September 25, 2015

வண்ணநிலவனின் ‘கடல்புரத்திலு’ம் ‘கம்பாநதி’யும்

சுமார் இருபத்து எட்டு ஆண்டுகளுக்கு முன்னர், வண்ணநிலவனின் ‘கடல்புரத்தில்’ ஒரு முக்கியமான நாவல் என்று அறிந்தேன். அதை வாங்கிய போது எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இவ்வளவு குறைவான பக்கங்கள் உடைய நாவல் எப்படி முக்கியமான நாவலாகவும், அதில் என்ன சொல்லியிருக்க முடியும் என்றும் தோன்றியது. போதாதற்கு புத்தகத்தின் அச்சும் அமைப்பும் தாளும் மிக மோசமாக இருக்கவே, படிக்காமல் வைத்திருந்தேன். அதற்குப் பல வருடங்களுக்குப் பிறகே அந்த நாவலை வாசித்ததாக நினைவு. நாவல் என்றாலே பெரியதாக இருக்கவேண்டியதில்லை என்றும், சொற்பமான பக்கங்களிலும் வாழ்வின் கீற்றுகளை படம்பிடிக்க முடியும் என்றும் அப்போதுதான் உணர்ந்தேன். கடல்புரத்தில் போலவே வண்ணநிலவனின் ‘கம்பாநதி’யும் மிகச்சிறிய நாவல்தான். இவை இரண்டுமே தமிழில் முக்கியமான நாவல்கள் என்பதில் சந்தேகமில்லை.

வண்ணநிலவனின் கடல்புரத்தில் சிறிய எளிமையான நாவல். கடல் மாதாவை நம்பி வாழ்க்கையை நடத்தும் மக்களின் போராட்டத்தை விவரிக்கும் நாவல். அவர்களின் ஆசைகள் நிராசை ஆவதையும், கனவுகள் சிதைந்து போவதையும் சித்தரிக்கும் நாவல். பிலோமி என்ற பெண் பாத்திரத்தை மையமாகக் கொண்டு வண்ணநிலவன் கதையை நகர்த்திச் செல்கிறார். நாவலில் பாத்திரங்கள் பேசும் பாஷை நாவலின் முக்கிய அம்சம். அந்த பாஷை நாவலுக்கு உயிரூட்டுகிறது. கதாபாத்திரங்கள் நாவலில் ஜீவனுடன் உலவுகிறார்கள். வண்ணநிலவன் காட்டும் உலகத்தை நாம் ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம். எப்படியிருந்த போதிலும் மனிதர்கள் இப்படித்தான் என்பதைத் தீர்மானமாகச் சொல்கிறார்.

செபஸ்தி தன் தந்தை குரூஸிடம், அவனது வல்லத்தையும் வீட்டையும் விற்றுவிட்டு தங்கை பிலோமி தாய் மரியம்மை எல்லோரும் தன்னுடன் வந்துவிடும்படி சொல்கிறான். ஆனால் குரூஸ் அதற்கு மறுத்துவிடுகிறான். தன் சாவு இந்த கடல்புரத்தில்தான் நிகழவேண்டும் என்கிறான். மரியம்மைக்கும் இதற்கு விருப்பம்தான். பிலோமிக்கோ தான் விரும்பும் சாமிதாஸை விட்டுப் பிரிய மனமில்லை. இதனால் கோபத்துடன் ஊர் செல்கிறான் செபஸ்தி. ஆனால் பிலோமி நினைப்பது நடக்கவில்லை. சாமிதாஸ் வேறு ஒரு பெண்ணை மணந்து கொள்கிறான். அவள் தன் சோகத்தை தன் நிநேகிதி ரஞ்சியிடம் சொல்கிறாள். ரஞ்சி ஒரு காலத்தில் பிலோமியின் அண்ணன் செபஸ்தியை விரும்பியிருக்கிறாள். செபஸ்தியும் அவளைக் காதலித்தான். ஆனால் இருவர் ஆசையும் நிராசையாகிவிட்டது.

