தொலைவிலிருக்கும் கவிதைகள்

சுந்தர ராமசாமியின் இத்தொகுப்பு பல்வேறு நாட்டுக் கவிஞர்களது கவிதைகளின் மொழிபெயர்ப்புகளைக் கொண்டது. ஓய்வாக இருக்கும் சமயங்களில் இத்தொகுப்பை அடிக்கடி எடுத்துப் புரட்டுவது உண்டு. அப்படியான பல வாசிப்பில் இக்கவிதைகளைப் படித்து முடித்தேன். மூலக்கவிதைக்கு பங்கம் வராமல் கவிதைகளை மொழியாக்கம் செய்ய சுந்தர ராமசாமி எடுத்துக்கொண்ட கவனமும் அக்கறையும் அபரிமிதமானது. சிறகடித்துப் பறக்கும் பறவையைக் கூண்டில் அடைக்காமலேயே அதன் அழகையும், வண்ணத்தையும் ரசிப்பதோடு குரலையும் கேட்டு இன்புறும் ஆசையின் அதீதப் பிரயத்தனத்தின் வெளிப்பாடு இக்கவிதைகள்.

இந்நூலின் முன்னுரையில், “எவ்வளவு தேர்ச்சி கொண்ட மொழிபெயர்ப்பாளனாலும் நெருங்கவே முடியாத கவிதைகள் இருக்கின்றன. கடினமான கவிதைகள் மட்டுமல்ல, சில எளிமையான கவிதைகள் கூட. அர்த்தத்தைப் பிடித்த நிலையிலும் சில கவிதை வரிகளில், மொழிக்கு வசப்படாமல் நிற்கும் சூட்சுமங்களையும் அழகுகளையும் மொழிபெயர்க்க முடியாமல் போய்விடுகிறது. சமாளிக்கலாம்; ஆனால் சமாளிப்பது நல்ல மொழிபெயர்ப்பாகாது” என்று குறிப்பிடுகிறார் சுந்தர ராமசாமி. ஆக, இவைகள் சமாளிப்புகள் அல்ல ஒரு கவிஞனின் ஆத்மார்த்தமான மொழிபெயர்ப்புகள்.

பட்டுப்போன ஆரஞ்சு செடியின் பாடல் என்ற லோர்க்காவின் கவிதை இவ்வாறு செல்கிறது:

விறகு வெட்டி,
என் நிழலை வெட்டு.
பயனற்ற என்னை நான் பார்த்தபடியிருக்கும்
அவஸ்தையிலிருந்து எனக்கு விடுதலை அளி.
நான் ஏன் பிறந்தேன்
சுற்றிவர கண்ணாடிகள் இருக்க
பகல்பொழுது என்னைச் சுற்றிவருகிறது.
இரவு அதன் ஒவ்வொரு நட்சத்திரத்திலும்
என்னை மீண்டும் படைக்கிறது.
என்னைப் பார்க்காமல்
நான் வாழ விரும்புகிறேன்
பருந்துகளும் எறும்புகளும்
எனது இலைகளும் பறவைகளும் என
நான் கனவு காண்பேன்.
விறகு வெட்டி, வெட்டு என் நிழலை.
பழமற்ற என்னை நான்
பார்த்துக் கொண்டிருக்கும்
சித்ரவதையிலிருந்து
விடுதலை அளி.

வாழ்க்கையில் உபயோகமற்றிருப்பது பெரும் சுமை. இவ்வுலகில் ஜனித்த ஒவ்வோர் உயிரும் ஏதாவது ஒருவகையில் பிறிதோர் உயிருக்கு உபயோகப்படுவது அத்தியாவசியமானது. அப்படி பிறருக்கு உபயோகமில்லாத போது இருப்பதே இம்சையாகி விடுகிறது. ஓர் ஆரஞ்சு செடி தன் உபயோகமற்ற இருப்பை நினைத்து இவ்வாறு கவலைப்படும் போது மனிதன் என்ற ஆறறிவு படைத்தவன் தன் இருப்பு பிறருக்கு உபயோகமுள்ளதாக இருக்கவேண்டும் என்பதில் எத்தனை முனைப்பாக இருக்க வேண்டும் என்பதைப் புரியச்செய்யும் அழகான கவிதை இது.

ழாக் ப்ரெவரின் மலர்ச் செண்டு என்ற அழகான கவிதை இது. சாதாரணமாகத் தெரியும் இந்தக் கவிதையில் வெளிப்படும் துயரம் அளவுகடந்தது. அதை நான் கண்டுகொள்ள இந்தக் கவிதையைப் பலமுறை வாசிக்க வேண்டியிருந்தது. அப்படி வாசித்தபோதே இக்கவிதை தன்னுள் பொதிந்து வைத்திருக்கும் சோகத்தை உணர முடிந்தது.

