட்டுகிறார். அவற்றை அழிக்கும்போது அவர்களுக்கு குற்றவுணர்ச்சி ஏதும் ஏற்படாதது, அவர்களின் வடித்தெடுத்த சுயநலத்தையும், காலத்தின் கோலத்தையுமே காட்டுகிறது.

மிகுந்த பிரயாசைக்கிடையே தோப்பை அழித்துவரும் சிதம்பரம் அங்கே இருப்பதற்காக சிறு வீட்டைக் கட்டுகிறான். எவ்வளவுதான் முயன்றும் தோப்பை அழிப்பது அப்படியொன்றும் சுலபமான காரியமாக இல்லாமல்போகவே, தீ வைக்க முடிவு செய்கிறான். அவனும் தேவரும் சேர்ந்து தீ வைக்கிறார்கள். தீ பன்னிரெண்டு நாட்களுக்கு மேல் எறிந்து எல்லாவற்றையும் நாசம் செய்கிறது. தக்கவைத்துக் கொள்ள எண்ணிய புளியமரங்களும், மூங்கில் மரங்களும், சிதம்பரம் கட்டிய புதிய வீடும் தீக்கு இரையாகிறது. மாடுகள் இரண்டும் கூட பலியாகின்றன. இதனால் இருவர் மனங்களும் சற்றே சஞ்சலப்படவே செய்கின்றன. ஆட்களின் பற்றாக்குறையால், வெளியூரிலிருந்து ஆட்களைக் கூட்டிவருகிறான் சிதம்பரம். வேலைகள் துரிதகதியில் நடக்கிறது. இதற்கிடையே தேவர் வீட்டைக் கட்டிமுடிக்கிறார். சிதம்பரம் சொன்னதின்படி தன் தோட்டதில் கரும்பு பயிரிடுகிறார். அவர் பேத்திக்கும் திருமணம் நடக்கிறது. சிதம்பரம் ஆலை அமைத்து கரும்பிலிருந்து வெல்லம் எடுக்கிறான். இத்தனை நாள் சாயாவனத்தின் புளியைப் பயன்படுத்திய அவர்களுக்கு வெளியூர் புளி திருப்தியாக இல்லாமலிருக்கிறது.

இன்றய மனித வாழ்க்கை சுயநலத்தின் மொத்த உருவமாக மாறிவிட்டிருப்பது துயரத்திற்குரியது. யாருக்கும் யாரைப்பற்றியும், எதைப்பற்றியும் கவலைப்படாத சுயநலம். சக மனிதர்களிடமே சுயநலத்தோடு இருக்கும் மனிதன் ஐந்தறிவு உயிர்களான மரம், செடி, கொடிகள் மீது எவ்வாறு பொதுநலத்தோடு இருக்க முடியும்? அவைகள் உயிருள்ளவை என்ற உணர்வு கூட நமக்கு இல்லாமல் போனதுதான் மிகக் கொடுமையானது. மனிதம் பெருகப்பெருக இயற்கை வளங்கள் அழிகின்றன. அவற்றை பெருக்கும் முயற்சிகள் சொற்பமானதாகவே ஒருபுறம் நடக்கிறது. ஆனால் மறுபுறம் அவற்றைவிட வேகமாக அழிவு நடந்தேறிக் கொண்டிருக்கிறது. அதைப் பற்றிய ஒரு சிலரின் கூக்குரல் பெரும் திரளான கூட்டத்தின் மத்தியில் காணாமல் போய்விடுகிறது. மரம் செடி கொடிகளோடு அவற்றை சார்ந்து வாழும் எத்தனை எத்தனையோ நுண்ணுயிர்கள் சாகடிக்கப்படுகின்றன. அவைகள் உயிரினங்களாகவே நம்மால் மதிக்கப்படுவதில்லை என்பது இன்னும் பெரிய சோகம். இயற்கையை அழிக்கும் நம் நடவடிக்கையால்தான், அவ்வப்போது இயற்கையும் சீற்றம் கொண்டு நம்மை அழிக்கிறதோ என்று எண்ணத் தோன்றகிறது.

