November 19, 2015

ஜெயமோகனின் மூன்று கதைகள்-2: கரடி

பிரமாதமான நகைச்சுவையோடு தொடங்கி, நகைச்சுவையின் உச்சத்தைத் தொட்டுப் பின்னர், சரேலென முற்றாகத் திரும்பி வாசிப்போரை எதிர்பாராத சோகத்தில் ஆழ்த்தும் கதை கரடி. மோதி சர்க்கஸில் சவரம் செய்யும் பணி செய்யும் ஒருவனின் பார்வையில் இந்தக்கதை சொல்லப்படுகிறது. ஜாம்பன் என்ற கரடியை அவனுடைய முதலாளி வாங்கிவருவதும், கரடிக்கும் முதலாளிக்கும் உள்ள உறவும், அதன் பவ்வியமும் ஜெயமோகன் மொழி நடையில் அபாரமான நகைச்சுவையாக மிளிர்கிறது. அவரது நுணுக்கமான சித்தரிப்பு கதைக்கு மெருகேற்றுகிறது. ஜாம்பனிடம் நிகழும் ஒவ்வொரு மாற்றத்தையும், அங்க அசைவையும் துல்லியமாக காட்சிப்படுத்தியிருப்பது ரசிக்க வைக்கிறது. நாம் கரடியுடனே சில காலம் வாழ்ந்தது போன்ற பிரமையை ஏற்படுத்துகிறது கரடியைப் பற்றிய அவதானிப்புகள். 

கரடியின் உடலெங்கும் கோளிப்பேன் பிடித்துக்கொள்ள, பேனின் கடி தாளாமல் இம்சைப்பட்டு சொறியும் கரடிக்கு மருத்துவர்களை அழைத்து வைத்தியம் செய்கிறார் முதலாளி. பேன்களின் அரிப்பால் கரடி சொறிவது எந்த மருந்துக்கும் கட்டுப்படாமல் போகிறது. அதைக் காணும் கதைசொல்லி, நுணலும் தன்வாயால் கெடும் என்பதற்கேற்ப ஏதோ சொல்லப்போக, கரடிக்கு சவரம் செய்ய முதாலாளி சொல்லிவிட, கதைசொல்லி தத்தளிக்கிறான். அவன் கரடிக்கு சவரம் செய்வதைக் காண, சர்க்கஸில் பணியாற்றும் அனைவரும் கூடிவிடுவதும், அவன் தவிப்பதும் நம்மை வாய்விட்டுச் சிரிக்க வைக்கிறது. ஆரம்பத்தில் தடுமாறும் அவன் போகப்போக அந்த வேலையை ரசித்துச் செய்ய ஆரம்பிக்கிறான். எதையும் பழகிவிட்டால் ரசிப்புத்தன்மையும், சகிப்புத்தன்மையும் தன்னாலே கூடிவிடுகிறது. அது ஒரு இனிய வேலையாகவும், கரடி முடிகளின் சுழி அமைப்பைக் கண்டுபிடிப்பது அவனுக்குப் பரவசம் தருவதாகவும் ஆகிவிடுகிறது.

முடி முழுதும் மழிக்கப்பட்ட கரடியின் தோற்றம் அனைவரையும் வெடித்துச் சிரிக்க வைக்கிறது. அந்தக் காட்சியை மனக்கண்ணில் காணும் நாமும் ‘கொள்’ என சிரித்துவிடுகிறோம். அப்போது பாலன், “எதுக்குடே அந்தப் பாவம் சீவனப்போட்டு இந்தப்பாடு படுத்துதீய? மிருகமா இருந்தாலும் அதுக்குண்ணு ஒரு மானம் மரியாத உண்டில்லாடே?” என்று கோபப்படுகிறான். அப்படி அவன் சொல்வது சாதாரணமாகத் தெரிந்தாலும், கதையைப் படித்து முடித்த பிறகு அவன் சொன்னதை நாம் மீண்டும் நினைக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டு விடுகிறது.

கரடிக்கு ஷூக்களும், தொப்பியும், கையுறைகளும் அணிவித்து,  ‘கரடி மனிதன்’ எனும் நிகழ்ச்சியை முதலாளி அறிமுகம் செய்கிறார். நிகழ்ச்சியைக் காண கூட்டம் கூடுகிறது. சம்புடத்தில் நீருடன் கால்மடித்து அமர்ந்து சந்தியாவந்தனம் செய்வது, அடுப்புமூட்டி காப்பி போட்டு குவளையில் ஊற்றி எடுத்துக்கொண்டு மரநாற்காலியில் கால்மேல் கால்போட்டு செய்தித்தாள் வாசிப்பது, மரச்சுத்தியால் ஆணி அடிப்பது போன்றவையும் இன்ன பிற கரடியின் செயல்களும் பார்ப்போரை வியப்பில் ஆழ்த்துகிறது. ஒரே நாளில் தாவண்கெரே முழுதும் கரடியின் புகழ் பரவுகிறது.

