October 20, 2015

கலையும் கலைஞனும்: விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம் -சி.மோகன்

பெரும் கலைஞர் ஒருவரின் அதிசயங்களும் வதைகளும் நிறைந்ததொரு வாழ்வுச் சித்திரம். தன் கவசங்களையெல்லாம் கலைக்கு ஒப்புக்கொடுத்து ஏதுமற்றவராகி நின்று எல்லாமாகித் தீர்ந்தவரின் உலகம். நவீன சொல் முறையினூடே கலையின் ஆழங்களை நோக்கியும் அது சார்ந்த புரிதல் மற்றும் கலை மனதின் கவிதார்த்த தனித்துவங்களை நோக்கியும் ஒளியுறுத்திக் காட்டும் நாவல். லௌகிக மலட்டுப் பிரக்ஞையை கலையான்மிகத்தின் சுடரால் தீண்டுகிறது இது. ஓவியத்தை ஒரு குறியீடாகக் கொண்டு சகல உயர் கலைகளின் உன்னதங்களின் பால் நம் மனம் விழைய இறைஞ்சுகிறது. எதிர் நின்ற கடும் அவமரியாதைகளும் புறக்கணிப்புகளும் இறுதியில் தோற்றுப்போக, காலத்தில் ஒரு பேராகிருதியாய் எழுந்த இந்த ஓவியரைப் பற்றிய அரும் புனைவு- சி.மோகனின் காலகால கலை நம்பிக்கையாலும் அர்ப்பணிப்பாலும் எளிதில் சாத்தியமாகியிருக்கிறது. இவ்வகையில் தமிழில் அபூர்வ முதல் நிகழ்வு. ஒரு புதிய திசை வழியில் நம் கண் திறக்கும் ஓர் இலக்கியச் சம்பவம். - யூமா வாசுகி
மனித வாழ்க்கை புரியாத பல புதிர்களைத் தன்னகத்தே கொண்டது. வாழ்க்கையில் ஒன்று ஏன் நடக்கிறது அல்லது நடக்காமல் போகிறது என்பது குறித்து அது நடந்த பின் அல்லது நடக்கும் முன் விவாதிக்கலாமே அல்லாமல் அதன் விசித்திரப் போக்கை, முடிவை யாரும் நிச்சயிக்கவோ தீர்மானிக்கவோ ஒருபோதும் முடியாது. ஏனெனில் தன் வாழக்கையின் மீது தனி ஒரு மனிதன் கொண்டிருக்கும் கட்டுப்பாட்டைவிட புறச்சூழல் அவன் மீது கொள்ளும் தாக்கம் ஆற்றல்மிக்கது. ஆக, ஒருவருக்கு வாழ்க்கையில் எவ்வளவோ கனவுகளும், ஆசைகளும் இருந்தாலும் அவைகள் ஒரு கட்டத்தில் கற்பனையாகவும், நிராசையாகவும் பொய்த்துப்போவதில் வியப்பு ஏதுமில்லை. இவ்வுலகின் புறச்சூழலுக்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக்கொள்ள முடியாமல் அவதிப்பட்ட, அசாதாரண திறமை கொண்ட, ராமானுஜம் எனும் ஓவியக் கலைஞனின் வாழ்க்கை குறித்த ஒரு விசாரணையே சி.மோகனின் விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்.

ராமானுஜம் எனும் ஓவியனின் வாழ்க்கையை விவரிக்கும் விதமாக விரியும் இந்நாவல் அவரது தற்கொலையில் தொடங்குகிறது. எனவே எண்ணற்ற கேள்விகளுடனும், எதிர்பார்ப்புகளுடனும், வாழ்வின் விசித்திரங்களை அறியும் ஆவலுடன், நாவலை வாசிக்க தூண்டப்படுகிறோம். ஓவியர் ராமானுஜத்தின் கதையை எழுதுவதற்காக அவரைப் பற்றிய விவரங்களை, ஓவியர் டக்ளஸை சந்திந்து, சேகரித்து நாவலை எழுதுகிறார் எழுத்தாளர். எழுத்தாளருக்கும் டக்ளஸீக்கும் இடையேயான சந்திப்பு இடைவெட்டாக நாவலின் கதையினூடே வருவதாக நாவலை வடிவமைத்திருக்கிறார் சி.மோகன்.

பதினான்கு வயது நிரம்பிய ராமன், புறத்தோற்றத்தாலும், திக்குவாயாலும் அனைவராலும் அலட்சியப்படுத்தப்படும் ஒரு சிறுவன். அவனது உடல் மொழியும், திக்குவாயும் பிறருடன் சகஜமாகப் பழக விடாமல் அவனை அந்நியப்படுத்துகிறது. அவன் சகஜமாக பழகும் ஒரே உறவு அவன் அம்மாதான். படிப்பு வராமல் பள்ளிப்படிப்பைக் கைவிட்டுவிட்ட நிலையில், கோயில் தெப்பக்குளத்து படிகளிலும், கோயிலைச் சுற்றிய பகுதிகளிலும் அமர்ந்து நோட்டுப் புத்தகத்தில் புழுக்கைப் பென்சிலைக்கொண்டு கோடுகளால் ஓவியம் வரைவதுதான் அவனது ஓரே பொழுதுபோக்கு.

