சுயம்வரம்


முதல் புத்தகமான பூர்வகதை வெளியான பின்னர் அதற்கு எத்தகைய வரவேற்பு இருக்கும் என்பது குறித்து அச்சமிருந்தது. ஆனால் அதற்கு திரு.ஜெயமோகன் எழுதியிருந்த கடிதம் உற்சாகத்தையும் உத்வேகத்தையும் கொடுக்கவே இந்த இரண்டாம் புத்தகத்தை முன்னதாகவே முடிக்க முடிந்தது. 

வசுக்களின் சாபத்தில் தொடங்கும் இக்கதை பாண்டவர்கள் கௌரவர்கள் பிறப்பைத் தொடர்ந்து, அர்ச்சுனன் இலக்கை வீழ்த்தி சுயம்வரத்தில் திரௌபதியை வெல்லும் வரையான கதையைச் சித்தரிக்கிறது. அதன் பின்னர் அவள் ஐவருக்கு மனைவியாவதில் எழும் சிக்கலை விவரித்து, காண்டவபிரஸ்தத்தில் பாண்டவர்கள் தங்களுக்கான நகரை நிர்மாணிப்பதோடு நிறைவடைகிறது. 

பாரதம் முழுவதிலும் வியாசரின் கதை கூறும் பாணியை எண்ணி வியக்காதிருக்க முடியவில்லை. குறிப்பாக கதாபாத்திரங்களுக்கு இடையே நிகழும் உரையாடல்களில் வியாசரின் அபாரமான எழுத்தாற்றல் வெளிப்படுகிறது. ஒவ்வொரு செயலின் பின்னுள்ள அத்தனை சாத்தியங்களையும் அவர் உரையாடலில் விரித்துச் சொல்லும் போது வாசிப்பில் ஏற்படும் பரவசத்தருணம் பெருமதியானது. 

இந்நூலுக்குச் சுயம்வரம் எனப் பெயரிட்டிருக்கிறேன். இக்கதையின் உச்சமான தருணம் அதுவே என்பதாலும், பின்னால் நிகழும் பலவும் இதை ஒட்டியே நிகழப் போகிறது என்பதாலும் இத்தலைப்பைச் சூட்டியது பொருத்தமானது என்றே நினைக்கிறேன். 

புத்தகத்தை அச்சிட ஒரு நாள் போதுமானது எனினும், எழுதி முடித்த பிறகு அதைக் கட்டமைக்கவும் ஒழுங்குபடுத்தவும், அட்டையை வடிவமைக்கவும் அதிகப் பிரயத்தனமும் காலமும் அவசியமாகிறது. இதை அனுபவ பூர்வமாக உணர்ந்த பின்னர், ஒவ்வொரு புத்தகமும் அச்சாவதின் பின்னுள்ள கடுமையான உழைப்பு தெளிவாக விளங்குகிறது. 

அன்புடன், 
கேசவமணி 

01.04.2018 
திருப்பூர்

புத்தகத்தை அமேசான் மற்றும் பிளிப்கார்ட் இணைய தளங்களில் வாங்கலாம்:


Flipcart.com: சுயம்வரம்


Related Posts Plugin for WordPress, Blogger...