July 17, 2015

சுந்தர ராமசாமியின் ஆகச்சிறந்த கதைகள்

இவைகள் சுந்தர ராமசாமியின் ஆகச்சிறந்த கதைகள். நுணுக்கமும் செய்சேர்த்தியும் அழகும் வடிவமும் கொண்டு மனதைக் கிறங்கடிக்கும் இக்கதைகளைக் கல்லில் செதுக்கிய சிற்பங்கள் எனலாம். வார்த்தைகளைக் கொண்டு வாக்கியங்களை அமைக்க அவர் காட்டும் கவனமும் அக்கறையும் அசாதாரணமானவை; வியக்கவைப்பவை. வார்த்தைகளால் வாக்கியங்களை உருவாக்குவதற்கு மாறாக, வாக்கியங்கள் இடையே உள்ள வேண்டாத வார்த்தைகளை விலக்குவதிலேயே அவர் மிகவும் கவனம் கொண்டிருந்தார் என்று சொல்லவேண்டும். ஆக அவரை ஒரு படைப்பாளி என்றல்லாது கல்லிலே சிற்பங்களைச் செதுக்கும் சிற்பிக்கு ஒப்பிடுவதுதான் பொருத்தமாக இருக்கும். தனித்தனியே இக்கதைகளுக்கு முன்னர் எழுதிய பதிவுகளை ஒருசேரப் படித்தபோது, ‘காலத்தின் பக்கங்களில் தன் இருப்பை ஸ்திரப்படுத்திக் கொண்டுவிட்ட படைப்பாளி அவர்’ என்று குறிப்பிட்டது சரிதான் என்று இப்போதும் தோன்றுகிறது.

1. பிரசாதம்

பிரசாதம் கதையை ஆரம்பத்திலிருந்தே நாம் புன்னகையுடன்தான் படிக்க முடியும். ஆனால் கடைசியில் படித்து முடித்ததும், புன்னகை மறைந்து நம் கண்கள் கலங்குவது தவிர்க்க முடியாததாகிறது.

அடுத்த நாள் வரும் தன் குழந்தையின் பிறந்த நாளைக் கொண்டாட போலீஸ் கான்ஸ்டபிள் படும் அவஸ்தையைச் சொல்லும் கதை பிரசாதம். அந்த நாளில் என்ன செய்யவேண்டும் என்று அவனது மனைவி அவனிடம் சொல்கிறாள்:
‘நாளை விடியக் கருக்கலில் எழுந்திருக்க வேண்டும். சுடு தண்ணீரில் குழந்தையைக் குளிப்பாட்ட வேண்டும். பட்டுச்சட்டை போட்டு, கலர்நூல் வைத்துப் பின்ன வேண்டும். அந்தப் பின்னலில் ஒரு ரோஜா – ஒன்றே ஒன்று – அதற்குத் தனி அழகு. நாம் இருவரும் குழந்தையைக் கோயிலுக்கு எடுத்துச் செல்கிறபொழுது தெருவில் சாணி தெளிக்கும் பெண்கள், கோலம் இழைக்கும் பெண்கள் எல்லோரும் தலைதூக்கித் தலைதூக்கிப் பார்க்க வேண்டும். அவர்கள் தலைதூக்கிப் பார்ப்பதை நான் பார்க்க வேண்டும். நான் பார்த்து, உங்களைப் பார்க்க வேண்டும். நீங்கள் எல்லோரும் பார்ப்பதைப் பார்க்கவேண்டும். பார்த்துவிட்டு என்னைப் பார்க்க வேண்டும்.’
என்ன ஒரு கற்பனை! மனித வாழ்க்கையில் கற்பனைகள் சுகமானவை. ஆனால் நடைமுறை என்று வரும்போதுதான் சிக்கலும் சிடுக்குகளும் புகுந்துவிடுகின்றன. அந்த கற்பனையில் மயங்கித்தான் அதை செயல்படுத்த பாடாய் படுகிறான் அவன். ஆனால் அன்று பார்த்து எந்த கேசும் அகப்படவில்லை. அதை முதல் பாதிக்கதையில் தனக்கேயான நகைச்சுவை மிளிர சொல்கிறார் சுந்தர ராமசாமி. வெறுத்துப்போய் கடைசியில் தபால் பெட்டியில் தபால் போட வரும் அர்ச்சகர் ஒருவரை மடக்குகிறான் அவன். அவரிடம் அவன் என்ன கறக்கிறான் என்பதை மீதிக்கதை சொல்கிறது.

