November 19, 2015

ஜெயமோகனின் மூன்று கதைகள்-1: ஒரு கணத்துக்கு அப்பால்

சமீபத்தில் வாசித்து நான் பெரிதும் மனக்கிளர்ச்சி அடைந்த கதைகள் என்று ஜெயமோகனின் ஒரு கணத்துக்கு அப்பால், கரடி, பெரியம்மாவின் சொற்கள் ஆகிய மூன்று கதைகளைச் சொல்லலாம். மூன்று கதைகளும் மூன்று விதமான வாசிப்பனுபவத்தை அளிப்பவை. இந்தக் கதைகளை வாசித்து முடித்ததும் இந்தக் கதைகளைப் பற்றி என்ன சொல்ல முடியும் எனும் கேள்வியும் திகைப்புமே எனக்கு முதலில் ஏற்பட்டது. எனவே மூன்று கதைகளையும் பிரிண்ட் எடுத்து மேசையின் மீது வைத்துக்கொண்டேன். அவற்றை பார்க்கும்போதெல்லாம் எடுத்து மீண்டும் மீண்டும் வாசித்தேன். மூன்று கதைகளுக்கும் பொதுவான அம்சம் இருப்பதாகவும், அதைக் கண்டடையும்போது மிகப்பெரிய திறப்பு நிகழும் என்றும் தோன்றியபடியே இருந்தது.

இந்தக் கதைகளைக் குறித்து என்ன எழுதுவது எப்படி எழுதுவது என்ற தவிப்பு கடந்த சில நாட்களாக கனவிலும் நனவிலும் இருந்துகொண்டே இருந்தது. ஒரு வாசிப்பை முடித்த பிறகு, அதைப்பற்றி எழுத முடிவு செய்யும்போது நான் நம்புவது என்னுடைய ஆழ்மனத்தைத்தான். எனவே வாசிப்பு முடிந்த பிறகு, இரவுகளில் தூங்கும் போது, அருகில் பேப்பரும் பேனாவுமாகவே உறங்குவது என் வழக்கம். எப்போதெல்லாம் விழிப்பு வருகிறதோ அப்போதெல்லாம் வாசித்தவை குறித்து எழுதவேண்டிய வரிகள் மனதில் ஓடும். அவற்றை உடனடியாக குறித்துக்கொள்வேன். காலையில் எழுந்ததும் அவற்றை ஒழுங்குபடுத்தி எழுதுவேன். நான் தீவிரமாக எழுதிய பல பதிவுகள் இப்படியானவைதாம்.

ஒரு கணத்துக்கு அப்பால் கதையின் தொடக்கமே ஒரு பெண் செயற்கையான ஆண்குறியுடன் புணர்வதில் தொடங்குகிறது. மனிதன் தனியாக வாழ படைக்கப்பட்டவன் அல்ல. அவனைச் சுற்றி உறவுகளும் தோழமையும் இருப்பது அவசியம். ஒரு மனிதன் தன்னுடைய உறவுகளை என்னதான் சுருக்கினாலும் அது இறுதியாக ஆண்-பெண் என்ற ஒற்றை உறவில்தான் வந்துமுடியும். ஆனால் இன்றைய காலகட்டம் அந்த ஒற்றை உறவையும் செயற்கையாக ஆக்கிவைத்திருக்கும் விபரீதம் கதையின் தொடக்கத்தில் பளீரென நமது பின் மண்டையில் உறைக்கிறது. அங்கிருந்து தந்தை-மகன் உறவை சித்தரிக்கும் விதமாக நகரும் கதை, மனிதனின் ஜீவசக்தியாக இருக்கும் பாலுணர்வின் பரிமாணத்தைப் புரியவைக்கிறது.

மனிதர்கள் காலத்தையும் தன்னையும் முற்றாக இழக்கும் தருணம் காமத்திலேயே நிகழ்கிறது. அதனால்தான் மனச்சோர்வுக்கு மருந்தாக மகன் பாலியல் தளங்களை நாடுகிறான். அதுவும் மாத்திரைகளுமே மனச்சோர்வை நீக்கி அவனுக்கு உறக்கத்தைத் தருகிறது. அவன் அந்தத் தளத்தைப் பார்வையிடும் காட்சியை விஸ்தாரமாகவே விவரிக்கிறார் ஆசிரியர். அவற்றைப் படிக்கப்படிக்க நம் மனம் இயல்பாகவே காமத்திலிருந்து விலகிச்செல்லும் விந்தையைக் காண்கிறோம். அந்தக் காட்சிகளின் விவரணைகள் மனிதன் உண்மையில் விரும்புவது காமத்தை அல்ல என்றும் தன்னை முற்றாக இழக்கும் அந்த ஒரு கணத்தைத்தான் என்பதை உணர்த்துகிறது.

