வாசிப்பும் விமர்சனமும்!

வாசிப்பில் கண்டடையும் அறிதல் என்பது விண்ணை முட்டும் இமயத்தில் ஏறுவதற்குச் சமமானது. அதில் ஒன்றுபோலவே அனைவரும் ஏறவேண்டும் என்ற கட்டாயமில்லை. ஆனால் முயற்சியுடன் ஏறுபவர்கள் அனைவரும் அதன் சிகரத்தையே அடைகிறார்கள். ஒரு படைப்பின் வாசிப்பனுபவத்தை சொல்ல எப்போதும் வார்த்தைகள் போதுமானவை அல்ல. வாசிப்பின் உணர்வுகளை, எழுச்சிகளைச் சொல்ல வார்த்தைகள் உதவுகின்றன என்றாலும் சொல்ல முடியாமைக்கும் அந்த வார்த்தைகளே தடையாகின்றன. எனவே திரும்பத் திரும்ப பயன்படுத்திய வார்த்தைகளையே மீண்டும் மீண்டும் பயன்படுத்த வேண்டியிருக்கும்.

பெரும் படைப்புகளை வாசிக்கையில் ஆயாசம் ஏற்படுவது இயல்பு. அந்த ஆயாசத்திலேயே அந்தப் படைப்பின் சிறப்பை கண்டடையும் சூட்சுமம் மறைந்திருக்கிறது. ஆயாசம் தோன்றும் கணத்தில் மேலும் படிக்காமல் புத்தகத்தை மூடிவிடுவது நலம். மீண்டும் சற்றே இடைவெளியில் திரும்ப வாசிக்கும்போது ஆயாசம் மறைந்து புதுமையான ஒரு புரிதல், திறப்பு நிகழ்வதைக் காணலாம். வாசிப்பில் நம்மை பாதிப்பவற்றை குறிப்புகள் எடுத்துக்கொள்வதும், அது சம்பந்தமாக சொல்லப்பட்டவைகளை வேறு புத்தகங்களிலிருந்து வாசிப்பதும் வாசிப்பனுபவத்தை பன்மடங்காக பெருக்குவதற்கும் ஆயாசத்தைக் குறைப்பதற்கும் பெருமளவு உதவும்.

ஒரு படைப்பைக் குறித்து ஒரேமாதிரியான கருத்துகள் இருக்கவேண்டுமென்பதில்லை. ஒரு படைப்பு ஒரு சிலருக்குப் பிடிக்கலாம் வேறு சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். எனவே பிடித்தவர்கள் பிடிக்காதவர்கள் சொல்வதையும், பிடிக்காதவர்கள் பிடித்தவர்கள் சொல்வதையும் கருத்தில் கொள்ளவேண்டியதில்லை. இருந்தாலும் மனித மனம் எப்போதும் எதிர்த்திசை நோக்கி நகரும் இயல்புள்ளதால் பிடித்தவர்கள் பிடிக்காதவர்கள் சொல்வதையும் பிடிக்காதவர்கள் பிடித்தவர்கள் சொல்வதையும் பரிசீலனைக்கு இயல்பாக எடுத்துக்கொள்வார்கள் என்று நம்பலாம். அதை அவர்கள் அப்போதைக்கு வெளிப்படுத்தாமல் இருக்கலாமே தவிர அவர்களின் ஆழ்மனம் அதைப்பற்றியே எண்ணிக்கொண்டிருக்கும். இது அந்தப் படைப்பை மீண்டும் வாசிக்கவும் அந்தப் படைப்பின் உண்மையான தரத்தை நிர்ணயிக்கவும் பயன்படும்.

ஒரு படைப்பை பிடிக்கும் என்பவர்கள் அதைப்பற்றி புகழ்ந்து பேசுவதும், பிடிக்கவில்லை என்பவர்கள் அதைப்பற்றி இகழ்ந்து பேசுவதும் வெகு இயல்பானது. பிடிக்கும் என்பவர்கள் அப்படைப்பின் நயம் பாராட்டுவதும், பிடிக்கவில்லை என்பவர்கள் நயமற்றவற்றை எடுத்தியம்புவதும் எப்போதும் விமர்சனங்களில் காணப்படும். எனவே இதைக் கருத்தில் கொண்டு இதுதான் சரியானது அல்லது அதுதான் சரியானது என்று குழம்ப வேண்டியதில்லை. என்னதான் விமர்சித்தாலும் ஒரு படைப்பின் உண்மை நிலையை காலம் காட்டிக்கொடுத்துவிடும். ஆக, மனிதர்களின் விமர்சனங்களை விடவும் ஒரு படைப்பின் மீதான காலத்தின் விமர்சனம் அசைக்க முடியாதது.

இந்தக் கட்டுரையை நான் எழுதத் தொடங்கும்போது உண்மையாக இப்படியெல்லாம் எழுத நிச்சயிக்கவில்லை. எழுதஎழுத அதுவே இந்த வடிவம் கொண்டு வந்து நிற்கிறது. இது ஒரு படைப்பின் வாசிப்பனுவமா இல்லை ஒரு படைப்பின் விமர்சனம் பற்றிய விமர்சனமா அல்லது இரண்டுமா என்பதை படிப்பவர்கள்தான் தீர்மானித்துக்கொள்ள வேண்டும்.

Related Posts Plugin for WordPress, Blogger...