சாயாவனம் நமக்குச் சிரமம் தராத எளிமையான நாவல். இருந்தும், நாவலில் பல நுட்பமான பதிவுகள் உள்ளன. அவை மனிதன் இயற்கையை எவ்வாறு புறந்தள்ளுகிறான் என்பதைக் காட்டுவதாக அமைகின்றன. நாவலின் ஆரம்பத்திலேயே மனிதனின் காலடிச் சுவட்டினால் ஏற்பட்ட, தோப்புக்குச் செல்லும், ஒற்றையடிப் பாதையைப் பற்றிய விவரிப்பினால், மனிதன் தான் தடம் பதித்த இடத்தில் புல் பூண்டை இல்லாமல் அழித்துவிடும் இயல்புடையவன் என்பதைக் குறிப்பால் சொல்லிவிடுகிறார் சா.கந்தசாமி.

தனது தோப்புக்கு பழமையான கதைகள் சொல்லும் ஐயர், அதன் முக்கியத்துவத்தை பணத்தாலேயே மதிப்பிடுகிறார். இல்லையெனில் அவர் தோப்பை விற்பதேன்? தான் புதிதாகக் கட்டிக்கொண்டிருக்கும் வீட்டை, தேவர் சிதம்பரத்துக்குக் காட்டி பெருமைப்படுகிறார். சிதம்பரம் மட்டும் தோப்பை அழிக்கவில்லை, தன் வீட்டைக் கட்டுவதன் மூலம் தேவரும் அதையேதான் செய்கிறார். தேவர் மட்டுமல்ல மனிதர்கள் அனைவரும் அதையேதான் செய்கிறார்கள் என்பதை நாம் நுட்பமாக விளங்கிக் கொள்ளவேண்டும்.

தன் ஊரில் இருக்கும் தோப்பு தேவருக்கு அந்நியமாகிவிட்டது. ஆனால் எங்கிருந்தோ வந்த சிதம்பரம் சொந்தமாகி விடுகிறான். தேவர் பேத்தியின் திருமணம் நடப்பதின் மூலம், தன் இனத்தை விருத்திசெய்ய விழையும் மனிதன், இயற்கையின் விருத்தியை அழிப்பது கேள்வியாக்கப் படுகிறது. இவையெல்லாம் இயற்கைக்கு எதிரான மனிதர்களின் மனோபாவத்தையே காட்டுகிறது. எது இருந்தால் நாம் இருப்போமோ அதைத் தக்கவைத்துக் கொள்ளும் சிற்றறிவு கூட மனிதர்களுக்கு இல்லாமல் போய்விட்ட துயரத்தை நாம் நுட்பமாக நாவலில் உணரும் இடங்கள் இவை.

தோப்பு அழிக்கப்படுவதை விரிவாக விவரிப்பதன் மூலம், அதன் ஈடுசெய்ய முடியாத இழப்பை நம் மனங்களில் ஆழப்பதியச் செய்கிறார் கந்தசாமி. இந்நாவலை வாசித்த பின் ஒரு மரமோ, செடியோ, கொடியோ வெட்டும்போது நம் மனம் சற்றே நெகிழுமானால் அதுவே இந்நாவலின் வெற்றி எனலாம். இயற்கையின் மீது தோழமை கொள்வதை நிர்ப்பந்திப்பதே இந்நாவல் நமக்கு அறிவுறுத்தும் செய்தியாகும். அதைப் பிரச்சாரமாக ஆக்கிவிடாமல் கலையம்சத்துடன் கூடிய நாவலாகச் செய்ததுதான் சா.கந்தசாமி எனும் படைப்பாளியின் படைப்பின் திறம்.

(மறுபிரசுரம். முதற்பிரசுரம் ஜனவரி 1, 2013)

Related Posts Plugin for WordPress, Blogger...