September 12, 2015

ஃப்ரன்ஸ் காஃப்காவின் ‘தீர்ப்பு’: அதீதப் புனைவின் அற்புதத் தீற்றல்

ஃப்ரன்ஸ் காஃப்காவின் முதல் சிறுகதை தீர்ப்பு. அவரது ஆகச்சிறந்த கதையும் இதுவே. அவரது புனைவுத்திறன் முழுதும் வெளிப்பட்ட ஒரு படைப்பு இந்தக் கதை. 1912-ம் வருடம் செப்டம்பர் மாதம் 22-ம் தேதி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒரே மூச்சில் எழுதி முடிக்கப்பட்ட கதை. கதை எழுதிய அந்த தருணத்தை “ஒரு இரவின் பேயாட்டம்“ என்று தன் நாட்குறிப்பில் வர்ணிக்கிறார் அவர். காப்காவின் நாவல்களிலும், சிறுகதைகளிலும் எப்போதுமே கனவின் சாயல் இருந்துகொண்டே இருக்கும். அவரது புனைவில் நாம் மூழ்கும்போது கனவுலகத்தில் சஞ்சரிப்பதான ஒரு உணர்வையே அதிகமும் அடைய நேரிடும். அவரது அனைத்துப் படைப்புகளிலுமே இந்த அம்சம் இருப்பதைக் காண முடியும். அவரது நீண்ட நெடும் வாக்கியங்களும், பக்கம்பக்கமாகத் தொடரும் பத்திகளும் நமக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்துவதுபோல் இருக்கும். ஆனால் அதுவே அவரது படைப்பின் வசீகரமாக அமைந்து நம்மை வாசிக்கவும் தூண்டுவது புரியாத புதிர்.

தந்தைக்கும் மகனுக்குமான கருத்துவேறுபாட்டைச் சொல்லும் கதைதான் தீர்ப்பு. கதையை வாசிக்கும்போது நாம் இதுவரை அனுபவித்திராத புனைவின் வெளியில் பயணிக்கிறோம். தான் மணந்துகொள்ளவிருக்கும் பெண்ணைப் பற்றி வெளிநாட்டில் வசிக்கும் தன் நண்பனுக்கு தெரியப்படுத்தக் கடிதம் ஒன்றை எழுதுகிறான் ஜார்ஜ். அதைத் தன் தந்தையிடம் சொல்லிவிட்டு தாபாலில் அனுப்பலாம் என்று அவர் அறைக்குச் செல்கிறான். அங்கே தன் தந்தை இருக்கும் சூழலைப்பார்த்து அவர் மீது இரக்கம் கொள்கிறான். தன் தாய் தவறிவிட்டதிலிருந்து அவர் தனிமையில் சிரமப்படுவதாக நினைக்கிறான். அவரது அறை இருட்டாக காற்றோட்டமில்லாமல் இருக்கிறது. அவரை தன் அறைக்கு வந்துவிடும்படியும் தான் இங்கே வந்துவிடுவதாகவும் சொல்கிறான். அவரிடம் தன் நண்பனுக்கு எழுதியுள்ள கடிதத்தைப்பற்றிச் சொல்கிறான்.

அவரோ தன் மீதான அவனது அக்கறையைத் தவறாகப் புரிந்துகொள்கிறார். அவன் மீது சொல்ல முடியாத வெறுப்பு அவருக்கு ஏற்படுகிறது. திடீரெனெ அவன் மணந்துகொள்ளவிருக்கும் பெண்ணைப் பற்றித் தவறாகப் பேசுகிறார். அவனது நண்பன் ஏன் அவனிடம் வெகுநாட்கள் தொடர்பு இல்லாமலிருக்கிறான் என்றால், தான் அவனுக்கு எழுதும் கடிதங்கள்தாம் அவற்றுக்குக் காரணம் என்றும் சொல்கிறார். கோபம் கொண்டவராக அவனுக்கு, “நீரில் மூழ்கி இறந்து போ” என்று தீர்ப்பு வழங்குகிறார். அவனும் சோகத்துடன் வீட்டிலிருந்து வெளியேறி பாலத்தின் மீதேறி நீரில் குதிக்கிறான்.

என்னதான் நாம் மனதளவில் அன்பு பாசம் என்று இருந்தாலும் செயல் என்று வரும்போது, எதிராளி அதைத் தவறாகப் புரிந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது. அவர்கள் தம் மனதளவில் பிறர்மீது கொண்டிருக்கும் முன்முடிவுகள் இதற்குக் காரணமாக அமைகின்றன. எனவே தம்மை மறைத்துக்கொண்டு, தம்மின் மற்றோர் அம்சத்தையே வெளிக்காட்டுகிறார்கள். உறவின் எல்லா நிலைகளிலும் இந்த சிக்கல் இருக்கிறது. தந்தை மகன் உறவில் அது இன்னும் மோசமானதாக இருக்க வாய்ப்புக்கள் அதிகம் இருக்கின்றன.

அவரவர் வாசிப்பின் அனுபவத்திற்கேற்ப காப்காவைப் புரிந்துகொள்வது வேறுபடுகிறது. காப்காவின் புனைவு தரும் அனுபவத்தை நாம் முழுமையாக அனுவவிக்க வேண்டும் என்றால் தர்க்கம், அறிவு ஆகியன கடந்து, முன்னரே சொன்னதுபோல், கனவுலகில் சஞ்சரிக்கத் தெரியவேண்டும். அப்போதே நாம் காப்காவை முழுமையாக ரசிக்க முடியும். இல்லாதுபோனால் காப்காவின் உலகம் அலுப்பூட்டுவதான உணர்வையே நமக்குக் கொடுக்கும். காப்காவின் அதீத கற்பனைப் புனைவு, வாசிக்கும்போது நம்முள் ஏற்படுத்தும் பரவசத் தீற்றல்கள் சொல்லிலடங்காதவை. அதை அனுபவிக்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

(திருத்திய மறுபிரசுரம். முதல்பிரசுரம் ஜனவரி 1, 2013)

Related Posts Plugin for WordPress, Blogger...