சிந்தனைகள்: கண்ணதாசன் பாடல்கள்

சிற்சில கட்டுரைகள், சேரமான் காதலி, வனவாசம் முதலியன கண்ணதாசனை எனக்கு அறிமுகப்படுத்திற்று. கல்லூரியில் படிக்க ஆரம்பித்த காலத்தில் அவரது அர்த்தமுள்ள இந்துமதம் படித்தேன். அது என்னுள் தாக்கத்தை ஏற்படுத்திற்று. நண்பர்களிடம் விவாதிக்கவும், பேசவும் அவரது கருத்துக்கள் பெரிதும் உதவின. நண்பர்களோடு விவாதத்தில் ஈடுபடுவது உற்சாகம் தருவதாகவும் ஆவேசமானதாகவும்,  இருந்த காலமது. பலவற்றைப் படிப்பதே அவற்றை மறுத்து விவாதிக்கத்தான் என்றிருந்த வயது அது.

படிப்பு முடிந்து அடுத்து என்ன செய்வது என்ற கேள்வி பூதாகரமாக உருக்கொண்டு முன்நின்றபோது அதைச் சமாளிக்க ஓடிய ஓட்டத்தில் கண்ணதாசனை மறந்துவிட்டேன். வாழ்வின் சிக்கல்கள் என்னைக் கட்டித் தரதரவென இழுத்துச் செல்ல, வாழ்க்கை சுமக்க முடியாத பெரும் சுமையாக கனத்தது. எல்லா வாசல்களும் அடைபட்டது போல மன அதிர்ச்சி ஏற்பட்டது. அப்போது அவரது அர்த்தமுள்ள இந்துமதம் மீண்டும் கைகொடுத்தது. துடுப்புகூட பாரமென்று தோன்றிய வாழ்க்கையை அதன் இயல்பான போக்கில் முன்னெடுத்துச் செல்ல அது எனக்கு வழிகாட்டியது. கல்லூரியில் படித்தபோது படித்ததற்கும் ஒரு குடும்பஸ்தனாகப் படிப்பதற்கும் இருந்த வேறுபாடு எனக்குப் புரிந்தது. முன்பு அந்நூலில் வெற்றுப் புலம்பல்களாகத் தோன்றியவை தற்போது முற்றிலும் வேறான பரிமாணத்தைக் காட்டியது. வாழ்க்கை குரூரமும் அழகும் இணைந்த கலவை என்பது மறுவாசிப்பில் எனக்குப் புரிந்தது. அந்நூலில் எனக்குப் பிடித்த பல பகுதிகளை ஒலி நாடாவில் என் குரலில் பதிவுசெய்து திரும்பத் திரும்பக் கேட்டு என்னை நானே ஆசுவாசப்படுத்திக்கொண்டேன்.

அதன் பிறகான ஒரு காலகட்டத்தில் படிப்பது முற்றாகக் குறைந்து, கேட்பது அதிகமாயிற்று. ஓஷோ, புலவர் கீரன் என்று பலரது உரைகளில் என்னை மூழ்கடித்துத் துன்பங்களை இலகுவாக இழுத்துச் சென்றேன். மனம் ஆன்மீகப் பாதையில் பயணித்த நேரம் அது. அதன் ஒரு பகுதியாகத்தான் கண்ணதாசனின் தத்துவப் பாடல்கள் மீது கவனம் திரும்பியது. குறிப்பாக கிருஷ்ணனை வைத்து அவர் எழுதிய பல பாடல்கள் எனக்கு பெரியதொரு மனத்திறப்பாக இருந்தது. நான் துயரப்பட்டபோது எனக்குத் தேறுதல் சொன்ன தாயாக அவைகள் விளங்கிற்று என்றால் மிகையல்ல. அவரது வரிகளில் என் மனம் மயங்கிக் கட்டுண்டு கிடந்தது. அதில் முதன்மையான பாடலாக பின்வரும் பாடலைச் சொல்லலாம்.

ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா
ஆசையெனும் தொட்டினிலே ஆடாதாரே கண்ணா

நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு
என் நிழலில் கூட அனுபவத்தில் சோகம் உண்டு
பகைவர்களை நானும் வெல்வேன் அறிவினாலே
ஆனால் நண்பனிடம் தோற்று விட்டேன் பாசத்தாலே
நண்பனிடம் தோற்று விட்டேன் பாசத்தாலே

பாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள்
அந்த பார்த்தனவன் உன்னிடத்தில் கீதை கேட்டான்
நானிருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்பேன்
இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்
நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்

கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன்
அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்
உள்ளத்திலே உள்ளது தான் உலகம் கண்ணா
இதை உணர்ந்து கொண்டால் துன்பமெல்லாம் விலகும் கண்ணா
உணர்ந்து கொண்டால் துன்பமெல்லாம் விலகும் கண்ணா

இது எனக்காகவே எழுதப்பட்ட பாடலாகத் தோன்றியது. அதன் வரிகளிலும், டி.எம்.எஸ். அவர்களின் குரலிலும் இந்தப் பாடலைக் கேட்டு என் துன்பங்களை தூசியாக உதறித் தள்ளும் மனோபாவத்தை வளர்த்துக்கொண்டேன். இந்தப் பாட்டில் உச்சமான வரி எதுவெனில் ‘நானிருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்பேன் இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்’ என்பதுதான். துன்பத்தையே இன்பமாக மாற்றும் ரசவாசத்தை இவ்வரிகள் எனக்குக் கற்றுத் தந்தது. உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் என்பதை நான் புரிந்துகொண்டுவிட்ட அந்த வினாடியை, தருணத்தைத் தவங்கள் பலசெய்து ஞானம் பெற்றதற்கு இணையானதாகக் கருதுகிறேன்.

மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல்தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவது இல்லை

எதையும் தாங்கும் இதயம் இருந்தால் 
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்.

ஏழை மனதை மாளிகை ஆக்கி
இரவும் பகலும் காவியம் பாடு
நாளை பொழுதை இறைவனுக்கு அளித்து
நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு

உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்து பார்த்து நிம்மதி நாடு

அவர் பாடல்களில் அடுத்தபடியாக எனக்கு மிகவும் பிடித்த பாடல் இதுதான். மயக்கமும் கலக்கமும் வாழ்வில் நம்மை என்ன பாடு படுத்துகின்றன. வாழ்க்கையில் இதுதான் வேண்டும் அதுதான் வேண்டும் என்ற மன நிலையைப் புரட்டிப் போடும் பாடல் இது. வாழ்க்கையில் ஆயிரம் இருக்கும் அனைத்தையும் இறைவனிடம் சமர்ப்பித்துவிட்டு வாழ்வதே வாழ்க்கையை எளிதாக்கும் வழி என்பதை உணரச்செய்த பாடல். இறைவனிடம் நம்மை ஒப்படைத்து விடும்போது வாடி நிற்கவேண்டிய தேவை இல்லை. அப்படி வாடி நிற்காதபோது எதையும் தாங்கும் இதயம் கிடைக்கும். அந்த இதயம் நமக்கும் கீழே உள்ளவர் கோடி என்று நம்மை அமைதிப்படுத்தும். அந்த அமைதி நம் கலக்கத்தையும் மயக்கத்தையும் நடுக்கத்தையும் நீக்கும். அவைகள் நீங்கியபின் கிட்டுவது நிம்மதிதான்.

வள்ளுவரின் நிலையாமைத் தத்துவத்தைச் சொல்லும் கண்ணதாசனின் அற்புதமான பாடல் பின்வரும் பாடல். எதுவும் நம் வசம் இல்லை என்பதை அறிவுறுத்தும் பாடல். நிலைக்கும் என்று தனக்கு தனக்கு என எல்லாவற்றையும் சேர்க்கும் மனிதனின் அறியாமையைக் கண்டு இறைவன் சிரிக்கிறான் என்னே இவனின் அறியாமை என்று. நம் திரைக்கதையை ஏற்கனவே எழுதிவிட்டவன் அவன். எந்தக் காட்சி எப்போது நடக்கவேண்டும் என்பதை அவன் தீர்மானித்து வைத்திருக்கிறான். ஆனால் நாம் அதை அறியாமல் மகிழ்கிறோம், அழுகிறோம், துடிக்கிறோம், துவழ்கிறோம். அவற்றினால் எந்தப் பயனும் இல்லை. எதுவும் நிலையல்ல என்று உணரும்போது நமக்கு எந்தத் துன்பமும் சொந்தமில்லை. மனதுக்குப் பெரியதோர் விடுதலை கிடைக்கும்.