என்ன செய்கிறாய் நீ சிறிய பெண்ணே
புதிதாய் கொய்த இப் பூக்களை வைத்துக் கொண்டு
என்ன செய்கிறாய் நீ இளம் பெண்ணே
வாடிக் கொண்டிருக்கும் பூக்களை வைத்துக் கொண்டு
என்ன செய்கிறாய் நீ அழகிய மங்கையே
உதிர்ந்து கொண்டிருக்கும் இப் பூக்களை வைத்துக் கொண்டு
என்ன நீர் செய்கறீர் மூதாட்டியே
அழிந்து கொண்டிருக்கும் இப் பூக்களை வைத்துக் கொண்டு.
வெற்றி கொள்பவனை எதிர்நோக்கியிருக்கிறேன்.

இக்கவிதையில் வரும் பெண் ஒருவளே. சிறிய பெண்ணாக இருந்து, இளம் பெண்ணாகி, அழகிய மங்கையாகி பின் மூதாட்டியாக ஆகிவிட்டபோதும் அவளை வெற்றிகொள்பவன் இன்னும் வந்துசேரவில்லை என்பதை அறியும்போது நம் உள்ளம் கனக்காமல் வேறென்ன செய்யும்? அவள் சிறியவளாக இருக்கும்போது பூ புதிதாய் இருக்கிறது. அவள் இளம் பெண்ணாகிய போது பூ வாடிக் கொண்டிருக்கிறது. அவள் அழகான மங்கையான போது பூ உதிர்ந்து கொண்டிருக்கிறது. அவள் மூதாட்டியான போது பூ அழிந்து கொண்டிருக்கிறது. இருந்தும் வெற்றி கொள்பவனை எதிர்நோக்கி பெண் மட்டுமல்ல பூவும் காத்திருக்கிறது.

சிலவற்றை சொல்லாமலே விடுவோம் என்ற முனிர் நியாஸியின் இந்தக் கவிதை, உறவுகளில் எல்லாவற்றையும் சொல்வது அல்ல சொல்லாமல் இருப்பதும் அவசியம் என்பதைச் சொல்கிறது.

சில விஷயங்கள் சொல்லப்படாமல் இருக்கட்டும்
சில விஷயங்கள் கேட்கப்படாமல் இருக்கட்டும்
உன் மனத்தில் இருக்கும் ஒவ்வொன்றையும் நீ சொன்னால்
பின் என்னதான் இருக்கும் உள்ளே?
உன் இதயத்தின் ஒவ்வொரு சொல்லையும் நீ கேட்டு விட்டால்
பின் என்னத்தான் இருக்கும் கேட்க?
மறைக்கப்பட்ட ஒரு சில தர்ம சங்கடங்களை
விட்டுவிடு.
திறவாத அந்த ஜன்னலை
உருவாகாத வண்ண உலகில்
விட்டு விடு.

அமிக் ஹனாஃபியின் பின்வரும் பழக்கம் என்ற கவிதை மனிதனின் பழக்கமும் பிரபஞ்சத்தின் காலமும் எவ்வாறு பிரிக்க முடியாதவாறு பிணைந்திருக்கிறது என்பதைச் சித்தரிக்கிறது.

மாலைப்பொழுது
கூரை வழியாக வீட்டுக்குள் நுழைகிறது
என் மணிக்கட்டில் இருந்து
காலத்தைக் கழற்றுகிறேன்
மேஜையின் மீது அதை நேர்த்தியாக வைக்கிறேன்
சுதந்திர ஆசுவாசப் பெருமூச்சு விட்டு
கனவுகள் நினைவுகள் இவற்றின் துடுப்பை எடுத்து
இருண்ட கருமை சூழ்ந்த நீரில்
என் பார்வையின் தோணியை இழைக்கிறேன்.

பொழுது புலரும்பொழுது என் சிந்தனைத் தோணியில்
சூரியனைச் சுமந்து இங்கு கொண்டு வந்திருப்பேன்
அப்போது என் மணிக்கட்டில்
காலத்தின் கை விலங்குடன்
மாலை வரையிலும்
வெறுப்பூட்டும் அன்றாட வேலைகளை
நிகழ்த்துகிறேன்.

ராபர்ட் க்ரீலியின் அவர்கள் கூறுவது போல் எனும் கவிதை அற்புதமானது. முதல் வாசிப்பில் பிடிபடாத இக்கவிதை இரண்டாவது மூன்றாவது வாசிப்பில் பிடிபடும். அப்படிப் பிடிபடாமல் போனாலும் பராவாயில்லை அதுவும் வாசிப்பவனின் இருப்பைத்தானே உணர்த்துகிறது.

மரத்துக்குக் கீழே சற்று
மென்மையான புல்லில் நான் அமர்ந்தேன்
இரு சந்தோஷமான மரங்கொத்திகள்
என் வருகையால்
கலவரமடைவதை கவனித்தேன்
ஏன் அடையக் கூடாது
எனக்கு நானே நினைத்துக் கொண்டேன்
ஏன் அடையக் கூடாது.

