November 26, 2015

ஜெயமோகனின் ‘உச்சவழு’

சமீபத்தில் வாங்கி புரட்டிக் கொண்டிருந்த ஒரு புத்தகம் தாகூரின் கீதாஞ்சலி. வங்கமொழியிலிருந்து நேரடி ஆங்கிலத்தில் Williams Radice என்பவரால் மொழியாக்கம் பெற்ற புத்தகம் இது. பெங்குவின் பதிப்பகம் இந்தப் புத்தகத்தை கெட்டி அட்டையில் மிக அழகாக, நேர்த்தியாக வெளியிட்டுள்ளது. ஓசை நயத்துடன் மொழியாக்கம் பெற்ற தாகூரின் கவிதைகள் என்னை வெகுவாகக் கவர்ந்தபடியால் இப்புத்தகத்தை வாங்கினேன். அதில் எதேச்சையாக நான் படித்த ஒரு கவிதை என்னை திடுக்கிட வைத்தது. வியப்பும் மகிழ்ச்சியும் அடைய அந்தக் கவிதையை மீண்டும் மீண்டும் வாசித்தேன். என் உடல் சிலிர்க்க, ‘கண்டுவிட்டேன்’ என மனம் குதூகலித்தது.

முன்பு ஒரு முறை படித்த ஜெயமோகனின் ‘உச்சவழு’ சிறுகதை இப்போது பிடிபட்டுவிட்டதாகத் தோன்றியது. அந்தக் கதையில் வரும் பலவற்றுக்கு விளக்கம் சொல்வது போல அமைந்த தாகூரின் இந்தக் கவிதை என்னை வியப்பில் ஆழ்த்தியது. கதையைப் படித்துவிட்டு தாகூரின் இந்தக் கவிதையை வாசித்தால் உச்சவழுவிற்கு விளக்கமாக அமையும் விந்தை இக்கவிதையில் நிகழ்வதை ஓர் அற்புதம் என்றே சொல்லவேண்டும். வாசிப்பில் கண்டுணரும் பரவசத்தின் உச்சம் என்று அந்த அனுபவத்தைச் சொல்லலாம்.

உச்சவழுவின் கதைசொல்லி வாழ்க்கையில் விரக்தியுற்று, தன்னை மாய்த்துக்கொள்ளும் எண்ணத்துடன் ஆனைமலைக்கு வருகிறான். மலையின் அடிவாரத்தை அடைந்ததும் கண்ணெதிரே விரிந்து கிடக்கும் மலைகள் அனைத்தையும் யானையாகவே காண்கிறான். எங்கும் மரங்கள் அடர்ந்து விரிந்து கிடக்கும் அந்த நிலவெளியை பொருளற்ற வெளியாக அவன் மனம் காண்கிறது. மரத்தைப் பார்த்தால் காடு மறைகிறது என்றும் காடு என்றால் மரமில்லை என்றும் எண்ணி, அவ்வாறு எண்ணிய தனது எண்ணங்களின் விசித்திரமான அர்த்தமின்மையை நினைவுகொள்கிறான். மலை ஏறுகையில் யானை தன்னை பார்த்துவிட்டது எனும் உணர்வை கதைசொல்லி வலுவாக உணர்கிறான். பிரமையாக இருந்தபோதும் அது தன்னைத் தொடர்ந்து வருவதாக அறிகிறான்.

அவன் தான் தங்கும் பங்களாவிற்கு அருகில் யானை உண்டா, வருமா என்று கேட்டறிகிறான். அவனை அழைத்துச் செல்லும் முருகன் சீசனில் சில சமயம் வரும் என்றும், இப்போது வராது என்றும் சொல்கிறான். அவனுக்கு அந்த பங்களாவின் படுக்கையின் மெத்தையின் மட்கிய வாசனை, அவனுடைய அம்மாவை நினைவுக்குக் கொண்டு வருகிறது. அம்மாவின் சேலைக்குள் புகுந்துகொண்ட வெட்கிய மெலிந்த சிறுவனாக தன்னை கற்பனை செய்துகொள்கிறான். அம்மா மரணத்தருவாயில் இருந்தபோதுகூட அவளைப் பார்க்கச் செல்லாத தன்னுடைய முடியாமையையும், பணம் மட்டுமே அனுப்பமுடிந்ததையும் அவன் நினைவு கூர்கிறான். அப்போது அந்த பங்களாவைக் கட்டிய தொரை இறந்துவிட்டதையும், அவருடைய உடலுக்கு பதிலாக துணிகள் மட்டுமே காட்டுக்குள் கிடைத்ததாகவும் சொல்கிறான் முருகன்.

