September 10, 2015

எஸ்.சம்பத்தும் ‘இடைவெளி’யும்

உணவகத்தில் இருந்த அந்த சிற்பத்தை பார்த்தேன். கல்லிலே செதுக்கப்பட்ட அந்த சிற்பம் அற்புதமாக இருந்தது. அடர்த்தியான பாக்கு வர்ணம் பூசபட்டிருந்தது. கால்சராய் அணிந்த சிறுவன் கிணற்றிலிருந்து வாளியில் நீர் எடுக்கிறான். கால்சராயின் மடிப்புகள் துல்லியமாக இருக்கின்றன. காற்றில் படபடக்கும் என்று தோன்றுகிறது. அவ்வளவு தத்ரூபம். கால்சராய் கெண்டை காலுக்கு மேலே மடித்து விட்டிருக்கிறது. நனைந்துவிடுமாம். என்ன கரிசனம்! கிணற்றின் வெளிப்புறத்தில் கருங்கல் பதித்திருக்கிறது. வாளி அந்தரத்தில் தொங்குகிறது. வாளியில் தண்ணீர் இல்லாமலிருக்கிறது. அப்படியானால் இனிதான் வாளியை கிணற்றில் முக்க வேண்டுமோ? ஒருவேளை கிணற்றிலிருந்து வாளியை மேலே இழுத்திருக்கக்கூடும். சிற்பியால் தண்ணீரை வடிக்க முடியவில்லையோ என்னவோ? தண்ணீர் அந்தரத்தில் துளித்துளியாய் தெறிக்கவேண்டும். சிற்பியின் கைகளுக்கு சிக்காமல் தண்ணீர் நழுவி விட்டது போலும். என்ன அற்புத சிற்பம் அது. செய்த சிற்பியின் கைகளுக்கு பொன் காப்புதான் அணிவிக்க வேண்டும். கல்லிலே கலைவண்ணம் என்பது இதுதானோ?

சாப்பிடத் தோன்றாமல் சிற்பம் மனதை மயக்குகிறது. பக்கத்திலிருப்பவர் ஏதோ சாப்பிடுகிறார். ஆனால் அதன் பெயர் தெரியவில்லை. கேட்கவும் கூச்சம். சாப்பிடவோ ஆசை. இருந்தும் வழக்கமாக சாப்பிடுவதையே சாப்பிட்டுத் திரும்புகிறேன். படிப்பதும் அப்படித்தான். பெயர்கள் தெரியாததினாலேயே, தெரியும் பெயர்களையே படிக்கிறோம். 1987ல் புதுயுகம் பிறக்கிறது என்று ஒரு பத்திரிகை வெளியானது. வந்த வேகத்திலேயே நான்கைந்து இதழ்களோடு நின்றுவிட்டது. முதல் இதழின் ஒரு கட்டுரையில், சி.மோகன் நல்ல நாவல்களின் பட்டியல் ஒன்றைக் கொடுத்திருந்தார். (அந்த பட்டியலில் இருந்த புத்தகங்களைத் தேடி அலைந்தது ஒரு காலம்). பட்டியலில் இடம்பெற்ற ஒரு முக்கியமான நாவல் எஸ்.சம்பத்தின் இடைவெளி.

சம்பத் நாராயணன் என்கிற எஸ். சம்பத் 1941-ம் ஆண்டு அக்டோபர் 13-ம் தேதி பிறந்தார். அப்போது சம்பத்தின் தந்தை சேஷாத்திரி ஐயங்கார், டில்லியில் ரயில்வே போர்ட் அதிகாரியாகப் பணியாற்றினார். எனவே சம்பத்தின் இளமைப்பருவம் முழுவதும் டில்லியிலேயே கழிந்தது. பொருளாதாரத்தில் எம்.ஏ., பி.எட். பட்டம் பெற்ற சம்பத் டில்லியிலேயே தனியார் நிறுவனங்களிலும் ஆராய்ச்சி நிறுவனங்களிலும் பணியாற்றினார். தன் உறவுப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட சம்பத்துக்கு மூன்று குழந்தைகள். சேஷாத்திரி ஐயங்கார் பதவி ஓய்வு பெற்று சென்னை திரும்பியபோது, சம்பத்தும் தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு சென்னை திரும்பினார். சென்னையில் பல நிறுவனங்களில் வேலை செய்த சம்பத் கடைசியில் பெரியமேடு பகுதியில் உள்ள தோல் பதனிடும் மண்டியில் கணக்கு எழுதுபவராகப் பணியாற்றினார். கடைசியாக, சில ஆண்டுகள் வேலை ஏதும் பார்க்காமல் இருந்தார். தன் 42ஆவது வயதில் மூளை ரத்தநாளச் சேதத்துக்கு ஆளாகி 26.07.1984 அன்று காலமானார்.