அர்ச்சகரை மடக்க அவன் படும் சிரமத்தின் உரையாடல்கள் அனைத்தும் சுந்தர ராமசாமிக்கே உரியவை. சொல்லப்போனால் அவரது டிரேட்மார்க்!

இது வெறும் கதையாக மட்டுமல்லாது சீரழிந்து வரும் சமூகத்தின் ஒரு பகுதியை யதார்த்தமாக எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது. அதைச் சீர்படுத்தும் பிரசாதமாக இந்தக் கதையை சுந்தர ராமசாமி படைத்திருக்கிறார் என்றே சொல்லவேண்டும். டாக்டர்களுக்கு வியாதியஸ்தர்கள் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் போலீசுக்கு குற்றவாளிகள். ஒருவரின் பிழைப்பு மற்றவர் கஷ்டத்தில்தான் இருக்கிறது. இது பொதுவான உலக நீதியாக இருந்தாலும், மனிதனின் ஆசைகள் பெருகப்பெருக இந்த உலக நீதி இயல்பாய் இல்லாமல் வலிந்து பிடுங்குவதாக மாறிவிடுகிறது. சுந்தர ராமசாமியின் ஆகச்சிறந்த கதையான பிரசாதம் அப்படியான ஒரு பிடுங்கலைச் சொல்வதோடு நின்றிருந்தால், நம்முள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்க முடியாது. ஆனால் சுந்தர ராமசாமி, மனிதனின் பிடுங்கும் ஆசையைவிட கொடுக்கும் ஆசை உயர்ந்தது என்று சொல்லும்போது கதை வலிமையானதாக, சிறப்பானதாக ஆகிறது. மனித மனதில் இன்னும் ஈரம் முழுமையாக வற்றிவிடவில்லை என்றுணரும்போது நம் கண்களிலும் நாம் ஈரத்தை உணர்கிறோம். மனிதம் மீதும், மனித வாழ்க்கையின் மீதும் இன்னும் கொஞ்சம் நம்பிக்கை பிறக்கிறது.


2. சன்னல்

மனித மனம் சதா பயணித்துக்கொண்டிருக்கும் ஒரு வஸ்து. அது ஓரிடத்தில் நிலையாக நிற்பதென்பது சாத்தியப்படாத ஒன்று. இந்த உலகம் பூராவும் ஒரு நொடியில் சுற்றித்திரும்ப அதனால் மட்டுமே முடியும். அதன் சஞ்சாரமே நம் வாழ்க்கை. அது உருவாக்கும் கற்பனைகளிலேயே நாம் வாழ்கிறோம். நம்மை ஒரு அறையில் அடைத்து வைக்கும்போது என்ன நேர்கிறது? நம் கற்பனைகள் வரண்டுபோகின்றன. எனவே மனம் மேற்கொண்டு கற்பனையை வளர்க்க இயலாததாக உள்ளது. மனித உடலுக்கு மட்டுமல்ல மனதுக்கும் உணவு தேவை. அது பெரும்பாலும் நம் கண்களின் வழியாகவே தன் உணவை எடுத்துக்கொள்கிறது. அது முடியாமல் போகும்போது மனதுக்கு தீனி கிடைக்காமல் போகிறது. அது நம் உடல் நிலையை மேலும் பாதிக்கிறது.

