காந்தியின் பிரம்மச்சர்யம்

காந்தியின் பிரம்மச்சர்யம் குறித்து யாவரும் அறிந்ததே. தனது அஹிம்சை போராட்டத்திற்கு பிரம்மச்சர்யமே அடிப்படை என்பதை மிகத் தீவிரமாக நம்பியவர் அவர். சத்தியத்திற்கான சோதனைகளில் வெற்றிபெற பிரம்மச்சர்யமே ஆத்ம பலம் என்று சொன்னதோடு, தன்னைச் சார்ந்த அனைவரையம் பிரமச்சர்யம் பேண வேண்டும் என்றும் வற்புறுத்தினார். தனது வாழ்க்கையில் அவர் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளின் இறுதி இலக்கு பிரம்மச்சர்யமே. பிரம்மச்சர்யத்தை அடைய அவர் பிரம்மப் பிரயத்தனம் செய்தார். அதற்காக அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அநேகம். அவரது பிரயத்தனம் உண்மையாக இருந்தது. பிரம்மச்சர்யத்தை அடைய தான் கடந்துவந்த பாதைகளைத் தீவிரமான சுயவிமர்சனத்தின் மூலம் முன்னெடுத்துச் சென்றவர் அவர். அவர் கைக்கொண்ட பிரம்மச்சர்யத்தின் முறைகளில் பலருக்கு அதிருப்தியும், விமர்சனமும் இருக்கலாம். ஆனால் அவர் அவற்றில் விடாப்பிடியாயான முயற்சியுடனும், உண்மையுடனும் இருந்தார் என்பதை மறுப்பதற்கில்லை. அதில் பாசாங்கு இல்லை; போலி இல்லை.

காந்தியின் பிரம்மச்சர்ய சோதனைகளில் ‘இளம் பெண்களுடன் ஆடையின்றி உறங்குவது’ என்பதும் ஒன்று என்பதை முதன்முதலாக அறிந்தபோது எனக்கு அதிர்ச்சியும், ஒவ்வாமையையும் ஏற்பட்டது. ஆனால் ‘தந்த்ரா’ எனும் யோக முறை பற்றி அறிந்த பின்னர், அந்த ஒவ்வாமை நீங்கியது. இருந்தும் அப்படி காந்தி ‘பயன்படுத்தி’ய பெண்களின் நிலை என்ன என்பதை யோசித்தபோது அவர் அணுகுமுறையை ஜீரணிக்க முடியாமலே இருந்தது. ஆனால் ஜெயமோகனின் ‘இன்றைய காந்தி’ என்ற நூலை வாசித்தபோது எனது ஐயப்பாடுகள் நீங்கின. அந்த நூலில் ‘காந்தியும் காமமும்’ எனும் தலைப்பிலான கட்டுரைகள் மிகவும் அற்புதமானவை. காந்தியின் பிரம்மச்சர்யத்தைப் புரிந்துகொள்ள அந்தப் பகுதி மிகவும் பயனுள்ளது என்பதால் அவற்றிலிருந்து சிலவற்றை கீழே தருகிறேன்:
1946ல் டிசம்பர் இருபதாம் தேதி முதல் காந்தியும் உறவில் அவரது பேத்தியான மனுவும் ஒரே படுக்கையில் நிர்வாணமாக உறங்க ஆரம்பித்தார்கள் என்கிறார் பிக்குபரேக். காந்தி மனுவிடம் இந்த விஷயத்தை அவளே தன் தந்தைக்கு கடிதமெழுதி தெரிவிக்க ஆணையிட்டார். மேலும் மனு என்ன நினைக்கிறாள் என்பதை ஒவ்வொரு நாளும் ஒரு நோட்டுபுத்தகத்தில் எழுதி காந்தியிடம் காட்டி கையெழுத்து பெறவேண்டும் என்றார்.