பங்களாவிலிருந்து வெளியேறும் கதைசொல்லி, பங்களாவைவிட்டு விலகி தன்னையும் அறியாமல் வெகுதூரம் வந்துவிடும்போது, முருகன் அவனை அழைத்து திரும்ப பங்களாவுக்குக் கூட்டிச்செல்கிறான். திரும்பும்போது, “என்ன செய்தேன்? காட்டை பார்த்துக்கொண்டே இருந்தேன். கால்கள் நடப்பதை உணரவில்லை” என அவன் வியக்கிறான். அப்போது முருகன், “நம்மளோட மனசு இதினிக்கூண்டு மனசு சார்... காடோட மனசு அம்மாம் பெரிசு... அது கூப்பிட்டா நம்மால போவாம இருக்கமுடியாது..” என்கிறான். இரவு சாப்பாட்டை முடித்துக்கொண்டு, குளிர் தாங்கமுடியாமல் தொரையின் பெட்டியிலிருந்து அவரது கோட்டை போட்டுக்கொள்கிறான்.

உறங்கும்போது அவனுக்குக் கடந்தகால வாழ்க்கையின் எச்சங்களாக அம்மாவும் பிற பெண்களும் நினைவில் வருகிறார்கள். வாழ்நாள் முழுதும் பெண்கள் பேசிய எதுவும் தனக்குப் புரிந்ததேயில்லை என்பதையும், சாகக் கிடந்த அம்மாவை கடைசியாக் பார்த்திருக்கலாமோ என்றும் நினைவுகளை புரளவிட்டவனாக தூங்கிப்போகிறான். கனவுகளுடன் தூங்கும் அவன் இரவில் திடுக்கிட்டு விழித்து வெளியே வருகிறான். பங்களாவின் எல்லா சன்னல்களும் நிலவொளியில் தகதக்க, காடு வெள்ளித்தகடுகளாக மின்னும் காட்சியை வியப்புடன் பார்க்கிறான். முழுநிலவையும் அதைச்சுற்றி மின்னும் மேகங்களின் வட்டத்தையும கண்டு பிரமிக்கிறான். அப்போது இலைகளுக்குள் மெல்லிய சலசலப்பு கேட்கிறது.

“அவன் பார்த்துக்கொண்டே நின்றான். இலையடர்வுக்குள் இருந்து இரு வெண்ணிறத் தந்தங்கள் நீண்டு வந்தன. ஒளிவிடும் பளிங்காலானவை. தரையை முகர்ந்து மெதுவாக நெளியும் நுனி கொண்ட துதிக்கை. கனத்தபெரும் கால்கள் மண்ணில் வைக்கப்படும்போது பஞ்சுப்பரப்பின்மீது பஞ்சுச்சுருள் விழுந்த மென்மை. கரிய உடல்மீது எண்ணைவிழுந்து வழிவதுபோல நிலவின் ஒளி. மத்தகத்தின் இருபுடைப்புக்குமேல் முள் எழுந்ததுபோன்ற முடி நிலவொளியை ஏற்றுச் சுடர்விட்டது. மெல்ல அவனைநோக்கி அது வந்தபடியே இருந்தது” என கதையின் கடைசி பத்தியை நிறைவு செய்கிறார் ஜெயமோகன்.

வாழ்க்கையின் இறுதி கணங்களை எதிர்நோக்கும் ஒருவனின் மன அவசங்சகளை இந்தக் கதை அழகாகச் சித்தரிக்கிறது. ஒரு மனிதனுக்கு வாழ்க்கை எப்போது அர்த்தமிழக்கிறதோ அப்போது அதன் மறுபக்கமான மரணம் அவனுக்கு அர்த்தமுள்ளதாகிறது. வாழ்க்கையின் அர்த்தமின்மையை மரணத்தில் நிறைவுசெய்ய முயல்கிறான். இந்த அர்த்தமின்மையும் வெறுமையும் வாழ்க்கையில் அவ்வப்போது வந்துபோவதைத் தவிர்க்க முடியாது என்றாலும், வாழ்வின் அவஸ்தையிலிருந்து விடுதலை பெறுவதை மட்டுமே உச்சமாகக் கருதும்போது மரணமே தேர்வாகிறது. சமதளத்தின் உச்சமாக மலைகள் இருப்பதைப்போல வாழ்க்கையின் உச்சமாக இருப்பது மரணமே. 

அம்மாவை மட்டுமில்லாது பெண்கள் யாரையும் கடைசிவரை புரிந்துகொள்ள முடியவில்லை என்பதும், பெண்களுடனான இணக்கமின்மையும், கதைசொல்லியை வேதனையில் தள்ளுகிறது. உறவுகளை இழந்துகொண்டே போனால் கடைசியில் எஞ்சுவது வெறுமையும், விரக்தியும்தானே? அந்த விரக்தியினாலேயே ஆனைமலைக்கு வருகிறான் அவன். மனிதன் எப்போது பிறந்தானோ அப்போதே மரணமும் அவனைத் தொடர்ந்து வர ஆரம்பிக்கிறது. அது தனக்கான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. மனிதன் எப்போது தயாராகிறானோ அப்போது அது அவனை விடாமல் பற்றிக்கொள்கிறது. அவன் தங்கும் பங்களாவைக் கட்டிய துரையின் பெட்டியிலிருந்த துணிகளின் மட்கிய வாசனையும், அந்த பங்களாவில் அவன் காணும் காட்சிகள் அனைத்துமே மரணம் வந்துபோனதன் கால்தடங்கள் தாம்.

