திரும்ப வந்துட்டேன்!

வெகு நாட்களுக்குப் பிறகு நான் தளத்திற்கு திரும்ப வந்ததும், ஜெயமோகன் தளத்தின் பல இணைப்புகள் செயல்படவில்லை என்பதை அறிந்தபோது எனக்கு ஒன்றும் புரியவில்லை. எப்போதும் எதையும் முடிந்தவரை செய்நேர்த்தியுடன் செய்ய வேண்டும் என நினைப்பவன் நான். இந்தக் குழப்பம் எங்கே எப்போது நேர்ந்தது என்பது பிடிபடவில்லை.

நான் கணிணியில் நிபுணத்துவம் மிக்கவன் அல்ல. நான் அறிந்தவை அனைத்தும்  என்னுடைய சுயகற்றலே. எனவே அவற்றைக் கண்டுபிடித்துச் சரிசெய்ய இப்போதே முடிந்தது. இருந்தும் தி.ஜானகிராமன் குறித்த பல பதிவுகள் இணைப்பை இழந்துவிட்டன. எனவேதான் அவற்றை மீண்டும் வெளியிட்டேன்.

Read more ...

முக்கிய நாவல்கள் பட்டியல்

என்னை பாதித்த, அவசியம் படிக்கவேண்டியவை என நான் கருதும் சில நாவல்களை இங்கே பட்டியலிட்டுள்ளேன். தமிழ் நாவல்களை மட்டுமின்றி சில மொழிபெயர்ப்பு நாவல்களையும் சேர்த்திருக்கிறேன். 

தமிழ் நாவல்கள்: 

1. மோகமுள்-தி.ஜானகிராமன் 
2. ஜே.ஜே.சில குறிப்புகள்-சுந்தர ராமசாமி 
3. புயலிலே ஒரு தோணி-ப.சிங்காரம் 
4. பொய்த்தேவு-க.நா.சு 
5. இடைவெளி-எஸ்.சம்பத் 
6. ஒரு புளியமரத்தின் கதை-சுந்தர ராமசாமி 
7. அம்மா வந்தாள்-தி.ஜானகிராமன் 
8. நாகம்மாள்-ஆர்.சண்முகசுந்தரம் 
9. கிருஷ்ணப் பருந்து-ஆ.மாதவன் 
10. நினைவுப் பாதை-நகுலன் 
11. தண்ணீர்-அசோகமித்திரன் 
12. பள்ளிகொண்டபுரம்-நீல.பத்மநாபன் 
13. கடல்புரத்தில்-வண்ணநிலவன் 
14. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்-ஜெயகாந்தன் 
15. இதயநாதம்-ந.சிதம்பர சுப்ரமணியம் 
16. தலைமுறைகள்-நீல பத்மநாபன் 
17. செம்பருத்தி-தி.ஜானகிராமன் 
18. புதியதோர் உலகம்-கோவிந்தன் (ஈழம்) 
19. வேள்வித் தீ-எம்.வி.வெங்கட்ராம் 
20. நித்ய கன்னி- எம்.வி.வெங்கட்ராம் 
21. அசடு-காசியபன் 
22. புத்தம் வீடு-ஹெப்சிபா ஜேசுதாசன் 
23. ஒரு நாள்-க.நா.சு 
24. சட்டி சுட்டது-ஆர்.சண்முக சுந்தரம் 
25. நாளை மற்றுமொரு நாளே-ஜி.நாகராஜன் 
26. அபிதா-லா.ச.ராமாமிருதம் 
27. கரைந்த நிழல்கள்-அசோகமித்திரன் 
28. வாடி வாசல்-சி.சு.செல்லப்பா 
29. சாயாவனம்-சா.கந்தசாமி 
30. கம்பா நதி-வண்ணநிலவன் 
31. பிறகு-பூமணி 
32. நிழல்கள்-நகுலன் 
33. தலைகீழ் விகிதங்கள்-நாஞ்சில் நாடன் 
34. பசித்த மானுடம்-கரிச்சான் குஞ்சு 
35. ஜீவனாம்சம்-சி.சு.செல்லப்பா 
36. புனலும் மணலும்-ஆ.மாதவன் 
37. சடங்கு-எஸ்.பொன்னுதுரை (ஈழம்) 
38. கடலுக்கு அப்பால்-ப.சிங்காரம் 
39. தாகம்-கு.சின்னப்ப பாரதி 
40. 18வது அட்சக்கோடு-அசோகமித்திரன் 
41. ஒற்றன்-அசோகமித்திரன் 
42. காதுகள்-எம்.வி.வெங்கட்ராம் 
43. சர்மாவின் உயில்-க.நா.சு 
44. சாயத்திரை-சுப்ரபாரதிமணியன் 
45. மரப்பசு-தி.ஜானகிராமன் 
46. ஒரு கடலோர கிராமத்தின் கதை-தோ. மு. மீரான் 
47. சாய்வு நாற்காலி-தோப்பில் முகம்மது மீரான் 
48. சில நேரங்களில் சில மனிதர்கள்-ஜெயகாந்தன் 
49. பாரிஸூக்கு போ-ஜெயகாந்தன் 
50. அஞ்சலை-கண்மணி குணசேகரன் 
51. விஷ்ணுபுரம்-ஜெயமோகன் 
52. காடு-ஜெயமோகன் 
53. ரப்பர்-ஜெயமோகன் 
54. வெள்ளையானை-ஜெயமோகன் 
55. விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்-சி.மோகன் 
56. காகித மலர்கள்-ஆதவன் 
57. என் பெயர் ராமசேஷன்-ஆதவன் 
58. குழந்தைகள் பெண்கள் ஆண்கள்-சுந்தர ராமசாமி 
59. அசுரகணம்-க.நா.சு. 
60. இன்று-அசோகமித்திரன் 
61. மானசரோவர்-அசோகமித்திரன் 
62. யாமம்-எஸ்.ராமகிருஷ்ணன் 
63. நெடுங்குருதி-எஸ்.ராமகிருஷ்ணன் 
64. நிமித்தம்-எஸ்.ராமகிருஷ்ணன் 
65. சஞ்சாரம்-எஸ்.ராமகிருஷ்ணன் 
66. உறுபசி-எஸ்.ராமகிருஷ்ணன் 
67. துயில்-எஸ்.ராமகிருஷ்ணன் 
68. உப பாண்டவம்-எஸ்.ராமகிருஷ்ணன் 
69. பின்தொடரும் நிழலின் குரல்-ஜெயமோகன் 
70. கொற்கை-ஜோ.டி.குரூஸ்
71. ஆழிசூழ் உலகு-ஜோ.டி.குரூஸ் 

