July 23, 2015

வாழ்க்கை இக்கணம் இப்போதே: பௌலோ கொய்லோவின் ரஸவாதி

கடவுள் வழங்கிய இம்மனித வாழ்க்கை அனைவருக்கும் ஒன்றுதான். நம் பார்வையில், வாழ்க்கை மாறுபட்டுத் தெரிவதாகத் தோன்றுவதற்குக் காரணம் ஒவ்வொருவர் ஆசையும் வேறு படுவதால்தான். இருந்தபோதிலும் அனைவரின் வாழ்வையும் இயக்குவது இப்பிரபஞ்சம் எனும் மகாசக்திதான். விருப்பங்கள், ஆசைகள் இல்லாமல் சாதாரண மனிதர்கள் வாழ முடியாது என்பதால்தான் அவை மனிதனுக்கு வழங்கப் பட்டிருக்கின்றன. ஞானிகளுக்கு அவைகள் பொருட்டல்ல. அவைகள், குழந்தைகளுக்கு வழங்கப்படும் மிட்டாய் போன்றவைதான். இனிப்பும் கசப்பும் ஒரே சுவைதான். நம் நாக்குதான் பேதத்தை ஏற்படுத்துகிறது. மனித வாழ்விலும் ஆசைகளும் விருப்பங்களுமே வேற்றுமையைத் தோற்றுவிக்கின்றன. இந்த புரிதல்களோடு பெளலோ கொய்லோவின் ரஸவாதி நாவலை நாம் வாசிக்கலாம்.

பாழடைந்த தேவாலயம் ஒன்றில் தனது ஆடுகளுடன் சிறுவன் சந்தியாகு ஒரு நாள் இரவு தங்குகிறான். தன் தந்தை சொல்வதைக் கேட்காமல் ஆடுகளை மேய்க்கும் வேலையைத் தேர்ந்தெடுத்து ஊர் ஊராகச் சுற்றிக் கொண்டிருக்கிறான். தான் விரும்பிய பெண் ஒருத்தியைப் பார்க்கவும், தன் ஆடுகளின் ரோமத்தை அவளின் அப்பாவிற்கு விற்கவும் ஆடுகளுடன் செல்கிறான். வழியில் திரும்பத் திரும்ப வரும் கனவு ஒன்றை பற்றி விளக்கம் அறிய கனவுகளுக்கு பலன் சொல்லும் பெண் ஒருத்தியைப் பார்க்கிறான். அவள் அவனுக்குப் புதையல் ஒன்று கிடைக்கப்போவதாகச் சொல்கிறாள். சிறுவன் அதை நம்பவில்லை. ஆனால் ராஜா ஒருவர் அவனைச் சந்தித்து அதையே உறுதி செய்கிறார். அதற்காக அவனிடமிருந்து மூன்றில் ஒரு பங்கு ஆடுகளைப் பெறுகிறார். அவனுக்கு சகுனங்களை உணர்த்தும் இரண்டு கற்களைக் கொடுத்துச் செல்கிறார். சிறுவனும் ஆடுகளை விற்றுப் பணமாக மாற்றிக்கொண்டு பிரமிடுகள் நிரம்பிய எகிப்தை நோக்கிப் பயணத்தைத் தொடங்குகிறான். வழியில் பணத்தைப் பறிகொடுத்து விடுகிறான். மேற் கொண்டு பயணிக்க முடியாமல் பளிங்குப் பொருட்கள் விற்கும் கடையில் வேலைக்குச் சேர்கிறான். பல் மாதங்கள் அங்கு வேலை செய்கிறான். கடை முதலாளிக்குப் பல யோசனைகளைச் சொல்லிக் கடையின் வியபாரத்தைப் பெருக்குகிறான். அவனுக்கும் இதனால் கணிசமாகப் பணம் கிடைக்கிறது. தான் ஆடுகளுடன் வாழ்ந்தபோது பல விசயங்களை அந்த ஆடுகள் தனக்குக் கற்றுக்கொடுத்ததாக நினைக்கும் அவன், இங்கேயும் தான் பலவற்றை கற்றுக் கொண்டதாக அறிகிறான். அங்கிருந்து மீண்டும் புதையலைத் தேடி எகிப்துக்குச் செல்கிறான்.

