November 30, 2015

ஜெயமோகனின் ‘கயிற்றரவு’

மூலம்திருநாள் மகாராஜாவினால் நாகர்கோயிலில் கட்டப்பட்டு, முப்பது ஆண்டுகளாக ஹூஸூர் கச்சேரிக்காக பயன்படுத்திவந்த மாளிகையை, “பிரிட்டிஷ் பாணி தூண்கள் நம்முடன் சேர்ந்து நிற்கவேண்டியவை” எனச்சொல்லி ஜெனரல் மெக்காலே முன்னர் மகராஜாவிடம் கிளப்பிற்காகக் கேட்டுப் பெற்றதைச் சொல்லித் தொடங்குகிறது கதை. அந்தக் கிளப்பில் காப்டன் பென்னி ஆண்டர்ஸனும், லெஃப்டினண்ட் ப்ரியன் பாட்ஸூம் பீரை குடித்தபடி பேசிக் கொண்டிருக்கிறார்கள். நகரத்தின் நடுவே பாம்புகோயில் இருப்பதைச் சொல்லும் ப்ரியன் பாட்ஸ், தான் அந்த கோயிலின் உள்ளே சென்று பார்க்கும் ஆசையினால், வழிபாடு இடங்களில் ஆங்கிலேயர்களுக்கு அனுமதி இல்லையென்றாலும், விசாரணை என்ற பெயரில் இன்று நுழைந்ததாகவும், ஆலயத்தின் முகப்பில் தான் கண்ட மூன்று ஆள் உயரமான ஐந்து தலை கல்நாகங்களின் சிற்பம் தன்னை நிலைகுலையச் செய்தன என்றும் சொல்கிறார்.

“அச்சமா?” என்று பென்னி ஆண்டர்சன் கேட்க, இந்நாட்டின் அத்தனை நோய்களையும் வெள்ளையர்களாகிய நாம் அஞ்சுகிறோம். பாம்பும் யானையும் இந்நாட்டின் அடையாளங்கள். இவர்களின் தொன்மங்களை ஆராயப்புகுந்தால் மேஜையளவு பெரிய நூல்களை எழுத வேண்டியிருக்கும் என்று சொல்லி, அந்த ஆலயத்தில் வெள்ளையர்களின் ஆட்சிக்கு எதிராக ரகசியக்கூட்டம் நடந்ததாகவும், அங்கே இருந்தவர்கள் அனைவரும் சோற்றுக்காக அமர்ந்திருந்த சோம்பேறிகள் என்றும் சொல்கிறார் ப்ரியன் பாட்ஸ். மேலும் சொல்லும் அவர் அங்கே ஒரே ஒரு காவியணிந்த சாமியாரைக் கண்டதாகவும், அவன் அந்த கல்நாகத்தைச் சுட்டிக்காட்டி, அதன் பெயர் தர்மன் என்றும் ‘கயிற்றரவு’ என்றும் சொல்லிச் சிரித்ததாகச் சொல்கிறார். “என்ன அது?” என்று பென்னி ஆண்டர்சன் கேட்க, தனக்கும் அது தெரியாததால், அதை விளக்க நடராஜ அய்யரை வரச்சொல்லியிருப்பதாகச் சொல்கிறார் ப்ரியன் பாட்ஸ்.

அப்போது அங்கே கருப்பன் எனும் குறவனுடன் வரும் அய்யர், “இந்தப் பிரபஞ்சம் வெறும் மாயத்தோற்றமே மனமயக்கத்தால் அதை உண்மையானது என்று எண்ணுகிறோம் என்ற சங்கரரின் அத்வைதத்தை விளக்கி, கயிறை பாம்பாகக் காணும் ஒரு கணத்தில் நாம் அச்சப்படுவதும், அதைப் பாம்பு அல்ல கயிறுதான் என்றுணரும் கணம் அச்சம் நீங்கிவிடுவதையும் சொல்லி ‘கயிற்றரவு’க்கு விளக்கம் தருகிறார். விளக்கத்தோடு நிற்காமல் அதற்கான செயல் விளக்கத்தையும் கருப்பனைக் கொண்டு காட்டச் செய்கிறார் அய்யர். கருப்பன் தன்னிடமிருந்த கூடையைத் திறந்து உள்ளேயிருந்த கயிறைக் காட்டிவிட்டு, மகுடியை வாசிக்கிறான். அவன் வாசிப்பில் கயிறு பாம்புபோல அசைந்து, ஒரு கணம் பாம்பாகவும் மறுகணம் கயிறாகவும் மாறிமாறித் தெரிகிறது. பிறகு பாம்பாகவே மாறி தரையில் நெளிந்து சுவரை நோக்கிச் செல்கிறது.

இருவரும் அதைக்கண்டு திகைத்து, அச்சமுற்று கருப்பனை நிறுத்தச் சொல்லி கத்துகிறார்கள். அவனோ வெறிகொண்டவனாக வாசித்துக்கொண்டே இருக்கிறான். பாம்பு உள்ளறையின் இருளுக்குள் சென்று மறைகிறது. அய்யர், “புடிடா அதை” என்று கருப்பனை உலுக்க அவன் திடுக்கிட்டு முன்பு வாசித்ததற்கு மாற்றாக வாசிக்க அவன் கூடையை வந்தடைகிறது கயிறு. “அந்தப் பாம்புதான் திரும்பிவந்ததா? என ப்ரியன் பாட்ஸ் கேட்க, “ஆம் அதையே நானும் ஐயப்பட்டேன். அந்தப் பாம்பு கிளப்புக்கு உள்ளேதான் இருக்கிறது. நம்மை ஏமாற்றிவிட்டான். இனி இதற்குள் நாம் நுழையவே முடியாது” என்கிறார் பென்னி ஆண்டர்சன். “மாயத்தோற்றம்... பாம்புகளும் கயிறாகத்தெரியும்” என்று சொல்லும் ப்ரியன் பாட்ஸ், “நான் சற்று முன் அவன் ஊதும்போது இந்த மாளிகையின் அத்தனை தூண்களும் பாம்புகளாக நெளிவதைக் கண்டேன்” என்கிறார் என்பதோடு கதை முடிகிறது.