மொழிபெயர்ப்பு நாவல்கள்: 

1. முதல் மனிதன்-ஆல்பர் காம்யு 
2. 1984-ஜார்ஜ் ஆர்வெல் 
3. கசாக்கின் இதிகாசம்-ஓ.வி.விஜயன் 
4. பாத்துமாவின் ஆடு-பஷீர் 
5. ரஸவாதி-பௌலோ கொய்லோ 
6. அஞ்சல் நிலையம்-சார்லஸ் புகோவெஸ்கி 
7. சிதைவுகள்-சினுவ அச்சிபி 
8. பாடும் பறவையின் மௌனம்-ஹாப்பர் லீ 
9. புலப்படாத நகரங்கள்-இட்டாலோ கால்வினோ 
10. உருமாற்றம்-ஃபிரன்ஸ் காஃப்கா 
11. வெண்ணிற இரவுகள்-பியோதர் தஸ்தாயெவ்ஸ்கி 
12. அந்நியன்-ஆல்பர் காம்யு 
13. ஓநாய் குலச்சின்னம்- ஜியாங் ரோங் 
14. கரமாஸவ் சகோதரர்கள்-பியோதா் தஸ்தாயெவ்ஸ்கி 
15. குறற்றமும் தண்டணையும்- தஸ்தாவெஸ்கி 
16. போரும் அமைதியும்-லியோ டால்ஸ்டாய் 
17. அன்னா கரீனினா-லியோ டால்ஸ்டாய் 
18. ஒரு மரணதண்டனைக் கைதியின் இறுதி நாள்-விக்தர் ஹ்யுகோ 
19. கிழவனும் கடலும்-எர்னஸ்ட் ஹெமிங்வே

Read more ...

சுந்தர காண்டம்

சுந்தர காண்டம் சுகம் தரும் காண்டம் என்று சொல்வார்கள். மனம் உடல் இரண்டாலும் உயிர்கள் அனுபவிக்கும் துன்பத்தைச் சுந்தர காண்டம் நீக்கும் என்பது நம்பிக்கை.

வியாசரின் மகாபாரதத்தை எழுதிக் கொண்டிருக்கும் வேளையில் சுந்தர காண்டம் படிக்க வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டது. யாரை வாசிப்பது? வால்மீகியா அல்லது கம்பனா? சற்றுதூரம் வரை இருவரையும் வாசித்தேன். பிறகு வால்மீகியைத் தேர்ந்தேன். படிப்பதை விடவும் எழுதுவது மேலானது என்று தோன்றவே எழுத ஆரம்பித்தேன். இது முழுக்க முழுக்க எனக்காகவே எழுதியது. இது பிறருக்கும் பயன்படும் என்று தோன்ற புத்தக வடிவம் பெற்றிருக்கிறது.

ஒவ்வொரு செயலைத் தொடங்கும் போதும், செயலாற்றும் போதும் நமது உள்ளத்தில் ஏற்படும் கவலைகளையும், மனதின் ஊசலாட்டத்தையும் அனுமன் வாயிலாகப் படம் பிடித்துள்ளார் வால்மீகி. சீதையைத் தேடிச் செல்லும் அனுமன் உள்ளத்தில் ஏற்படும் அவநம்பிக்கை, நம்பிக்கை, துணிவு, வீரம், மனச்சோர்வு, உற்சாகம் இவற்றினால் மாறி மாறி எழும் மன உணர்வுகளை எடுத்துச் சொல்வதன் மூலம் குழப்பத்தை நீக்கி நமது உள்ளத்தில் நிலைத்த நம்பிக்கையை விதைக்கிறார் வால்மீகி. எனவே ஒரு செயலைச் செய்து முடிக்கும் மனோதிடத்தை அனுமன் வாயிலாக நாம் பெற்றுக்கொள்கிறோம்.

