November 20, 2015

ஜெயமோகனின் மூன்று கதைகள்-3: பெரியம்மாவின் சொற்கள்

பெரியம்மாவின் சொற்கள் வசீகரம் நிரம்பிய கதை. வசீகரம் கொண்டதால் மன மயக்கத்தைத் தரும் கதை. கதையைப் படிக்கப் படிக்க மனம் பல திசைகளில் பாய்ந்து சொற்களிடையே ஊடாடி அலைகிறது. சொற்களைப் பெரியம்மா புரிந்துகொள்ளும் விதம் அலாதியானது. அதுவே கதைக்கு சுவராஸ்யத்தைத் தருகிறது. மனிதன் பிறறோடு தொடர்புகொள்ள சொற்கள் அவசிமாகிறது. ஆனால் அடுத்த மொழியில் உள்ள சொற்களை சொந்த மொழியில் உள்வாங்கிக் கொள்வது எப்போதுமே சவாலானது. இந்தக் கதையை வாசிக்கும்போது கோபிகிருஷ்ணனின் ‘மொழி அதிர்ச்சி’ இயல்பாக நம் நினைவுக்கு வருகிறது. அதில் அதிர்ச்சியாகத் தெரிந்து சிரிப்பாக மாறும் மொழியின் புரிதல், இதில் இதமாக வருடி புன்னகையாக விரியச்செய்கிறது.

அந்த ஊரிலேயே பெரியவீட்டில் வசிக்கும், எல்லோராலும் பெரியம்மா என்று அழைக்கப்படும் பெண்மணி கணவனை இழந்தவர். அவரது முதல் பேரனின் பேத்தி அமெரிக்காவில் டாக்டராக பணிபுரிகிறாள். அவளுடன் அமெரிக்கா செல்ல ஆயத்தமாகும் பெரியம்மாவுக்கு அடிப்படை ஆங்கிலச் சொற்களை சொல்லித்தர முன்வருகிறான் அந்த ஊர் பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் கதைசொல்லி. அவன் வாயிலாக விரியும் இந்தக் கதை இருவருக்குமிடையே நிகழும் கற்றலின் அனுபவங்களைச் சுவைபடச் சித்தரிக்கிறது.

ஒரு மொழியின் சொற்களை பிற மொழியில் கற்கும்போது கற்போருக்கு அவைகள் அதே அர்த்தத்தைக் கொடுக்கின்றன என்பதைச் சொல்ல முடியாது. என்னதான் முயன்றாலும் சொந்த மொழியில் புரிந்து வைத்துள்ள சொற்களுக்கு இணையான பொருளை பிற மொழிச்சொற்களிலிருந்து பெற்றுவிட முடியாது. அவற்றின் ஓசை, உச்சரிப்பு, தொனி முதலியன முற்றிலும் மாறான ஓர் அர்த்தத்தையே கொடுப்பதாக புதிதாக மொழியைக் கற்பவர் உணர முடியும். கொசு என்ற சின்ன பூச்சி ஆங்கிலத்தில் மொஸ்கிட்டோ என்ற பயங்கர உயிர் போலவும், பெண்போல ஒலிக்கும் மாதுளம்பழம் ஆங்கிலத்தில் பொமெகிரெனேட் என்று ஆணாக மாறிவிட்டதாகவும் பெரியம்மா புரிந்துகொள்வது மொழியின் சிக்கலையும் அதே சமயம் அதன் தனிச்சிறப்பையும் எடுத்துக்காட்டுகிறது.

நாயில் ஆரம்பித்து படிப்படியாக சொற்கள் பின்னிச்செல்லும் பாங்கு கதையில் அபாரமாக வெளிப்படுகிறது. இடையிடையே சொற்களை விளங்கிக்கொள்ள புராணக்கதைகளைக் கொண்டுவந்து விளக்கம் தருவது பிரமாதம். அவற்றைப் படிக்கும்போது மனதில் ஏற்படும் பாய்ச்சலை வார்த்தைகளில் விவரிப்பது இயலாததாகவே இருக்கிறது என்பதை உணரும்போது பெரியம்மாவின் உணர்வுகளை நாம் எளிதாகப் புரிந்துகொள்ள முடிகிறது. சொற்களின் நேரடி அர்த்தங்களைவிட தன் சொந்த உணர்வுகளின் அடிப்படையில் பெரியம்மா சொற்களைப் புரிந்துகொள்வதை அறியும்போது கற்பதற்குச் சொந்த மொழியைவிடத் தகுதியானது வேறொன்றில்லை என்பதை உறுதியாகச் சொல்லிவிட முடிகிறது. ஆனால் அதே சமயம் அவற்றை பிறரிடம் வெளிப்படுத்த அவைகள் ஏற்றவையோ போதுமானவையோ அல்ல என்பதையும் புரிந்துகொள்ளலாம்.

வாழ்க்கையைக் கற்றுக்கொண்ட பெரியம்மாவுக்கு, சொற்களை அதனுடைய நேரடி அர்த்தத்தில் புரிந்துகொள்வது இயலாததாகவே இருக்கிறது என்பதையும், தன்னுடைய சொந்த வாழ்வின் அனுபவங்களின் சாரத்தையே பெரியம்மா சொற்களாக் காண்கிறாள் என்பதையும் சொல்லும் இந்தக் கதையின் வாசிப்பனுபவம் பெருமதியானது. மனித வாழ்க்கையில் இந்தச் சொற்கள் இல்லையென்றால் என்னவாகும்? இரு நபர்களுக்கிடையே இருக்கும் நெருக்கம் சொற்களால் கூடுகிறதா அல்லது குறைகிறதா? சொற்களுக்காக வாழ்க்கையா அல்லது வாழ்க்கையிலிருந்து சொற்களா? போன்ற எண்ணற்ற கேள்விகள் கதையின் வாசிப்பினூடே, கடல் அலையென மனதைத் தொட்டு நனைக்கின்றன.

ஒரு கணத்துக்கு அப்பால், கரடி, பெரியம்மாவின் சொற்கள் ஆகிய மூன்று கதைகளுக்கிடையே நான் காணும் பொதுவான அம்சம் மூன்று கதைகளும் உணர்வுகளைச் சொற்களாக்குகின்றன என்பதும், அப்படிச் சொற்களாக்கும் முயற்சியில் கற்றல் நிகழ்கிறது என்பதும்தான். நோயுற்ற அப்பா தன்னுடைய உணர்வுகளைப் பாடலாக, கவிதைகளாக வெளிப்படுத்துகிறார். பெரியம்மா தன்னுடைய உணர்வுகளைச் சொற்களாக மாற்றிக்கொள்கிறாள். கரடி பேசமுடியாது என்பதால் தன்னுடைய உணர்வுகளைச் செய்கையாக, செயலாக வெளிப்படுத்துகிறது.

பெரியம்மாவின் சொற்கள்

Related Posts Plugin for WordPress, Blogger...