தன் மனதின் துக்கத்திற்கு வடிகாலாக அவன் ஒவியத்தைக் கண்டடைகிறான். தன் விரல்களின் மூலம் வெளிப்படும் கோடுகள் உருவம்கொள்ளும் விந்தை அவனைப் பரவசத்தில் ஆழ்த்துகிறது. அதில் வெளிப்படும் அவன் திறமை அபூர்வமானது. சிறு வயதிலேயே கோடுகளின் மீது அவன் கொண்டிருந்த ஆளுமை அசாதாரணமானது. ஓவியங்கள் கோட்டிலிருந்து பயணித்து, கற்பனை உச்சிக்கு அவனை இட்டுச்செல்லும் விதத்தை சி.மோகன் நுட்பமான சித்திரிப்புகள் மூலம் விவரித்திருக்கிறார். கையில் கிடைக்கும் துண்டு பென்சிலால் பலவிதத்தில் ஓவியங்களை வரைந்து பார்த்து மகிழ்கிறான். அவன் குடும்பத்தாரோ அவன் மேதமையைப் புரிந்துகொள்ளாது அவனை அலட்சியப்படுத்துகிறார்கள்.

திறமை உடையவர்களை வாய்ப்பும் வசதியும் ஏதோ ஒரு விதத்தில் தேடி வரத்தான் செய்கின்றன. கோயில் பட்டர் ஒருவர் அவனது திறமை கண்டு வியந்து அவ்வப்போது அவனுக்கு பேப்பரும் பென்சிலும்  வாங்கிக்கொடுத்து உற்சாகப்படுத்துகிறார். ஒரு முறை அவன் வரையும் கருடன் குழலூதும் சித்திரம் அவரை வெகுவாகக் கவர்கிறது. அவன் இருக்கும் இடம் இதுவல்ல என்று உணர்ந்து அவனை ஓவியப் பள்ளியில் சேர்க்க உதவுகிறார். அங்கும் அவன் பல்வேறு சிரமங்களுக்கிடையே படிக்கிறான். அவனது ஆற்றல் பள்ளி முதல்வர் பணிக்கரைக் கவர்கிறது. அவனது அசாத்திய திறனை உணரும் அவர், அவனுக்கு ஸ்காலர்ஷிப் பெற்றுத் தருகிறார். அவனுக்கு பல்வேறு வகையிலும் உதவுகிறார்.

குடும்பத்திலிருந்து தனிமைப் படுத்தப்பட்ட ராமன் பள்ளி வளாகத்திலேயே தங்கி படிக்கிறான். படிப்பு முடிந்ததும், பணிக்கரின் முயற்சியால் கலைஞர்களுக்கென்று உருவாக்கப்பட்ட சோழமண்டலம் கிராமத்தில் வசிக்கிறான். அங்கே இருக்கும் பிற கலைஞர்களும் அவன் திறமையைப் புரிந்துகொள்ளாமல், தோற்றத்தை வைத்து கேலி செய்கிறார்கள். எனவே அவன் தேவி என்ற நாயைத் தனது தோழனாக பாவித்து நேசமாகப் பழகிவருகிறான். ஒரு சமயம் ஹோட்டல் ஒன்றில் ஓவியம் வரையும் வாய்ப்பு வருகிறது. அதற்காக ஆயிரம் ரூபாய் முன் பணமாகக் கிடைக்கிறது. அதில் தனக்கு விருப்பமான தொப்பியும், ஜோல்னா பையும், ஷீவும், காலணியும், உடைகளும் வாங்கி அணிந்து மகிழ்கிறான். தானும் எல்லோரையும் போல் நவநாகரிக மனிதனாக வாழ முடியும் என்று உள்ளம் மகிழ்கிறான். சி.மோகன் நாவலின் இந்தப் பகுதியை, மனித மனத்தின் நெடுநாள் ஆசைகள் நிறைவேறும்போது ஏற்படும் மனமகிழ்ச்சியை, நுட்பமாக, அற்புதமாக சித்தரித்துக் காட்டுகிறார்.