சுந்தர காண்டம் படிக்கும்போது அந்த இடத்திற்கே வந்து அனுமன் நேரடியாக அதைக் கேட்பதாகச் சொல்வதுண்டு. நான் அவ்வாறு கருதவில்லை. மாறாக சாதாரண மனிதர்களாகிய நாமே அனுமனாகி வளர்ந்து, ஒரு செயலைத் திறம்படச் செய்து முடிக்கும் திறனைப் பெற்று விடுகிறோம் என்பதே அதன் முழுமையான பொருள்.

இந்நூலை வாசிக்கும் அனைவரும் அனுமனின் ஆசியைக் குறைவின்றி பெற்றுச் சுகமாக வாழப் பிரார்த்திக்கிறேன்.

அன்புடன்,
கேசவமணி

30 மே 2018
திருப்பூர்

(நற்றிணை பதிப்பகத்தின் வாயிலாக வெளிவரும் “சுந்தர காண்டம்” நூலின் முன்னுரை).

Read more ...

ஒரு தேசாந்திரியின் சஞ்சாரம்எஸ்.ராமகிருஷ்ணன் எழுத்துக்குள் நான் நுழைந்தது அவரது உறுபசி நாவலின் வழியாகத்தான். அந்நாவல் என்னுள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி நீண்ட நாட்கள் என் நினைவிலிருந்து நீங்காதிருந்தது. அதன் பிறகு என் மனம் சர்க்கரைக் கட்டியைச் சுற்றும் எறும்பாய் அவர் எழுத்துக்களைச் சுற்றிச் சுற்றி வந்தது.

2012-ல் முதன் முதலாக இணையத்தில் எழுத ஆரம்பித்த பிறகு அவர் நாவல்களைப் பற்றித் தொடர்ச்சியாக எழுதினேன். யாமம், நெடுங்குருதி முதலிய நாவல்களின் விமர்சனத்தை அவர் வெகுவாகப் பாராட்டியதோடு அவரது தளத்திலும் பகிர்ந்தார். நிமித்தம் நாவலுக்கான விமர்சனத்தைப் ‘புத்தகம் பேசுகிறது’ இதழில் வெளிவரச் செய்து, எனது எழுத்தை அச்சாக்கம் பெற்ற முதல் எழுத்தாக்கினார்.

குழந்தைகளுக்கான எழுத்து முதல், வரலாறு, பயணம், சினிமா, இலக்கியம் என விரியும் அவரது பன்முக எழுத்தாற்றல் அபாரமானது; வியக்கவைப்பது. அவரது அனைத்து எழுத்துக்களும் வரலாற்றுப் பார்வையைப் பின்புலமாகக் கொண்டிருப்பது ஒரு முக்கியமான அம்சம். ஒரு தேசாந்திரியாகவும், இலக்கற்ற பயணியாகவும் அவர் மேற்கொள்ளும் சஞ்சாரங்களிலிருந்தே அவருடைய படைப்புகள் பிறக்கின்றன. எனவேதான் அவர், “சங்க காலத்தில் பாணர்கள், கூத்தர்கள் ஊர் ஊராகச் சென்று பாடி இசைத்து கவிதை சொன்ன மரபு நமக்கு இருக்கிறது. நான் நவீன காலத்து பாணனாக இருக்கிறேன். நான் ஊர் ஊராகப் போய் மக்களைச் சந்தித்து பேசிப் பழகி அவர்களின் கதைகளைச் சொல்லக்கூடிய பாணன் தான்” என்கிறார். 

அவருடைய கதைகளில் அதீதப் புனைவுகள் அதிகம் இருப்பதாகச் சொல்வதுண்டு. அந்த அதீத புனைவு நம்மை வெகு தூரம் பறக்க வைக்கிறது எனினும் வரலாறு என்ற பின்புலம் நம்மை மீண்டும் கீழ் நோக்கி இறக்கி விடுகிறது. பகவான் ராமகிருஷ்ணர் எப்போதும் இனிப்பின் மீது அதீத பற்று கொண்டவராக இருந்தார். அவர் தெரிந்தே இனிப்பின் மீது ஆசை கொண்டார். அவர் பல நாட்கள் தியானத்தில் ஆழ்ந்து விடுவார் என்றபோதும் இனிப்பின் மீது கொண்ட பற்று அவரை தியானத்திலிருந்து விடுவித்து இந்த உலகை நோக்கித் திருப்பி விட்டுவிடும். அதேபோலத்தான் ராமகிருஷ்ணன் நாவல்களில் காணக்கிடைக்கும் வரலாற்று அம்சங்கள். சுருங்கச் சொன்னால் வரலாறு, கற்பனை, புனைவு என்ற மூன்றின் ஒருங்கிணைந்த லயம் தான் அவருடைய படைப்புகள். 

எண்ணற்ற தலைப்புகளில் வெளியாகியுள்ள பல்வேறு வகையான அவருடைய நூல்களின் பட்டியல்களைப் பார்த்தால் மலைப்புத் தட்டும். எத்தனை எத்தனை நூல்களை எழுதி இருக்கிறார் என்ற வியப்பே மேலோங்கும். மேலும் நூல்களுக்கு அவர் வைக்கும் தலைப்புகள் அலாதியானவை; கவித்துவம் மிக்கவை என்பது கூடுதல் சிறப்பு. 

அவருக்கு அவருடைய சஞ்சாரம் நாவலுக்கும் இந்த வருடத்திற்கான சாகித்திய அகாதமி விருது கிடைத்திருப்பதை விடவும், அது முன்னரே அவருடைய வேறு படைப்புகளுக்குக் கிடைத்திருக்க வேண்டும் என்பதுதான் உண்மை. 