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று

தந்தை தவறு செய்தார் தாயும் இடம் கொடுத்தாள்
வந்து பிறந்து விட்டோம் வெறும் பந்தம் வளர்த்து விட்டோம்
மனது துடிக்கின்றது மயக்கம் வருகின்றது
அழுது லாபம் என்ன அவன் ஆட்சி நடக்கின்றது

காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்து விடும்
கூட்டைத் திறந்து விட்டால் அந்தக் குருவி பறந்து விடும்
காலில் விலங்கு மிட்டோம் கடமை என அழைத்தோம்
நாலு விலங்குகளில் தினம் நாட்டியமாடுகின்றோம்

விதியின் ரதங்களிலே நாம் விரைந்து பயணம் செய்தால்
மதியும் மயங்குதடா சிறு மனதும் கலங்குதடா
கொடுக்க எதுவுமில்லை என் குழப்பம் முடிந்ததடா
கணக்கை முடித்து விட்டேன் ஒரு கவலை முடிந்ததடா

இப்படி இன்னும் பல பாடல்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். அவர் பாடல்கள் அள்ள அள்ளக் குறையாத கருவூலம். தெவிட்டாத இன்பம். அவர் பாடல்கள் நம் அனுபவங்களோடு உரசிப்பார்த்து நமக்குத் தேவையானதைக் கொடுக்கிறது. எனவே அதைக் கேட்பதில் ஒரு நிம்மதியும் ஆசுவாசமும் கிட்டுகிறது. நம் மனத் துன்பங்களை விரட்டியடிக்க அவர் பாடல்களைவிடச் சிறந்த மருந்து வேறொன்றில்லை. அவரது உற்சாகம் தரும் பாடல்களும், காதுக்கு இனிமையான பாடல்களும் என் வாழ்க்கைக்கு உந்துசக்தியாக விளங்கிற்று. எனக்கு மேலும் பிடித்த நான்கு பாடல்கள் இருக்கின்றன. அப்பாடலின் வரிகளைக் கீழே தருகிறேன். படிக்கும்போதும் டி.எம்.எஸ். குரல்தான் காதில் ஒலிக்கிறது.

எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்
இங்கிவனை யான் பெறவே
என்னதவம் செய்து விட்டேன்
இங்கிவனை யான் பெறவே
என்னதவம் செய்து விட்டேன் - கண்ணன்
எங்கிருந்தோ வந்தான்

சொன்னபடி கேட்பான் துணிமணிகள் காத்திடுவான்
சின்னக் குழந்தைக்கு சிங்காரப் பாட்டிசைப்பான்
கண்ணை இமையிரண்டும் காப்பது போல் என் குடும்பம்
வண்ணமுறக் காக்கின்றான்
வாய் முணுத்தல் கண்டறியேன் - கண்ணன்
எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்
இங்கிவனை யான் பெறவே
என்னதவம் செய்து விட்டேன் - கண்ணன்
எங்கிருந்தோ வந்தான்

பற்று மிகுந்து வரப் பார்க்கின்றேன்
கண்ணனால் பெற்று வரும் நன்மையெல்லாம்
பேசி முடியாது
நண்பனாய் மந்திரியாய் நல்லாசிரியனுமாய்
பண்பிலே தெய்வமாய்
பார்வையிலே சேவகனாய் - ரங்கன்
எங்கிருந்தோ வந்தான் ரங்கன் ரங்கன்
இங்கிவனை யான் பெறவே
என்னதவம் செய்து விட்டேன் ரங்கன்
எங்கிருந்தோ எங்கிருந்தோ ரங்கன்
எங்கிருந்தோ வந்தான் ரங்கன் ரங்கன்
ரங்கா ரங்கா ரங்கா ரங்கா

-000-

கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா
கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா

ஏற்றிய தீபத்திலே கிருஷ்ணா கிருஷ்ணா
ஏழைகள் மனதை வைத்தோம் கிருஷ்ணா கிருஷ்ணா
சாற்றிய மாலையிலே கிருஷ்ணா கிருஷ்ணா
தர்மத்தைத் தேடி நின்றோம் கிருஷ்ணா கிருஷ்ணா