இங்கே தெரியும் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் காந்தியுடன் மனு தான் என்ன செய்யப்போகிறோம் என்று தெரிந்து மிக வெளிப்படையாகவே அந்தச் சோதனைகளில் ஈடுபடுகிறார் என்பதே. மனுவை அல்லது பிற பெண்களை காந்தி ‘பயன்படுத்திக்’ கொண்டார் என்று சொல்வதில் எந்தப்பொருளும் இல்லை. அவர்கள் எவரும் தங்கள் வாழ்க்கையில் பிற்காலத்தில் ‘உளச்சிக்கல்களுக்கு’ ஆளாகவும் இல்லை. அவர்களுடைய வாழ்க்கை ஆன்மீகமாக நிறைவுகொண்டதாகவே இருந்தது.
இந்தப்பரிசோதனை தொடங்கிய மூன்று வாரங்களில் ,1947 ஆண்டு ஜனவரி எட்டாம் தேதி காந்தி கிருஷ்ணதாஜ் தஞி என்ற நண்பருக்கு எழுதிய கடிதத்தில் இதைப்பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். ‘இது கடுமையான சோதனை ஆனால் அதிகமான பயனுள்ளது’ என்று காந்தி குறிப்பிட்டார்.
காந்தியின் பரிசோதனைகள் அதுவரை அதிகமும் வெளியே தெரியாமல் இருந்தன. இந்தக் காலகட்டத்தில் அவை பெரும் சர்ச்சைக்குள்ளாகி காந்தியைப் பின்பற்றியவர்களால் கடுமையாக விமரிசிக்கப்பட்டன. நேரு பட்டேல் உட்பட அனைவருக்கும் இந்த சோதனைகள் குறித்து ஆழமான மனத்தாங்கல் இருந்தது என்று பிக்கு பரேக் குறிப்பிடுகிறார்.
காந்தியின் இந்தச் செயலைப்பற்றி சில விஷயங்களை நாம் கவனிக்கவேண்டும். ஒன்று, காந்தி இதை ரகசியமாகச் செய்யவில்லை. மிகமிக வெளிப்படையாக செய்தார். ஆசிரமத்தில் அவர் பெண்களுடன் படுக்கும் இடம் கதவுகள் இல்லாதது. எவரும் உள்ளே செல்லத்தக்கது. இரண்டு, காந்தியின் உடன் படுத்த வயது வந்த பெண்கள் ஆசாரமானவர்கள். எவருமே அதை எந்தவகையிலும் பிழையாக உணரவில்லை. சொல்லப்போனால் பின்னர் இது ஒரு வம்பாக ஆனபோது அவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.
அந்தப்பெண்களின் மனநிலையை அவர் கருத்தில் கொள்ளவில்லை என்று இன்று சிலர், பெண்ணியர்கள் குறிப்பாக, சொல்கிறார்கள். ஆனால் உண்மையில் அப்பெண்கள் அதை மிக இயல்பான ஒரு செயலாகவே குறிப்பிடுகிறார்கள். காந்தியுடன் படுத்தவரான சுசீலா நய்யார் ‘அக்காலத்தில் எல்லாம் அதை ஓர் இயற்கைச் சிகிழ்ச்சை என்றே பாபு சொன்னார். அவரது முதுகின்மீது நாங்கள் படுத்துக்கொள்வோம். பாப்பு உடனே தூங்கிவிடுவார். அன்றும் இன்றும் இதில் என்ன பிழை இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை” என்று சொன்னார்.
இதைப்பற்றி எழுதிய மேலை ஆய்வாளரான நிக் கீர் காந்தியின் ஆசிரமத்தில் இருந்த பெண்கள் காந்தியிடம்தான் எந்தவகையான பாலியல் சங்கடமும் இல்லாத இயல்பான உறவை அடைந்ததாகச் சொல்லியிருப்பதை பதிவுசெய்திருக்கிறார். மனு காந்தியுடன் படுக்கும்போது அவரை தன் அம்மாவாக உணர்ந்ததாகச் சொன்னார், கவனிக்கவேண்டியது அப்பாவாக அல்ல என்பதே. அவரிடமிருந்து எவ்வகையான பாலியல் செயல்பாடும் சலனமும் அவர்களின் கவனத்துக்கு வரவில்லை. ஆகவே அவரே ஒருமுறை தனக்கு இரண்டுமுறை பாலியல் எழுச்சி ஏற்பட்டதாகச் சொன்னபோது மனு சற்று குழப்பம் அடைந்தார். ஆனால் கடைசிவரை அவருக்கு காந்தி அன்னையாகவே இருந்தார்.