எஸ்.சம்பத்தின் இடைவெளி, அறிவின் தளத்தில் வெளியான முதல் நாவல். அதற்குப்பின் வந்ததே ஜே.ஜே.சில குறிப்புகள். சம்பத்தின் நாவல் தினகரன் என்ற பாத்திரத்தின் வாயிலாக மனிதனின் மரணத்தைப் பற்றிய தேடலைச் சொல்கிறது. இந்நாவல் வெளிவரும் முன்னரே சம்பத் இறந்துவிட்டார். சாவை பற்றி எழுதிய அவரை சாவு எடுத்துகொண்டது நமது துரதிருஷ்டம். ஆனால் அதுதான் சாவு. அதை பற்றிய தேடலாக அந்நாவல் இருப்பது, அந்நாவலுக்கு மேலும் வலு சேர்ப்பதாகவே உள்ளது.

நமக்கு வாழ்க்கையை தெரியும். மரணத்திற்கு பின் என்ன என்பது பற்றி பல அனுமானங்கள் உள்ளன. ஆனால் மரணம் என்றால் என்ன? அது நிகழும் அந்த தருணம் எத்தகையது?மரணத்தை சந்திக்கும் அந்த வேளையில் என்ன நடக்கிறது? ஏன் மரணம் சம்பவிக்கிறது? என்பதுபற்றிய பல கேள்விகளின் மீது வெளிச்சத்தைப் பிரயோகித்து, விடை காண முயல்கிறது இந்நாவல்.

எளிமையான நடையில், சுவாரஸ்யமாகவே நாவல் செல்கிறது. ஆனால் அதன் உள்ளடக்கம்? அதுதான் கனமானது. தினகரன் எப்படி, இதுதான் இல்லை அதுதான் என்று மரணத்தைத் தேட, அது அவருக்கு எப்படி போக்குக்காட்டிச் செல்கிறதோ அதே போலத்தான் இந்நாவலின் வாசிப்பு இருக்கிறது, சம்பத் இதைத்தான் சொல்லவருகிறார் என்று புரிந்து கொண்டோம் என்று நினைத்த அடுத்த கணம், இது இல்லை அது, அது வேறு ஒன்று என்பதாக ஒரு மயக்கம் ஏற்படுகிறது.

நாவலின் உள்ளடக்கம் நம்மை குழப்பினாலும், நாவலில், அதன் நடையில் ஒரு வசீகரம் இருக்கிறது. சம்பத்திடம் இருக்கும் அறிவின் தேடலே, தினகரனின் தேடலாக நாவல் முழுதும் வெளிப்படுகிறது. நாவல் மனிதனின் மரணத்திற்கு பின் என்ன என்பதைச் சொல்வதாக, நாம் தவறாக நினைத்துவிடக்கூடாது. நாவல் மரணத்தை பற்றியது என்பதை நினைவு வைத்துக்கொள்வது நல்லது. இப்பிரபஞ்சத்தில் அலைந்து கொண்டிருக்கும் ஆன்மா உடலுக்குள் நுழைந்து உருவம் எடுக்கும்போது வாழ்வு எனும் அனுசரணையான இடைவெளி, மீண்டும் அது வெளியேறும்போது அது சாவு எனும் முரண்பாடுடைய இடைவெளி என்கிறார். படிக்கும்போது பிடிபடும் இது யோசிக்கும்போதும் வார்த்தையில் எழுதும்போதும் மயக்கத்தைத் தருகிறது. மனித ஆன்மாவின் வாழ்க்கை ஒரு தொடர்ச்சியான பயணம். வாழ்வும் சாவும் அந்தப் பயணத்தின் இடையிடையே ஏற்படும் இடைவெளிகள் என்பதாக சுருக்கமாக நாம் புரிந்துகொள்ளலாம்.

