சு.ராவின் சில கவிதைகள்: ஒரு புரிதல்

றவுகளைப் பற்றி சுந்தர ராமசாமி எழுதிய அற்புதமான கவிதை ஒன்றிருக்கிறது. உறவுகளைப் பற்றி இதைவிடத் தெளிவாக யாரும் சொல்லிவிட முடியாது என்று கூறலாம். அவர் சொல்லும் கருத்து உறவுக்கு என்று மட்டுமில்லை, பலவற்றுக்கும் பொருந்தும். சில சமயம் நாம் சில விசயங்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டு செயலாற்றுகிறோம். ஆனால் சில நாட்களில் அவை நமக்கு வெறுப்பை ஏற்படுத்தி விடுகின்றன. நாம் அதிலிருந்து விலகி வேறோன்றைப் பற்றுகிறோம். மீண்டும் ஒரு சுழற்சியில் நாம் முன்னர் வெறுத்தவற்றை நேசிக்கவும், ஆராதிக்கவும் தொடங்குகிறோம். நம் வாழ்க்கை இப்படியான தொடர்ச்சியான வட்டப் பாதையில் சுழல்கிறது.

உறவு அது அப்படித்தான்
கவர்ந்திழுக்கும் அத்தர் நெடியடிக்கும்
அணைத்துப் பிசையும் பூப்பூவாய்ப் பூக்கும்
மனங்கள் இணைந்து ஆக்கங்கள் மலரும்
காலடியில் அடிவானங்கள் குவியும்
அதன் பின் எகிறிக் குதித்து இரத்தம் கசியும்
துருவின் துகள்கள் புற்றுப்போல் குவிந்து
பார்வைகள் திரியும்
கசப்பு மண்டி அடித்தொண்டை அடைத்து
மலக்கிடங்கில் விழுந்து சாகும்
மீண்டும் உயிர்த்தெழுத்து வாசம் பரப்பி
வளைய வரத் தொடங்கும்.

உறவைப் பற்றிய இப்புரிதல் நமக்கு வரும்போது வாழ்க்கை லகுவாகிறது. இது இப்படித்தான் என்று மனச்சாந்தி அடைய முடிகிறது. வாழ்க்கையை எதிர்த்துப் போராடாமல் அதன் இயல்பான போக்கில் செல்ல ஏதுவாகிறது. ஒன்றை நாம் ஏற்றுக்கொள்ள மறுத்து அதனுடன் போராடும் போதுதான் மனரீதியாக எண்ணற்ற சிக்கல்களை நாம் எதிர்கொள்ள நேரிடுகிறது.

ம் வாழ்க்கையில் நாம் செய்யும் மிகப்பெரிய தவறு என்றவென்றால் அது ஒப்பீடுதான். நாம் நாமாகத்தான் இருக்க முடியுமேயன்றி வேறு ஒருவராக மாற முடியாது என்பது மட்டுமல்ல, அவ்வாறு மாற முயற்சிப்பது அறிவுடமையும் ஆகாது. நம் வாழ்க்கையில் நமக்கு என்று ஒரு சுயம் இருக்கிறது. எனவே அதைப் புறந்தள்ளிவிட்டு, பிறரைப் பார்த்து நகல் படுத்தும் செயலை நாம் செய்து வருகிறோம். நாம் நகல் அல்ல அசல் என்ற புரிதல் ஒவ்வாருவருக்கும் அவசியம். இந்தப் புரிதலை சுந்தர ராமசாமியின் கதவைச் சுரண்டாதே தயவுசெய்து என்ற கவிதை தருகிறது.

நான் இங்கு இருக்கிறேன்.
இங்கு
இச்சிறிய அறையில். சிறிய சன்னல் சிறது வெளிச்சம்.

தயவுசெய்து உன் ஆள்காட்டி விரலின் நகத்தால்
சாத்தியிருக்கும் என் கதவைச் சுரண்டாதே
எனக்கு உன் ஓசைகள் தெரியும்
உன்னைத் தெரியும்
உன்னிடம் எவ்வளவு என்பது தெரியும்.

என்ன உறக்கம் இன்னும் என்பாய்
தொழில் வரியைக் கட்டக் கடைசி நாள் கேட்பாய்
பங்குகள் சரிவதுபற்றி விசனத்துடன் பேசுவாய்
தொலைபேசி எண் என்ன என்பாய்.

