மகாபாரதம் பூர்வகதை

மீண்டும் மகாபாரதத்தை எழுதத் தொடங்கியுள்ளேன். இந்நேரம் வெகுதூரம் சென்றிருக்க வேண்டியவன். ஏதேதோ காரணங்களால் முன்னேறிச் செல்ல இயலாமற் போயிற்று. எழுதியவற்றிலிருந்து மகாபாரதத்தின் முன்கதையைச் சொல்லும் பகுதியை பூர்வகதை எனும் தலைப்பில் புத்தகமாகப் பதிப்பித்திருக்கிறேன். வழக்கம் போல அமேசானில் வெளிநாட்டுப் பதிப்பாகவும் உள்நாட்டுப் பதிப்பாகவும் கிடைக்கும்.


புத்தகத்திற்கு எழுதிய முன்னுரை:

மகாபாரதம். இந்தச் சொல்லால் ஈர்க்கப்படாதவர்கள் வெகு குறைவு. இதைப் படிக்கவும் கேட்கவும் விரும்பாதவர்களும் சிலரே இருக்கக்கூடும். தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வழக்கத்திலிருந்து வருகின்ற மாபெரும் இதிகாசம் இது ஒன்றே. இன்னும் நூற்றாண்டுகள் பல கடந்த பின்னரும், எங்கெங்கே மனிதர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் இது தொடர்ந்து படிக்கவும் கேட்கவும் படும் என்பதில் சந்தேகமில்லை.

மகாபாரதத்தை படிக்கும் கேட்கும் பலரும், முழுமையான மகாபாரதத்தை அறிய ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். மிகப் பிரபலமான கிருபானந்த வாரியர், ராஜாஜி, சோ முதலியோரின் மகாபாரத ஆக்கங்கள் முதல், தமிழில் இதுவரை வெளிவந்தவை அனைத்துமே சுருக்கமானவைதான். எனவே, மகாபாரதத்தை முழுமையாக, அதேசமயம் வாசிக்கத் தக்கதாக, அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் என்னுடைய ஆசையின் முயற்சிதான் இது.

காலந்தோறும் சொல்லவும் கேட்கவும் படுகின்ற ஒரு கதையில் இடைச் செருகல்கள் நேர்வது இயல்பானது, தவிர்க்க முடியாதது. எனவே, இந்தப் பெரும் இதிகாசத்தைப் படிப்பவர்கள் மனதில், பல்வேறு சந்தேகங்கள் எழுவதும் இயல்பானது. எனவேதான் அவர்களின் சந்தேகங்களைத் தீர்க்கும் விதமாக ஜெயமோகன், “மகாபாரதம் என்பது ஒரு பிரதி (text) அல்ல என்பதையும் அது ஒரு பிரதித்தொகுதி (collective text) என்பதையும் அவர்கள் அறிந்திருக்க வில்லை. முரண்பாடுகளும் விடுபடல்களும் கொண்டது அது. பல இடைச்செருகல்கள், விரிவாக்கங்கள், வெட்டுகள், திரித்தல்கள் கடந்து நம் கைக்கு வந்தது” என்கிறார். இதை நாம் உள்வாங்கிக் கொண்டாலே மகாபாரதத்தை வாசிப்பது எளிதாகும்.

இருந்தும் எது உண்மையான மூலம் என்ற சந்தேகம் வந்தபின்னர் அதைத் தீர்த்துக்கொள்வதே உசிதமானது. எனவே புனேயில் உள்ள The Bhandarkar Oriental Research Institute (BORI), ஒரு குழுவை அமைத்து, வியாசரின் மகாபாரதத்தை ஆய்வு செய்து, அதிலுள்ள உள்ள இடைச் செருகல்களை நீக்கியது. இந்தக் குழு 1919-ல் ஆதி பர்வத்தை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து ஏனைய பர்வங்களும் வெளியாகின. 1966-ல், 89,000 சுலோகங்களும், 15,000 பக்கங்களும், கொண்ட இதன் முழுமையான சமஸ்கிருதப் பதிப்பு, 19 தொகுதிகளாக வெளியானது. இடைச்செருகல்கள் நீக்கியதே இவ்வளவு எனில், முழுவதும் உள்ளடக்கியது எத்தனை பக்கங்கள் வரும் என்பதை நினைக்கையில் மலைப்பு தட்டுகிறது. ஆக இன்று இருவகையான மகாபாரத வடிவங்கள் நம்மிடையே உள்ளன.

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொருவர் வாயிலாக இந்த இதிகாசம், காலத்திற்குத் தகுந்தவாறு, தன்னைத்தானே வெளிப்படுத்திக் கொள்கிறது என்று நான் நினைக்கிறேன். இல்லையேல் இது சுருக்கமாகவும் விரிவாகவும் தொடர்ந்து பலராலும் சொல்லப் படுவதற்கும் எழுதப்படுவதற்கும் வேறென்ன காரணம் இருக்க முடியும்? அவ்வாறே இப்போது நானும் ஒரு கருவியாக செயல் பட்டிருக்கிறேன். இதை எழுத ஆரம்பித்த போதும், முதல் பாகத்தை எழுதி முடித்த பின்னரும், இதை வெகுகாலத்துக்கு முன்னரே செய்திருக்க வேண்டும் எனத் தோன்றியது. செய்யா திருப்பதை விடவும் காலம் கடந்தாவது ஒன்றைச் செய்வது நல்லது தானே?

ஜனமேஜயன் நடத்திய யாகத்தில், வியாசரின் சீடரான, வைசம்பாயனர் சொல்லிய கதையைக் கேட்ட சௌதி என்ற சூதர், அதை நைமிசாரண்யம் என்ற இடத்தில் நடந்த வேள்வியின் போது அங்கிருந்த முனிவர்களுக்குச் சொல்வதாக வியாசர் பாரதத்தைக் கட்டமைத்திருக்கிறார். நான் அதைத் தவிர்த்து விட்டு, வாசிப்பின் சுவை கருதி, நேரடியாகக் கதையைக் கொண்டு சென்றிருக்கிறேன். இந்த முதல் பாகத்தில் மகாபாரதத்தின் பூர்வகதையைச் சொல்லி யிருக்கிறேன்.

கதையின் தொடக்கத்தில், திருதிராஷ்டிரன் சஞ்சயனிடம் புலம்புவதாக வரும் பகுதி வியாசரின் அபாரமான உத்தி என்றே சொல்லவேண்டும். பல்வேறு இடங்களில் ஒரு நவீன நாவலுக்குரிய வடிமைப்புடன் கதை விரிந்து செல்வது வாசிப்பில் வியப்பைத் தருகிறது. சுருக்கமாகச் சொன்னால் மகாபாரதம் வியாசர் எனும் படைப்பாளியின் ஆகச்சிறந்த படைப்பு என்றே கருதுகிறேன்.

முடியும் எழுதுங்கள் என்று என்னை ஊக்கப்படுத்தி, நம்பிக்கை தந்த நண்பர் பசுபதி, கைப்பிரதியை சரிபார்த்த நண்பர் நடராஜன் ஆகியோருக்கும், எழுதும் நேரத்தில் என்னைப் பொறுமையுடன் சகித்துக்கொண்ட எனது மனைவிக்கும் என்னுடைய நன்றியை தெரிவிக்கக் கடமைப் பட்டுள்ளேன்.

அன்புடன்,
கேசவமணி
03, பிப்ரவரி 2018, திருப்பூர்.

Related Posts Plugin for WordPress, Blogger...