திரும்பிப் பார்க்கிறேன்!

இணையத்தில் எழுத ஆரம்பித்து மூன்று வருடங்கள் ஓடிவிட்டன. வாழ்க்கை ஒரு நதி. மகாநதி. அந்த நதியில் நீந்துவதற்கு அபரிமிதமான உடல் வலிமையும் மன வலிமையும் வேண்டும். இல்லையேல் நீந்துவது கடினம். கடினம் என்பது மட்டுமல்ல நடுவழியில் கை கால்கள் சோர்ந்து போனால் அந்த நதியின் சுழல் நம்மை இழுத்துச் சென்றுவிடும். பிறகு ஒருபோதும் கரை சேர முடியாது. அந்த அபாயகரமான நதியில் சோர்வில்லாமல் நீந்தியவன் என்று யாருமில்லை. எனவே, அதில் தளர்வில்லாமல் நீந்துவதற்கு புத்தகங்களே பெருமளவிற்கு உதவின. புத்தகங்களின் வாசிப்பின் துணை கொண்டே இந்த மகாநதியில் நீந்துவது இலகுவாயிற்று. கடந்த வருடம் படித்த குறிப்பிடத்தக்க நாவல்கள் இவை:
ஜெயமோகனின் வெண்முரசு வரிசையில் வண்ணக்கடல், நீலம், பிரயாகை ஆகிய மூன்று நாவல்களை வாசித்தது ஒரு பேரனுபவம். மகாபாரத மனிதர்களிடையே உலவி அவர்களின் இன்ப துன்பங்களில் நானும் ஒருவனாக உழன்றது மறக்க முடியாத அனுபவம்.

ஓஷோவின் புத்தகங்களில் Budha:His Life and Teaching and Impact on Humanity, Meetings with Remarkable People, Body Mind Balancing, ஆகிய மூன்று புத்தகங்களை வாசித்தது ஓஷோவுடனான எனது கடந்த கால நினைவுகளை புதுப்பித்தது. எப்போது வாசிப்பினும் அவர் புத்தகங்கள் மனத் தெம்பையும் தெளிவையும் தரக்கூடியது. இப்புத்தகங்கள் அவற்றை மீண்டும் தரத் தவறவில்லை என்பது முக்கியமாக குறிப்பிட வேண்டியது அவசியம்.

நாவல்கள், புத்தகங்கள் தவிர நான் வாசித்த சிறுகதைகளில் லியோ டால்ஸ்டாயின் The Death of Ivan Ilyich, Master and Man, ஆகிய இரண்டு கதைகளும், ஆன்டன் செகாவின் Ward No.6 ஆகியவையும் மிக முக்கியமானவை. பெரும் நாவல்களை வாசித்த அனுபவத்திற்கு ஈடான அனுபவத்தை இக்கதைகள் வழங்கின என்றால் அது மிகையல்ல.

சென்ற வருடம் திரும்பிப் பார்த்தபோது:

அக்டோபர் 13, 2012 என் வாழ்வில் மறக்க முடியாத நாள். அன்றுதான் முதன் முதலாக வலைதளத்தில் பதிவுகள் எழுத ஆரம்பித்தேன். அதை ஆரம்பித்த போது இணையத்தில் எழுதுவது பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது! எனக்கும் புத்தகங்கும் இடையில் ஏற்பட்டிருந்த பதினைந்து வருட இடைவெளி என்னை அச்சுறுத்தியது. இருந்தும் எழுதத் தொடங்கினேன். எழுத ஆரம்பித்த பிறகு அந்த இடைவெளி இல்லாமலாகியது. நாவல்களைப் பற்றி எழுதலாம் என்றுதான் ‘நாவல் படிக்க வேண்டிய அவசியம்’ எனும் தலைப்பில் முதல் பதிவை எழுதினேன். நான் முன்னரே படித்திருந்த நாவல்களை இதற்காக மறுவாசிப்பு செய்தேன். ஆரம்பத்தில் என்னுடைய நடை அவ்வளவு சிறப்பாக இருந்தது என்று சொல்ல முடியாது. ஆயினும் எழுத எழுத நம்பிக்கை ஏற்பட்டது. புலிநகக் கொன்றை, அம்மா வந்தாள், புயலிலே ஒரு தோணி நாவல்களைப் பற்றி எழுதியதில் எனக்குத் திருப்தி இருந்தது. எந்த புத்தகத்தைப் பற்றியும் எழுத முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. மொழிபெயர்ப்பு புத்தகங்களைப் படித்து அதைப்பற்றி எழுதினேன். ‘கிழவனும் கடலும்’, ‘ஓநாய் குலச்சின்னம்’ நாவல்களுக்கு சிறப்பாக எழுதினேன் என்றே சொல்ல வேண்டும்.

