சி.மோகனுக்கு 'விளக்கு விருது'

விமர்சகர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் என பன்முகத் தன்மை கொண்டவர் சி.மோகன். என் இலக்கிய ஆசான் என்று இவரையே சொல்லமுடியும். ‘நாவல் கலையின் அவசியமும் தமிழில் அதன் நிலையும்’ என்ற கட்டுரையின் மூலம் என்னுடைய வாசிப்பின் ரசனையை முற்றாக மாற்றியவர் இவரே.  நான் அறிந்தேயிராத பல்வேறு படைப்பாளிகளை எனக்கு இவருடைய ‘நாவல்கள் பட்டியல்’ அடையாம் காட்டியது. நான் இலக்கியத்தைப் பற்றி இவர் மூலமாக கற்றதும் பெற்றதுமே மிக அதிகம்.

சி.மோகன் எழுதிய ‘ஓநாய் குலச்சின்னம்’ எனும் சீன நாவலின் மொழியாக்கம் அபாரமானது. அந்நாவல் வாசிப்பில் நம்முள் ஏற்படுத்தும் தாக்கம் அற்புதமானது; அபரிமிதமானது. விமர்சனம், மொழியாக்கம், தொகுப்பு இவற்றில் தீவிரப் பங்காற்றிய இவர் எழுதிய முதல் நாவல் ‘விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்’ சிறிய ஆனால் குறிப்பிடத்தக்க நாவல். ஓவியர் ராமானுஜத்தின் வாழ்க்கையைப் படம்பிடிக்கும் இந்நாவல் படைப்புக்கும் படைப்பாளிக்கும் இடையே இருக்கும் நுட்பமான உணர்வுகளைப் படம்பிடிக்கிறது. இவரது ‘சி.மோகன் கட்டுரைகள்’ எனும் தொகுப்பும், ‘சவாரி விளையாட்டு’ என்ற மொழிபெயர்ப்புச் சிறுகதைகளின் தொகுப்பும் நாம் அவசியம் படிக்கவேண்டிய முக்கியமான புத்தகங்கள்.

அமெரிக்க வாழ் தமிழர்களின் பண்பாட்டு அமைப்பு சார்பாகப் புதுமைப்பித்தன் நினைவாக வருடந்தோறும் வழங்கும் ‘விளக்கு விருது’ இந்த ஆண்டு சி.மோகனுக்கு வழங்கப்படுகிறது. சி.சு.செல்லப்பா, பிரமிள், கோவை ஞானி, நகுலன், கோணங்கி போன்ற படைப்பாளிகள் இவ்விருதைப் பெற்றுள்ளனர். அவர்களில் ஒருவராக சி.மோகனும் இணைந்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. அவருக்கு எனது வாழ்த்துகள்.

Related Posts Plugin for WordPress, Blogger...