என் இருப்பை உணர்த்துவதே அந்த மரங்கொத்தியின் கலவரம்தானே? அது கலவரம் அடையவில்லையெனில் என் இருப்புக்குப் பொருளில்லை. ஆக, அது ஏன் கலவரமடையக் கூடாது? அப்படிக் கூடுவதுதானே நான் இருப்பதின் அத்தாட்சி. இரண்டு வெவ்வேறு ஸ்தியில் இருக்கும் உயிர்கள் ஒன்றை ஒன்று நெருங்கும்போது கலவரமடைவது இயல்பு. இந்தப் புரிதலோடு கவிதையின் தலைப்பை பிணைக்கும்போது, “என் மீது அவர்கள் குற்றம் சுமத்துவதில் என்ன பொருளிருக்கிறது?” என்ற கேள்வி தொக்கி நிக்கிறது.

பாதையின் நடுவில் என்ற கார்லோஸ் டிரம்மண்ட் டி அன்டரேட் அவரின் கவிதை அழகும் நுட்பமும் கொண்டது. முதல் வாசிப்பில் சாதாரணமாகத் தெரிந்தாலும் இக்கவிதையின் நுட்பத்தை பல வாசிப்பிற்குப் பின் கண்டு பிடித்துவிடலாம்.

ஒரு கல் இருந்தது பாதையின் நடுவில்
பாதையின் நடுவில் ஒரு கல் இருந்தது
ஒரு கல் இருந்தது
ஒரு கல் இருந்தது பாதையின் நடுவில்
என் களைத்துப்போன விழித்திரையின் வாழ்க்கையில்
இச்சம்பவத்தை நான் ஒரு நாளும் மறவேன்
பாதையின் நடுவில் ஒரு கல் இருந்ததை
ஒரு நாளும் நான் மறவேன்
பாதையின் நடுவில் ஒரு கல் இருந்தது
ஒரு கல் இருந்தது பாதையின் நடுவில்.

திரும்பத் திரும்ப வரும் வாக்கியங்களிலேயே இக்கவிதையின் நுட்பம் அடங்கியிருக்கிறது. முதலில் கல் இருந்தது எனும் போது, “இத்தனை மனிதர்களில் ஒருவராவது அதை அகற்ற முயலவில்லையே?” என்ற கேள்வி எழுகிறது. இரண்டாவது முறை கல் இருந்தது எனும் போது, “நான் ஏன் அதை அகற்றவில்லை?” என்பதாக அந்தக் கேள்வி மாற்றம் கொள்ளுகிறது. அப்படி மாற்றம் கொள்ளும் போது அழிக்க முடியாததாக இச்சம்பவம் மனதில் பதிந்து விடுகிறது. அதன் பிறகு கல் இருந்தது எனும் போது சுயபச்சாதாபம் மேலிடுகிறது. கடைசியாக கல் இருந்தது எனும் போது அது மிகப்பிரமாண்டமாய் பேருருக்கொண்டு நம்முன் நிற்கிறது. அதன் முன் நாம் வெட்கமுற்றவர்களாய் கூனிக் குறுகி நின்று விடுகிறோம்.

பின்வரும் மூன்று கவிதைகள் படித்து ரசிப்பதற்குரியவை என்பதோடு, அவை நம் மூளைக்குள் புகுந்து வெளிப்படுத்தும் பிரம்மாண்ட வீச்சை வார்த்தைகளில் வடிப்பது கடினம் என்றே சொல்லவேண்டும். படித்த கணத்தில் மின்னல் போல் தெறிக்கும் அதை அந்த ஷண நேரத்தில் பற்றிப் பிடிக்கவேண்டும்.

படகுக்கு மேலே
வயிறுகள்
காட்டு வாத்துக்களின்
                      -கிகாகு

கிளையிலிருந்து
மிதந்தொழுகும் நதி
பூச்சியின் பாட்டு
                     -இஸ்ஸா

பாவம் விட்டில் பூச்சி
என்னால் உனக்கு உதவ முடியாது
விளக்கை அணைக்க மட்டுமே
என்னால் முடியும்
                      -ரைசார்டு க்ரினிக்கி

இத்தொகுப்பில் என் வாசிப்பில் பிடிபட்ட பல கவிதைகளில் சிலவற்றை மட்டுமே பகிர்ந்து கொண்டிருக்கிறேன். பிடிபடாத பல அழகான, நுட்பமான கவிதைகள் இருக்கின்றன. என்றாவது ஒரு நாள் அவைகளும் பிடிபட்டுவிடுவது ஒன்றும் பெரிய விஷயமல்ல சுந்தர ராமசாமி சொல்வது போல: “இந்தத் தொகுப்பில் நூற்றியொன்று கவிதைகள் இருப்பதால் மீதம் நான் மொழிபெயர்க்க வேண்டியவை என் ஆசைப்படி எண்ணூற்று தொண்ணூற்றி ஒன்பது கவிதைகள் மட்டுமேதான். அவற்றையும் மொழிபெயர்த்து விடலாம். ஒன்னும் பெரிய விஷயமில்லை.”

Related Posts Plugin for WordPress, Blogger...