ஜெயமோகனின் வண்ணக்கடல்-1: தீராப் பகை

26.02.15 வியாழன் காலை நடைப் பயிற்சி முடித்துவிட்டு வந்தவன், திடீர் உத்வேகத்திற்கு ஆட்பட்டு ஜெயமோகனின் வண்ணக்கடல் வாசிக்க ஆரம்பித்தேன். மழைப்பாடல் முடித்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்நாவலை வாசிப்பது குறித்து என்னை நானே கடிந்துகொண்டவனாக நாவலுக்குள் மூழ்கத் தொடங்கினேன். இளநாகன் எனும் பாணன் வாயிலாக நாவல் தொடங்கி நகரவும், அலையும் மனத்தினனாக பக்கங்களை வாசித்தேன். குந்தி தன் மைந்தர்கள் ஐவருடன் அஸ்தினபுரிக்குத் திரும்பும் காட்சியும், அவர்களின் பாதை பற்றிய குறிப்புகளும், அதற்கு ஜெயமோகன் கையாண்ட கவித்துவமான வாக்கியங்களும் என்னை நிலைநிறுத்தி நாவலுக்குள், பாத்திரங்களின் மனதுக்குள், பிரவேசிக்கச் செய்தன.

இயற்கையை நாம் எவ்வாறு அறிகிறோமோ அவ்வாறே இயற்கையும் நம்மை அறிகிறது; ரசிக்கிறது. நம் இயல்புக்கு ஏற்பவே நாம் பிற உயிர்களை அறிகிறோம். அவ்வாறே அந்த உயிர்களும் நம்மை அறிகின்றன என்ற கருத்து என்னைச் சிலிர்க்க வைத்தது. அதையே அவர்களின் பாதையாக ஜெயமோகன் விவரித்திருப்பது அழகான கற்பனை! அது அவர்களின் பாதைகள் மட்டுமல்ல அவர்களின் இயல்பும் கூட. அந்த இயல்பின் அடித்தளத்திலேதான் அந்தக் கதாபாத்திரங்கள் உருக்கொண்டு கதையை நடத்தப்போகிறார்கள் என்ற குறிப்பு அங்கிருந்து வெளிப்படுகிறது. சகாதேவனுக்கு பூச்சிகளும், நகுலனுக்கு மலர்களும், அர்ச்சுனனுக்கு பறவைகளும், பீமனுக்கு மிருகங்களும், தருமனனுக்கு ஒலிகளும் தத்தம் குண இயல்புகளாகின்றன. அதன் வழியாகவே அவர்கள் தங்களுக்கான பாதையைக் கண்டடைகிறார்கள். ஆக, “தனி மனிதன் முடிவுகள் வழியாக, காலம் தன் முடிவை நிறைவேற்றுகிறது” என்ற கருத்து முத்தாய்ப்பாக வெளிப்படும் போது நாம் மிகப்பெரிய தரிசனத்தை அடைகிறோம். அங்கிருந்து, காலம் தன் முடிவை நிறைவேற்ற தனி மனிதர்களைக் குறிப்பிட்ட முடிவுகளை எடுக்க வைக்கிறது என்ற கருத்தியலுக்கு நகரும் போது மனம் கொள்ளும் மனவெழுச்சி அலாதியானது; அர்த்தங்கள் நிரம்பியது.

அதைத் தொடர்ந்து வரும் கார்கோடகன் என்ற நாகத்தின் பாத்திரம் குந்தி துரியோதனன் இருவரின் அகம் எனலாம். இருவரும் தத்தம் மனம் விழைவதையே செய்கிறார்கள் என்பதையே கார்கோடகன் பாத்திரம் விளக்குகிறது. குந்தி கர்ணனை அரியணையில் ஏற்க மறுப்பதும், துரியோதனன் பீமன் மீது கொள்ளும் வஞ்சினமும் அவர்களின் ஆழ்மனத்தின் வெளிப்பாடாக, கார்கோடகன் வாயிலாக, உணர்த்தப் படுகிறது.

பிதாமகர் பீஷ்மர் பாண்டவர்களையும், கௌரவர்களையும் சந்திக்கும் பகுதியை ஜெயமோகன் சித்தரித்த விதம் கவனிக்கத்தக்கது. அந்நிகழ்வை உணர்ச்சிகரமான சந்திப்பாக ஆசிரியர் காட்டவில்லை. அவர்களைக் கண்டதும் அவரிடம் எத்தகைய எண்ணங்களும் சிந்தனைகளும் எழாமல் வெறுமையே எஞ்சுகிறது. அந்த வெறுமை உணர்வு அவரிடம் மௌனமாகவே வெளிப்படுகிறது. சம்பிரதாயமான வெற்று வாழ்த்தாகவே தன் உணர்வுகளைக் காட்டுகிறார் பீஷ்மர். சலிப்பையும் மீறி அவரிடம் குடிகொண்டிருக்கும் மௌனத்தில் நாம் பலவும் உணரும்படி செய்திருக்கிறார் ஜெயமோகன்.

பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் கிருபர் ஆயதங்களை நிர்ணயிக்கும் பகுதி சுவாரஸ்யத்துடன் நுட்பமான சித்தரிப்புகள் கொண்ட பகுதி. சண்டையில் வெளிப்படும் துரியோதனன், பீமனின் மனம் உடல் இரண்டின் இயல்புகளை விவரிக்கும் சித்தரிப்பு அழகானதும் ரசிக்கத் தக்கதுமாகும். துரியோதனனும், பீமனும் மோதிக்கொள்ளும் போது விதுரனின் பார்வையில் வெளிப்டும் கெஞ்சலும், பீஷ்மரின் மௌனமும், திருதிராஷ்டிரனின் மகிழ்ச்சியும், சௌனகரின் திகைப்பும், கிருபரின் வியப்பும் ஆழ்ந்த அர்த்தங்கள் கொண்டவை. அவற்றை அந்தந்தப் பாத்திரங்களோடு பாத்திரங்களாக ஒன்றிப் பயணிக்கும் போதே நம்மால் உணரமுடியும்.

கானாடல் பகுதி, ஒரு சிறு நிகழ்வில் மனித மனத்தில் உறைந்திருக்கும் அகங்காரம் வெளிப்படுவதை சித்தரிக்கிறது. “பகை என்னும் பண்பி லதனை ஒருவன் நகையேயும் வேண்டற்பாற்று அன்று” என்கிறது குறள். பகை உணர்வு என்பது பண்புக்கு மாறுபாடானது என்பதால் அதனை வேடிக்கை விளையாட்டாகக்கூட ஒருவன் கொள்ளக்கூடாது என்கிறார் வள்ளுவர். ஆனால் இங்கோ விளையாட்டு வினையாகிறது. மனதின் அகம் கொள்ளும் மமதை அகங்காரமாகிறது. அகம் தீண்டப்படும் போது அகங்காரம் பேருரு கொள்கிறது. எனவே ஆணவத்தின் முன் ஒருவனது பண்பு திரிந்துவிடுகிறது. அன்னை கரடியிடமிருந்து துரியோதனனைக் காப்பாற்றும் பீமன் செய்கையால், துரியோதனின் அகம் சீண்டப்படுகிறது. அதுவரை இணைபிரியாதிருந்த அவர்களுக்குள் அது பெரும் பிளவை ஏற்படுத்துகிறது. துரியோதனனிடம் அதன் பிறகு நிகழும் மாற்றத்தை சித்தரிக்கும் பகுதிகள் மிகச் சிறப்பாக நாவலில் வெளிப்பட்டிருக்கிறது. அந்த விரிசலை அவர்கள் இருவரையும் சுற்றி இருப்பவர்கள் அதிகப்படுத்துகிறார்கள்; நிரந்தரமாக்க விழைகிறார்கள். எனவே இருவருக்கிடையான விரிசல் பூதாகரமாகிறது.

நேரடிக் காட்சிகள் வழியாகவும், இளநாகன் பயணிக்கும் நகரங்கள் தோறும் அவன் பிறர் வாயிலாக கேட்பதன் மூலமாகவும் நாவலின் கதை சொல்லப்படுகிறது. எனவே நாவலில் ஏற்படும் இடைவெளியில் நாம் நம் யூகங்களால் பலவற்றை நிரப்பிக்கொள்ள முடிகிறது. மேலும் அவன் செல்லும் ஊர்களின் சித்தரிப்புகள், விவரணைகள் முதலியன நாவல் நிகழும் காலத்திய நாட்டின் நிலப்பரப்பைக் குறித்து ஒர் வரைபடைத்தை மனதில் வரைந்துகொள்ள ஏதுவாகிறது. அத்தோடு மட்டுமில்லாது அப்போது நாட்டில் நிலவிய ஞான மரபுகளையும் அவற்றை கைக்கொள்ளும் மனிதர்களின் வாழ்க்கை முறையையும் விரிவாக அறிந்துகொள்ள முடிகிறது. ஜெயமோகன் காட்டும் இப்பகுதிகள் ஆழமானவை. அவற்றை ஏற்கனவே அறிந்தவர்கள் சுவாரஸ்யத்தோடு வாசிக்க முடியும். மற்றவர்கள் அந்தப் பகுதிகளை தாவிச்சென்று விடுவார்கள் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. எனவே அந்தப் பகுதிகள் இல்லாமலேயே நாவலைப் படைத்திருக்க முடியாதா என்ற வினா இயல்பாகவே படிப்போர் மனதில் எழுகிறது.