அந்த ஒரு கணத்துக்கு அப்பால் மீண்டும் திரும்பத் திரும்ப அந்த ஒரு கணமே நிகழ்கிறது. மனிதர்களில் அந்த ஒரு கணத்தைத் தாண்டிச் சென்றவர்கள் மிகவும் அபூர்வமாகவே காணப்படுகிறார்கள். எனவே அந்த கணத்துக்காகவே பாலுணர்வை மனிதர்கள் மீண்டும் மீண்டும் நாடுகிறார்கள். இணையத்தில் பாலுணர்வு தளங்களில் இந்த சலிப்பல்லாத காட்சிகளே திரும்பத் திரும்ப உலவுகின்றன. உடல் நலமில்லாத மனிதர்கள் அந்த ஒரு கணத்தை அடையும் வாய்ப்பை இழந்துவிடுகிறார்கள். எனவே அவர்களால் வாழ்க்கையின் தருணங்களை உற்சாகமாக செலவழிக்க முடிவதில்லை. பாலுணர்வுத் தூண்டுதலே அந்த உற்சாகத்தைத் திரும்பக் கொண்டுவருகிறது. ஆக, அந்த அப்பா அந்தத் தூண்டுதல் கிடைக்கப் பெற்றதும் அதை மடைமாற்றம் செய்து கொள்கிறார். அவருக்குள் இருக்கும் அந்தப் பாலுணர்வு பாடலாக, இசையாக பரிணமிக்கிறது.

அப்பா முணுமுணுக்கும் பாடல்களும், கவிதை வரிகளும் இளமையில் அவருடைய உள்ளத்தை முழுமையாக ஆக்கிரமித்தவை, அவருள் பொங்கிப் பிரவகித்தவை என்பதைப் புரிந்துகொள்வது வாசிப்பிற்கு அவசியமானது. பாலுணர்வுத் தூண்டுதல் அவருள் காமத்தை மட்டுமே தூண்டாமல் அவரது பல இனிய நினைவுகளை மீட்டெடுக்கிறது. அந்த வீட்டில் பெண்கள் என யாருமில்லை என்பதும், அது இந்தக் கதைக்கு ஒருவகையான பரிமாணத்தை கூட்டுவதையும் உணர்வது வாசிப்பின் ஒரு வெளிப்பாடு. லீலா யார்? அவளுக்கும் இந்தக் குடும்பத்துக்கும் என்ன தொடர்பு? போன்ற கேள்விகளை எழுப்பிக்கொள்வது வாசிப்பின் சாத்தியக்கூறுகளைப் பெருக்கி, மேலும் பல கதவுகளைத் திறக்க உதவுகிறது.

புரோஸ்ட்ரேட் சுரப்பியை அகற்றினால் காம உணர்வு எழாது என்று சொல்கிறார்கள். மனிதனின் உடலிருந்து எந்த உறுப்பை எடுத்தாலும் அவற்றின் பின்னாலுள்ள இச்சைகள் ஒருபோதும் மடிவதில்லை. அது முழுக்க முழுக்க மனம் சம்பந்தப்பட்டது. உறுப்புகள் இருந்தும் மனமில்லையென்றால் இச்சைகள் எழுவதில்லை. ஆனால் உறுப்புகள் இல்லாமலும் இச்சைகள் எழும் என்பதை உணர்ந்துகொண்டால் கதையில் வரும் அப்பாவுக்குள் கணிணியில் காணும் பாலுணர்வுக் காட்சிகளால் மாறுதல் நிகழ்வதை நாம் புரிந்துகொள்ள முடியும். “ஆணோட மூளைல இருக்கிற அமிக்டலாவ தூண்டுற சக்திகளில் போர்ன் முக்கியமானது. அந்த நரம்புகளிலேதான் புத்திசாலித்தனம் ஞாபகசக்தி எல்லாமே இருக்கு. ஆக்சுவலி ஒரு டிரீட்மெண்டாகவே அதைச் செய்வதுண்டு” என்று டாக்டர் சொல்வது” உறுப்புகள் செயலிழந்தாலும் இச்சைகள் மடிவதில்லை என்பதையே அறியச்செய்கிறது.