வீட்டிற்கு சன்னல் என்பது வெறும் உடலின் சுவாசத்துக்கும், காற்றோட்டத்துக்கு மட்டும் அவசியமானது அல்ல. மனம் சுவாசிக்கவும் சன்னல் அவசியம். அது கிட்டாத போது நாம் மூச்சுத்திணறுவது தவிர்க்க முடியாததாகிறது. அதுவும் தனிமை தரும் துன்பத்திலிருந்து தப்பிக்க மனம் கொள்ளும் இத்தகைய பிரயாணம் அவசியமாகிறது.

அந்த தனிமையின் ஏக்கத்தை அற்புதமாகப் படம் பிடிக்கும் கதை சுந்தர ராமசாமியின் சன்னல். தனிமையைப் போல் மனிதனுக்கு பைத்தியம் பிடிக்க வைப்பது வேறொன்றுமில்லை. தனிமையோடு நோயும் சேர்ந்துகொண்டால் கேட்கவே வேண்டியதில்லை. நிலைமை மிக மோசமானதாக இருக்கும். எனவே தனிமையைப் போக்க மனம் பல பிரயத்தனங்கள் செய்கிறது. கிடைக்கும் சூழ்நிலையில் தன் தனிமையை உணராமலிருக்க அது கற்றுக்கொள்கிறது. அது சன்னலாகவும் இருக்கலாம் அல்லது வேறு ஏதாவதொன்றாக இருக்கலாம். ஏதோ ஒன்றின் வழியாக அது தன் பயணத்தை மேற்கொள்வது முக்கியமானது. அப்படி அது பயணிக்கும் போதுதான் உடல் ஆரோக்கியம் பெறுவது சாத்தியமாகிறது.

கண்கள் காணும் காட்சிகளை, மனம் தன் தனிமையை நீக்கும் சாதனமாகப் பயன்படுத்திக் கொள்வதை, நுட்பமான சித்தரிப்புகள் மூலம் நம் மனதில் அழகாக பதித்திருக்கிறார் சுந்தர ராமசாமி. வாழைத்தோட்டம், மின்சாரக் கம்பிகள், காக்காய்கள், நிலா, ரோஜாக்கள், தும்பிகள், நட்சத்திரங்கள், மேகங்கள் என கண்ணில் படும் அனைத்தும் வெகு அழகான, நுணுக்கமான விவரிப்புகளுடன் கதை முழுதும் விரவிக்கிடக்கிறது. உதாரணத்திற்குப் பின்வரும் ரோஜாக்கள் பற்றிய வர்ணனையைப் பாருங்கள்:
காலையில் கண் விழித்ததும் ரோஜா மொக்குகளை எண்ணுவேன். மறுநாள் அவை மலர்ந்து தென்றலில் ஊசலாடும். மீண்டும் புது மொக்குகள். காலையில் ரோஜா, மழை பெய்தால் சொட்டச் சொட்டக் குளித்துவிட்டு, என்னைப் பார்த்துச் சிரிக்கும். சிரிப்பாய்ச் சிரிக்கும்.
கதையின் ஒவ்வொரு வாக்கியத்தையும் இழைத்து இழைத்து செதுக்கியிருக்கிறார். அவர் எழுதிய பெரும்பாலான கதைகள் அவ்வப்போதே பிரசுரமாயிருக்கின்றன. ஆனால் இந்தக் கதை மட்டும் நான்கைந்து ஆண்டுகளாக கையெழுத்துப் பிரதியாக இருந்ததாக அவர் சொல்கிறார்.