காந்தி மேற்கொண்ட முறை ‘ஸஹஸயனம்’ என்று தாந்த்ரீக மரபில் குறிப்பிடப்படுவதே என்று நித்ய சைதன்ய யதி சொன்னார். அது வைணவ தாந்த்ரீகத்தில் உள்ள ஒரு வழிமுறை. கண்ணன் கோபிகைகளுடன் செய்தது அது என்று அதைச் சொல்கிறார்கள். புலன்களை வெல்லும்பொருட்டு புலன்களையே மயக்குவது என்று அதைச் சொல்லலாம்.
உணவுகளில் சோதனை, உண்ணாவிரம் ஆகியவற்றின் மூலம் பிரம்மச்சர்யத்தை எளிதாகக் கடைபிடிக்க முடியும் என்று காந்தி கருதினார். உணவுக் கட்டுப்பாட்டின்மூலம் காமக் குரோதத்தைக் குறைக்க முடியும் என்றும், உடலின் அபரிமிதமான சக்தியை உண்ணா நோன்பின் மூலம் செலவழித்து, உடம்பை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியும் என்றும் அவர் நம்பினார். உடலை பலவீனப்படுத்தி, உள்ளத்தைத் திடப்படுத்தும் முயற்சியாகவே அவரது பரிசோதனை இருந்தது. தனது சத்திய சோதனையில் பிரம்மச்சர்யம் குறித்து அவர் எழுதிய பின்வரும் பகுதிகள் அவர் மேற்கொண்ட தீவிரமான, விடாமுயற்சியான, நீண்ட பயணத்தை நமக்குக் காட்டுகிறது:
தீர விவாதித்து, ஆழ்ந்து சிந்தித்த பிறகே, 1906-ஆம் ஆண்டில் நான் பிரம்மச்சரிய விரதத்தை மேற்கொண்டேன். இது சம்பந்தமாக எனக்கு இருந்த எண்ணங்களைக் குறித்து, அதுவரையில் என் மனைவியிடம் நான் எதுவும் கூறவில்லை. விரதத்தை மேற்கொண்ட சமயத்தில் மாத்திரமே அவளைக் கலந்து ஆலோசித்தேன். அவளுக்கு எவ்வித ஆட்சேபமும் இல்லை. ஆனால், முடிவான தீர்மானத்திற்கு வருவதில் எனக்கு அதிகக் கஷ்டம் இருந்தது. அதற்கு வேண்டிய மனபலம் என்னிடம் இல்லை. எனது சிற்றின்ப இச்சையை அடக்குவது எப்படி? ஒருவன் தன்னுடைய மனைவியிடம் கூடச் சிற்றின்ப உறவைப் போக்கிக் கொண்டுவிடுவது என்பது விசித்திரமானதாகவே அப்பொழுது தோன்றிற்று. ஆனால், ஆண்டவனின் அருள் பலத்தில் பூரண நம்பிக்கை வைத்து, துணிந்து விரதத்தை மேற்கொண்டேன்.
அந்த விரதத்தை அனுசரித்து வந்திருக்கும் இருபது ஆண்டு காலத்தை நான் இப்பொழுது எண்ணிப் பார்க்கும்போது எனக்கு அளவற்ற ஆனந்தமும் ஆச்சரியமுமே உண்டாகின்றன. புலன் அடக்கத்தில் ஏறக்குறைய வெற்றிகரமாக அனுசரித்து வந்திருக்கும் பயிற்சி 1901-ஆம் ஆண்டிலிருந்தே நடந்து வருகிறது. ஆனால், விரதத்தை அனுசரித்த பிறகு எனக்கு ஏற்பட்ட சுதந்திரத்தையும் ஆனந்தத்தையும் 1906-ஆம் ஆண்டிற்கு முன்னால் நான் அனுபவித்ததில்லை. விரதம் கொள்ளுவதற்கு முன்னால் எந்தச் சமயத்திலும் ஆசைக்கு அடிமை ஆகிவிடக்கூடும் என்ற நிலையில் நான் இருந்தேன். ஆனால், இப்பொழுதோ எந்த ஆசையினின்றும் என்னைக் காக்கும் நிச்சயமான கேடயமாக விரதம் இருந்து வருகிறது. பிரம்மச்சரியத்தின் அபார சக்தி, நாளுக்கு நாள் எனக்குப் புலனாகி வந்தது.