நாவலை பற்றிய வடிவ பிரக்ஞ்சை அவருக்கு அப்போதே இருந்திருக்கவேண்டும் என்றே தோன்றுகிறது. நாவல் செறிவுடனும் நுட்பத்துடனும் சித்தரிக்கப்பட்டிருப்பதே அதற்குச் சான்றாகிறது. நாவலின் இறுதி பகுதியில் தினகரனின் தேடலாக, கனவு யுக்தியை சிறப்பான புனைவாக புனைந்திருக்கிறார் சம்பத். அந்தக் கனவுக்கு முன்னர் வரும் நாவலின் ஒரு பகுதி இது:
அன்று இரவு ‘கோல்டன் டிரஷரி’ என்ற ஆங்கிலக் கவிதைத் தொகுப்பில் சாவைப்பற்றி என்னவெல்லாம் சொல்லியிருக்கக் கூடும் என்று புரட்டிக் கொண்டிருந்தார். திடீரென்று ஷெல்லியிலும், கீட்ஸிலும் ஆழ்ந்தார். ‘யுலிஸஸி’ல் முதல் இரண்டு மூன்று அத்தியாயங்கள் படிக்க வேண்டும் போலிருந்தது. ‘யுலிஸஸ்’ படித்துக் கொண்டிருக்கும்போது இன்னும் ஒரு எண்ணம் எங்கோ தோன்ற ஆரம்பிக்கவே தன்னைக் கெட்டித்துக்கொண்டார்.
ஆமாம். சாவு தன்னிச்சையில், தன்கதியில் யோசித்து இயங்குகிறது! இந்த எண்ணத்தோடு அதனுடைய அடிப்படைக் கோலங்களில் ஒரு விசேஷத் தன்மை இருக்கும் நினைப்பையும் பின்னிப் பார்த்தார். அவரையும் அறியாது அவருக்கு சதுரங்க வீரர் கபப்பிளங்காவின் நினைவு வந்தது. யாருமே தன்னை ஜெயிக்க முடியாது என்கிற காலகட்ட நிலையில் அவருக்கு அந்த ஆட்டத்தின் மீதே பிடிப்பவிட ஆரம்பித்து விட்டதாம். கபப்பிளங்காவின் இந்த அனுபவம் எல்லா நிலைகளுக்கும் பொருந்தும் என்று நினைத்தார். எதிராளி ரொம்பத் தோற்றுப் போனால் சொல்லிக் கொடுக்க வேண்டும் போலிருக்கிறது! ஆனால் சாவிடம் மட்டும் என் இந்த வெறி போகவில்லை. இதுநாள் வரை தன்னுடைய தனிமையை உணர்த்திக் கொள்ளாமலே இருந்திருக்கிறது. குறைந்த பட்சம் அதற்கு ‘போர்’ அடிக்கவில்லை. எப்போதுமே ஜெயிப்பது என்பது விடலைத்தனமான காரியம் இல்லையா? அவர் எதிரே இருந்த நாற்காலியில் சாவு உட்கார்ந்திருந்தது.
‘இல்லை – எங்களிடம் கொடுக்கப்பட்ட விஷயங்களைக் காப்பாற்றவே நாங்கள் இருக்கிறோம். சாதாரணமாக, அன்போடு வாழ்ந்து, இருந்து, எங்களைத் துதிபாடி, போகவே நீங்கள் சமைக்கப்பட்டிருக்கிறீர்கள். அந்த விஷயத்தைத்தான் நீங்கள் எப்போதோ மறந்தாயிற்றே?’
‘இனிமேல் என்ன வழி?’