3. விகாசம்

சுந்தர ராமசாமி அவர்களின் ஆகச் சிறந்த கதை விகாசம். இக்கதை நம்முள் ஏற்படுத்தும் தாக்கம் உணர்வுப் பூர்வமானது. தன் இருப்பை ஸ்தரப்படுத்திக்கொள்ள சதா மனிதன் மேற்கொள்ளும் போராட்டத்தைத் துல்லியமாக படம்பிடிக்கும் கதை. அதை சுந்தர ராமசாமி சொல்லி முடித்ததும் நம் மனம் சபாஷ் என்று துள்ளுகிறது. ஒரு படைப்பாளியின் ஆளுமை வெளிப்படும் தருணங்கள் என்று அதைச் சொல்லலாம். கற்சிலையைச் செதுக்கும் சிற்பியின் நுணுக்கத்துடன் கதையைச் செதுக்கியிருக்கிறார் சுந்தர ராமசாமி. அவர் கதை சொல்லும் அழகில் நம் மனம் மயங்கிக்கிடக்கிறது. என்ன ஒரு இலாவகம், செய்நேர்த்தி என்று மனது வியந்து போகிறது. கதையைப் படித்து முடித்ததும் நம் மனம் கொள்ளும் விகாசம் பரவசமூட்டுவதாக இருக்கிறது.

கற்காலம் தொட்டு மனிதன் இன்று வளர்ந்துள்ள வளர்ச்சிக்கு ஆதாரமாக இருப்பது இந்த விகாசம்தான். எல்லா உயிரினங்களி்ன் ஆதார சுருதியும் இதுதான். இருந்தும் மனிதனிடம் அந்த அறிவு ஓங்கியிருக்கிறது. இல்லையேல் விலங்குகளிடமும்  கால மாற்றத்திடமும் சிக்கி அவன் இனம் முற்றாக அழிந்திருக்கும். தன் வாழ்க்கைப் பயணத்தில் எதிர்படும் தடைகளையே ஏணியாக்கும் யுக்தியை அவன் இந்த விகாசத்தின் மூலமே பெறுகிறான். இல்லையேல் இன்றிருக்கும் சிகர நிலையை அவன் அடைந்திருக்க முடியாது.

சமூகத்திற்கு மட்டுமல்ல தனி ஒரு மனிதனுக்கும் இந்த சூழ்நிலைக்குத் தக்கவாறு தகவமைத்துக்கொள்ளும் குணம் அவசியமாகிறது. குடும்பத்திலும் சரி, பணியாற்றும் இடத்திலும் சரி, எல்லாவிடத்தும் அவன் தன்னை ஸ்தாபித்துக்கொள்ளவேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. ஒவ்வொரு மனிதன் தலை மீதம் கண்ணுக்குத் தெரியாத கத்தி ஒன்று தொங்கிக் கொண்டிருக்கிறது. அது எப்போது வேண்டுமானாலும் தலை மீது விழலாம் என்ற பயம் அவனை எப்போதும் விழிப்புடன் வைத்திருக்கிறது. தன் வாய்ப்பை, சந்தர்ப்பத்தை வேறொருவன் தட்டிச்சென்றுவிடுவான் என்ற அச்சத்தில் எல்லோருமே ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த விகாசம் அவனுக்கு இல்லைனெனில் வாழ்க்கையில் ஜெயிக்க முடியாது.

இதை அற்புதமாக சொல்லும் இந்தக் கதை தமிழ் இலக்கியத்தில் என்றென்றும் நிலைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.


4. கோயில் காளையும் உழவு மாடும்

பாழடைந்த மாடன் கோவிலில் வசித்துவருகிறான் வைரவன் பண்டாரம். பிச்சை எடுத்து, சமையல் செய்து தன் ஜீவனத்தை நடத்திவருகிறான். அவன் சாப்பிடும் சாப்பாட்டில் அவனோடு தங்கியிருக்கும் நாய்க்கும் ஜீவனம் நடந்துவருகிறது. ஒரு நாள் வயதான கிழவன் ஒருவன் அங்கு வந்துசேர்கிறான். அன்றுமுதல் இருவரும் சாப்பாட்டைப் பகிர்ந்துகொள்கிறார்கள். பாவம் நாய்க்கான பங்கு கிழவனுக்கு போய்விடுகிறது. கிழவன் தன் கதையைப் பண்டாரத்துக்குச் சொல்கிறான்.