2018-ல் கோவை புத்தகத் திருவிழாவில் கொடீசியா புத்தகக் கண்காட்சியினர் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கியதும், 2018-க்கான சாகித்திய அகாதமி விருது கிடைத்திருப்பதும், ஒரு வாசகனாக எனக்கு மகிழ்வைத் தரும் தருணங்கள். 

நூலின் இறுதியில் எஸ்.ராமகிருஷ்ணனின் சிறந்த புத்தகங்கள், சிறந்த நாவல்கள், சிறந்த சிறுகதைகள் எனும் மூன்று பட்டியல்களை இணைத்திருக்கிறேன். அவை வாசகர்களுக்குப் பெரிதும் பயன்படும் என்று நம்புகிறேன். 

அன்புடன் 
கேசவமணி 

03.01.2019 
திருப்பூர்.

(முன்னர் வெளியான “எஸ்.ராமகிருஷ்ணன் நாவல்கள்” என்ற மின்னூல், தற்போது “ஒரு தேசாந்திரியின் சஞ்சாரம்” என்ற தலைப்பில் புத்தகமாக வெளியாகிறது).

Read more ...

கடந்தவை...

அம்மாவின் இழப்பு, மகளின் திருமணம் என்ற இரு பெரும் நிகழ்வுகள் கடந்த காலத்தில் நடந்து முடிந்திருக்கின்றன. கடந்த காலங்களில் வாசிப்பு என்னைவிட்டு வெகுதூரம் விலகிச் சென்றுவிட, இனி வாசிக்க முடியுமா? என்ற கேள்வி என்னுள் நாளும் எழுந்தபடி இருக்கிறது. வாசிக்க முடியாமையால் எழுத்தும் தடைபட்டு விட்டது. நீண்ட நாட்களுக்குப் பிறகு எழுதும் எழுத்து இதுவே. இதைக்கூட மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என்பதற்கான தூண்டுதலாகக் கருதியே எழுதிச் செல்கிறேன்.

வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் இத்தகைய தேக்கம் நேர்வது இயல்புதான் என்றாலும், நீண்ட காலத் தேக்கம் என்பது பழக்கத்தை முற்றாக மாற்றிவிடும். எனவே மீண்டும் திரும்பிச் செல்ல பிரம்மப் பிரயத்தனம் செய்யவேண்டும். அத்தகைய ஒரு முயற்சியை மேற்கொள்ளும் முகமாகவே இணையப் பக்கத்தின் தோற்றத்தைக் கடந்த சில தினங்களில் மாற்றி அமைத்தேன். புதுமை எப்போதும் புத்துணர்வைத் தருவதோடு நாம் இழந்ததை மீட்டெடுக்கவும் வழி வகை செய்யும் என்ற நம்பிக்கையோடு ஆரம்பித்திருக்கிறேன்.

இப்போது எதிலிருந்து தொடங்குவது என்ற கேள்வி முக்கியமானது. எடுத்தவுடன் பெரியதாக ஒன்றை ஆரம்பித்துச் சறுக்குவதை விடவும் சிறியதிலிருந்து தொடங்குவதே உத்தமம். ஆனால் எது பெரிது எது சிறிது என்பதை எப்படி முடிவு செய்வது?

பெரிது பெரிது புவனம் பெரிது
புவனமோ நான்முகன் படைப்பு
நான்முகன் கரியமால் உந்தியில் வந்தோன்
கரியமால் அலைகடல் துயின்றோன்
அலைகடல் குறுமுனி அங்கையில் அடக்கம்
குறுமுனி கலசத்திற் பிறந்தோன்
கலசமோ புவியிற் சிறுமண்
புவியோ அரவினுக்கு ஒருதலைப் பாரம்
அரவோ உமையவள் சிறுவிரல் மோதிரம்
உமையோ இறைவர் பாகத்து ஒடுக்கம்
இறைவனோ தொண்டர்தம் உள்ளத்து ஒடுக்கம்.

என்கிறார் ஔவையார். இப்பெரிய உலகம் அனைத்தையும் உள்ளடக்கவில்லை மாறாக சிறிய உள்ளத்திலேயே இந்தப் பெரிய உலகம் அடங்கியிருக்கிறது என்பதை அவர் கவித்துவமாகச் சொல்லியிருக்கிறார். எனவே உள்ளத்திலிருந்து தொடங்குவதே உசிதமாக இருக்கும். Commitment என்பது ஒன்றைச் செய்யக் கட்டாயப்படுத்துகிறது என்பது உண்மைதான் என்றாலும், அவைகள் வாழ்க்கைக்குத் துணை செய்யலாமேயன்றி, வாசிப்பிற்கோ எழுத்திற்கோ துணை செய்யாது என்றே கருதுகிறேன். ஏனெனில் என் வாழ்க்கை எழுத்தையோ வாசிப்பையோ சார்ந்தது அல்ல.

Read more ...