தாயிடம் வாழ்ந்ததில்லை கிருஷ்ணா கிருஷ்ணா
தந்தையை அறிந்ததில்லை கிருஷ்ணா கிருஷ்ணா
தாயிடம் வாழ்ந்ததில்லை கிருஷ்ணா கிருஷ்ணா
தந்தையை அறிந்ததில்லை
ஓரிடம் நீ கொடுத்தாய் கிருஷ்ணா கிருஷ்ணா
ஓரிடம் நீ கொடுத்தாய் கிருஷ்ணா அதை
உலகத்தில் வாழ விடு கிருஷ்ணா கிருஷ்ணா
உலகத்தில் வாழ விடு

நீ உள்ள சன்னிதியே கிருஷ்ணா கிருஷ்ணா
நெஞ்சுக்கு நிம்மதியே கிருஷ்ணா கிருஷ்ணா
கோவிலில் குடிபுகுந்தோம் கிருஷ்ணா கிருஷ்ணா
குடை நிழல் தந்தருள்வாய் கிருஷ்ணா கிருஷ்ணா
கோவிலில் குடிபுகுந்தோம் கிருஷ்ணா கிருஷ்ணா
குடை நிழல் தந்தருள்வாய் கிருஷ்ணா கிருஷ்ணா

எண்ணெயில்லாதொரு தீபம் எரிந்தது கிருஷ்ணா கிருஷ்ணா
உன்னை நினைந்தது உருகி இருந்தது கிருஷ்ணா கிருஷ்ணா
கண்களைப் போலிமை காவல் புரிந்தது கிருஷ்ணா கிருஷ்ணா
கண்ணன் திருவடி எண்ணியிருந்தது கிருஷ்ணா கிருஷ்ணா
கிருஷ்ணா.. கிருஷ்ணா...

-0000-

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே
தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினே

ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவது தெரியாது 
ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் ஏதுமில்லை
ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை

எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இது தான் பாதை இது தான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லாம் மாறிவரும் பயணம் முடிந்து விடும் 
மாறுவதை புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்து விடும்

-0000-

போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா – இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா

வந்தது தெரியும் போவது எங்கே
வாசல் நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் – இந்த
மண்ணில் நமக்கே இடமேது?
வாழ்க்கை என்பது வியாபாரம் – வரும்
ஜனனம் என்பது வரவாகும் – அதில்
மரணம் என்பது செலவாகும்

இரவல் தந்தவன் கேட்கின்றான் – அதை
இல்லை என்றால் அவன் விடுவானா?
உறவைச் சொல்லி அழுவதனாலே
உயிரை மீண்டும் தருவானா?
கூக்குரலாலே கிடைக்காது – இது
கோட்டைக்குப் போனால் ஜெயிக்காது – அந்தக்
கோட்டையில் நுழைந்தால் திரும்பாது

எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன்
இதற்கொரு மருந்தைக் கண்டேனா?
இருந்தால் அவளைத் தன்னந்தனியே
எரியும் நெருப்பில் விடுவேனா?
நமக்கும் மேலே ஒருவனடா – அவன்
நாலும் தெரிந்த தலைவனடா – தினம்
நாடகமாடும் கலைஞடா
போனால் போகட்டும் போடா

-0000-


கண்ணதாசன் ஒரு காலகட்டத்தின் சகாப்தம். அவர் ஒரு சாகாவரம் பெற்ற கவிஞன். எல்லோர் வாழ்விலும் ஏதாவது ஒரு கட்டத்தில் அவர் நம்முடன் இணைந்து பயணிக்கிறார். நம் வாழ்வில் அவர் ஒரு தவிர்க்க முடியாத அங்கம். திரையிசைப் பாடல்கள், கட்டுரைகள், கவிதைகள் என ஏதோ ஒரு வடிவத்தில் அவர் ஒவ்வொருவரையும் பாதித்துக்கொண்டே இருக்கிறார். இன்னும் பாதிப்பார்.

(மறுபிரசுரம். முதற்பிரசுரம்  ஜுலை 7, 2014)

Related Posts Plugin for WordPress, Blogger...