அவ்வப்போது ஓவியங்கள் விற்பதன் மூலம் பணம் கிடைக்கிறது ராமனுக்கு. ஆனால் அவன் பிரச்சினை சக மனிதர்களுடன் சகஜமாக உறவாட முடியாமல் இருப்பது. எனவே தனிமை அவனை வாட்டுகிறது. ஒரு பெண் தனது வாழ்க்கைத் துணையாக அவன் மிகுந்த பிரயாசைப்படுகிறான். ஆனால் அவனது புறத்தோற்றமும், குடியும், திக்குவாயும் அவனை மற்றவர்கள் ஏளனம் செய்யவும், புறக்கணிக்கவும் வைக்கிறது. இவையெல்லாம் தரும் மன நெருக்கடி ஒரு கட்டத்தில் அவனை மனப்பிறழ்வு நிலைக்குத் தள்ளுகிறது. போதாக்குறைக்கு, தான் ஆத்மார்த்தமாக நேசிக்கும், தன் சுபாவமாகவே மாறிவிட்ட ஓவியப் படைப்புக்கு ஒரு தேக்க நிலை உருவாகிவிட்டதைக் கண்டு பெரும் துக்கம் அவனுக்கு ஏற்படுகிறது. இனியும் தான் வாழ்வதில் அர்த்தமில்லை என்று முடிவெடுத்து, பூச்சி மருந்து குடித்து தன் உயிரை மாய்த்துக்கொள்கிறான்.

ஒரு மனிதனின் வாழ்க்கையில் புறச்சூழல் எத்தகைய மன நெருக்கடியை அவனுக்கு உருவாக்கும் என்பதையும், அது அந்த மனிதன் ஆத்மார்த்தமாகக் கைக்கொண்ட கலை வாழ்க்கையிலிருந்து அவனை எவ்வாறு புறந்தள்ளுகிறது என்பதையும் சி.மோகன் அற்புதமாக இந்நாவலில் காட்டியிருக்கிறார். ராமானுஜத்தின் கலை அவரைக் கைவிட்டதா அல்லது அவரைச் சுற்றி இருக்கும் சக மனிதர்களைக் கொண்ட இச்சமூகம் அவரைத் தொலைத்ததா எனும் கேள்வியை இந்நாவல் நம்முன் வைக்கிறது. நூறு பக்கங்களே கொண்ட சிறிய நாவல் என்றாலும், வாழ்வு குறித்து இந்நாவல் நம்மிடம் எழுப்பும் கேள்விகள் ஆழமானவை. அர்த்தம் நிரம்பியவை.

நாவல் என்ற கலை வடிவத்தின் மீது புது ஒளியைப் பாய்ச்சியவர் சி.மோகன். அவரது பல கட்டுரைகள் இக் கலை வடிவத்தின் வீச்சைக் குறித்தே அதிகமும் பேசுகின்றன. அவர் ஏதாவது நாவல் ஒன்றை எழுதக்கூடும் என்று பல நாட்களாய் எதிர்பார்த்திருந்தேன். சென்ற வருடம் அவரது மொழிபெயர்ப்பில் ஓநாய் குலச்சின்னம் வந்தது. இந்த வருடம் ஓவியர் ராமானுஜம் குறித்த இந்நாவல் வந்திருக்கிறது. காலம் அனுமதித்தால் இவ்வாறு இன்னும் ஒன்றிரண்டு படைப்புகளைத் தர முடியும் என்று சொல்லியிருக்கிறார். காலம் அனுமதிக்கும் என்று நம்புகிறேன்; விரும்புகிறேன்.
இந்த நாவல் யதார்த்தத்தைப் பரிசீலிக்கவில்லை. மாறாக, இருத்தலின் சாத்தியங்களைப் பரிசீலிக்கிறது. பொதுவாகவே, புறச் சூழல்களினால் தீர்மானிக்கப்படுபவர்களாக நாம் இருக்கிறோம். அவற்றிலிருந்து தப்பிக்கும் சாத்தியங்களை நாம் அறியாதிருக்கிறோம். அதனால் நாம் மேலும் மேலும் ஒருவரைப் போலவே ஒவ்வொருவரும் இருந்துகொண்டிருக்கிறோம். நிர்ணயிக்கப்பட்ட ஒரு வாழ்வெளிக்குள் சிறைபட்டிருக்கிறோம். பொதுவாக, நம் வாழ்க்கை ஒரு பொறியில் சிக்கிக்கொண்டிருக்கிறது. அதேசமயம், இந்த உலகம் மிக விசாலமானதாகவும் வாழ்க்கை எண்ணற்ற கோலங்களுக்கு இடமளிப்பதாகவும் இருந்துகொண்டிருப்பதால் தப்பிப்பதற்கான சாத்தியங்களும் இருந்துகொண்டிருக்கின்றன. அவற்றைப் பரிசீலிக்கும் ஒரு கலைச்சாதனம்தான் நாவல். ஒரு மாறுபட்ட அழகிய சாத்தியத்தில் வாழ்ந்த ஓவியக் கலைஞன் பற்றிய நாவல் இது. இன்னொரு சாத்தியத்துக்கு அவன் நகர விழைந்தபோது, அது கைகூடாத நிலையில், அவன் இல்லாமல் போவதும் ஒரு சாத்தியமாகிறது. –சி.மோகன்
 நாவலின் ஒரு பகுதி

(மறுபிரசுரம். முதல் பிரசுரம் பிப்ரவரி 11, 2014)

Related Posts Plugin for WordPress, Blogger...