‘வழியா – எல்லாமே இனிமே மெதுவா நிர்மூலம்தான்!’
‘ஆனால் மனித குலத்தில் எனக்கு நம்பிக்கையிருக்கிறது…’
‘என்னவெல்லாமோ இன்னல்கள் விளைவித்தும் அதை நீ நம்பிய விதத்தில் எங்களுக்கெல்லாம் ஆச்சரியம்தான்‘’
‘உனக்கு எல்லாம் தெரியுமா?’
‘எல்லாம்தான்‘’
‘நான் என்னுடைய பதினாறாவது வயதுப் படலத்தைப் பற்றி அடிக்கடி நினைக்கிறேன். பஸ் ஸ்டாண்டுப் படலம்தான்!’
‘அதிலிருந்து நான் உன்னைக் கண்காணித்து வருகிறேன். சில சமயங்களில் ஓரிரு நாட்டங்கள் கொடுத்துத் திசை திருப்ப முயற்சி செய்து பார்த்தேன். உயிரை எடுத்துண்டாதானா? குழந்தாய்! அவ்வளவு சின்ன வயதிலே அவ்வளவு பெரிசா நினைக்கிறது தப்பு. உன் சாரத்தை எல்லாம் எப்பொதோ நான் வாங்கிக்கொண்டு விட்டேன். இல்லாவிட்டால் பூமி தாங்காது!’
‘எப்பேர்ப்பட்ட அயோக்கியன் நீ’
‘திட்டாதே! நான் நண்பனாக இருக்கவே விரும்புகிறேன். உன்னைப் பார்த்து நான் பயப்படாத நாள் இல்லே! ஆமாம் சொல்லேன், எப்படி இருக்கிறார்கள் உன் பொம்பளைகள்?’
‘நீ ஏன் என்னைக் கேலி பண்ணறே?’
‘எப்படியிருக்கா சொல்லேன்’
‘இப்ப கேட்டயானா – உனக்கு வெட்கமாக இல்லை? மேலும் நீ ஏன் எல்லாத்தையும் இப்படிப் பிரிக்கிறே?’
‘ஏன் என்றால் நான் சாவு. தலைவணங்குடா முட்டாள்!
தினகரன் அதன் முன் மண்டியிட்டார்.
அது எழுந்து நின்று, ரொம்ப நேரம் இவரையே கனிவுடன் பார்த்துக்கொண்டிருந்தது.
‘பணிவு வேண்டும். அடக்கம் வேண்டும். எது கொடுத்தாலும் போதும் என்கிற மனப்பான்மை வேண்டும். வாழ்வு என்பது அவ்வளவு சுலபம் இல்லை’ என்றது.
'சாவு என்பது இடைவெளி என்று சொன்னதற்காக நோபல் பரிசு தரவேண்டும். வேற யார் சொன்னா இப்படி' என்று மேஜையை தட்டி, இந்நூலின் 'ப்ரூப் ரீடிங்' நடந்து கொண்டிருந்தபோது, சம்பத் சொன்னதாக சி.மோகன் தன் கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார். ஆனால் இந்நூல் வெளியாகும் முன்னரே அவர் மறைந்துவிட்டது பெரும்சோகம். தன்னுடைய புனைவின் திறத்தால் தமிழ் நாவல் உலகிற்கு ஒரு கொடையாக, எழுத்திலே கலைவண்ணம் மிளிரும் ஒரு படைப்பாக, சம்பத் இடைவெளியை தந்திருக்கிறார் என்பது நமக்கெல்லாம் ஒரு பெருமை.

