July 31, 2015

நாவல் வானில் துருவ நட்சத்திரம்: காசியபனின் அசடு

வாழ்க்கை எல்லோருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒவ்வொருவர் வாழ்க்கையும் தனித்தனி அனுபவங்களும் விசேசங்களும் கொண்டது. மற்றவர்களின் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டிய தேவை இதனாலேயே ஏற்படுகிறது. படைப்பாளி தன் அனுபவங்களின் சாரத்தைத் தொகுக்கும்போது, அதைப் பிறருடன் பகிர வேண்டும் என்ற அவனது ஆசையே படைப்பாக பரிணமிக்கிறது. அத்தகைய பகிர்வின் மேலான கலையே நாவல் கலை. 1987-ல் சி.மோகன் பட்டியலில் இந்நாவலை அறிந்ததும் அதை வாசிக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. இந்நாவலைத் தேடி அலைந்த அந்நாட்கள் சுகமான அனுபவம். தேடலின் உற்சாகத்தையும், அர்த்தத்தையும் தந்த காலமிது. அப்போதே இந்நாவல் என்னுள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இன்று மறுவாசிப்பில் இந்நாவலின் பல நுட்பங்கள் புலப்பட்டன. காலத்துக்கேற்ப தன்னை விரித்துக்கொள்ளும் ஆற்றல் இப்படைப்புக்கு இருப்பதை அறிய முடிகிறது.

காசியபனின் அசடு தமிழின் முக்கியமான நாவல்களில் ஒன்று. சிறிய நாவல்தான் என்றாலும் செறிவும் ஆழமும் கொண்ட நாவல். அனைவராலும் அசடு என்று கருதத்தக்க கணேசனின் கதையைச் சொல்லும் நாவல். கணேசனை உங்களுக்குத் தெரியுமா? என்று கேள்விகேட்டு அவன் கதையைச் சொல்கிறார் கதைசொல்லி. நாவலில் கதைசொல்லியாக வருவது கதாசிரியர் அல்ல. கணேசனின் ஒன்றுவிட்ட தம்பி கதையைச் சொல்வதாக நாவலைக் கட்டமைத்திருக்கிறார் காசியபன். கணேசனின் வாழ்க்கையைச் சொல்லும் முகமாக கதை நிகழ் காலத்திலிருந்து கடந்த காலத்தில் நுழைகிறது. அவ்வப்போது கதைசொல்லி நிகழ்காலத்துக்குத் திரும்பி மீண்டும் கடந்த காலத்தில் சஞ்சரிக்கிறார். அத்தோடு மட்டுமல்ல கதையிலேயே கதையின் எதிர்காலம் குறித்த சில நிகழ்வுகள் முன்கூட்டியே இடையிடையே வந்து போகின்றன. சுருங்கச்சொன்னால் கதை ஒரே நேர்கோட்டில் பயணம் செய்யாமல் காலத்தில் முன்னும் பின்னும் மாறிமாறி பயணிக்கிறது. வாசக இடைவெளிக்கும் ஊகத்திற்கும் இவை பெருமளவில் இடம் தருகின்றன. அதுவே இந்நாவலை நாம் வாசிக்க உவப்பானதாகவும் உந்துதலாகவும் இருக்கிறது. நாவலாசிரியரின் புனைவின் திறம் இதன் மூலம் வெளிப்படுகிறது.

கதையின் எல்லா இடங்களிலும் கணேசனும் கதைசொல்லியும் வருவது சாத்தியமில்லை என்பதால், தான் கேட்டதையும், பிறர் சொல்லியதையும் வைத்து கணேசனின் கதையை விவரிக்கிறான் கதைசொல்லி. எனவே நாவல் கணேசனின் கதையை மட்டுமல்ல அவனோடு நெருங்கிய தொடர்புடைய கதைசொல்லியின் வாழ்வையும் நம்முன் வைக்கிறது. ஆக, நாவல் பன்முகத் தன்மை கொண்டதாக மாறுகிறது. ஒரு படைப்பு தன்னைத்தானே விரித்துக்கொள்ளும் சூட்சுமம் இதன் மூலம் நடந்தேறுகிறது.

