விக்தோர் ஹ்யூகோ நாவல் தமிழுக்குப் புதுவரவு!

பிரஞ்சு இலக்கியத்தின் முதன்மையான படைப்பாளி விக்தோர் ஹ்யூகோ. அவரது படைப்புகளில் ஆகச் சிறந்தது “லே மிஸரபில்” என்பது அனைவரும் அறிந்ததே. லே மிஸரபில் நாவலை வாசிக்கும் என்னுடைய ஆசையைக் குறித்து “வாசிப்பின் பெருங்கனவு” எனும் பதிவில் எழுதியுள்ளேன். ஆங்கிலத்தில் அந்நாவலை சுமார் 200 பக்கங்களே படித்த நிலையில் ஹ்யூகோவின் எழுத்தாற்றலை வியந்தும் ரசித்துமிருக்கிறேன். நாவலைப் படித்தவரை எழுதி வைத்திருந்த குறிப்புகள் காணவில்லை என்பதாலும், படிக்காமல் நிறுத்தி பல மாதங்கள் ஆகிவிட்டதாலும் அதை மீண்டும் தொடக்கத்திலிருந்து வாசிக்கவேண்டும் என்றிருந்தேன். ஆனால் தற்போது அந்தக் குறிப்புகள் கிடைத்துவிட்டதை அதிர்ஷ்டம் என்றே சொல்லவேண்டும். விட்ட இடத்திலிருந்து நாவலைத் தொடர இக்குறிப்புகள் பெருமளவு உதவும்.

விக்தோர் ஹ்யூகோவின் படைப்புகள் எனக்குத் தெரிந்து இதுவரை முறையாக தமிழில் வரவில்லை என்றே கருதுகிறேன். இந்நிலையில் க்ரியாவின் வெளியீடாக “மரண தண்டனைக் கைதியின் இறுதி நாள்” எனும் அவரது குறுநாவல் வெளிவந்துள்ளது. 100 பக்கங்களே உள்ள இந்த நாவல் மரண தண்டனைக் கைதி ஒருவனின் இறுதி நாட்களை, அவனது மன அவசங்களைச் சித்தரிக்கிறது. விக்தோர் ஹ்யூகோவின் படைப்புகளை வாசிக்கத் தூண்டுகோளாக மட்டுமின்றி அடிப்படையாகவும் க்ரியாவின் இவ்வெளியீடு அமையும் என்ற வகையில் இந்தப் புத்தகத்தை முக்கியமான ஒன்றாகக் கருதுகிறேன்.

சென்ற வாரத்தில் ஆர்டர் செய்திருந்த “மரண தண்டனைக் கைதியின் இறுதி நாள்” இன்று வந்துசேர்ந்தது. புத்தகத்தை புரட்டியதில் குமரன் வளவனின் மொழியாக்கம் சரளமாக இருப்பதை அறியமுடிந்தது. க்ரியாவின் மொழிபெயர்ப்புகள் எப்போதும் நேரடியாக அந்தந்த மொழியிலிருந்தே மொழியாக்கம் பெறுவதால் நம்பகத்தன்மை மிக்கதும் வாசிப்பிற்கு பெருமதியானதுமாகும். அதற்கு இந்தப் புத்தகமும் விதிவிலக்கல்ல. பக்கங்களைப் புரட்டியதில் கண்ணில் பட்ட பின்வரும் பத்தியால் மொழியாக்கத்தின் நேர்த்தியை அறியமுடிகிறது.
இன்றைய தினம் முடியும்முன் நான் இறந்துவிடுவேன் என்பது உண்மையா? இறக்கப்போவது நான்தான் என்பது நிச்சயமா? வெளியிலிருந்து எனக்குக் கேட்கும், காது அடைக்கும் இந்தக் கூச்சல் சத்தம், நடைபாதையில் வேக வேகமாக ஓடும் மகிழ்ச்சியான மக்கள் கூட்டம், பாசறையில் தயார் நிலையில் இருக்கும் காவலர்கள், கருநிற அங்கி அணிந்த பாதிரியார், கையில் சிவப்பு நிற உறை அணிந்தவன், எல்லாமே எனக்காக! சாகப்போவது நான்தான். இங்கு இருக்கும், வாழும், அசையும், சுவாசிக்கும் நான், வேறு எந்த ஒரு மேஜையைப் போல இருக்கும், வேறு எங்கோகூட இருந்திருக்கக்கூடிய இந்த மேஜையில் அமர்ந்திருக்கும் நான், இதோ நான் தொட்டுப் பார்த்துக்கொள்ளும், உணரும் அந்த நான், இதோ இந்த மடிப்புகளைக் கொண்ட ஆடை அணிந்த அந்த நான், சாகப்போகிறேன்!
1829ல் வெளியான ஹ்யூகோவின் இப்படைப்பு 187 வருடங்களுக்குப் பிறகே தமிழில் நமக்குக் கிடைத்திருக்கிறது என்பது துரதிருஷ்வசமானது என்றாலும் இப்போதாவது கிடைத்ததே என்று மகிழ்ச்சியே அடையவேண்டும். தன்னுடைய படைப்புகளைப் போலவே வசீகரமும் கம்பீரமும் கொண்டவர் ஹ்யூகோ என்பதை அவரது தோற்றமே காட்டுகிறது. முறுக்கிவிட்ட மீசை. கூர்மையான விழிகள். அந்த விழிகளின் கூர்மையே கைகளின் வழியாக எழுத்துக்களில் கூர் ஏற்றுகிறது! அவரை வாசிப்பது ஒரு சவால். அந்த சவாலில் துணிந்து இறங்குபவர்கள் அதிர்ஷ்டசாலிகள்!

தன்னுடைய இந்நாவலைப் பற்றி சொல்லும் ஹ்யூகோ, “மரண தண்டனையைத் தீவிரமாக எதிர்க்கும் ஒரு எழுத்தாளன் சமுதாயம் என்ற நீதிமன்றத்தில் நிகழ்த்தும் வாதம்தான் இந்த நாவல்” என்று குறிப்பிடுகிறார். அந்த வாதம் எத்தகையது என்பதை படித்துப் பார்க்க ஆவலாக இருக்கிறேன். தற்போது இந்திர நீலம் வாசித்துவரும் நிலையில் அதன் இடையாக ஹ்யூகோவின் இந்நாவலை வாசிக்கத் திட்டமிட்டிருக்கிறேன். அப்படி வாசித்தபின் நான் எழுதும் பதிவுக்கு தற்போதைய பதிவை முன்னுரையாகக் கொள்ளலாம்.

Related Posts Plugin for WordPress, Blogger...