இந்நாவலைப் பற்றியும், சம்பத்தைப் பற்றியும் அதிகமாக பேசியவரும் எழுதியவரும் சி.மோகன் ஒருவர்தான் என்று சொல்லவேண்டும். இந்நாவலைப் பற்றி அவர் சொல்வது:
இடைவெளி 7 அத்தியாயங்கள் கொண்ட சிறிய நாவல். இந்நாவலின் மையப் பாத்திரமான தினகரன் பற்றி நாவலிலிருந்து நாம் அறிவது என்ன என்று பார்க்கலாம்.
பத்தாண்டுகள் முன்னோக்கிப் பார்க்க விரும்பாத இச்சமூக ஓட்டத்திற்கிடையே அடிப்படைப் பிரச்சனைகளில் உழன்று தகிக்கும் ஒருவர் தினகரன். இப்போது அவரை ஆட்கொண்டிருப்பது சாவு பற்றிய ஒரு கேள்வி. பிறப்பால் பிராமணன். அவருக்கு தாஸ்தாயெவ்ஸ்கியை ரொம்பப் பிடிக்கும். காரணம் அவர் ஏசு கிறிஸ்துவை, ஒரு கோணத்திலிருந்து பார்க்கும்போது கடைசி பட்சமாக, அசைக்க முடியாத அளவுக்கு ஓர் கண்டன விமர்சனம் பண்ணிப் போயிருக்கிறார். இது தினகரனுக்கு ரொம்ப முக்கியம். ஏசுவை தினகரனுக்குப் பிடிக்கும். ஆனால் எண்ண ரூபமான எதையுமே எதிர்கொள்ளத்தானே வேண்டும் என்பது தினகரனின் நிலைப்பாடு. (இப்படிப் பார்க்கும்போது வேதங்களும் உபநிஷத்துகளும் இந்த மாதிரியான பரிசீலனைக்கு இன்னமும் உட்படவில்லை என்பது அவரது ஆதங்கம்.
கிட்டத்தட்ட 35 வயதான தினகரனின் குடும்பம் இது. மனைவி பத்மா. குழந்தைகள் குமார், ஸ்ரீதர், ஜெயஸ்ரீ, (சம்பத்தின் மனைவி மற்றும் குழந்தைகளின் பெயர்களே இவை.) கலவியில் அதீத நாட்டமுடையவர். சாவு பிரச்சனையில் உழலத் தொடங்கிய பிறகு, மனைவியே கேட்டுக் கொண்டும் மறுக்குமளவு பிரச்சனையில் அமிழ்ந்து போனவர். டில்லியில் பணிபுரிந்த போது கல்பனா என்ற பெண்ணுடன் உறவு. மனதில், நினைவுகளில் அவளின் தீவிர இருப்பு.
சாவு பிரச்சனை தினகரனை ஆட்கொள்ளத் தொடங்கும் ஆரம்பக் கட்டத்தில் தோல் ஏற்றுமதி செய்யும் நிறுவனம் ஒன்றில் முக்கிய பதவியில் இருக்கிறார். பிரச்சனை தீவிர முகம் கொள்ளும்போது, வேலை அதிகமில்லாத, மதிப்பில்லாத பேக்கிங் பிரிவுக்குத் தானே விரும்பிக் கேட்டு மாற்றிக் கொள்கிறார். முன்னர் டில்லியிலும் தற்சமயம் சென்னையிலுமாக ஒருபோதும் ஒரு அலுவலகத்தில் அதிக நாட்கள் அவர் நீடித்திருந்ததில்லை. சாவு பிரச்சனையில் சிக்கிக் கொண்டு உழன்று தவிக்கும் போது வீட்டிலும், வெளியிலும், அலுவலகத்திலும் அவருடைய நடவடிக்கைகள் பரிகசிக்கப்படுகின்றன.
இவ்வாறாக, லௌகீக வெற்றியை நோக்கி விரையும் பொது ஓட்டத்துக்கு எதிர்திசையில் நிகழ்கிறது இவர் பயணம். மனித ஸ்திதியின் மாறுபட்ட சாத்தியப்பாடு இது. இதிலிருந்துதான் நாவல் புது வெளிச்சம் கொள்கிறது.
தகிக்கும் மனதின் வெதுவெதுப்பை இந்நாவலின் பக்கங்களில் நாம் உணர முடியும். கண்டடைவதின் பரவசத்தையும் தான். இந்த வெதுவெதுப்பும் பரவசமும் நம் வாழ்வுக்கு அவசியமானவை. அதனால்தான் நாவலின் கடைசியில் தினகரன் சாவுக்கு முன் மானசீகமாக மண்டியிடுவதைப் போல ஒவ்வொரு வாசிப்பின் போதும் நான் மண்டியிடுகிறேன்.
இடைவெளி நாவலின் வாசிப்பனுபவத்தை சாரு நிவேதிதா இவ்வாறு குறிக்கிறார்:
வெறும் நூறு பக்கங்களே உள்ள இந்த இடைவெளி என்ற நாவலைப் படிக்க எனக்கு ஒரு வார காலம் ஆயிற்று. அதுவும் உறங்கும் நேரத்தைத் தவிர்த்து மற்ற எல்லா நேரத்திலும் படித்துக் கொண்டிருந்தேன். என் வாழ்நாளில் இத்தனை சிறிய நாவலைப் படிக்க இவ்வளவு நேரத்தை எடுத்துக் கொண்டதில்லை. காரணம், ஆங்கிலத்திலும் தமிழிலும் நான் படித்த அத்தனை நூறு நாவல்களிலும் இடைவெளியே ஆகச் சிறந்ததாக இருந்தது. வழக்கமாக வாசிப்பதைப் போல் ஒரு வாக்கியத்தைப் படித்தவுடன் அடுத்த வாக்கியத்தை நோக்கி நகர முடியவில்லை. படித்த வாக்கியம் அதைப் படித்த உடனேயே நம்மை ஒரு மயக்கநிலைக்குக் கொண்டு சென்று விடுகிறது. புரிய வைப்பதற்காக மயக்க நிலை என்று சொல்கிறேனே தவிர அந்த மனநிலையை என்னால் வார்த்தையால் விளக்க முடியவில்லை. இப்படியே யோசித்து யோசித்து வாசித்து முடிக்க ஒரு வாரம் ஆகி விட்டது.
இந்நாவலைப் பற்றிச் சொல்லும்போது எஸ்.ராமகிருஷ்ணன் இப்படிச் சொல்கிறார்:
ஒரு வகையில் சம்பத்தின் இடைவெளி தினசரி வாழ்க்கையை நாம் எவ்வளவு மொண்ணையாக புரிந்து வைத்திருக்கிறோம். எவ்வளவு அலுப்பூட்டும் அர்த்தமற்ற செயல்களால் நிரப்பிக் கொண்டிருக்கிறோம் என்பதை சுட்டிக்காட்டுகிறது. உடல் பற்றிய நமது புரிதல் அற்பமானது. ஒரு போதும் உடலின் புதிர்தன்மைகளை நோக்கி நாம் நகரவேயில்லை.
உடலை உணரும் தருணங்களான பாலின்பத்தில் கூட நாம் கற்பிதங்களின் வழியே உடலை சுற்றி புனைவுகளையே ஏற்படுத்திக் கொள்கிறோம். ஆகவே உடலின் சூட்சுமங்கள். அதன் ஊடாடும் வெளிகள் பற்றி நமக்கு அறிமுகம் ஏற்படுவதேயில்லை. காலம் பற்றிய நமது பிரக்ஞையற்ற நிலையே இதற்கு முக்கிய காரணம். காலத்தை தீவிரமாக புரிந்து கொள்ள முயற்சிப்பவன் இந்த குழப்பங்களுக்கு உள்ளாவதில் இருந்து தப்ப முடியாது என்பதை இடைவெளி நாவல் நுட்பமாக விளக்கிகாட்டுகிறது.
ஆக, இந்த நாவல் தரும் வாசிப்பனுபவம் அலாதியானது ஆழமானது. மனிதனின் வாழ்வு என்று தொடங்குகிறதோ அன்றே சாவும் நிச்சயிக்கப்பட்டுவிட்ட ஒன்று. மனிதன் தனக்கு அளிக்கப்பட்ட வாழ்வை வேண்டுமானால் வாழாமல் துறக்கலாம் ஆனால் சாவை ஒருபோதும் துறக்க முடியாது. அதிலிருந்து யாரும் தப்பிச்செல்ல முடியாது. ஏனெனில் சாவு வாழ்வின் அடிப்படை. அந்த அடிப்படை விசயத்தையே சம்பத்தின் படைப்பாற்றல் நமக்குச் செப்பனிட்டுத் தந்திருக்கிறது. அதை வாசிப்பதன் வாயிலாக, சாவை அல்ல, வாழ்வை இன்னும் அதிக நெருக்கமாக நாம் அறிந்து கொள்ள முடியும். “எப்போதும் அடிப்படை விஷயங்களில் உழல்பவன் நான். என் எழுத்துக்களில் சாதாரணமாக இந்த நிலையைக் காணலாம் என்றே நினைக்கிறேன். ஆனால், இதைப் பற்றியெல்லாம் காலம்தான் கூற வேண்டும்” எனச்சொல்லிய சம்பத், எப்போதும் காலத்தால் அழிக்கப்பட முடியாதவராக தன்னுடைய படைப்பால் உயர்ந்து நிற்கிறார்.

ஆயினும் இன்னும் பல்லாயிரக்கணக்கான வாசகர்களுக்கு சம்பத் அறியப்படாதவராகவே இருக்கிறார். அவர் படைப்புகளை அனைவரிடத்தும் கொண்டு சேர்க்க ஒவ்வொருவரும் பிரயத்தனப்பட வேண்டும் என்ற ஆசையினாலேயே இந்தக் கட்டுரையை எழுதியிருக்கிறேன். “சம்பத் இறந்து பல ஆண்டுகளாகிவிட்டன. வாழ்நாளில் புத்தக வடிவில் தன் எழுத்துகளை அவர் பார்த்திருக்கவில்லை. அவருடைய பல சிறுகதைகளும் குறுநாவல்களும் இன்னமும் புத்தக வடிவம் பெறவில்லை. ஆர்வமும் அக்கறையுமுள்ள பதிப்பகத்தார் பிரயாசை எடுத்து வெளியிட்டால் காலத்துக்குச் செய்த பெரும் கடமையாக அது இருக்கும்” என்று சி.மோகன் குறிப்பிடுவதை சம்பந்தப்பட்டவர்கள் செவிமடுப்பார்கள் என்று நம்புகிறேன்.
Related Posts Plugin for WordPress, Blogger...