கதையில் மரணத்தைப் பற்றிய சூழ்நிலை ஒன்று விரிவாக விவரிக்கப்படுகிறது. அந்த மரணம் தன்னை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை என்பதை கதைசொல்லி அறிகிறான். வனமாலை ஆற்றின் படித்துறையில் அமர்ந்து, பாட்டியின் மரணம் தன்னை ஏன் பாதிக்கவில்லை என்று சுயவிசாரணை செய்கிறான் அவன். நாவலின் இந்தப் பகுதி புனைவின் செறிவும் நேர்த்தியும் கொண்டது.  சிறுவனான அந்த வயதில் மரணம் ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றிய விவரணைகள் நம் சிந்தனையை முன்னெடுத்துச் செல்வதாகவும், வாழ்க்கை, மரணம் இரண்டையும் பற்றிய பல கேள்விகளை நம் மனதில் எழச்செய்வதாகவும் இருக்கிறது.

கணேசன் பிழைக்கத் தெரியாதவன், உருப்படாதவன், யாருடனும் ஒட்டாதவன், வாழ்க்கையை எதிர்கொள்ளும் சமார்த்தியம் இல்லாதவன் என்ற பிறரின் பார்வை கதை மாந்தர்கள் அனைவரிடத்தும் இருக்கிறது. நாம் நினைக்கும் சமார்த்தியங்கள் அவனுக்கு இல்லை என்று வேண்டுமானால் சொல்லலாம். நம் சமார்த்தியங்கள் என்ன? ஏமாற்றுதல், பொய் சொல்லுதல், தான் முன்னேற அடுத்தவரைக் கவிழ்த்தல், இப்படி அநேகம் சொல்லலாம். இதெல்லாம் இல்லாத கணேசன் பிழைக்கத் தெரியாதவன், உருப்படாதவன் என்று, அந்த சமார்த்தியங்கள் உடைய நாம் நினைக்கிறோம். இது யாருடைய குறை? அவன் யாருடனும் ஒட்டாமலிருப்பது அவன் குற்றமா? இல்லை அடுத்தவரின் குறையா? எது அவனை ஒட்டாமல் அடிக்கிறது?

படிப்பு வராததால் அவன் தகுந்த வேலை கிடைக்காமல் ஊர் ஊராகத் திரிகிறான். காசி துவங்கி கல்கத்தா, ஹைதராபாத், பூனா என்று எங்கெங்கோ அலைந்து வேலை செய்கிறான். கிடைக்கும் வேலையைத் தக்கவைத்துக்கொள்ளும் சமார்த்தியமும் அவனுக்கு இல்லாமலிருக்கிறது. பிற மனிதர்களுடன் ஏற்படும் உறவின் சிக்கல் அவனை அலையவிடுகிறது. அவன் மீது பிறர் சொல்லும் குற்றங்களும் குறைகளும், அவனுக்கு பிறர் மீதும் இருக்கிறது என்பதை யாருமே கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. கணேசன் மீது அன்பு காட்டியவர்கள், அவனைப் புரிந்து கொண்டவர்கள், என்று அவனது பாட்டியையும், கதைசொல்லியின் மனைவியையும், ஓட்டல் நடத்தும் ஆண்டி அய்யரையும் சொல்லலாம். அவனைப் பொருத்தவரை தன் உடலின் தேவைகள் தாண்டி சிந்திக்கத் தெரியாதவன் என்பது மட்டுமல்ல, அதைத்தவிர வேறு எந்த ஆசையும், இலட்சியமும் இல்லாதவன். அப்படி இருப்பது எவ்வளவு பெரிய ஆனந்தம்?  அந்த ஆனந்தத்தையா இந்தச் சமூகம் குற்றம் சொல்கிறது?

செல்வச்செழிப்புடன் வாழ்ந்த அவன் பாட்டனாரின் சொத்துக்கள் அவனது அப்பாவின் காலத்தில் அழிந்துபடுகிறது. மனைவி இறந்ததும் இரண்டாம் தாரமாக திருணம் செய்த அப்பாவிடமும், சித்தியிடமும், தம்பிகளிடமும் அவன் நேசமாகவம் நெருக்கமாகவும் இருக்க முடியாமல் போகிறது. சிறிது எஞ்சிய சொத்தை தன் பங்குக்குப் பிரித்து வாங்குகிறான். ஆனால் அதை வைத்துக்கொண்டு அவன் பரிபாலனை செய்யமுடியுமா? கிடைத்த சொத்தையும் சித்தப்பாவிடம் ஒப்படைத்துவிட்டு அவன் எங்கோ போய்விடுகிறான். எங்கெங்கோ அலைந்துதிரிந்து கடைசியில் மதுரையில் ஓட்டல் நடத்தும் ஆண்டி அய்யரைத் தஞ்சமடைகிறான்.  அய்யர் அவன் மீது பரிவும் பாசமும் கொண்டு வேலை தருகிறார். அங்கேயும் அவன் நிரந்தரமாக இல்லவிட்டாலும், எப்போது வேண்டுமானாலும் வந்து வேலை செய்ய அவர் அனுமதிக்கிறார்.