மரியம்மைக்குத் தன் கணவனைவிடவும் அந்த ஊர் வாத்தியாரிடம் பிரியம். எல்லா மனங்களும் தத்தம் நிறைவேறாத ஆசைகளுடன் உள்ளுரத் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் மரியம்மை குடித்துவிட்டு விழுந்து அடிபட்டு இறந்து போகிறாள். அவள் இருந்த வரை அவள் மீது வெறுப்பை வாரிக்கொட்டிய குரூஸ், அவள் இல்லாமல் தான் அங்கே இருக்க முடியாததை உணர்ந்து, வல்லத்தையும் வீட்டையும் விற்றுவிட்டு செபஸ்தியுடன் செல்ல நிச்சயிக்கிறான்.

இந்நிலையில் ஊரில் ஐசக் மற்றும் ரொசாரியிடையே போட்டி பகையாகிறது. ரொசாரி ஐசக்கின் இயந்திர படகுக்கு தீ வைக்கிறான். ஐசக் கொலைவெறி கொண்டு ரொசாரியை வெட்டிச்சாய்க்கிறான். அதன் பின் அவன் மனநிலை பிறழ்ந்து பைத்தியமாகிறான். வீட்டை விற்றுவிடும் குரூஸ் தான் மிகப்பெரிய தவறை செய்துவிட்டதாக உணர்கிறான். அவனுக்கு எல்லாமே சூனியமாகிவிட்டது போல் தெரிகிறது. பித்துப்பிடித்தவனாக பழைய நினைவுகளை இழந்து விடுகிறான். அவனிடமிருந்து வல்லத்தை வாங்கிய சிலுவை பணம் கொடுத்துவிட்டதாகச் சொல்லி ஏமாற்றிவிடுகிறான். செபஸ்தி தலையிட்டு பெரியவர்களுடன் பஞ்சாயத்து செய்து தன் தகப்பன் விற்ற வீட்டை திருப்பி வாங்குகிறான். பிலோமி தன் தகப்பனுடன் கடல்புரத்திலேயே இருக்கிறாள். வாத்தியாரின் சிநேகம் அவளுக்குப் புதுத்தெம்பையும் தைரியத்தையும் கொடுக்கிறது.

அன்பு என்ற ஊற்று எல்லோரிடத்தும் இருக்கிறது. இருந்தும் அது கட்டற்ற வெள்ளம்போல் பாய்ந்து செல்லவிடாமல் சுயநலமும், தான் என்ற ஆணவமும் தடுக்கிறது. இந்த சுயநலமும் ஆணவமும் பொறாமையாக மாற்றமடையும்போது அது சமூகத்தில் உள்ள பிறரை பாதிக்கிறது. இவையிரண்டுமே, நாம் ஒருவர் மீது வைத்திருக்கும் அன்பை முழுமையாகச் செலுத்தவிடாமல் தடையும் செய்கிறது. என்னதான் குடும்பம் என்றாலும் மனிதர்கள் ஒவ்வொருவரும் தனித்தனி தீவுகள்தாம். அவரவர்க்கென்று தனித்தனி கனவுகளும் கற்பனைகளும் உள்ளன. நம் அனைவரையம் ஒன்றினைக்கும் சரடு, அவரவர் ஆசையை மற்றவர்கள் மூலமாக நிறைவேற்றிக் கொள்ளலாம் எனும் நம்பிக்கைதான். அந்த நம்பிக்கைகள் பொய்த்துப் போகும்போது குடும்பம் என்ற அமைப்பு நமக்குக் கசந்துபோகிறது. நாம் இருக்கும் இடம் எப்போதும் நிராசைகளால் நிரம்பியுள்ளது. எனவே நம் ஆசைகள் சதா நம்மை மாற்றத்தை நோக்கி இழுத்துச் செல்கின்றன.

இவையெல்லாம் வண்ணநிலவனின் கடல்புரத்தில் நாம் காணும் காட்சிகள். இவையெல்லாம் நாம் பாடம் கற்று, நம்மை நாம் திருத்திக் கொள்வதற்காகச் சொல்லப்பட்டவை அல்ல. மாறாக, மனித வாழ்வு இருக்கும் வரை அவைகள் இருந்துகொண்டுதான் இருக்கும், மனிதனின் பலவீனங்கள் அல்ல; மனிதனின் இயல்புகள் அவை என்ற புரிதலை ஏற்படுத்தத்தான்.