தி.ஜானகிராமனின் அம்மா வந்தாள்: படைப்பின் சிகரம்


தேர்ந்த புகைப்படக் கலைஞன், ஓவியன், ஒளிப்பதிவாளன் அத்தனையும் தன்னுள் ஒருசேரப்பெற்ற ஆற்றல் கொண்ட படைப்பாளி தி.ஜா. இதற்கு அவர் படைப்பின் மிகச்சிறந்ந உதாரணமாகத் திகழ்வது அவரது அம்மா வந்தாள். நாவலின் புறம், மனித மனங்களின் அகம் இரண்டையும் அவரைப்போல் சித்தரிக்கும் படைப்பாளி வேறு எவருமில்லை. பெண்களைப்பற்றிய அவருடைய விவரிப்புகள், பெண்களைப் போலவே நளினமும் அழகும் கொண்டவை. அவற்றில் நம் மனம் பாகாய்க்கரைந்து போகிறது. சர்க்கரைக் கட்டியைச் சுற்றும் எறும்பாய் நம் மனம் அவரின் வருணனைகளில் மன மயக்கத்துடன் சுற்றிச் சுழல்கிறது. அவரது நடையின் வசீகரம் நம் மனதை மயக்குகிறது. அவரது அனாசயமான வார்த்தைகளும் வாக்கியங்களும், அவரை எழுத்துப் பிரம்மாவாக பூஜிக்க வைக்கிறது. உரையாடலின் நடுவே, உரையாடுபவரின் அந்தரங்கத்தை நாம் உணரும் விதமாக, அதே சமயம் வெளிப்படையாகச் சொல்லாமல் கொண்டு செல்லும் வல்லமை அவருக்கே உண்டு. மனித மனத்தில் சஞ்சரிக்கும் வித்தை கைவரப்பெற்றவர் அவர்.

மனிதர்களுக்கு அவரவர்க்கென்று ஆசா பாசங்கள் உள்ளன. உறவு என்று வந்துவிட்டதாலேயே அவற்றுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என்பதை அழுத்தமாகச் சொல்லும் நாவல்தான் அம்மா வந்தாள். மனிதன் எங்கே இருந்தாலும் ஏதாவது ஒரு குறை அங்கே வந்துவிடுகிறதே என்ன செய்ய? அந்தக் குறை முள்ளாக தைத்துக் கொண்டிருக்கும் போது சாதாரண மனிதர்கள் என்ன செய்ய முடியும்? தவறு செய்வது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. ஆனால், சரி தவறு என்று நிர்ணயிப்பது யார்? என் சரி தவறை, என்னதான் முயன்றாலும் அடுத்தவர் புரிந்துகொள்ள முடியுமா என்ன? அடுத்தவர் குற்றம் சாற்றுவார்கள் என்பதற்காக என் சரி தவறை, பிறர் தீர்மானிப்பதில் என்ன நியாயம் இருக்க முடியும்? எல்லோருமே அப்படியான சரி தவறுகளை மனதளவில் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். இல்லை என்று சொல்ல முடியுமா? பலர் செயலில் இறங்கவில்லை, அவ்வளவுதானே? இதே சரி தவறு ஆகியவற்றை பெண்களுக்கு ஒரு மாதிரியும் ஆண்களுக்கு வேறு மாதிரியாயும் இந்த சமூகம் நியாயங்களைக் கற்பித்து வைத்திருக்கிறதே அது ஏன்? எல்லோரும் மனிதர்கள்தானே? போன்ற எண்ணற்ற கேள்விகளை நம் மனதில் எழுப்பி, நம்மையும் நம் மனத்தையும் முட்டிமோத வைத்து அமைதியின்மையை ஏற்படுத்துகிறது அம்மா வந்தாள்.

வேதபாடசாலையில் பதினாறு வருடங்கள் பயின்று வீடு திரும்புகிறான் அப்பு. பாடசாலை நடத்தும் பவானியம்மாளின் மருமகள் இந்து கணவைனை இழந்தவளாக அங்கேயே இருக்கிறாள். திருமணத்திற்கு முன்னரே இந்துவிற்கு அப்புவின் மீது விருப்பம் உண்டு. கணவனை இழந்து அங்கே வந்திருப்பதில் அவளுக்குச் சந்தோஷமே இருப்பதாகத் தெரிகிறது. இன்னும் நான்கு நாட்களில் அப்பு ஊருக்குச் செல்லவிருக்கும் நிலையில் பவானியம்மாள் திருமணம் ஒன்றிற்குச் சென்றுவிடுகிறாள். அந்த சமயத்தில் இந்து தன் உள்ளக்கிடக்கையை அப்புவிற்கு உணர்த்துகிறாள். அப்பு அது தவறென்று சொல்கிறான். அப்பு தன் அம்மாவைப்பற்றிப் பேசப்போக இந்துவிற்கு கோபம் வருகிறது. அவனது அம்மாவின் நடவடிக்கை குறித்துத் தவறாகச் சொல்கிறாள். அப்புவிற்கு அவள் மீது கோபம் எழுகிறது. தான் உயர்வாக மதிக்கும் தன் அம்மாவைப்பற்றி இந்து அவ்வாறு சொன்னது அவனால் பொறுக்கமுடியாததாக இருக்கிறது. எப்படியோ ஊருக்குக் கிளம்புகிறான்.