வாழ்க்கையில் தவறினால் மரணமே அதன் உச்சம். அதன் பிறகு அடைவதற்கு வேறு உச்சங்கள் ஏதும் கிடையாது. அந்த உச்சம் பலரையும் தன்னிடத்தில் அழைத்துக் கொண்டே இருக்கிறது. காட்டின் பரந்த வெளியை திகைப்புடன் எதிர்கொள்ளும் அவன் மரணத்தின் வெளியை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறான்? அது பிரபஞ்சத்தின் விரிந்த வெளியில் தன்னை முற்றாகத் தொலைப்பதல்லவா? வாழ்க்கையை எதிர்கொள்வதில் அவனுக்கு உள்ள போதாமையும், அந்தப் போதாமையால் எழுந்த இயலாமையும், உடனடித் தீர்வாக மரணத்தை நோக்கி அவனை இழுத்துவந்துவிட்டது. இப்போது அது அவன் வாசல் வந்து நிற்கிறது. தினகரனைப் போல அதன் முன் மண்டியிட்டு வணங்கப்போகிறானா? அல்லது சூர்யோதத்தைக் கண்ட சம்பத் போல பரவசம் அடையப்போகிறானா?

இப்போது தாகூரின் கவிதையை வாசித்தால் கதைக்கும் கவிதைக்கும் உள்ள தொடர்பை தெளிவாக அறிய முடிகிறது. முழு கவிதையும் கதையைப் பிரதிபலிக்கிறது என்றாலும் கூட சில வரிகள் கதையோடு மிகவும் பொருந்திப்போகும் அழகை எண்ணி வியக்கமால் இருக்க முடியவில்லை.

Have you not heard, not heard his steps?
Have you not heard, not heard his steps?
     He comes, comes, comes
Every age, every moment, day and night
     He comes, comes, comes
Have you not heard, not heard his steps?

The tunes I have crazily sung in my mind
The tunes I have crazily sung in my mind
All echo and reecho with his coming
     He comes, comes, comes

On spring days through the ages
        down woodland paths
     He comes, comes, comes
On louring moon soon nights,
        on his chariot of clouds
     He comes, comes, comes

In crescendos of grief in my heart his footsteps pound
In crescendos of grief in my heart his footsteps pound
The touch of his hand turns my joys to gold
     He comes, comes, comes
Have you not heard, not heard his steps?
Have you not heard, not heard his steps?

உச்சவழு கதையை மட்டுமல்ல, தாகூரின் இந்தக் கவிதையையும், படிமத்தை உடைத்து, வரிக்குவரி விளக்கமுடியாது. விளக்கும்போதே, விளக்க முடியாமையின் போதாமை ‘சடாரென’ நமது மூளையைத் தாக்குகிறது. ஆகவேதான் இந்தக் கதையைப் பற்றிச் சொல்லும் ஜெயமோகன் இப்படிச் சொல்கிறார்:
படிமங்கள் வழியாக மட்டுமே தொடர்புகொள்ளும் ஆக்கங்கள். அவை ஆசிரியனின் கனவுக்குள் இருந்து வாசகனின் கனவுக்குள் செல்லவேண்டியவை. ஆசிரியனாலேயே அவற்றை விளக்க முடியாது. அவை ஒருவகை அகவெளிப்பாடுகள், அவ்வளவுதான்.
ஆசிரியனை தொடர்ந்து வாசித்து, அவனுடைய அகப்படிம உலகை அறிமுகம் செய்துகொண்டு, அதை தன்னுடைய அகப்படிம உலகுடன் இணைத்துக்கொள்ளும் வாசகனே படிமங்கள் மூலம் பேசும் கதைகளை உள்வாங்கமுடியும். இருவர் சேர்ந்து ஒரே கனவைக் காண்பதுபோல என அதை விளக்கலாம்.
அத்தகைய படிமம் சார்ந்த படைப்புகளை ‘விளக்க’ முடியாது. விளக்க ஆரம்பித்ததுமே இரண்டு சிக்கல்கள் வந்துவிடுகின்றன. ஒன்று, அந்தப்படிமத்தை குறியீடாக மாற்றித்தான் அதை விளக்க முடியும். இந்த விஷயம் இதைக்குறிக்கிறது என்று விளக்கினாலே படைப்பின் ஆழ்மனச்செயல்பாடு அறுந்து அது செயற்கையான ஒரு மூளைப்பயிற்சியாக ஆகிவிடும்.
உச்சவழு

Related Posts Plugin for WordPress, Blogger...