அவனும் அங்கேயே தங்கிவிடுகிறான்.

கிழவன் தினமும் காலையில் சென்று இரவில் திரும்பிக்கொண்டிருக்கிறான். பண்டாரம் கேட்டதற்கு, மாந்தோப்புக்கு தெற்கே தான் ஒரு வேலையை ஆரம்பித்திருக்கிறேன் என்று சொல்கிறான். என்ன என்று பண்டாரம் கேட்க, வழியில் பயணிக்கும் பலர் தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படுவதாகவும் அதற்காத் தான் ஒரு கிணறு வெட்ட ஆரம்பித்திருப்பதாகவும் சொல்கிறான். கிழவனின் பேச்சை பண்டாரம் விளையாட்டாய் எடுத்துக்கொள்கிறான்.

கதையைப் படித்துவரும் நமக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. ஆனால் தினமும் தான் செய்த வேலையை கிழவன் வந்து பண்டாரத்திடம் சொல்லும்போது, ஏதோ ஒரு தேவதை அவனுக்கு உதவுகிறதோ அல்லது கடவுளே கிழவன் வடிவத்தில் வந்திருக்கிறானோ என்று நமக்குத் தோன்றுகிறது. தினமும் தான் செய்த வேலையைப் பண்டாரத்திடம் சொல்வதும் அவன் அசிரத்தையாக இருப்பதும் நடக்கிறது. இப்படியே பல நாட்கள் கழிகிறது. ஓரு நாள் பண்டாரம் கிழவன் செய்த வேலையைப் பார்க்கவேண்டும் என்று செல்கிறான். அங்கே சென்றதும் அவன் கண்ட காட்சி அவனை வியப்பில் ஆழ்த்துகிறது. கிழவன் நிஜமாகவே கிணற்றை தோண்டியிருக்கிறான். கிணற்றில் தண்ணியும் இருக்கிறது. என்ன ஒரு அசுர உழைப்பு என்று பண்டாரம் வாயடைத்துப்போகிறான்.

அதன் பிறகு கிழவனுக்கு காய்ச்சல் வந்து படுத்துவிடுகிறான். தான் தோண்டிய கிணற்றிலிருந்து குடிக்க தண்ணீர் வேண்டும் என்கிறான். பண்டாரம் தண்ணீர் கொண்டு தருகிறான். அன்று இரவு கிழவன் கண்ணை மூடுகிறான். ஏதோ ஒரு மகத்தான சம்பவத்தை இழந்தது போன்ற உணர்வு பண்டாரத்தின் மனதைக் கசக்கிப் பிழிகிறது.

அன்று நாய்க்கு சாப்பாடு கிடைக்கிறது.

மனித வாழ்க்கை இரண்டு வகை. தனக்காக வாழ்வது ஒன்று. பிறருக்காக வாழ்வது இரண்டாவது. தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் காலம்வரை மனிதன் தனக்காக வாழ்வது தவறில்லை. ஆனால் அதன் பிறகும் பிறரைப்பற்றி அக்கரையில்லாமல் இருப்பது சுயநலமாகிறது. கோயில் காளை எப்போதும் வேலை செய்யாமல் தன் ஜீவனத்தை ஓட்டிவிடுகிறது. ஆனால் உழவு மாடு கடுமையாக உழைத்துத்தான் தன் ஜீவனத்தை நடத்தவேண்டியிருக்கிறது. வாழ்க்கையில் சிலர் கோயில் காளையாவும் வேறுசிலர் உழவு மாடாகவும் இருக்கிறார்கள்.