காலகம் வனத்தில் துரியோதனனுக்கு ஏற்பட்ட அனுபவத்திற்கு நிகரான அனுபவம் பீமனுக்கு, துச்சாதனன் கொடுத்த விஷத்தால், நாகலோகம் சென்றதும் கிட்டுகிறது. அங்கே அவன் வாசுகி தரும் வலிமை நிறைந்த விஷத்தை தன் தாய் குந்தியின் அனுமதி பெற்று பருகுகிறான். அதன் பிறகு பீமன் கனவில் வரும் பாண்டு, “நீ என்னிடமல்லவா அனுமதி கேட்டிருக்கவேண்டும்?” என்கிறான். அதைக் கேட்கும் பீமன் மட்டுமல்ல நாமும் திகைத்து நின்றுவிடுகிறோம். பாண்டுவின் அந்தக் கேள்வியால் நம் மனம் கொள்ளும் பாய்ச்சல் அசாதாரணமானது; எண்ணற்ற வினாக்களை நம்மில் எழுப்பக்கூடியது. எப்படி இப்படி எழுதத் தோன்றியது என்றெண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை. ஒரு படைப்பாளி படைப்பாகவே மாறினாலன்றி இவ்வாறு படைப்பில் நிகழ்வது சாத்தியமில்லை.

நாளுக்கு நாள் துரியோதனனுக்கும் பீமனுக்குமிடையே பகை வளர, பீமன் துரியயோதனனாகவும், துரியோதனன் பீமனாகவும் மாறுகிறார்கள் எனக் காட்டுகிறார் ஜெயமோகன். பகைவன் என்பவன் அந்நியனல்ல அவன் நம்மின் ஒரு பகுதியே என்பது இதனால்தான். “பகைவனுக்கு அருள்வாய்” என்னும் கூற்றால் பகைவன் என்பவன் வேறு யாருமல்ல நம்மின் ஒரு பகுதிதான் என்பதாலேயே அருள முடிகிறது என்பதையும் விளங்கிக் கொள்ளமுடிகிறது. இருவர் பகை கொள்ளும்போது அவர்களுக்குள்ளே குடியேறும் நாகமாக ஐயம், தர்க்கம், அச்சம், ஆணவம், தனிமை, வீரம், கூர்மதி, நினைவாற்றல் மற்றும் ஒருமையுள்ள சித்தம் என்ற ஒன்பது குணங்களைக் குறிப்பிடும் பகுதி சிந்திக்கத்தக்கது. இந்த ஒன்பதும் பின்னிப் பிணைந்து சதா இயங்குவதால் பகை எப்போதும் புகைந்துகொண்டே இருக்கிறது.

துரியோதனன் பீமனுக்கு இடையில் மட்டுமின்றி, நாவல் முழுதும் எழும் கதாபாத்திரங்கள் அனைவரிடமும் ஏதோ ஒரு வகையில் பிறர் மீது, பிறர் குலத்தின் மீது, பிறர் இனத்தின் மீது பகை இருந்துகொண்டே இருக்கிறது. தலைமுறை தலைமுறையாக அது தொடர்ந்தும் வருகிறது. காலம் இவ்வாறாக மனிதர்களிடையே பகையையும் வன்மத்தையும் பெருகச் செய்வது ஏன்? இவ்வாறு செய்வதால் இப்பிரபஞ்சம் தன் மீதான பாரத்தை சதா குறைத்தபடியே இருக்கிறதா? அதன் நோக்கம் இது மட்டும்தானா? அல்லது வேறு நோக்கங்கள் இருக்கின்றனவா? ஒவ்வொரு உயிரும் தன்னைத் தக்கவைத்துக் கொள்ள மேற்கொள்ளும் போராட்டமா இது? போன்ற எண்ணற்ற கேள்விகள் வாசிப்பில் எழுகிறது. குறிப்பாக பிருகுகளுக்கும், ஹேகயர்களுக்கும் தலைமுறை தலைமுறையாக நடக்கும் போராட்டம் நம் சமநிலையைக் குலைக்கிறது.

நாம் கர்ணனையும் துரியோதனனையும் காணும் விழைவாக நாவலில் பயணிக்கும் போது, “புல்லை அறிக. புல்லை அறிந்தவன் இப்புவியை அறிந்தவனாகிறான். ஐம்பெரும்பருக்களையும் அறிந்தவனாகிறான். ஆக்கமும் அழிவும் நிகழும் நெறியை அறிந்தவனாகிறான். புல்லைக் கொண்டு அவன் பிரம்மத்தையும் அறியலாகும்” எனும் பரத்வாஜ முனிவரின் சொல்லுக்கேற்ப, தர்ப்பையை வில்லாக ஏந்திய துரோணரின் கதாபாத்திரம் வருகிறது.

(தொடரும்...)
Related Posts Plugin for WordPress, Blogger...