கதையின் தொடக்கத்திலேயே இந்துவின் இப்படியான விருப்பத்தைச் சொல்வதின் மூலம் நம்மை நாவலின் அடுத்த கட்டத்திற்கு தயார் செய்கிறார் ஜானகிராமன் என்றே சொல்லவேண்டும். இங்கே இதை நாம் தவறாக நினைக்காதபோது அப்புவின் அம்மா அலங்காரத்தம்மாவின் செயலையும் நாம் தவறாகக் கூறமுடியாது என்று குறிப்பாக உணர்த்துகிறார். குழப்பத்துடன் வீடு வந்துசேரும் அப்பு வீட்டில் நுழைந்ததும் காணும் காட்சி முக்கியத்துவம் வாய்ந்தது. இங்கேதான் ஜானகிராமனை ஒரு தேர்ந்த திரைப்பட இயக்குனராக காணமுடிகிறது. இதற்கு முந்தைய காட்சியில் தான் சொன்னவற்றை பின்னால் எப்படி சொல்லப்போகிறார் என்ற தவிப்பு நாம் நாவலைப் படிக்கும்போது நம்முள் ஏற்படுகிறது. ஆனால் அப்பு வீட்டில் நுழைந்ததும் சிவசுவை தன் அண்ணன் என நினைத்து, “ஏன் மீசையை எடுத்துவிட்டாய்?” என்று கேட்கிறான். பிறகுதான் அது தன் அண்ணனல்ல வேறு ஆள் என்று உணர்கிறான். பக்கம் பக்கமாக எழுதுவதைவிட ஒரே ஒரு கேள்வியில் மொத்த நாவலின் கதையை நமக்கும், முக்கியமாக அப்புவுக்கும் உணர்த்திவிடுகிறார் தி.ஜா.

தன்னைத் தவிர வீட்டில் எல்லோருக்குமே அம்மாவைப்பற்றி தெரியும் என்று அறியும்போது அப்பு கூனிக்குறுகிவிடுகிறான். தன் அப்பாவிற்கு தெரிந்தும் ஒன்றும் செய்யாமலிருப்பது அவனுக்குக் கோபத்தை ஏற்படுத்துகிறது. ஏன் ஊருக்கு வந்தோம் என வருந்துகிறான். அப்போது பவானியம்மாள் உடல் நலத்துடன் இல்லை என்று கடிதம் வருகிறது. இங்கே இருக்க இருப்புக்கொள்ளாது தவிக்கும் அப்பு இதுதான் சமயமென்று மீண்டும் பயணிக்கிறான். பவானியம்மாள் அவனிடமும் இந்துவிடமும் பாடசாலையை ஒப்படைக்கும் முடிவை எடுக்கிறாள். நாட்களாகியும் அப்பு திரும்பாமலிருக்கவே அவன் அம்மா அங்கே வருகிறாள். தன் பாவத்தின் பிரயாச்சித்தமாக காசிக்குச் செல்வதாகக் கூறிச் செல்கிறாள்.

மனதில் ஏற்றப்பட்டுவிட்ட சமூகத்தின் தாக்கத்திலிருந்து மீண்டு வருவது அவ்வளவு எளிதல்ல. எனவேதான் அப்புவை வேதம் படிக்கச்சொல்லி அவன் காலடியில் வீழ்ந்து தன் தவறுக்கு, குறிப்பாக கணவர் தண்டபாணிக்கு தான் செய்துவிட்ட அநீதிக்கு மன்னிப்புக்கோரி நிற்க முற்படுகிறாள் அலங்காரத்தம்மாள். ஏனென்றால், அவர் எல்லாம் தெரிந்தும் ஒன்றும் சொல்லாமலிருப்பது அவள் மனதை அரிக்கிறது. அவள் காசிக்குச் செல்வதும் அதனால்தான். இங்கே இன்னொன்றையும் நாம் கவனிக்கவேண்டும். அலங்காரத்தம்மாவின் தோற்றத்தை வர்ணிக்கும்போது, தேஜஸ், அசாத்திய உயரம், கம்பீரம், வசீகரம் என்றவிதத்தில் ஜானகிராமன் சொல்லிச்செல்கிறார். குற்றமுடைய நெஞ்சில் இவைகள் இருக்கச் சாத்தியமில்லை. தன் மனதில் ஏற்பட்ட மாசுக்காக அல்ல, தன் மீதான பிறர் மனங்களின் மாசைத்துடைக்கவே அவள் காசிக்குச் செல்கிறாள் என்று புரிந்து கொள்ளும்போது நாவலை நாம் வேறோர் தளத்திற்கு எடுத்துச்செல்ல முடியும்.

ஐந்து கணவர்களை மணந்த பாஞ்சாலிக்குக் குற்ற உணர்வு இருந்ததா என்ன? ஐந்து கணவர்களோடு, தன் மனம் வேறோர் ஆடவனையும் விரும்புமோ என்று தன் உள்ளக் கிடக்கையை வெளியிட்டதால்தானே பழம் மீண்டும் மரத்தில் ஒட்டியது? அவள் சபதம் போடவில்லையா? அந்த சபதமும் பலிக்காமல் போகவில்லையா? இந்துவை ஏற்கத்தயாராய் இருக்கும் அப்பு தன் அம்மாவை நிராகரிக்க முடியுமா என்ன? அவன் பார்வை ஆணின் பார்வை என்பதாலும் அலங்காரத்தம்மாவின் பார்வை பெண் சார்ந்த பார்வை என்பதாலும் அவள் மீது குற்றம் சுமத்துவது எவ்விதத்திலும் நியாயமாக முடியுமா? இத்தகைய சிக்கல்களில், உளவியல் ரீதியான பிரச்சினைகளை நாம் கணக்கில் எடுத்துக்கொள்வதே இல்லை. அது தனி நபர் சார்ந்தது. அதன் மீதான பிறரின் பார்வைகள் எவ்வாறு சரியானதாக இருக்கும்? போன்ற பல விடைதெரியாத கேள்விகள் நம்முள் எழுவதை நாம் தவிர்க்கமுடியாதவாறு நாவல் அமைந்துவிட்டிருக்கிறது.