வாழக்கையில் ஒன்றை இழந்துதான் ஒன்றை பெறமுடிகிறது. கிழவன் வந்ததிலிருந்து நாய் தன் உணவை இழந்துவிடுகிறது. ஆனால் கிழவன் சென்றபின் நாய்க்கு மீண்டும் உணவு கிடைக்கிறது. கதையின் அந்த கடைசிவரி நாய்க்கு உணவு கிடைத்தது என்பதை மட்டும் சொல்லவில்லை. கிழவன் இல்லை என்ற ஆதங்கத்தையும் நமக்குள் ஏற்படுத்துகிறது.


5. பல்லக்குத் தூக்கிகள்
மனசு ரொம்பவும் சங்கடப்பட்டுக்கொண்டிருந்தது. ஓயாமல் ஒரு துக்கம். மனம் சதா அழுதுகொண்டிருக்கும். எதற்கு என்பது தெளிவாகவில்லை. ‘எல்லாம் முடிந்தது, அவ்வளவுதான்’ என்று மனசுக்குள் கசந்த முணுமுணுப்பு வெளிப்பட்டுக் கொண்டிருக்கும். இருந்தாலும் வெளிக்குச் சாதாரணமாக நடமாடிக்கொண்டிருந்தேன். நண்பன் சொன்ன மாதிரி இதில் ஒரு பயிற்சி இருந்தது. எவ்வளவு தான் தேற்றியும் தேறாமல், விஷம் தின்ற சடைநாய் மாதிரி மனம் புரண்டு புரண்டு துடித்தது.
என்ற கதைசொல்லியின் புலம்பலிலிருந்து கதை ஆரம்பிக்கிறது. அவனுக்கு ஏன் இத்தகைய துக்கம்? அதற்கான காரணம் என்ன? என்ற கேள்வியுடன் நம் வாசிப்பு தொடங்குகிறது. ஆனால் அதற்கான காரணத்தையோ அவனது கதையையோ கதையாசிரியர் சொல்லவில்லை. மாறாக பல்லக்கு தூக்கும் ஆட்களின் சிரமத்தைக் காட்டுகிறார். பல்லக்கில் கற்களை ஏற்றி கோயிலை நோக்கி நடக்கிறார்கள் அவர்கள். ஆனால் கோயில் கண்ணில் தென்படவில்லை. அது தென்படும் தருணத்திற்காக கதைசொல்லி காத்திருக்கிறான். கடைசியில் சிறு கோயில் தென்படுகிறது. அங்கே அவர்களுக்காக காத்திருந்த ஒருவன், பெரியவர் இன்று வரவில்லை என்றும், என்று வருவார் தெரியாது என்றும், வரும்வரை தினமும் விடாமல் பயிற்சி செய்யவேண்டுமென்றும், அப்போதுதான் பழக்கம் விட்டுப்போகாமல் இருக்கும் என்றும் சொல்லிச் செல்கிறான். பல்லக்குத் தூக்கிகள் மீண்டும் கல்லைத் தூக்கி பல்லக்கில் வைத்து சுமந்துகொண்டு செல்கிறார்கள்.

கதைசொல்லி தன் துயரத்தை நிவர்த்தி செய்யும் விதமாக அந்த மலைக்கு வந்துசேர்கிறான். அவன் துயரத்திற்கான காரணம் எதுவாகவும் இருக்கலாம். ஆனால் அது முக்கியமல்ல. எத்தகைய துயரமானாலும் அதற்கான தீர்வு ஒன்றுதான். அவனைப் பொருத்தவரை வாழ்க்கை அவனுக்கு அர்த்தமற்றதாகத் தெரிகிறது. தன் வாழ்க்கையின் குறிக்கோள் என்னவென்றோ அது நிறைவேறும் காலம் எப்போது என்றோ அவன் அறியாதிருக்கிறான். எனவே முயற்சி என்பது அலுப்பும் சலிப்பும் தருவதாகவே அவனுக்கு இருக்கிறது. வாழ்க்கையில் எல்லாமே திரும்பத் திரும்ப நிகழும் நிகழ்வுகள்தாம் என்று அவனுக்கு போரடித்துப்போகிறது. அவனது அந்த மனநிலைக்குக் காரணம், நிகழும் ஒவ்வொரு நிகழ்விலும் அவன் புதுமையைக் காணவில்லை. அல்லது வாழ்க்கையின் நிகழ்வுகள் அவனுக்கு பழக்கமாகவில்லை. எந்த ஒன்றும் நமக்குப் பழக்கமானால் அது நம் இயல்பாகிவிடும். அப்படி எல்லாமே இயல்பாகிவிடும்போது வாழ்க்கை எளிமையாகிறது.