கையாலாகாதவன் என என்னைச் சொல்லாமற் சொல்லி
குற்ற உணர்ச்சியை ஒரு பெரும் பாரம் சரித்துவிட்டுப் போவாய்.

ஒரே ஒரு கவிதை
போதும் இந்த ஜன்மம் பொருள்பட என்பது என் நம்பிக்கை
அதை எழுதிவிடக் காத்துக்கொண்டிருக்கிறேன்
உன் ஆள்காட்டி விரலின் நகத்தால் என் கதவைச் சுரண்டாதே
தயவுசெய்து.

ஞானிகளும் மகான்களும் நான் யார்? என்று கேட்டுக்கொண்டதின் பொருள் தன் சுயத்தைத் தேடுதல் என்பதுதான். பகவத் கீதையில் சுயதர்மத்தைப் பற்றியே கிருஷ்ணன் பேசுகிறான். ஒவ்வொருவரும் அவரவர் சுயத்தைத் தேடிப் பயணப்பட வேண்டும். நாம் பிறரின் நகலாவது நமக்குத் துன்பத்தையே தரும்.

னிதன் வாழ்க்கையில் இரண்டே விசயங்களுக்குத்தான் பயப்படுகிறான். ஒன்று வாழ்வதற்குப் பயம். இரண்டு சாவதற்குப் பயம். இந்த இரண்டு பயங்களும் இல்லாத மனிதர்கள் குறைவு. வாழும்போது எப்படி வாழப்போகிறோம் என்ற பயம். சாகும்போது வாழ்க்கை போகிறதே என்ற பயம். எப்படி வாழப்போகிறோம் என வாழும் வாழ்க்கை பயமாக இருக்கும்போது சாவைக் கண்டு பயம் கொள்வானேன்? சாவு வாழ்விற்கு மாற்றாக அமைந்துவிடாதா என்ன? ஆனால் மனிதன் அவ்வாறு சிந்திப்பதில்லை. பயந்து கொண்டே வாழ்ந்து பயந்து கொண்டே சாகிறான். வாழும்போது ஏன் பயம் வருகிறது என்றால், கையில் கிடைக்கும் இன்றை தினத்தை வாழாமல் விட்டுவிட்டு, வரப்போகும் நாளைய தினத்தில் வாழ்வதைப் பற்றிய சிந்தனையே நம்மை பயத்திற்கு இட்டுச் செல்கிறது. இன்று முழுமையாக வாழ்ந்தால் நாளைய பற்றி பயம் எழாது. மரணம் ஒரு போதும் நாளை வரப்போவதில்லை, அது வரும்போது, அந்த நாள் நமக்கு இந்த நாளாகத்தான் இருக்கும்.

சுந்தர ராமசாமியின் மனச்சுமை மனிதன் என்ற கவிதை இத்தகைய சிந்தனைகளை நமக்குள் ஏற்படுத்துகிறது.

மனச்சுமை மனிதனை
மீண்டும் சந்தித்தேன்
கொண்டை ஊசியாக வளைந்திருந்தான்
அவன் வாய்
அவன் பாதங்களைக் கவ்விக்கொண்டிருந்தது
உடலும் உள்ளமும் ஆத்மாவும
சுமையாகக் கனக்கிறது என்று அழுதான்
மரணம் விடுதலை தராதா என்றேன்
மரண பயத்தில்தான்
இரண்டாக மடிந்தேன் என்றான்.

இந்தக் கவிதையை ஒட்டி மிகெயில் நைமியின் ‘அம்மை வடுமுகத்து ஒரு நாடோடி ஆத்மாவின் நினைவுக் குறிப்புகள்’ என்று நூலில் அவனுக்கும் பூனைக்கும் நடக்கும் உரையாடலின் ஒரு பகுதியை நினைவு கொள்வது பொருத்தமாக இருக்கும்.

இளைஞன்: மரணம் வரும்போது நீ என்ன செய்வாய்?
பூனை: செத்துப்போவேன்!
இளைஞன்: மரணம் வேதனையாயிற்றே! நீ என்ன செய்வாய்?
பூனை: நான் அதை அனுபவிப்பேன்!