வெறுமனே படுத்துக் கிடந்த அப்பா, “நல்ல மழை. சிலுசிலுன்னு காத்து அடிக்கறப்பவே நெனைச்சேன்... இப்ப ஒரு டிரைவ் போனா நல்லாருக்கும்” என்று சொல்வது சோர்ந்து கிடந்த அவர் உடலுக்கு தெம்பையும், அவர் முணுமுணுக்கும் பாடல் அவருடைய மனதுக்குள் உற்சாகம் புகுந்து விட்டதையும், அதைத் தொடர்ந்து அவர் பல பாடல்களையும், கவிதைகளையும் சொல்லியவாறு உவகையுடன் தன்னை மேலும் மேலும் வெளிப்படுத்திக் கொள்வதையும் ஜெயமோகன் அழகாக சித்தரித்துள்ளார். “அப்பா முழுமையாகவே மாறிவிட்டிருந்தார். இரவில் நெடுநேரம் அந்த தளத்தில்தான் இருந்தார். காலையில் விடிவதற்குள் சுறுசுறுப்பாக எழுந்துகொண்டார். மதியம் படுத்து அவன் அந்தியில் வருவதுவரை தூங்கினார். முகமே மாறிவந்தது. கண்களுக்குக் கீழே அந்த தொய்ந்த தசைவளையங்கள் மறைந்தன. பதறியது போலவோ வேறெங்கோ இருப்பது போலவோ தெரியும் பார்வை மறைந்தது. அவனுக்கு நன்கு தெரிந்த, மறந்துவிட்டிருந்த, புன்னகை திரும்பி வந்தது” என்பதை வாசிக்கும்போது மனிதனுக்கு இன்றிருக்கும் பல்வேறு சிக்கல்களுக்கு அவன் முழுமையாக காம இன்பத்தைத் துய்க்காததுதான் காரணமோ என்ற வினாவை எழுப்புகிறது.

உடல் நலமின்மை, மனச்சோர்வு இரண்டும் மனிதனைப் பீடிக்கும் மிகப்பெரிய வியாதிகள். இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கின்றன. அப்பாவின் உடல்நலக்குறைவு மகனை மனச்சோர்வில் தள்ளுகிறது என்பதை யூகிக்கலாம். அவன் அந்த சோர்வினால் பாலுணர்வு தளத்தை தூக்க மாத்திரையாகப் பயன்படுத்துகிறான். கதையின் தொடக்கத்தில் தந்தை பாலுணர்வு தளத்தைப் பார்த்துவிட்டதை அறியும் மகன் குற்றவுணர்வு கொள்கிறான். அதை அப்பாவின் பார்வையிலிருந்து மறைக்க விரும்புகிறான். ஆனால் போகப்போக அவனது குற்றவுணர்வு மெல்லமெல்ல மறைந்து அது எல்லோருக்குமான ரகசிய இடம் என்ற புரிதலை அடைந்து, இதில்தான் மனிதனுக்கு மகிழ்ச்சி எனில் அதை மறைக்கவேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வியை எழுப்பிக்கொள்கிறான்.

அப்பாவின் பார்வையில் வாசிப்பதே ஒரு கணத்துக்கு அப்பால் கதையின் பொதுவான வாசிப்பின் தளமாக இருக்கும். ஆனால் அந்தக் கதையை மகனின் பார்வையில் பார்த்தால், கதை நம்மை வேறுவகையான உணர்வுக்கு இட்டுச் செல்வதை அறியமுடியும். தொலைக்காட்சியில் பார்க்கும் ஆண்-பெண் பாடல்கள் அனைத்தும் ஆடையணிந்த பாலியல் செயல்பாடுகள் என்றும் வெளியே ஆடையுடன் அதைத்தானே செய்துகொண்டிருக்கிறோம் என்றும் எழுகின்ற அவனது சிந்தனைகளுடன், பாடலிலும் கவிதையிலும் தன்னை மூழ்கடித்துக் கொள்ளும் அப்பாவை ஒப்பிடும்போது நம்முடைய வாசிப்பில் நிகழ்வது வேறுவகையான உளப் பாய்ச்சல்.

மனிதனின் அடிப்படை உணர்வுகளில் காமம் பிரதானமானது. அவனுக்குள் எழும் அனைத்து ஆசைகளின் பிறப்பிடம் காமம்தான். அதுவே இச்சா சக்தியாக அவனை வழிநடத்துகிறது. அந்த இச்சை வெறும் காமமாகத்தான் வெளிப்பட வேண்டும் என்ற அவசியமில்லை. உலகில் பல்வேறு மனிதர்கள் தனித்திறனுடன் மிளிர்வதற்குக் காரணம் அவர்கள் தங்களுக்குள் இருந்த அந்த இச்சையை வேறுவகையில் மாற்றம் செய்துகொண்டதுதான். காந்தியின் பிரம்மச்சரியம் என்பதே காம உணர்வை எவ்வாறு மாற்று வழிகளில் பயன்படுத்துவது என்பதைப் பற்றியதுதான். வாலிபத்தில் தன்னுடைய காம இச்சையால் குற்றவுணர்வு அடைந்த காந்தி பின்னாளில், அதை நாட்டின் விடுதலைக்கான வேட்கையாக மாற்றிக்கொண்டது அப்படித்தான்.
Related Posts Plugin for WordPress, Blogger...