ஆரம்பத்தில் அலங்காரத்தம்மாள் மீது சொல்லமுடியாத கோபம் நமக்கும் வருகிறது. ஆனால் போகப்போக அவள் மீது நமக்கு அனுதாபம் பிறக்கிறது. அவளும் மனுஷிதானே என்று தோன்றிவிடுகிறது. இது ஜானகிராமன் எழுத்தின் மாயாஜாலம். ஒரு படைப்பாளியின் படைப்பின் வெற்றி என்பது இதுதான். நம் முடிவுகளை நிர்மூலமாக்கி தன் முடிவை நிலைநிறுத்துவது. அதில் தி.ஜா. சிகரத்தைத் தொட்டிருக்கிறார். (மோக முள்ளிலும் அவர் இதை சாதித்திருப்பது நம் கவனத்திற்குரியது).

நாவல் முழுதும் வாசக இடைவெளிக்கும், ஊகத்திற்கும் கணிசமான இடைவெளிகள் இருக்கின்றன. அந்த இடைவெளிகளை, நம் மனம் கட்டற்ற வெள்ளம்போல் பாய்ந்து ஓடி நிரப்ப முயற்சிக்கிறது. அதற்கான தேடலாகவே மேலே சொன்ன கேள்விகள் நம் மனதில் எழுந்து மோதி நுரைப்பது. நாவலின் காலம் நம்முள் போதுமான அளவிற்கு பரந்த வெளியில் சஞ்சரித்ததான ஒரு உணர்வைக் கொடுக்கிறது. ஜானகிராமனின் ஆகச்சிறந்த படைப்பு அம்மா வந்தாள் என்பதில் சந்தேகமில்லை. நம் மனோபாவங்களுக்கு ஏற்ப நாவலை விரித்துக் கொள்வதற்கு அம்மா வந்தாள் இடமளிப்பது அதன் முக்கியச் சிறப்பு. மீண்டும் பிரிதொரு வாசிப்பில் நமக்கு வேறுவகையான தரிசனத்தை நாவல் வழங்குவதற்கு தயாராய் இருக்கிறது. நாம் திறந்த மனத்துடனும், முன்முடிவுகள் ஏதுமின்றியும் நாவலை எதிர்கொள்ள விழையும்போதே அது சாத்தியமாகும்.

நாவல் இப்படித்தான் ஆரம்பிக்கிறது:
சரஸ்வதி பூஜையன்று புத்தகம் படிக்கக் கூடாது என்பார்கள். ஆனால் ஒரு நாளுமில்லாத திருநாளாகப் புத்தகத்தின்மேல் வருகிற ஆசை! கீழே கிடக்கிற-பல்பொடி மடிக்கிற-காகிதத்தையாவது எடுத்துப் படிக்க வேண்டும் என்ற மோகம்!
சாதாரண புத்தகத்திற்கே இப்படியெனில். வாழ்க்கை எனும் புத்தகம் எத்தகய பிரம்மாண்டமானது. அங்கே நம் மனம் எதை வேண்டாமென்கிறதோ அதைச் செய்ய நினைப்பதில் ஆச்சர்யமேது? மனதுக்கு ஏன் இந்த குணம்? ஒன்றை வலியுறுத்த வலியுறத்த அதன் எதிர்த்திசையை நோக்கி பயணப்படும் அதன் விசித்திரத்தை என்னவென்பது? தன் கதையின் தீர்மானத்தை முதல் வரியிலேயே சொல்லிவிட்ட தி.ஜாவின் படைப்பின் நேர்த்தியை என்ன சொல்ல? புத்தகத்தை முடித்ததும் படைப்பையும் தாண்டி நம் மனதில் ஜானகிராமன் நிலைத்து நிற்பது அதனால்தான்.

1966-ல் இந்நாவல் எழுதப்பட்டபோது அவரது சொந்த கிராமமான தேவங்குடிக்குள் நுழைய ஜானகிராமனுக்குத் தடை விதிக்கப்பட்டது. இன்று மனித வாழ்க்கையின் காலங்களும் கோலங்களும் மாறிவிட்டன. ஒழுக்கம், கட்டுப்பாடு, நியதி எல்லாம் இன்று வேறு அர்த்தத்தைப் பெற்றுவிட்டிருக்கின்றன. ஜானகிராமனுக்கு முன்பாகவே ருஷ்ய இலக்கியத்தில் இதே மாதிரியான கருத்தை முன்னிருத்தியவர் டால்ஸ்டாய் என்பது அனைவரும் அறிந்ததே. அவரது அன்னா கரீனினா நாவலின் தாக்கத்தாலேயேகூட ஜானகிராமன் இந்நாவலை எழுதியிருக்கக்கூடும்.

Read more ...