வாழ்க்கையும் சரி மரணமும் சரி ஆழந்து அனுபவிக்கும்போது அதில் துன்பமில்லை. அதலிருந்து தப்பி ஓடும்போதுதான் நமக்கு வேதனையும் துன்பமும் நேர்கிறது.

ம் வாழ்க்கையில் சம்பிரதாயங்களுக்கும் சடங்குகளுக்கும் குறையில்லை. ஒரு முக்கியமான நபர் இறந்துவிட்டால் அவரைப் பற்றி சம்பிரதாயமாக நாலு வார்த்தை பேசுவது என்பதை நாம் காலங்காலமாகச் செய்து வருகிறோம். அவரைப் பற்றி தெரியாமலே தெரிந்தது போல் பலவற்றைப் பேசுவது நம் பண்பாடு. நாம் கண்ட நாகரீகம்.  தெரிந்து பேசுவதில் தவறில்லை. தெரியாமல் பவற்றை உளறுவது பலரின் இயல்பு. அதைப் பற்றி செகாவின் சொல்லின் செல்வன் என்ற கதை நகைச் சுவையுடன் சொல்கிறது. அதையே சுந்தர ராமசாமியின் வித்தியாசமான மியாவ் என்ற கவிதை இவ்வாறு சொல்கிறது:

எனக்குத் தெரிந்த பூனை ஒன்று
நேற்று இறந்தது
சவ அடக்கத்துக்கு
நாங்கள் போயிருந்தோம்
என் நண்பனின் மனைவி
அழத் தொடங்கியபோது
என் மனைவியும் அழுதாள்
குழந்தைகள் அழுதன
சில வார்த்தைகள் பேசும்படி
என் நண்பன் என்னைக் கேட்டுக்கொண்டான்
நான் பேசத் தொடங்கினேன்
“இந்த பூனையின் மியாவ் மியாவ்
வேறு பூனைகளின் மியாவ் மியாவிலிருந்து
வித்தியாசமானது
மேலும்...”

இதையொட்டி சி.மோகன் எழுதிய ஆறுதல் அருவெறுப்பு என்ற கவிதை கவனிக்கத் தக்கது. இது மேற்படி கவிதையின் நீட்சி என்று சொல்லாம்.

ஆறுதல் சொல்ல எதுவுமில்லாதபோது
கொஞ்சம் அமைதியாக இருக்கலாம்
தப்பில்லை.

இதமான ஸ்பரிசம்
கருணை சுரந்த ஒரு முத்தம்
விம்மும் மனத்துடன் ஒர் இறுக்கமான அணைப்பு
நிர்கதியான பார்வை
கையாலாகாத கனிவான மௌனம்
மூர்க்கமான உதாசீனம்
இளக்காரமான புன்னகை
ஏதோ ஒரு வழியில்
மனதின் வாசனையை
நுகரத் தந்தால்
நல்லது.

அல்லது
ஓட்டை உடைசல் பேரீச்சம்பழ வார்த்தைகளை
உருட்டிவிட்டு
வேதனையைச் சிறுமைப்படுத்தாமலாவது
இருக்கலாம்.

னவுக்கும் வாழ்க்கைக்கும் எப்போதும் இடைவெளி இருப்பது தவிர்க்க முடியாதது. வாழ்க்கை ஒரு புதிர். அது இப்படித்தான் அப்படித்தான் என்று நாம் வரையறுத்துவிட முடியாது. சுகுமாரன் சொல்வதுபோல்,

கற்றுக் கொண்டதோ
சொல்லித் தந்ததோ
போல இல்லை வாழ்க்கை
அது குழந்தைக் கதையில்
மந்திரவாதி எங்கேயோ
ஒளித்து வைத்த உயிர்.

நாம் நினைத்தவை நடக்காமலும், நினைக்காதது நடப்பதும்தான் வாழ்க்கையின் இயல்பு. சிறப்பும் கூட.  ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட திரைக்கதையின்படி நடப்பது நடக்கிறது, நடக்கக் கூடாதது நடப்பதில்லை. எனவே வருந்துவதிலோ புலம்புவதிலோ அர்த்தமில்லை. நடப்பதை ஏற்றுக்கொள்வது, நம்மை, நம் வாழ்வை, லகுவாக்கும். வெட்கப்படாமல் துக்கப்படு என்று சுந்தர ராமசாமியின் கவிதை அதைத்தான் சொல்கிறது.