இந்த இரண்டுமே கதைசொல்லிக்கு நிகழவில்லை. எனவேதான் அவன் துயருருகிறான். அவன் துயரத்திற்கு விடையாகத்தான் அவன் காணும் காட்சிகள். என்றோ வரப்போகும் பெரியவரை சுமந்துசெல்ல அவர்கள் பயிற்சி செய்கிறார்கள். நமக்கும் வாழ்க்கையில் நம் இலட்சியம் கண்ணுக்குத் தெரிவதில்லை. இருந்தும், வாழ்வதே அதை அடைவதற்கான பயிற்சிதான். அதை கதைசொல்லி செய்யவேண்டும் என்பதான தீர்வையே அவன் காணும் காட்சிகளின் வாயிலாக நமக்கு உணர்த்துகிறார் கதையாசிரியர்.

மனிதர்கள் அனைவருமே பல்லக்குத் தூக்கிகள்தான். அவரவர் பல்லக்கின் சுமையை அவரவர் சுமக்கத்தான் வேண்டும். அதிலிருந்து யாரும் தப்பிக்கமுடியாது. பழக்கம் விட்டுப்போகமலிருக்க தினமும் சுமக்கவேண்டிய கட்டாயம் எற்படுகிறது.

வாழக்கையில் ஏதோ ஒன்றைத் தேடிப்போகிறோம். ஆனால் நம் கண்ணில்படுவது வேறொன்றாக காண்கிறது. யோசிக்கும்போது கண்ணில் படுவது வேறாக இருப்பினும், கூர்ந்து நோக்கினால் அதில் நமக்கான விடையும் மறைந்திருக்கிறது என்பதை அறியலாம். நாம் தேடிப்போகும் ஒன்று அதே ரூபத்தில் கிடைக்கவேண்டும் என்ற கட்டாயம் ஒன்றும் இல்லை.


6. எங்கள் டீச்சர்

நுட்பமான உணர்வுகளை அற்புதமாக வெளிப்படுத்தும் கதை சுந்தர ராமசாமியின் எங்கள் டீச்சர். தொடக்கம் முதல் இறுதி வரை செய்நேர்த்தியுடன் கட்டமைக்கப்பட்ட கதை. இந்தக் கதை நம்முள் ஏற்படுத்தும் தாக்கம் அலாதியானது. கதையைப் படித்து முடித்ததும் எலிசெபத் டீச்சரின் மீது குவியும் சோகமயமான உணர்வு, நம் இதயத்தைப் பிழிவதாக அமைந்திருக்கிறது.