ரஸவாதியைத்தேடிக் கிளம்பும் ஆங்கிலேயர் ஒருவரும் அவனுடன் இணைந்து கொள்கிறார். இன்னும் பலரும் தத்தம் வேலையின் பொருட்டு கூட்டமாகச் செல்கிறார்கள். அவர்களைப் பாலைவனத்தினூடே கூட்டத்தின் தலைவன் ஒருவன் வழிநடத்திச் செல்கிறான். பல நாட்கள் பாலைவனத்தில் கடுமையாகப் பயணம் செய்து, பாலைவனச் சோலை ஒன்றை அடைகிறார்கள். சிறுவன் அங்கே பாத்திமா என்ற பெண்ணை விரும்புகிறான். சிறுவனும் ஆங்கிலேயரும் ரஸவாதியைக் கண்டுபிடிக்கிறார்கள். அந்த சமயத்தில் இரு கூட்டங்களுக்கிடையே சண்டை மூழ்கிறது. சிறுவன் ரஸவாதியுடன் தன் புதையலைத்தேடிச் செல்கிறான். ரஸவாதி இப்பிரபஞ்சத்தின் குரலுக்கு செவிசாய்க்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். அவரும் ஒரு கட்டத்துக்கு மேல் அவனிடமிருந்து விடைபெற, அவன் மட்டும் தனியாக புதையலை நோக்கிச் செல்கிறான். புதையல் இருப்பதாக தான் நம்பும் இடத்தில் தோண்டுகிறான். ஆனால் புதையல் ஒன்றும் அகப்படவில்லை. அங்கே வரும் ஆதிவாசிகள் அவனை அடித்து அவனிடமிருக்கும் தங்கத்தைப் பிடுங்கிக் கொள்கிறார்கள். அவன் அழுகிறான். தான் எதற்காக இங்கே வந்தேன் என்பதை அவர்களிடம் சொல்கிறான். ஆதிவாசிகளின் தலைவன், தனக்கும் பாழடைந்த தேவாலயம் ஒன்றில் புதையல் கிடைப்பதாக அடிக்கடி கனவு காண்பதாகவும் அதற்காக தான் அங்கே செல்வது முட்டாள்தனம் என்றும் சொல்கிறான். சிறுவனை விட்டுவிட்டு அவர்கள் சென்றுவிட, சிறுவனுக்கு புரிந்துவிடுகிறது. தான் முன்னர் தங்கியிருந்த தேவாலயத்திற்கு திரும்பிச்சென்று தோண்டிப் பார்க்கிறான். அங்கே புதையல் இருப்பதைக் காண்கிறான்.

வாழ்ககையில் புதையலைத்தேடி எங்கேயும் செல்லவேண்டியதில்லை. நாம் இருக்கும் இடத்திலேயே புதையல் இருக்கிறது. அதை அறியும் விவேகம் மட்டும் இருந்தால் போதும். வாழ்க்கையில் எல்லாமே, இப்பிரபஞ்சம் முன்னரே தீர்மானித்தபடிதான் நடக்கிறது. வாழக்கையின் நிகழும் கணத்தை முழுமையாக வாழ்ந்தாலே, வாழ்க்கையின் அடுத்த கணம் தன்னைத்தானே கவனித்துக்கொள்ளும் என்பதை ரஸவாதி நமக்குக் காட்டுகிறது. நமக்கு வாழ்க்கையில் கிடைக்கும் எதையும் தங்கமாக மாற்றிக்கொள்ளும் ரஸவாதி நாம்தான் என்பதை பௌலோ கொய்லோ நமக்கு உணர்த்துகிறார்.

(மறுபிரசுரம். முதல் பிரசுரம் டிசம்பர் 15, 2012)

Related Posts Plugin for WordPress, Blogger...