மனிதனை பாதிக்கும் உணர்வுகளில் மிகப்பெரியது அச்ச உணர்வு. எதையும் துணிந்து செய்வதற்கு அடிப்படைத் தேவை அச்சமின்மை. அந்த அச்சமின்மையை அச்சமாக மாறுதலடையச் செய்துவிட்டால் மனிதன் முற்றாக நிலையழிந்து விடுவான். நம்முடைய அறச்சீற்றத்தை, நம்மை அடிமைப்படுத்திய வெள்ளையர்கள் மனதில், அச்சத்தின் விதையாக ஒரு பாம்பாட்டி தூவிவிடுவதை இந்தக் கதை சித்தரிக்கிறது. இசையின் மூலம் மயாவலையை பின்னச்செய்து, அதில் வெள்ளையர்களை மதிமயக்கம் கொள்ளச்செய்து அச்சத்தின் பிடியில் அவர்களை சிக்கவைக்கிறான் கருப்பன் எனும் பாம்பாட்டி.

இந்தியா தொன்மையான மரபுகளைக் கொண்ட நாடு. குலங்கள்தோறும் தொடர்ந்து வரும் நீண்ட பாரம்பரியம்மிக்க நமது மரபுகளும், தொன்மங்களும் அவற்றின் எல்லையற்ற தன்மையின் காரணமாக வெள்ளையர்களால் புரிந்துகொள்ள முடியாதவை. அப்படி முடியாத காரணத்தாலேயே அது அவர்களை பெரிதும் கலவரப்படுத்துகிறது. அவர்களைப் புறத்தே காலராவும் அம்மையும் அச்சுறுத்தியது என்றாலும், அவர்களின் அகத்தை அச்சவுணர்வுக்கு ஆட்படுத்தும் காரியத்தையே பாம்பாட்டி செய்கிறான். நம் நாட்டைவிட்டு வெள்ளையர்கள் வெளியேறியதற்குப் பல்வேறு காரணங்கள் இருப்பினும் அவர்களின் அகத்தை அச்சப்படவைத்ததே முதன்மையான காரணம் என்று தோன்றுகிறது.

சோற்றுக்குத் திரியும் சோம்பேறிகள், சாமியார்கள் இவர்களின் புகலிடமாக இந்தியாவை தவறாக அர்த்தப்படுத்திக்கொண்டதாலேயே வெள்ளையர்களால் நம்மை நீண்ட காலம் அடிமைப்படுத்த முடிந்தது. நமது செயலின்மையை -கல்லாக, கயிறாக - நினைத்து ஊதாசீனப்படுத்தினார்கள். ஆனால் அதனுள் பொதிந்திருக்கும் அசைவெனும் பாம்பை, ஐந்து தலை நாகத்தை அவர்கள் அறிந்தபோது அவர்களிடம் அச்சம் குடிகொண்டுவிட்டது. அதற்குத் தேவைப்பட்டது தூண்டுதல் மட்டுமே. அந்தத் தூண்டுதலைப் பலர் பலவிதமாகக் கொண்டுவந்தார்கள் எனினும் அதனுள்ளே மறைந்திருந்த நம்முடைய மரபும் தொன்மையான தொன்மங்களும்தான் நம்மை நாமாக மீட்டுக்கொள்ள உதவியது.

தர்மம், நியாயம் இவற்றின் அடிப்படை இயல்பு கட்டுப்படுவதே. கட்டுண்டோம் பொறுத்திருப்போம் காலம் மாறும் என்பதே அதன் நியதி. கட்டுண்டபோது கல்லாகவும், கயிறாகவும் இருந்த அது கட்டை உடைத்த பின்னர் பாம்பாக, ஐந்து தலை நாகமாக மாறிவிடுகிறது. கல்லாய் சமைந்திருக்கும் அறம் தனக்கான தூண்டுதல் கிடைத்ததும் அனைத்தையும் பற்றிக்கொள்கிறது. பிறகு அதைத் தடுத்து நிறுத்துவதோ, அழிப்பதோ முடியாத காரியமாகிவிடுகிறது.

இல்லாத ஒன்றை இருப்பதாகக் காண்பது கயிற்றரவு என்றால் இருப்பதில் இல்லாததைக் காண்பதும் கயிற்றரவுதானே? பொய்யை நிஜமாகக் காண்பது கயிற்றரவு என்றால் நிஜத்தைப் பொய்யாகக் காண்பதும் கயிற்றரவுதானே? கயிறு பாம்பாகத் தெரிவது கூட பராவாயில்லை, நெருங்காமல் விலகி இருந்துவிடலாம். நிஜமான பாம்பே கயிறாகத் தெரிந்தால், நெருங்கிய பின் ஆபத்தல்லவா?
Related Posts Plugin for WordPress, Blogger...