சர்க்கஸில் பணி புரியும் அனைவரும் கரடியை ‘பாட்டா’ என்று உறவுமுறை சொல்லி அழைக்க, கரடி ஒரு விலங்காக அன்றி அவர்களுள் ஒருவனாகவே மாறிவிடுகிறது. ஹரிஹர், சித்ரதுர்க்கம் என அனைத்து நகரங்களிலும் ஜாம்பன் பரபரப்பை ஏற்படுத்துகிறது. ஆனால் கரடியைப் பற்றிய உண்மை எப்படியோ கசிகிறது. அதை சரிசெய்ய பாலனை கரடியாக அதனுடன் வேஷம்போட வைத்து, பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்குக் கரடி மனிதன் பதில் சொல்வதாக காட்சி அமைக்கப்படுகிறது. இந்த இடத்தில் கதை அதன் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறது. பாலன் பேச, கரடி அதற்கு ஏற்றாற்போல வாயை அசைக்க காட்சி சூடுபிடிக்கிறது. பெரியவர் ஒருவர், “முக்திக்கான வழி பக்தியா ஞானமா?” என்று கேட்க கரடி, “கரையானும் தேனும்” என்று பதில் சொல்லி, “கரையான்புற்று என்பது சுறுசுறுப்பான கர்ம மண்டலத்தைக் குறிக்கிறது. தேன் என்பது ஆன்மாவின் ஆனந்தம்” என்று விளக்கம் தருவது நகைச்சுவையின் உச்சம்.

சர்க்கஸிலேயே பாலனுக்கு அதிகத்தொகையைச் சம்பளமாகக் கொடுத்து, அவன் எப்போதும் கரடி ஒப்பனையில் ஜாம்பன் அருகிலேயே இருக்கவேண்டும் என்று முதலாளி உத்தரவிடுகிறார். நாட்கள் செல்லச்செல்ல என்னவாயிற்றோ கரடி வேடமிட்ட பாலனுக்கும், மனித வேடமிட்ட ஜாம்பனுக்கும் பிடிக்கமாற்போகிறது. இதை அறிந்த முதலாளி இருவர் கைகளையும் பிணைத்து விலங்கிடச் சொல்கிறார். இருவரும் ஒன்றாகவே சாப்பிட்டு, மலஜலம் கழித்து இருந்தபோதும் இருவரும் ஒருவரை ஒருவர் உணராதது போல இருக்கிறார்கள். “பாலன் முகத்தில் இருப்பதைவிட அதிக வெறுப்பு ஜாம்பன் முகத்தில் தெரிவதைக் கண்டு அஞ்சினேன்” என்று கதைசொல்லி இந்த இடத்தில் குறிப்பிடுவது சாதாரணமாகத் தோன்றினாலும், கதையைப் படித்து முடித்த பிறகு அவன் சொன்னதை நாம் மீண்டும் நினைத்துப் பார்க்கவேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

பாலன்-ஜாம்பன் இருவரின் காட்சியும் சர்க்கஸில் நாளுக்கு நாள் ஜொலிக்கிறது. அதைப் பற்றி கதைசொல்லி, “ஜாம்பனின் நடையும் அசைவுகளும் மட்டுமல்ல முகபாவனைகளும் கூட மனிதர்களைப்போலவே மாறின. மூக்குக்கண்ணாடியை கையில் எடுத்ததும் ஒருமுறை ஊதிவிட்டு துடைத்து மாட்டியதைக் கண்டு அதை எப்போது கற்றுக்கொண்டது என வியந்தேன். பிறகு அது கணக்கு மகராஜபிள்ளை செய்வது என்பது நினைவுக்கு வந்தது. நாற்காலியில் அமர்வதற்கு முன்பு அதை அப்புநாயர் போலவே துண்டால் ஒருமுறை துடைத்துக்கொண்டது. பாலனும் கரடியைப்போலவே ஆனான். ஆட்டம் இல்லாதபோதுகூட அவன் கரடிபோலத்தான் கைகளை அசைத்து இடையை உருட்டி நடந்தான். கைகளை மடியில் வைத்துக்கொண்டான்” என்று சொல்வது இருவருக்குள்ளும் முழுமையான ஓர் உள்ளுறை மாற்றம் நிகழ்ந்து முடிந்துவிடுவதைச் சொல்கிறது. மனிதன் மிருகமாக, மிருகம் மனிதனாக பரிணாம மாற்றமடைந்து விடுகிறார்கள்.