கணேசனும் மனிதன் தானே? அவனுக்கும் கல்யாண ஆசை பிறக்காதா என்ன? அவனுக்குத் திருமணம் ஆகிறது. ஆனால் வாழ்க்கையின் சிக்கல்கள் மேலும் சிடுக்காகின்றன. மனைவின் குடும்பத்தாரோடு அவனால் ஒட்டமுடியாமற் போகிறது. அவனுக்குக் குழந்தையும் பிறக்கிறது. தன் மனைவியின் நடத்தையில் அவனுக்கு அதிருப்தி ஏற்படுகிறது. எப்படியோ சமாளித்து வாழ்ந்து வரும்போது அவன் மனைவி யாருடனோ ஓடிப்போகிறாள். இதனால் பெரிதும் பாதிக்கப்படும் அவன் கடைசி காலத்தில் சில நாள் கதைசொல்லியின் வீட்டில் தங்குகிறான். அதன் பிறகு அவனை கதைசொல்லி பார்க்கமுடியாமல் போகிறது. குருவாயூர் செல்லும் அவன், ஆண்டி அய்யர் மருமகன் வாயிலாக, கணேசன் அனாதையாக இறந்துபோனதை அறிகிறான்.

க.நா.சுவின் சோமு முதலி (பொய்த்தேவு) சாமார்த்தியம் உடையவன்தான். நிறைய பணம் சம்பாதித்தவன்தான். ஆனால் கடைசியில் அவனும் கணேசனைப்போல் அனாதையாகத்தான் செத்துப்போகிறான். சோமு முதலி போய்ச்சேர்ந்தது எங்கே? கணேசன் போய்ச்சேர்ந்தது எங்கே? நம் முன் விரிவது பெரும் சூன்யம்.

கணேசன் வளரவளர அவன் பக்குவமடைந்து வருகிறான் என்பதை காசியபன் நுட்பமான சித்தரிப்புகள் மூலம் நம்மை விளங்கிக்கொள்ளுமாறு செய்கிறார். யாருடனும் ஒட்டாமல் ஆரம்ப காலத்தில் வாழும் அவன், இடைப்பட்ட வாழ்க்கையில் தன் தந்தை குறித்து, “சினேகமாக இருக்க வேண்டிய காலத்தில் சினேகமாக நானும் இருக்கல்லே அவரும் இருக்கல்லே.” என்கிறான். இறுதியில் தன்னைப் பற்றிய சுயவிசாரணையில் இறங்கி, அடுத்தவர் மீதான தன் புகார்களை தவிர்த்து, தன் மீதான அடுத்தவர்களின் புகார்களைப் பற்றி ஆராய்கிறான். மேலும் படிக்கத் தெரியாத அவன் ”ஞானப்பானை” என்ற பக்தி காவியத்தைப் படிக்கிறான். அதில் வரும் கர்மா பற்றிய விளக்கத்தை கதைசொல்லியின் மகளுக்கு விவரிக்கிறான். இவையெல்லாம் அவன் பக்குவப்பட்டுவிட்டதைப் படிப்படியாகக் காட்டுகின்றன.

