December 18, 2015

ஆ.மாதவனின் கிருஷ்ணப் பருந்து

48 வயதான குருஸ்வாமி, பிரசவத்தில் மனைவியைப் பறிகொடுத்து தனிமையில் வாழ்ந்து வருபவர். புத்தகங்கள் வாசிப்பதும், கடந்த காலச் சிந்தனைகளில் ஆழ்ந்திருப்பதுமே அவர் செய்யக்கூடிய காரியங்கள். அவர் இருக்கும் தோப்புவிளை என்ற இடம் தேவி கோயிலோடு இணைந்திருக்கிறது. அவர் மாடியில் வசித்துவருகிறார். தனது பாட்டனும் அப்பனும் மீதம் வைத்துப் போன சில ஏக்கர் நிலத்தில் அந்த தோப்புவிளை அமைந்திருக்கிறது. அதில் விளையும் தேங்காய்களை விற்பதிலும், தோப்பை ஒட்டி இருக்கும் நான்கைந்து வீடுகளிலிருந்தும் அவருக்கு வருமானம் கிடைத்து வருகிறது. சமையல் வேலைக்கு பார்வதி என்று பெண்ணும், அவரின் தொழில் உதவிக்கு வேலப்பன், வெங்கு, பப்பன், ரவி என்று பலரும் இருக்கிறார்கள். 

கடந்த காலமும் நிகழ்காலமும் நாவலில் இயல்பாக பின்னி வருகின்றன. கடந்த காலம் நினைவுகள் மூலமாக நிகழ்காலத்தின் வெளிகளில் சஞ்சரிக்கின்றன. மனித மனத்தின் நினைவுகளில் திளைத்திருப்பது ஆ.மாதவனுக்கு அனாயாசமாக கூடிவருகிறது. எனவே நாவலின் பக்கங்களில் நாம் தங்குதடையின்றி உலவ முடிகிறது. ஒன்றில் லயித்திருப்பது சுகமானது. பூக்கள், மாலை, தீபம், சந்தனம், அலங்காரம், அபிஷேகம், சாம்பிராணி என தேவி சந்நதியில் நடக்கும் பூஜையின் வர்ணணைகள் நமக்கு ஒருவிதமான லயிப்பைக் கொடுக்கிறது. நாவலின் வரிகளினூடே அந்த லயிப்பை நாம் உணரமுடிகிறது. எனவே தேவிக்கு பூஜை நடக்கும் வேளையில் அனைவரும் ஆளுக்கொரு வேலைகளைச் செய்து தேவியிடம் ஒன்றியிருக்கிறார்கள். வாழ்க்கை இத்தகைய லயிப்பில்தான் இருக்கிறது. ஐம்புலன்களையம் கட்டிப்போடச் செய்யும் தந்திரங்கள் இவை. ஆனால் அப்படிக் கட்டிப்போட முடிந்து விடுகிறதா என்ன? 

படிப்பு வராமல் எதற்கும் உதவாமல் குருஸ்வாமியிடம் வந்து சேரும் வேலப்பன் பால் கறக்கும் தொழிலைக் கற்றுக்கொள்கிறான். வாழ்க்கையில் அவன் முன்னேறிச் செல்வது குருஸ்வாமியின் நடவடிக்கைகளால்தான். தொழில் கற்று பால் பண்ணை ஒன்றில் நிரந்தர வேலைக்கும் சேர்கிறான். அவனுக்கும் பணக்கார வீட்டுப் பெண் ராணிக்கும் காதல் பிறக்கிறது. அந்தப் பகுதியில் குருஸ்வாமிக்கு தனி மதிப்பும் மரியாதையும் உண்டு. எனவே அவர் உதவியால் இருவருக்கும் திருமணம் நடந்தேருகிறது. ராணிக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறக்கிறது. ராணியும் வேலப்பனும் குருஸ்வாமியிடம் அளவற்ற பிரியமும் மதிப்பும் வைத்திருக்கின்றனர். 

வேலப்பன் கட்சிகளிடையே வளர்கிறான். பால் சொஸைட்டியின் செக்ரட்டரி ஆகிறான். அவன் ஒரு நாள் மாடியில் குருஸ்வாமி தங்கியிருக்கும் இடத்தில் ஒரு பெண்ணின் முழு நிர்வாணப் படத்தைப் பார்க்கிறான். அதிலிருந்து அவன் மனம் சஞ்சலம் கொள்கிறது. குருஸ்வாமியின் மீதான மதிப்பு குறைந்துவிடுகிறது. இருவருக்குமிடையே ஒரு இடைவெளி வந்துவிடுகிறது. ராணியிடம் பெரிய மனிதர்களின் வெளிவேஷம் பற்றி பேசுகிறான். அவளுக்கோ குருஸ்வாமியின் மீதான் மதிப்பும் மரியாதையும் குறையாமல் இருக்கிறது. 

தன் தோழர்களுடனான பழக்கத்தில் வேலப்பன் குடிக்கவும் தொடங்குகிறான். தன் மனைவியிடம் கடுமையாக நடந்துகொள்ளவும் தொடங்குகிறான். குருஸ்வாமிக்கும் வேலப்பன் போக்கு புரியாமல் இருக்கிறது. ஆனாலும் அவர் உள்ளத்தில் சொல்லத் தெரியாத ஒரு சலனம் மெல்ல மெல்ல நுழைகிறது. ஒரு முறை பால் சங்கத்தினரிடையே நடக்கும் தகராரில் போலீஸ், தடியடி என்றாகிறது. அதில் வேலப்பன் போலீஸை தாக்கிய குற்றத்திற்காக கைதாகிறான். 