அந்த பள்ளிக்கு எலிசெபத் டீச்சர் புதிதாக வந்துசேர்கிறார். ஏற்கனவே அங்கே பணியாற்றும் பத்மாவதி டீச்சரும் அவரும் தோழியாகிறார்கள். இருவரும் சேர்ந்து பள்ளிக்கு வரும் காட்சிகள், குறிப்பாக அவர்கள் கால்கள் மட்டும் தெரியும் அடுத்த கணத்தில் ஒற்றை ரோஜாவுடன் அவர்களின் தலைகள் படியின் மேல்புறத்தில் முளைக்கும் காட்சிகள் மாணவ, மாணவியருக்கு அலுக்காத ஒரு காட்சியாக அமைந்தவிடுகிறது. எப்போதும் முதலிடத்தை வகித்து கணிதத்தில் முதல் பரிசு பெறுவது பத்மாவதி டீச்சரின் வகுப்புதான். இந்த வருடம் தன் வகுப்பு மாணவர்கள் அந்த பரிசைப் பெறவேண்டும் என்கிறார் எலிசெபத். மாணவர்களுக்கு அது சாத்தியமில்லாததாக தோன்றுகிறது. ஆனால் தனது அயராத உழைப்பினால் அறையாண்டுத் தேர்வில் அவர் வகுப்பைச் சேர்ந்த சரோஜினியை நூற்றுக்கு நூறு எடுத்து முதல் இடத்தைப் பிடிக்க வைக்கிறார்.

கேள்விகளை முன்கூட்டியே சொல்லித் தந்துவிட்டதாக பத்மாவதி டீச்சர் குற்றம் சொல்கிறார். இதனால் பெரிதும் மனமுடைந்து போகிறார் எலிசெபத். நெருக்கமாக இருந்த அவர்களிடையே பிளவு உண்டாகிறது. முழு ஆண்டுத் தேர்வு நடக்கிறது. கணக்குத் தேர்வின்போது, சரோஜினி கடைசி கணக்குக்கு தவறுதலாக விடை எழுதுகிறாள். அதைக் கவனித்த எலிசெபத் அதைச் சரிசெய்யுமாறு மறைமுகமாகக் கூறுகிறார். அதை பத்மாவதி பார்த்துவிடுகிறார். அதன் பிறகு எலிசெபத் அந்த பள்ளியைவிட்டே போய்விடுகிறார்.

அறையாண்டுத் தேர்வில் கேள்வித்தாள் தயாரித்தவர் எலிசெபத் டீச்சர்தான். எனவே, தான் கேள்விகளை முன்கூட்டியே சொல்லித் தந்துவிட்டதாக பத்மாவதி சொன்னபோது அவரால் அது பொய்யென்று நிரூபிக்க இயலவில்லை. முழு ஆண்டுத் தேர்வில் சரோஜினியை நூற்றுக்கு நூறு வாங்கச் செய்வதன் மூலமே தான் குற்றமற்றவள் என்பதை நிரூபிக்க முடியும் என்று கருதுகிறார் எலிசெபத். ஆனால் சரோஜினி கடைசிக் கணக்கில் தவறு செய்துவிடுகிறாள். எனவே ஏற்கனவே தன் மீது சுமத்தப்பட்ட களங்கத்தைத் துடைக்க முடியாது போய்விடும் என்று, அதைச் சரிசெய்யத் தூண்டுகிறார். ஆனால் முடிவு வேறுவிதமாக ஆகிறது.

தான் குற்றமே செய்யாத போதும் தன் மீது சுமத்தப்படும் இல்லாத குற்றத்தை மனித மனம் அவ்வளவு எளிதாக விடுவதில்லை. அதை இல்லை என்று நிரூபிக்க ஆசைப்படுகிறது. ஆனால் அது இயலாத போது வேறோர் குற்றத்தைச் செய்து, முன்னர் செய்த தவற்றை சரிசெய்ய விழைகிறது. தற்போது செய்வதும் குற்றம்தான் என்பதை மனம் மறந்துவிடுகிறது. மனித மனதின் இந்த விசித்திரமான அமைப்பை இந்தக் கதையில் அற்புதமாகச் சொல்லியுள்ளார் சுந்தர ராமசாமி.

தன்னை நிரூபிக்க முற்பட்டு, முடியாமல், இப்போது முன்னர் செய்யாத குற்றமும் செய்த குற்றமாகவே ஆகிறது என்கிறபோது எலிசெபத் டீச்சரின் மீது நம் மனம் கொள்ளும் அனுதாபம் அபரிமிதமானது.

Related Posts Plugin for WordPress, Blogger...