தினந்தோறும் ஆனந்தத்தை அதிகமாக்கும் விஷயமாகவே அது இருந்தாலும், அது எனக்கு எளிதாக இருந்துவிட்டது என்று யாரும் எண்ணிவிட வேண்டாம். எனக்கு ஐம்பத்தாறு வயது ஆகிவிட்ட பிறகும்கூட, அது எவ்வளவு கஷ்டமான காரியம் என்பதை அறிகிறேன். கத்தியின் முனைமீது நடப்பதைப் போன்றது அது என்பதை, ஒவ்வொரு நாளும் மேலும் மேலும் அதிகமாக உணருகிறேன். என்றைக்குமே விழிப்புடன் இருந்து வர வேண்டியது அவசியம் என்பதையும் காண்கிறேன்.
பிரம்மச்சர்யம் கடைபிடிப்பது எத்தனை கடினமான காரியம் என்பதையே அவரின் எழுத்துக்கள் நமக்குக் காட்டுகிறது. இருந்தும் விடாமுயற்சியுடன் அதைக்கடைபிடிக்க அவர் பட்ட சிரமங்களையும் நாம் அறிகிறோம். இவையெல்லாம் 1925ல் சத்தியசோதனையில் அவர் எழுதியவை. ஆனால் அதற்குப் பின்னரும் தான் பிரம்மச்சர்யத்தில் முழுமையாகக் கடைபிடித்து வருகிறோமா என்ற சந்தேகம் அவருக்கு எழுந்தபடியே இருந்திருக்கிறது. சத்தியசோதனை எழுதிய 13ஆண்டுகள் கழித்து 1938ல் அவர் எழுதிய பிரம்மச்சர்யம் என்ற கட்டுரை பிரசுரமாகவில்லை. அதை காந்தியை அறிதல் என்ற தனது நூலில் தரம்பால் சுட்டிக்காட்டுகிறார். அவர் காட்டும் அக்கட்டுரையின் பகுதிகள் பின்வருமாறு:
நூற்றுக்கணக்கான, ஒருவேளை ஆயிரக்கணக்கான இளைஞர்களும் இளம்பெண்களும் என்னைப் பின்பற்றுகிறார்கள் அல்லது “பிரம்மச்சர்யம்” என்பதை ஆழமாகப் புரிந்துகொள்கிற முயற்சியில் என்னால் வழிநடத்தப்படுகிறார்கள் அல்லது சுயகட்டுப்பாடு உள்ள வாழ்க்கை முறையில் முழுமையாக அல்லது சிறிய மாறுதல்களுடன் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வழி காட்டுவதற்காகவும் மற்றும் உண்மையின் பொருட்டும் சமீபத்தில் எனக்கேற்பட்ட அனுபவங்களை ஒளிவுமறைவின்றிக் கூற வேண்டும்….