தனக்கு உள்ள செல்வாக்கால் குருஸ்வாமி அவனை வெளியே கொண்டுவந்துவிடுவார் என்று அனைவரும் நினைக்கிறார்கள். ஆனால் அவரோ இவ்விசயத்தில் தான் ஒன்றும் செய்யமுடியாது என்கிறார். ராணி அவரிடம் கெஞ்சுகிறாள். அப்பொது குருஸ்வாமி, “நீ எனக்கு வேணும்” என்கிறார். அவள் அவரை இறுக அணைத்துக்கொண்டு, “அவரை எப்படியாவது காப்பாற்றுங்கள்” என்கிறாள். குருஸ்வாமி திடுக்கிட்டவராக அவளை விலக்கித் தள்ளிவிட்டு பூஜை அறையில் நுழைகிறார். “அவனை எப்படியும் கொண்டுவந்துவிடுவேன்” என்கிறார் உறுதியான குரலில். 

மனிதனின் ஆதாரத் தேவைகள் உணவும், காமமும்தான். இவைகள் மனிதனுக்கு அவன் ஆரோக்கியமாக உள்ள காலம் வரை தேவைப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறது. அவற்றைக் கடந்து அல்லது துறந்து சென்றவர்கள் மிகச் சொற்பமானவர்களே. வாழ்க்கையில் ஏதோ ஒரு கட்டத்தில் பலர் அதை அடக்கவும், கடக்கவும் முயல்கிறார்கள். ஆனாலும் பருந்துப் பார்வையாக அவர்களின் கவனம் இந்தக் காமத்தில் அவர்களையும் அறியாமல் சென்றுவிடுகிறது. எனவே இயல்பாக இது கிடைக்காத போது தட்டிப் பறிக்கும் காரியத்தைச் செய்ய நேரிடுகிறது. பல பெரிய மனிதர்கள் சிறுத்துப்போவது இந்த விசயத்தில்தான். 

ஆ.மாதவனின் கிருஷ்ணப் பருந்து வித்தியாசமான வாசிப்பனுபவத்தைத் தரும் நாவல். கிருஷ்ணப் பருந்தில் நாம் காணும் கதைச் சூழல் வித்தியாசமானது. நாவல் எதற்காக, அது சொல்லவருவது என்ன என்பதை மிக இலாவகமாக உணர்த்திச் செல்கிறார் ஆ.மாதவன். எனவே கதையின் கடைசிப் பக்கம் வரையிலும் கதையின் போக்கை நாம் உள்வாங்க முடியாமல் போகிறது. அந்த கடைசிப் பக்கத்தில் கதையின் முடிச்சு திறந்து, பின் திறந்த அதே கணத்தில் வேறொர் தளத்திற்கு மாறிவிடுகிறது. மனித மனத்தில் உழன்று கிடக்கும் காமம் ஏற்படுத்தும் மனச் சலனங்களை மிக நுட்பமான மொழியில் நம்மை உணருமாறு செய்திருக்கிறது இந்தக் கிருஷ்ணப் பருந்து.

வேலப்பன் அந்த நிர்வாணப்படத்தைப் பார்த்ததிலிருந்து, தன் மனைவி மீது குருஸ்வாமிக்கு ஒரு ஈர்ப்பு இருக்கிறது என்பதை உணர்ந்துகொள்கிறான். எனவேதான் அவர் மீது அவன் வெறுப்பும் துவேஷமும் கொள்கிறான். அவன் தன் மீது கொள்ளும் கோபத்திற்கு காரணம் தெரியாமல் தவிக்கும் குருஸ்வாமிக்கு, தன் உள் மனதில் சஞ்சலம் இருக்கிறது என்பதை அறியாமல் போகிறார். அதை அவர் வெளிப்படையாக ஒப்புக்கொள்வதை அவர் மனம் ஏற்றுக்கொள்ளவில்லை. இருந்தும் அவரிடம் அந்த சலனம் மெல்ல மெல்ல வளர்ந்து வருகிறது. எனவே வேலப்பன் இல்லை என்றானபோது அது வெளிப்படுகிறது. ராணி தான் அவருக்கு இசைவதாகவும், ஆனால் வேலப்பனை காப்பாற்றும்படியும் வேண்டுகிறாள். அந்த கணத்தில் அவரிடம் மாற்றம் நிகழ்கிறது. “ச்சே! எப்படியான காரியத்தைச் செய்யத் துணிந்தோம்“ என்று அதிலிருந்து விலகுகிறார். இவையெல்லாம் சில வரிகளின் மூலம் மாதவன் உணர்த்திச் சென்றுவிடுகிறார். இப்படியாக நுட்பமான வாசிப்பு தேவைப்படும் இடங்கள் நாவலில் பல உள்ளன.

(முதல் பிரசுரம் ஏப்ரல் 18, 2014. ஆ.மாதவனுக்கு இவ்வருடத்திற்கான சாகித்ய அக்காதமி விருது அறிவிக்கப்பட்டுள்ளதை ஒட்டி மறுபிரசுரம் செய்யப்படுகிது).

Related Posts Plugin for WordPress, Blogger...