கம்பாநதியில் மனிதர்களின் வாழ்கையைச் சரளமாக சொல்லிச் செல்கிறார் வண்ணநிலவன். கடல்புரத்தில் போலவே இங்கும் அவரது பாத்திரங்கள் இயல்பான தன்மையோடு உலவுகிறார்கள். மனித மனத்தின் ஆசைகளையும் நிராசைகளையும் இங்கும் தனக்கேயான நடையில் சித்தரிக்கிறார் வண்ணநிலவன். மனிதர்கள் மீது குற்றம் குறை காண்பது வண்ணநிலவனால் இயலாத காரியமாகவே படுகிறது. எல்லோரும் வாழவே முயற்சிக்கிறார்கள். அதில் ஒருவர் மீது ஒருவர் குற்றம் காண்பதில் என்ன இருக்கிறது என்று நம்மிடம் எதிர்க்கேள்வி தொடுத்துவிட்டு, பதிலை எதிர்பாராதவர்போல் தன் இயல்பான போக்கில் மனிதர்களின் இயல்பான வாழ்க்கையைச் சொல்லிச் செல்கிறார். கடல்புரத்தைவிடவும் மனிதர்களின் மனவோட்டத்தை, கம்பாநதியில் நுட்பமாக படம்பிடிக்கிறார். பாத்திரங்கள் ஏராளமாக தன் போக்கில் நாவல் முழுதும் பிறந்து வருகிறார்கள். வீதியில் செல்லும்போது கண்ணில் காணும் அனைவரையுமே கதாபாத்திரங்களாக உலவவிட்டிருக்கிறார். கம்பாநதியை ஒட்டி வாழும் அனைவருமே நாவலில் வந்துவிடுகிறார்கள் என்று தோன்றுகிறது.

இருந்தும் சங்கரன்பிள்ளை மற்றும் அவரது மனைவிகளான மரகதம், சௌந்திரம் ஆகியோரின் குடும்ப மனிதர்களின் வாழ்க்கையை, பாப்பையா என்ற மரகதத்தின் மகன் மூலம் சொல்லும் கதையாக நாம் படிக்கலாம். ஒவ்வொரு அத்தியாயமும் சிறுகதைக்கான அம்சத்தில் தனித்தனியாக முடிந்துபோவதாகவே படிக்கும்போது நமக்குத் தோன்றுகிறது. சங்கரன் பிள்ளையின் வாழ்க்கையின் வீழ்ச்சியைப் பற்றிய ஒரு கதையாகவும், வேலையில்லாமல் வேலை தேடும் பாப்பையாவின் கதையாகவும், நாம் புரிந்து கொள்ளலாம்.

மொத்தத்தில் பல்வேறு மனிதர்களின் வாழ்க்கையைப் பற்றி சொல்கிறது கம்பாநதி. இது நதியின் கதை அல்ல நதிபோல் ஓடிக்கொண்டிருக்கும் மனித வாழ்க்கையின் கதை. மனிதர்களும் அவர்களின் வாழ்க்கையும் இப்படி இப்படி என்று காட்டுவதோடு வண்ணநிலவன் நின்றுவிடுகிறார். நமக்குள் எழும் பலகேள்விகளுக்கான பதில்களை நம் ஊகத்திற்கே விட்டுவிடுகிறார். முழுக்க முழுக்க வாசக இடைவெளிகளால் நாவல் நிரப்பப்பட்டுள்ளது. எனவே நாவல் முழுமை பெறாத ஒரு தோற்றத்தையே நமக்குத் தருகிறது. இது இந்நாவலை வாசிப்பதற்கான மனத் தடையாக நமக்குத் தோன்றினாலும் உண்மையான நாவலின் பங்கு இதுதான் என்பதையும் நாம் புரிந்துகொள்வது அவசியம்.

வண்ணநிலவனின் கம்பாநதியும் கடல்புரத்திலும் எப்போதும் நம் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றிருக்கும் நாவல்கள். வண்ணநிலவனின் நோ்காணலையும், அவரைப்பற்றியும் அவர் படைப்புகள் பற்றியும் பல்வேறு தரப்பினரின் கருத்துக்களையும் இங்கே காணலாம்:
Related Posts Plugin for WordPress, Blogger...