இதன் பிறகு கதையில் நாம் முற்றிலும் எதிர்பாராத ஒரு திருப்பம் வருகிறது. படிப்படியாக நிகழ்ந்த இதுவரையான நிகழ்ச்சிகளின் உச்சமாக இந்தத் திருப்பம் ஏற்படுகிறது. பாலனும் ஜாம்பனும் ஒன்றாக இருந்த கூடாரத்தில், பாலன் இறந்து கிடப்பதைக் காண்கிறான் கதைசொல்லி. அவனது சவரக் கத்தியினால் ஜாம்பன் பாலனைக் கொன்றுவிட்டது என்று இன்ஸ்பெக்டர் முடிவுசெய்கிறார். இனிமேல் அதை விட்டுவைப்பது ஆபத்து என்று ஜாம்பனைச் சுட்டுக்கொள்கிறார். பாலனைக் கொன்றது யார்? உண்மையிலேயே ஜாம்பன்தான் கொன்றதா இல்லை வேறு யாராவதா? என்ற கேள்விக்கான பதிலை வாசகன் ஊகத்திற்கே விட்டுவிட்டு நகர்ந்துவிடுகிறார் கதையாசிரியர்.

கரடியான ஜாம்பன் மனிதனான பாலனைக் கொன்றிருக்க அநேக சாத்தியக் கூறுகள் உள்ளன. ஏனெனில் இப்போது ஜாம்பன் வெறும் கரடி என்ற மிருகமல்ல மாறாக தன்னை முற்றாக மாற்றிக்கொண்டுவிட்ட மனிதன். கற்றலின் சிறப்பம்சமே அது ஒரு கட்டத்துக்குப் பின்னர் சுயகற்றலாக மாறிவிடுகிறது என்பதே. சர்க்கஸில் இருக்கும் எல்லோருடைய நடை உடை பாவனைகளை தன்னுடைய செய்கையில் பிரதிபலிக்கும் ஜாம்பன், பாலனுக்கு அதிக சம்பளம் வாங்குவதைக் கண்டு பொறாமை கொள்ளும் பிறரது எண்ணங்களின் வெளிப்பாடாகவே பாலனைக் கொல்கிறது என்று அறிகையில் வாசிப்பில் மனம் கொள்ளும் பாய்ச்சல் அபரிமிதமானது. (கரமாசவ் சகோதரர்களில் ‘எல்லாமே அனுமதிக்கப்பட்டது’ என்ற இவானின் சிந்தனையால் ஸ்மர்த்தியாக்கவ் கொலை செய்யும் தூண்டுதல் அடைவதை கவனிக்க).

மனிதனிடமிருந்து உறவைக் கற்றுக்கொள்ளும் மிருகம், பகையையும் கற்றுக்கொள்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது. அது அது அதனது குணத்தோடு இருப்பதே நல்லது. மாற்ற முனைந்தால் விபரீதங்கள் விளைவதைத் தடுக்க முடியாது. ஜாம்பன் சுடப்படுவதற்கு முன்னர், “எதையோ நினைவு கொண்டதைப்போல வலக்கையால் தலையை லேசாகத் தட்டிக்கொண்டது” என்ற வரிகள் அநேக அர்த்தங்களை எடுத்தியம்புகிறது. தான் செய்துவிட்ட காரியத்துக்காக தன்னையே நொந்துகொள்கிறதா? அல்லது செய்ததை சரியாகச் செய்யாமல் மாட்டிக்கொண்டோமே என்று கவலைப்படுகிறதா என்பதை யார் அறியக்கூடும்?

கதையின் முத்தாய்ப்பாக ஜெயமோகன் வைக்கும் “ஒத்தகுண்டு” என்ற ஒற்றைச் சொல்லும் நம்மைப் புரட்டிப்போடுகிறது. சுடப்பட்டு இறந்து கிடக்கும் ஜாம்பனைப் பார்த்துவிட்டு ராஜன் மாஸ்டர், “ஒத்தகுண்டு” என்கிறார். இன்ஸ்பெக்டர் சென்றபிறகும் அவர், “ஏலே ஒத்தக்குண்டு போரும்லே” என்கிறார் மீண்டும். அந்தச் சொல்லின் ரகஸ்யம் என்ன? அவர் எதை மனதில்கொண்டு அப்படிச்சொல்கிறார்? ஒரு மிருகத்தை மனிதனாக மாற்றியவர்கள், அதற்கான தண்டணை வழங்கும்போது மட்டும், “A beast is a beast” என்று சொல்லி ‘ஒத்தகுண்டை’ தீர்ப்பாக வழங்குவது எந்தவிதத்தில் நியாயம்? ஒரு மனிதன் இதைச்செய்திருந்தால் இப்படியான ஒரு தீர்ப்பை வழங்கியிருக்க முடியுமா? வழக்கு விசாரணை என எத்தனை நடந்திருக்கும்? இது ஒரு பக்கமிருக்கட்டும், உண்மையில் பாலனைக் கொன்றது மனிதனா அல்லது மிருகமா?
Related Posts Plugin for WordPress, Blogger...