பரதேசி வந்தான் -தி.ஜானகிராமன்


ஜானகிராமனின் பரதேசி வந்தான் முழுக்க முழுக்க ஆன்மீகமான கதை. பரதேசி சாபம் விட்டான் அது பலித்தது என்பதைவிட கதையில் நுட்பமான செய்திகள் பல உள்ளன. அவற்றை நாம் கவனிக்கும்போது இக்கதையின் வீச்சு நமக்கு விளங்கும். எனவே மூன்று விசயங்களைப் பற்றி நாம் சிந்திப்பது நலம்.
    1. நம் வாழ்க்கை ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது.
    2. பாவ புண்ணியம்.
    3. அகங்காரம்.
இந்த உலகம் ஒரு நாடக மேடை என்று சொல்வதுண்டு. அதன் பொருள் என்ன? நாடகம் என்றால் அதற்கு திரைக்கதை கணடிப்பாக இருக்கும். நம் வாழ்க்கையின் திரைக்கதை இறைவனிடம் இருக்கிறது. அதில் அடுத்த காட்சி என்ன என்பது நமக்குத் தெரியாது. ஆனால் படைத்தவனுக்குத் தெரியும். தற்போதைய காட்சி மகிழ்ச்சி என்றால் அடுத்த காட்சி அழுகையாக இருக்கலாம்.  இப்போது இன்பமென்றால் அடுத்து துன்பமாக இருக்கலாம். ஏற்கனவே எழுதப்பட்ட திரைக்கதையின்படி நம் உணர்ச்சிகள் வெளிப்படுகின்றன. சொல்லப்போனால் அதற்கேற்ப நாம் எதிர்வினை புரிவதால் இந்த உலகம் நாடக மேடையாகிறது. பரதேசி சொன்னான் அது பலித்தது என்பதில்லை. ஏற்கனவே எழுதப்பட்ட வசனத்தை அவன் பேசினான் என்பதே உண்மை. இதை  நாதத்தை உதாரணமாகக் காட்டி தி.ஜா. வெளிப்படையாக உடைத்துக் காட்டிவிடுகிறார். அதை வாசகனின் ஊகத்திற்கே விட்டிருந்தால் கதை இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். தான் சொல்ல நினைத்ததை படிப்பவர்கள் விளங்கிக்கொள்ளாமல் போய்விடக்கூடும் என்ற எண்ணத்தினால் தி.ஜா. இதைச் செய்திருக்கிறார் என்றே சொல்லவேண்டும்.

எல்லாம் சரியாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால் நம் செயல்கள் அதற்கு மாறாக இருக்கின்றன. சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்பதுதான் மனிதனின் குணமாக இருக்கிறது. இல்லையேல் வக்கீல் அண்ணா கெட்டவர்களுக்கும் அயோக்கியர்களுக்கும் வாதாடுவானேன்? அப்படி வாதாடிக் கிடைத்த பணம் தன் வாழ்க்கையை செழுமைப்படுத்தும் என்று அவரை நினைக்கவைத்தது எது? நம்மிடையே நிலவும் பாவபுண்ணியம் குறித்த தவறான மதிப்பீடுகளால்தான் அவ்வாறு நேர்கிறது. உண்மையில் பாவபுண்ணியத்தின் பங்கு என்ன? பாவத்துக்கு தண்டணையும் புண்ணியத்துக்கு பலனும் உண்டு என்பது நம் சித்தாந்தம். ஆனால் பலர் பாவத்தின் தண்டணையை புண்ணித்தில் கழித்துவிடலாம் என்று கருதுகிறார்கள். அப்படி அல்ல. பாவத்துக்கான தண்டணை கட்டாயம் கிடைக்கும். அதே சமயம் புண்ணியத்துக்கான பலனும் கிடைத்தே தீரும். இரண்டையும் தனித்தனியாக நாம் அனுபவித்தே ஆகவேண்டும். அதைத்தான் அவர் அனுபவிக்கவும் செய்கிறார்.

கதையின் கடைசியில் வரும் அகங்காரம் என்ன என்பது பற்றி சிலவற்றை நாம் யோசிப்பது நலம். இது ஈகோ அல்ல. ஈகோ என்பது உடமை சம்பந்தமானது. நம்மிடம் பெரிய வீடு இருந்தால் நம் ஈகோ பெரிதாக இருக்கும். வீடு இல்லாவிடில் நம் ஈகோ சுருங்கிவிடும். ஆனால் வீடு இருந்தாலும் இல்லாவிட்டாலும் நம்மில் எந்த மாற்றமும் இல்லாத நிலைதான் அகங்காரம். அந்த அகங்காரம் என்பது சுயம். சுயத்துக்கு உடமை ஏதும் தேவையில்லை. அதனால்தான் பரதேசி அண்ணாவின் அகங்காரம் மெல்லியதாக உடைந்துவிடுவதாக இருப்பதாகக் குறிப்பிடுகிறான். நம் அகங்காரம் எவ்வளவுக்கு மெல்லியதாக இருக்கிறதோ அந்த அளவிற்கு நாம் நம்மை பிறரிடம் நம் கோபத்தின் வாயிலாகவும் உடமையின் வாயிலாகவம் பறைசாற்றிக் கொள்வோம்.

தி.ஜாவின் இந்தக் கதையை இலக்கியப் பின்னனியைவிட ஆன்மீகப் பின்புலத்திலேயே அதிகமும் புரிந்துகொள்ள முடியும் என்று தோன்றகிறது.
Read more ...