நான் எண்ணியதைச் செய்துகொண்டிருப்பதில் எற்பட்டிருக்கும் முன்னேற்றத்தைக குறித்து ஓரளவு திருப்திகரமாகவே இருந்துகொண்டிருக்கிறேன். ஆனால், ஏப்ரல் 7ஆம் தேதி நான் கண்ட ஒரு கெட்ட கனவின் முடிவில் ஒரு பெரும் அதிர்ச்சியை நான் அடைந்தேன். 14ந்தேதி எனக்கு ஓர் அனுபவம் கிடைத்தது. இதற்கு முன் எப்போதும் இத்தகைய அனுபவத்தைப் பெற்றதில்லை. நான் விழித்திருந்த நிலையில் அது நிகழ்ந்தது. பனிரெண்டு மணிநேரம் முழுமையாக நிகழ்ந்த அந்தப் போராட்டத்தில் நான் தோற்கடிக்கப்பட்டேன். நான் எண்ணாமலேயே ஸ்கலிதம் நிகழ்ந்துவிட்டது என்னைக் குறித்து நானே வெட்கப்பட்டேன், என்னுடைய பிரம்மச்சரியத்தில் கறை படிந்ததாகவிட்டது… தன்னம்பிக்கையை இழந்துவிட்டேன்…
என்னால் ஒரு காரணத்தை யோசிக்க முடிந்தது. இவ்விதம் நிகழ்ந்ததில் என்னுடன் பணிபுரிகிற பெண்களுடன் எனக்கிருக்கும் நெருக்கமான தொடர்புகளும் சுதந்திரமும் ஏதாவது ஒருவகையில் பங்காற்றியிருக்குமோ…? எளிதில் இதற்கு விடை கிடைக்கவில்லை. என்னில் நான் மனச்சோர்வு அடையவில்லை. ஆனால் மிகவும் தாழ்ந்து போனதாக உணர்கிறேன். உயரத்திலிருந்த நான் கீழே வீழ்ந்ததாக உணர்கிறேன். தென் ஆப்பிரிக்காவில் என்னுடைய திடமான சகாக்களால் சாதிக்க முடிந்த உடல் ரீதியான சவால்களுக்கு, ஒரு நாளில் 40 மயில்கள் நடை பயணம் மேற்கொள்வது போன்றவற்றிற்கு ஈடு கொடுக்க என்னால் முடிந்தது. பிரம்மச்சரியத்தின் உடல் ரீதியான அம்சங்கள் வெறுக்கத்தக்கவை அல்ல… மனக்கட்டுப்பாடு என்பது இல்லாமல் உடற்கட்டுப்பாடு இழக்கப்படக் கூடியது. மேலும் அம்மனிதன் முதல் தரமான வேஷதாரியாக மாறிவிடவும் கூடும்.
சத்தியாக்கிரகிகளின் படைக்கு என்னை நானே தளபதியாக நியமித்துக்கொண்டேன். பிரம்மச்சரியம் என்பதைத் தவிர என்னிடம் தற்காப்புக் கவசங்கள் எதுவுமில்லை. உண்மையும் அஹிம்சையும் பிரம்மச்சரியம் என்பது இல்லாமல் தொடரமுடியாது. என்னுடைய எண்ணங்களைத் தவிர கம்பியில்லாத் தந்தி எதுவும் என்னிடம் இல்லை. பல லட்சக்கணக்கான மக்களை மனித சக்தியின் வழியாக நான் சென்றடைந்தது குறித்து விழிப்புடன் நான் இருக்கவில்லை. ஒருவர் அவருடைய எண்ணங்களின் முழுமையின் மீது முழுக்கட்டுப்பாட்டை வைத்திருந்தால் அவருக்கு நிகராக, எல்லாவிதமான பௌதீக அறிவியல்களும் இணைந்து உருவாக்குவதைவிட அவர் இணையற்ற சக்தியின் திரட்சியைப் பெற்றிருக்கமுடியும் என்று எனது ஆழமான அனுபவங்களின் அடிப்படையில் நான் நம்புகிறேன். இந்தக் கட்டுப்பாடு என்பது மனிதனில் நிரம்பியிருக்கிற முக்கியமான ஜீவசக்தியின் பண்பு மாற்றமும் சேமிப்பும் இல்லாமல் சாத்தியமில்லை. இதன் வெளியேற்றம், ஓர் உயிரை உருவாக்கும் நோக்கத்திற்காக அன்றி வேறு எதற்கானதாக இருப்பினும், கடவுளால் அளிக்கப்பட்ட மிக உயர்ந்த சக்தி கீழ்த்தரமாக வீணாகிறது.
அந்த உள்ளடக்கம், பாதுகாப்பு போன்றவை, எல்லா அர்த்தத்திலும் ஒருவரின் எண்ணங்களின்மீதான முழுமையான கட்டுப்பாடு என்பது இல்லாமற் போனால், சாத்தியமற்றதாகிவிடும். இத்திசையில் நான் சிறிது தொலைவு பயணம் செய்திருக்கிறேன் என்றபோதிலும் நான் இன்னும் நீண்ட தொலைவைக் கடந்தாக வேண்டும் என்பது தெளிவு.
