August 15, 2015

'மன்னிப்பு' தண்டணை

தன்னை தேள் மீண்டும் மீண்டும் கொட்டியபோதும் அதைத் தண்ணீரிலிருந்து மேலே மீண்டும் மீண்டும் எடுத்துவிட்டார் ஒரு துறவி. அதைப் பார்த்துக்கொண்டிருந்தவர் கேட்டார், “தேள் கொட்டுகிறது என்று தெரிந்தும் ஏன் அதை மேலே எடுத்துவிடவேண்டும்?” அதற்கு துறவி சொன்னார், ”கொட்டுவது அதன் இயல்பு எனில் காப்பாற்றுவதும் என் இயல்புதான்” என்று. இந்தக் கதையிலிருந்து நாம் பாடம் பெறுவது எளிது. ஆனால் அதன்படி வாழ்க்கையில் நடக்கமுடியுமா? இல்லை அப்படி வாழ்வதுதான் சாத்தியமாகுமா? என்பதெல்லாம் நாம் சிந்திக்கவேண்டியவை.

இந்த மன்னிப்பு என்பதைப் பிரதானமாக பேசும் கதைகள் தி.ஜானகிராமனின் கடன் தீர்ந்ததும் பிரபஞ்சனின் அபஸ்வரமும். பணம் கொடுத்து ஏமாந்தவன், தன்னை ஏமாற்றியவனை மன்னிக்கிறான் என்பதுதான் இரண்டு கதைகளும் சொல்லும் பாடம்.

அபஸ்வரம் கதையில், கதைசொல்லியாக வரும் இளைஞனின் அப்பா  தன் நண்பன் சுந்தரேசனுக்கு ஒரு லட்சம் ரூபாய் தருகிறார். அவன் அதை இல்லை என்று நீதிமன்ற விசாரணையில் சொல்லிவிடுகிறான். இதனால் இளைஞனுக்கு ஆத்திரம் வருகிறது. அவன் அப்பா அவனை சாந்தப்படுத்துகிறார். சுந்தரேசன் மனைவி அவர் வீட்டுக்கு வந்து அதற்கு பதிலாக தன் நகைகளைக் கொடுக்கிறாள். அதை வாங்க மறுத்துவிடுகிறார் அவர். அவள் அவரிடம், ”உங்களுக்கு இதனால் வருத்தம் இல்லையா?” என்று கேட்கிறாள். அதற்கு அவர், ”வருத்தம் அவன் மீது இல்லை,  தங்கள் இருவருக்கும் இடையேயான இசையெனும் நட்பில் அபஸ்வரம் வந்துவிட்டதே என்பதுதான் வருத்தம்” என்கிறார்.

நாம் கண்கள் கலங்க கதையைப் படித்து முடிக்கிறோம்.

தி.ஜாவின் கதையை பிரபஞ்சனின் கதையின் நீட்சி என்று சொல்லலாம். அவர் இன்னும் ஒருபடி மேலே சென்று மன்னிப்பின் பரப்பை விஸ்தரிக்கிறார். இந்த ஜன்மத்துக்கு மட்டுமல்லாது வரும் ஜன்மங்களுக்குமான மன்னிப்பை அளிக்கிறார். சுந்தர தேசிகரை  நிலம் ஒன்று சகாயவிலையில் வாங்கித்தருவதாக சொல்லி ராமதாஸ் ஏமாற்றிவிடுகிறான். அதனால் இடிந்துபோகிறார் சுந்தர தேசிகர். நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது. இந்நிலையில் ராமதாஸ் உடல் நலம் கெட்டு படுத்த படுக்கையாகிறான். அவனை சென்று சந்திக்கும் தேசிகர், ”சாகும்போது கடனோடு சாகக்கூடாது. அதன் துன்பம் ஜன்மத்துக்கும் தொடர்ந்து வரும். எனவே உன்னிடம் இருப்பதைக்கொடு. அதன் மூலம் உன் கடனை தீர்த்துவிடுகிறேன்” என்கிறார். அவனிடம் இரண்டணாவை வாங்கிக்கொண்டு, ”கடன் தீர்ந்தது” என்று சொல்லி வெளியேறுகிறார்.

இங்கே நம் கண்களையும் தாண்டி நம் இதயம் நெகிழ்ந்துபோகிறது.

மன்னிப்பின் மகத்துவத்தை நாம் உணரும் தருணமாக இந்தக் கதைகள் நம் மனதில் தங்கிவிடுகிறது. மன்னிக்கும் மனோபாவத்துக்கு நம் சமூகத்தில் ஒரு மதிப்பு (வேல்யூ) இருக்கிறது. உண்மையில் அப்படி இல்லாத போதும்கூட, அதை ஒட்டிய கதைகள் சிலாகிக்கப்படுவது தவிர்க்கமுடியாதது.

உண்மையில் மன்னிப்பு என்பது மன்னிப்பா?

நுட்பமாக கவனித்தால் மன்னிப்பும் கூட தண்டணைதான் என்பது புரியும். தண்டிப்பதைவிட  இன்னும் அதிக பாதிப்பை மன்னிப்பு ஏற்படுத்தும். ஒருவனை நாம் மன்னிக்கும்போது அவனது அகங்காரத்தையே நாம் தண்டிக்கிறோம் என்பதுதான் பொருள். எனவே ஆழமாகப் பார்க்கும் போது மன்னிப்பு என்பது உண்மையில் மன்னிப்பதல்ல, மாறாக ஏமாற்றியவனுக்குக் கொடுக்கும் ஒருவகையான தண்டணை என்றுதான் தோன்றும். அவன் வாழும் காலம் வரை அவன் மனசாட்சி, மன்னிப்பின் வடிவாக அவனைத் தொடர்ந்து வந்து தண்டித்தபடியேதான் இருக்கும்.

இக்கதைகள் பேசுவது மன்னிப்பு பற்றியதாக இருப்பினும், அவை முழுக்கமுழுக்க மன்னிப்பு அல்ல என்பதும், அதுவும்கூட ”மன்னிப்பு தண்டணை” தான் என்பதும் விளங்கும். சொல்லப்போனால், ஏமாறியவன் தன்னுடைய ஏமாற்றத்தை, ஏமாற்றியவனை மன்னிப்பதன் மூலம் ஈடுசெய்துகொள்கிறான் எனலாம்.

(மறுபிரசுரம். முதல் பிரசுரம் ஏப்ரல் 20, 2013)

Related Posts Plugin for WordPress, Blogger...