நாவல்கள் மட்டும் போதாது என்று தோன்றவே சிறுகதைகளுக்கும் எழுத ஆரம்பித்தேன். சிறுகதைகளிலும் என் பார்வையைத் திறம்பட எழுதியதான திருப்தி எனக்கே ஏற்பட்டது. குறிப்பாக ஜெயமோகனின் அறம் கதைகளைச் சொல்ல வேண்டும். அவரது நாவல்கள் குறித்தும் சிறப்பாகவே எழுதியிருந்த போதும் அவற்றை அவருடன் பகிர்ந்து கொள்வதில் தயக்கம் இருந்தது. ஆனால் அந்தத் தயக்கம் தகர்ந்த பிறகு என் பதிவுகள் பலவும் அவரது இணையத்தில் இடம் பிடித்தது. அது எனக்கு உற்சாகத்தையும் உத்வேகத்தையும் தந்தது. பதிவுகளை எழுதி முடித்த பிறகு வாசித்துப் பார்த்து எனக்கு நானே சபாஷ் போட்டுக்கொள்வதுண்டு. இதைப் போல யாராலும் எழுத முடியாது என்று இருமாந்ததும் உண்டு. இது ஆணவமோ அகங்காரமோ அல்ல என்னை கண்டுகொண்டதற்கு, புரிந்துகொண்டதற்கு, என் எழுத்தை மேலும் கூர் தீட்டிக்கொள்வதற்கு எனக்கு நானே கொடுத்துக்கொள்ளும் பாராட்டும் உற்சாகமும்.

ஏதோ ஒருவகையில் நான் வாசகரிடையே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளேன் என்பதை உணரும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கு நண்பர்கள் வட்டம் குறைவு. அதிலும் இலக்கியம் படிப்பவர்கள் மிகமிகக் குறைவு. எழுத ஆரம்பித்த பிறகே முகம் தெரியாத ஆயிரக் கணக்கான வாசகர்களை நண்பர்களாகப் பெற்றிருக்கிறேன். ஆரம்பத்திலிருந்து என்னைத் தொடரும் வாசகர்கள் நான் வலைதள வடிவத்தை எப்போதுமே மாற்றிக்கொண்டே வந்திருப்பதைக் கவனித்திருப்பார்கள். மாறுவதே மனித இயல்பு. மாறுவதே வாழ்க்கை. தேங்கிக் கிடக்கும் குட்டையாக இல்லாது ஓடிக்கொண்டிருக்கும் நதியாக இருக்கவே நான் ஆசைப்படுகிறேன். எனக்கு முழுமையான திருப்தி கிட்டும்வரை திரும்பத்திரும்ப செய்வது என் இயல்பாகிவிட்ட ஒன்று. நான் எழுதும் எல்லா பதிவுகளும் பலமுறை எடிட் செய்யப்பட்டு. முன்னும் பின்னும் மாற்றி மாற்றி அமைத்து இறுதிவடிவத்தை எட்டியவையே. ஆரம்பத்தில் நான் கமெண்டுகளை மிகவும் எதிர்பாத்தேன். ஆனால் போகப்போக அதில் ஆர்வம் இல்லாமலாயிற்று. எழுதுவது ஒன்றே எனக்குப் போதுமானதாக இருந்தது. யாருக்காக இல்லாவிடினும் எனக்காக நான் எழுதத்தான் வேண்டும் என்று தோன்றியது. ஒத்த அலைவரிசை உடையவர்கள் என்னோடு இணைந்து கொள்ளலாம். நான் என்னைக் கண்டடைந்தது போலவே அவர்களும் அவர்களைக் கண்டடையலாம்.

நான் எழுதியவற்றுள் தஸ்தயேவ்ஸ்கியின் ‘கரமாஸவ் சகோதரர்கள்’ நாவலைக் குறித்து பதிவு ஆகச் சிறந்தது என மதிப்பிடுகிறேன். அதைத் தொடர்ந்து எனக்குள் போதுமான நம்பிக்கையும் உற்சாகமும் ஏற்பட்ட பிறகு மழைப்பாடலை எழுத ஆரம்பித்தேன். ஆனால் அதை ஒரு தொடராக எழுத உத்தேசம் பிறந்தது தற்செயல்தான். தயக்கத்துடனே ஆரம்பித்தேன். ஆனால் அதைப் பற்றி ஜெயமோகன் அவரது இணையத்தில் வெளியிட்டு என் தயக்கத்தை உடைத்தார். அவருடனான தொடர்பே என்னை மேலும் மேலும் உயரத்தில் பறக்கும் ஆசையை, உற்சாகத்தை, உந்துதலை ஏற்படுத்தித்திக் கொடுத்திருக்கிறது. இதுவரை நான் கடந்துவந்த பாதையும் பயணமும் இனிமேல் வானம் வசப்படும் என்பதையே உணர்த்துகிறது. படிக்கும் போது மட்டுமல்ல எழுதும்போதும் நான் கவலைகள் அற்றவன். என்னை வெல்பவன் இந்த உலகில் யாரும் இல்லை. நான் விஸ்வரூபம் எடுத்த கிருஷ்ணன். அப்போது எல்லாமே என் காலடியில்! இந்த உலகம் எனக்குச் சின்னஞ் சிறிய விளையாட்டுப் பொருள்.

Related Posts Plugin for WordPress, Blogger...