இந்தக் குறைபாடு, காங்கிரசுக்குள் இருக்கிற ஊழல்களுக்கு, வன்முறைக்கு, ஒழுங்கீனங்களுக்கு எற்ற சரியான தீர்வைத் தருவதில் என்னுடைய தோல்வி போன்றவற்றையும் கூடக் குறிக்கிறது. அஹிம்சை வெற்றிபெறுவதற்கு உதவுகிற தகுதி உள்ளதுதான் என்ற என்னுடைய நம்பிக்கை எப்போதும் பிரகாசமாக இருக்கிறது. அப்படியானால் என்னுடைய இந்த நம்பிக்கையைக் குறைந்தபட்சம் காங்கிரஸ்காராகளிடம் கொண்டுசெல்வதில் கூட ஏன் நான் தோற்கிறேன்? காரணம், ஒருவேளை இப்போது வெளிப்படையாகத் தெரியலாம். அஹிம்சை என்பது அறிவுஜீவிகளுக்கு வெறுமனே அழைப்பு மட்டும் விடக்கூடியதாக இல்லை. அதனுடைய இறுதியான குறிக்கோளின் அழைப்பு இதயத்திற்கு இதயம் பரிமாறிக்கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும். ஆனால் அந்த அழைப்பு வெற்றி பெறுவதற்கு அதிலிருந்து வருகிற வார்த்தைகளும் சக்தி வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய எண்ணம். அந்த சக்தி குறைவாக இருப்பதால் விதிவசமான அந்த ஏப்ரல் 14இல் நான் உணர்ந்ததைப்போல குறிப்பிட்ட நோக்கமின்றி அலையும் பழக்கப்படாத குதிரையைப் போல என் எண்ணங்கள் இருந்துகொண்டிருக்கின்றன. சத்தியாக்கிரகிகளின் படைத் தலைவனாக வெற்றிபெற வேண்டுமானால் அவைகளை என் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். இதனை ஏற்பவர்களும் என்னைப் பின்பற்றுபவர்களும் என்னோடு பிரார்த்திக்க வேண்டுகிறேன். தேவையான தூய்மையாக்கத்திற்காக நம்மையெல்லாம் ஆண்டுகொண்டிருக்கிற கண்ணுக்குத் தெரியாத சக்தி அருள வேண்டும்.
ஒருவர் தான் கடைபிடிக்கும் கொள்கையில் எந்த அளவிற்கு உண்மையாக இருக்கிறோம் என்பதை சுயபரிசோதனை செய்துகொள்வது அவசியம் என்பதையே கட்டுரையின் இந்தப் பகுதிகள் நமக்குச் சொல்கின்றன. தான் கடைபிடிக்கும் கொள்கைகள் வெறும் பேச்சளவில் இருப்பது மட்டும் போதாது, அது நமது உடலின் ஒரு அங்கமாகிவிட வேண்டும் என்பதை வலியுறுத்துவதாகவே காந்தியின் இக்கட்டுரை அமைந்திருக்கிறது. ஒருவர் மகாத்மா என்று பட்டம் பெற்ற பின்னரும் தன்னை இவ்வாறு வெளிப்படையாகத் திறந்து காட்டுவது அபூர்வம். ஏனென்றால் அந்த மகாத்மா பட்டம் உண்மையை மறைத்து போலியை முன்னிருத்தும் உந்துதலை நமக்குக் கொடுக்கக்கூடியது. பட்டத்தின் பின்னால் தன் முகத்தை மறைத்துக்கொள்வதல்ல, பட்டத்தைக் கிழித்து தன் உண்மையான முகத்தைக் காட்டுவதுதான் உண்மையான மகாத்மாவின் வேலை. காந்திக்கு அப்படிச் செய்வது சர்வசாதாரணமாக கைவந்திருக்கிறது. அதனால்தான் அவர் மகாத்மா, நாம் அவர் பெயரை உச்சரித்துக் கொண்டிருக்கும் சாதாரண மனிதர்கள்.

(திருத்திய மறுபிரசுரம். முதல் பிரசுரம் அக்டோபர் 9, 2013)

Related Posts Plugin for WordPress, Blogger...