நண்ப
இளம் வயதில் நீ படித்த படிப்பு எனக்குத் தெரியும்
வாழ்வின் கோலங்கள் தெரியத் தெரிய
நீ நொந்துபோனதையும் நான் அறிவேன்
பின் துக்கம் வடியும் காலத்தைத்
தத்துவத்தின் எக்களிப்பில் நீ வர்ணித்தது
இன்றும் என் நினைவில் நிற்கிறது.

நண்ப
வெயிலிலும் வறுமையிலும்
சோதனைகளின் நெருப்பிலும்
நீ வாடி வெதும்பியதையும்
நான் அறிவேன்.

நண்ப
இப்போது என்னைப்போல்
நீயும் சோர்ந்து
நரையேறும் தலையைச்
சந்தேகங்களின் சாய்வு நாற்காலியில்
சாய்த்தாயிற்றா
மனச்சிக்கல்களின் இழைகளை
மூளையால் எண்ண முடியவில்லையே என்று
புலம்பி அழுகிறாயா.

நண்ப
இந்த உண்மையை ஒருபோதும் மறக்காதே
நம் நண்பர்களின் பொய் வழி அடைக்கும்
நம் துக்கம் விமோசனத்துக்கு இட்டுச்செல்லும்

நண்ப
வருந்தாதே
வெட்கப்படாமல் துக்கப்படு.

ந்த வாழ்க்கையின் அர்த்தம் என்ன? பிறக்கிறோம். வளர்கிறோம். சாப்பிடுகிறோம். வேலை செய்கிறோம். பிறகு ஒரு நாள் இறந்துபோகிறோம். உண்மையில் வாழ்க்கையில் அர்த்தம் என்று ஒன்றுமில்லை. இருக்கும் வரை வாழ்வது என்பது ஒன்றுதான் வாழ்வின் பொருளாக இருக்க முடியும். இதில் நாம் சாதிப்பதற்கு ஏதுமில்லை.

இந்த நிமிஷம் வரையிலும் இருந்ததுபோல்
இனி என் வாழ்க்கை இராது என
ஒரு கோடி முறை எனக்குள் சொல்லிக்கொள்கிறேன்.
என்ன பயன்?
என்னை நான் இகழ்ந்து கொண்டதைத் தவிர.

நான் என் காலை வைக்க வேண்டிய படி எது?
நான் குலுக்க வேண்டிய கை
நான் அணைக்க வேண்டிய தோள்
நான் படிக்க வேண்டிய நூல்
நான் பணியாற்ற வேண்டிய இடம்
ஒன்றும் எனக்குத் தெரியவில்லை.
இப்படி இருக்கிறது வாழ்க்கை.

இவையெல்லாம் தெரிந்துவிட்டால் மட்டும் வாழ்க்கை அர்த்தமுடையதாக ஆகிவிடுமா என்ன? வாழ்க்கையின் அர்த்தம் என்று இப்படி சிலவற்றை நாம் அர்த்தப்படுத்திக் கொள்கிறோம். உண்மையில் அவைகள் ஒரு தோற்றம் மட்டுமே. வாழ்க்கை அதில் மட்டும் இல்லை. அதையும் தாண்டி முழுமையாக வாழ்வதில் மட்டும்தான் இருக்கிறது என்பதே இக்கவிதையின் மற்றொரு பார்வையாகும்.

ரு கவிதையின் பணி என்ன? அதைப் படித்ததும் அது நம்முள் ஏற்படுத்தும் மாறுதல்கள் எத்தகையன? அது வாழ்க்கையைப் பற்றிய எத்தகைய புரிதல்களை நமக்குத் தருகிறது? அது நம் மனதில் ஏற்படுத்தும் தாக்கம் நம் வாழ்க்கையை எப்படி எளிதாக முன்னெடுத்துச் செல்ல வழிகாட்டுகிறது? போன்ற கேள்விகளுக்கு மேற்படி கவிதைகளை உதாரணமாகக் கொள்ளலாம்.

(மறுபிரசுரம். முதல் பிரசுரம் பிப்ரவரி 12, 2013)

Related Posts Plugin for WordPress, Blogger...