மனிதர்கள் ஏன் பலவிதமாக இருக்கிறார்கள்? என்ற கேள்வியை நம்மைக் கேட்டபடியே நாவல் செல்கிறது. மனிதர்கள் ஒன்றுபோல் இருக்கமுடியாது என்பதே அதன் பதிலாக அனைத்துப் பக்கங்களிலும் நாவல் வியாபிக்கிறது. குறைந்த பக்கங்களில் ஒரு மனிதனின் வாழ்க்கையை இவ்வளவு முழுமையாகக் காட்டமுடியுமா என்ற வியப்பே நாவலைப் படித்து முடித்ததும் நமக்கு எழுகிறது. காலம், இடம் என்ற இரண்டையும் இந்நாவல் விஸ்தாரமாகத் தன்னகத்தே கொண்டுள்ளது. எண்ணற்ற அடுக்குகளும், ஊடும் பாவும் கொண்ட செறிவான, நுட்பமான படைப்பு. தன் படைப்பின் திறத்தால், கணேசன் என்ற மனிதன் வாழ்க்கையின் பல்வேறு காலகட்டங்களை நம் கண்முன் நிறுத்திவிடுகிறார் காசியபன். இது கணேசன் என்ற தனி மனிதனின் வாழ்க்கை மட்டுமல்ல, இந்த உலகில் ஜீவித்திருக்கும் இதுபோன்ற எண்ணற்ற கணேசன்களின் வாழ்க்கை இது என்பதாக நாம் உள்வாங்கிக்கொள்கிறோம்.

இல்வாழ்க்கையின் பிரம்மாண்டத்தை எதிர்கொண்டு வென்றவர்களின் வாழ்வையே நாம் படிக்கிறோம், பேசுகிறோம். ஆனால் அந்த பிரம்மாண்டத்தை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் கணேசன் போன்றோரின் வாழ்வை யாரும் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. அவர்களும் மனிதர்கள்தாம் என்பதையும், இந்த உலகில் வாழ அவர்களுக்கும் சம உரிமை இருக்கிறது என்பதையும் நம்மை உணருமாறு செய்கிறது இந்நாவல். நாவலை படித்து முடித்ததும் நம் மனம் கனத்துவிடுகிறது. சொல்லமுடியாத சோகம் நம் மீது கவிகிறது. நாவலின் பாதிப்பிலிருந்து நாம் மீள அவகாசம் தேவையாகிறது. நாம் என்றென்றும் மறக்க முடியாத அற்புதமான ஒரு படைப்பு காசியபனின் அசடு என்பதை யாரும் மறுக்கமுடியாது.

சுந்தர ராமசாமி இந்நாவலுக்கு எழுதிய மதிப்புரையிலிருந்து இதன் முக்கியத்தையும் வீச்சையும் நாம் அறியமுடியும். நாவலின் கூறுகள் அனைத்தும் உள்ளடக்கிய ஒரு படைப்பாக அசடுவைக் காண்கிறார் சுந்தர ராமசாமி. நாவல் என்றாலே ஆயிரம் பக்கங்கள் இருக்கவேண்டிய அவசியமில்லை. அசடு வெறும் 123 பக்கங்கள் மட்டுமே கொண்டது. ஆனால் இதிலேயே கலையின் குணங்கள் அனைத்தும் வந்துவிட்டதாகக் கணிக்கிறார் அவர்.

கணேசன் எதிர்கொள்ளும் பிரச்சினைகளின் தீவிரம் நமக்கோ, கதைசொல்லிக்கோ தெரிய வாய்ப்பில்லை. அவன் நாவலில் பேசும் சில வசனங்களைக்கொண்டு நாம் அவனை உணர முயற்சிக்கலாமே தவிர, அது அவனின் முழுமையான சிக்கல்களாக நாம் எடுத்துக்கொள்ள முடியாது. அதன் தீவிரத்தை உணர நாம் கணேசனாக மாறி நாவலில் பயணிக்கவேண்டும். அப்போதே நாம் அவனை பூரணமாகத் தெரிந்துகொள்ள முடியும். 

ஆக, தமிழிலக்கியத்தில் அசடு ஒரு முக்கியமான நாவல். ஒவ்வொரு இலக்கிய ஆர்வலரும் கட்டாயம் படிக்க வேண்டிய நாவல்..

இந்நாவல் விருட்சம் வெளியீடாக 1978-ல் முதல் பதிப்பும், 1994-ல் இரண்டாம் பதிப்பும் வந்தது. அதற்கு பிறகு இந்நாவல் பதிப்பிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இணையத்தில் கிடைக்குமா என்பது பற்றியும் நான் அறியேன். எல்லோரும் படிக்கவேண்டும் என்ற அவாவினால் இந்நாவலை பிடிஎப் கோப்பாக மாற்றும் முயற்சியில் இருக்கிறேன். விரைவில் புத்தக அலமாரியில் இந்நாவலை வாசிக்கமுடியும்.

(மறு பிரசுரம். முதல் பிரசுரம் ஜீன் 24, 2013)

Related Posts Plugin for WordPress, Blogger...